sahanamag.com
தொடர்கதைகள்

வைராக்கியம் ❤ (பகுதி 6) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5

வீட்டிலும் அனைவரையும் அழைத்து விஷயத்தைச் சொன்னார் சுந்தரேசன். விஷயத்தைக் கேள்விப்பட்ட பாலு “சூப்பர்டா. எங்க போஸ்டிங் போட்டிருக்கா?” என்று கேட்க,

“தமிழ்நாடு எல்லைல இருக்கற தாளவாடிங்கற இடத்துல முதல் போஸ்டிங். அங்கிருந்து மைசூர் ஒன்றரை மணி நேரம் தான் “ என்றான்  கார்த்திக்.

“எதைப் பத்தியும் கவலைப்படாத. அரசாங்க உத்தியோகம் கிடைக்கறதே பெருசு. அதனால யோசிக்காம வேலைல சேரப்பாரு” என்று உரிமையாய்ச் சொல்ல,

ஹோட்டலுக்கு வேண்டுமென்கிற சாமான்களை வாங்கிக்கொண்டு உள்ளே வந்த சீனு விஷயத்தை கேள்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.

“டேய்……எப்படிடா? கடையையும் பாத்துண்டு இதுலயும் செலக்ட்டாக முடிஞ்சுது” என்று கேட்கவும்,

“சாயங்காலம் எங்க காலேஜ் பேட்ச்மேட் சிலபேரோட சேர்ந்து கோச்சிங்  க்ளாஸ் போனேன். வந்த எல்லா அரசு வேலைவாய்ப்புக்கான பரீட்சையையும் எழுதீண்டே இருந்தேன். க்ளாஸ் முடிஞ்சு டெஸ்ட்டும் இருந்ததனால் தான் ராத்திரி வர லேட்டாச்சு” என்று தன் பக்க நியாயத்தைச் சொல்லியவன் நந்தினியைப் பார்க்க,

“ஆனா இதை நீங்க அப்பவே சொல்லியிருக்கலாமே?” என்று நந்தினி கேட்டாள்.

“நான் எப்பவும் விளையாட்டுத்தனமா இருப்பேன். எனக்கே எம்மேல பெருசா நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஒருவேளை மொதல்லயே சொல்லி அப்பறம் வேலை கிடைக்கலன்னா எல்லோரும் கிண்டல் பண்ணுவேளோன்னு தான் கிடைச்சதுக்கப்பறம் சொல்லலாம்னு இருந்தேன்” என்றான் கார்த்திக்.

“வீடுங்கறது நமக்கான இடம். நம்ம சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை நம்ம உத்தவாட்ட சொல்லாம யார்கிட்ட சொல்ல முடியும். அதனால எதுவானாலும் வீட்டுல சொல்ல சங்கோஜப்படாதீங்கோ. அப்ப தான் எதாவது பிரச்சினைன்னாலும் சரி பண்ண முடியும் “ என்று எல்லோருக்குமாய்ச் சொன்னார் சுந்தரேசன்.

“பரவாயில்லை கொழுந்தனாரே. எப்படியோ அரசாங்க உத்தியோகத்துல சேந்தூட்டேள்.  என் ஆத்துக்காரர் மாதிரி ஹோட்டல் ஹோட்டல்னு அலையாதைக்கு நிரந்தரமான உத்யோகமாச்சு போங்கோ” என்று சொல்ல,

“என்னம்மா பேசற நீ. நம்ம ஹோட்டல் தொழிலுக்கு என்ன குறைச்சல்? எங்கப்பா, நான், என் பசங்கன்னு இத்தனை வருஷமா இந்த தொழில்ல இருந்து தான் நம்ம குடும்பத்துக்குன்னு இவ்வளவு நல்ல பேரை சம்பாதிச்சு வச்சுருக்கோம். அதனால நம்ம பண்ற உத்யோகம், தொழில் எதுவா இருந்தாலும் அதை நேர்மையா பண்ணணும். காசு பணம் சேத்தறது எவ்வளவு முக்கியமோ, அதே நேரத்துல நியாயமா பணம் சேத்தணும்ங்கறதும் முக்கியம்” என்றார்.

தான் முதிர்ச்சியில்லாமல் பேசியதை நினைத்து, “சாரிப்பா. ஏதோ விளையாட்டாய் பேசீட்டேன்” என்றவளிடம்,

“பரவாயில்லம்மா. உன் வயசுக்கான ஆசையும், வேகமும் பேசித்தே தவிர நீயா பேசலை. நாங்களும் உங்க வயசுல இப்படி தான் இருந்தோம். வயசும், வாழ்க்கைல நமக்கு ஏற்படற அனுபவங்களும் தான் நம்மள பக்குவப்படுத்தும்” என்ற சுந்தரேசன்,

“நந்தினி வந்த நேரம் தான் உனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைச்சுருக்கு. இன்னும் மேல மேல வரணும். உன் பொண்டாட்டிய கூட்டீண்டு எங்கயாவது சந்தோஷமா வெளிய போய்ட்டு வாடா” என்றார்.

“வீட்டுல இன்னைக்கு ‌வடை பாயிசத்தோட சமையல் பண்ணு சீதா” என்று சொல்ல,

“சரிண்ணா” என்றவள் கொசாம்புடவை நுனியில் கண்களின் ஓரம் வந்த ஆனந்தக்கண்ணீரைத் துடைத்துவிட்டு சமையற்கட்டுக்குச் சென்றாள்.

குடும்பமாக வடை, பாயிசத்தோடு சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டு எல்லோரும் சாப்பிட, நந்தினிக்கு தன் பெற்றோரின் ஞாபகம் வந்தது. அன்று பெற்றவர்களை  நினைத்துக் கொண்டே உறங்கிப் போனாள்.

அடுத்த நாள் எழுந்தவுடன் கூடத்தில் அப்பாவின் குரல் கேட்டுத் தன் அறையிலிருந்து வெளியே வந்தவள், கூடத்தில் அப்பா தன் மாமனாரோடு பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஓடிவந்தவள்,

“அப்……பா….”, என அழுதுகொண்டே இறுகக் கட்டிக்கொண்டாள்.

‘நீ அப்பான்னு என்ன நெனக்கறச்ச, உன் கண்முன்னால வந்து நிப்பன்னு சொன்ன. சொன்ன மாதிரியே, உங்களை நெனச்சுண்டேன். என் கண் முன்னாடி வந்து நிக்கறயேப்பா’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அப்பாவை ஆரத்தழுவிக் கொண்டதில் வந்த அப்பாவின் வியர்வை வாசத்தில், நந்தினியின் மனதிற்கு ஓர் அமைதி  கிடைத்தது.

ஆசையோடு பெண்ணைக் தழுவிக் கொண்ட ரகு, சுற்றிவர சம்பந்திமார்கள் இருப்பதை உணர்ந்தவராய், “கல்யாணமாகி ரொம்ப நாள் கழிச்சு இப்போதான வரேன். அதான் குழந்தை அழறா” என்று சமாளித்தார்.

“எல்லோரும் பாக்கறா கண்ணம்மா. அழாத. அதான் அப்பா வந்துட்டனே. நன்னாயிருக்கயா?” என்றவர், “சரி….சரி…..போய் உன் வேலையைப் பாரு. நான் சம்பந்தியோட பேசீண்டு இருக்கேன்” என்றார்.

“சரிப்பா”. நான் போய் டிபனுக்கு ரெடி பண்றேன், என்று சமையல்கட்டிற்குச் சென்றாள் நந்தினி.

கார்த்திக்கின் அப்பா சுந்தரேசன், “என்ன சம்பந்தி திடீர்னு வந்துருக்கேள். ஏதாவது விசேஷமா?” ஒரு ஃபோன் கூட பண்ணலையே எனக் கேட்க,

“சென்னைக்கு ஒரு வேலையா வந்தேன். அப்படியே உங்களையெல்லாம் பாத்தூட்டு போலாம்னு வந்தேன்” என்றார் ரகு.

“வந்ததும் வந்தேள். ரெண்டு மூணு நாள் தங்கீண்டு கோவில் தரிசனம் எல்லாம் முடிச்சுண்டு போவேளாம்” என சுந்தரேசன் சொல்ல,

“தப்பா நெனச்சுக்காதீங்கோ சம்பந்தி. வேலை விஷயமா வந்ததுனால இன்னைக்கே கிளம்பணும்.  இன்னொரு தடவை சாவகாசமா   வந்தா போறது” என்றார் ரகு.

சரியாக அந்த நேரம் பார்த்து கார்த்திக் வீட்டிற்கு வரவும், சுந்தரேசன் கார்த்திக்கிற்கு வங்கியில் வேலை கிடைத்ததைப் பற்றிச் சொல்லவும் சரியாக இருந்தது.  மிகவும் சந்தோஷப்பட்ட ரகு, மாப்பிள்ளையை மனதார வாழ்த்தினார்.

“வாங்கோ மாமா. நன்னா இருக்கேளா? எப்ப வந்தேள்?” என கார்த்திக் நலம் விசாரிக்க,

“இப்பதான் வந்து கொஞ்ச நேரமாச்சு. மாப்ள. நீங்க நன்னா இருக்கேளா? இந்த நேரத்துல எங்க வெளியே போயிட்டு வரேள்?” எனக் கேட்டார் ரகு.

“கொஞ்சம் வேலை இருந்ததால, வெளியே போயிட்டு இப்ப தான் வரேன் மாமா” என்றவன்,

“பத்து நிமிஷத்துல வந்துடறேன் மாமா” என்று ரூமிற்குச் சென்றான்.

சிறிது நேரம் சுந்தரேசனும், ரகுவும் தனியாகப் பேசிக்கொண்டிருந்தனர். தாளவாடியில் முதல் போஸ்டிங் போட்டதைப் பற்றிச் சொன்ன சுந்தரேசன், “என்ன பண்ணினா சரியா இருக்கும்னு நெனைக்கிறேள் சம்பந்தி” என்று ரகுவிடம் கேட்க,

“நந்தினி உங்க வீட்டு மாட்டுப்பொண்ணு. நான் இதுல சொல்றதுக்கு எதுவும் இல்லை. நீங்க முடிவெடுக்கறது தான் சரியா இருக்கும்” என்றார் ரகு.

“சின்ன குழந்தேள், கூட்டுக் குடித்தனம்னு நந்தினி மட்டும் இங்க இருந்துண்டு, கார்த்திக் ஊரில் இருந்தா நன்னா இருக்காது. காலமும் மாறீண்டு வரது, குழந்தைகளை தனிக்குடித்தனம் வச்சுடுவோம். சந்தோஷமா இருக்கட்டும். லீவு விட்டா ஆத்துக்கு வந்தூட்டுப் போறா. இன்னைக்கோ நெறைய பஸ் வசதி வந்தாச்சு. அப்பறம் எதுன்னாலும் நாமளும் ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்தூடுவோம். என்ன சொல்றேள்?” என்று சுந்தரேசன் சொல்ல,

“சரியான முடிவு எடுத்துருக்கேள் சம்பந்தி” என்று ரகு சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார்த்திக் குளித்து விட்டு வெளியே கூடத்துக்கு வந்தான்.

எடுத்த முடிவை கார்த்திக்கிடம் சுந்தரேசன் சொல்லிக் கொண்டிருக்க, சீதாலட்சுமி மாமி எல்லோரையும் சாப்பிடவருமாறு அழைத்தாள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, “தாளவாடி போவதற்கு முன்ன ஒரு முறை ரெண்டுபேருமா ஊருக்கு வந்துட்டு போங்கோ மாப்ள”, என ரகு அழைக்க, “சரி மாமா” என்றான் கார்த்திக்.

கிளம்பும் முன் நந்தினியிடம் பேசிய ரகு, “மாப்பிள்ளைட்ட பேசியிருக்கேன். வீட்டுக்கு கூட்டீண்டு வரேன்னு சொல்லியிருக்கார். சமத்தா இரு. உடம்பை பார்த்துக்கோ. கெளம்பறேன்டா” என்ற ரகு எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு ஊருக்கு கிளம்பிச் சென்றார்.

கார்த்திக்கிற்கு பதினைந்து நாட்களுக்குள் வேலையில் சேர வேண்டுமென்று அரசாணையில் இருக்க, அதற்கு நடுவே இரண்டு நாட்கள் இருவரும் நந்தினியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றனர்.

பெற்றோரும், கணேஷ் மற்றும் புவனாவிற்கும் புத்தாடை எடுத்து வந்த கார்த்திக்கும், நந்தினியும் ஒரு நாள் புவனா கணேஷுடன் கீழ் மேட்டூர் அணை, பூங்கா என   சென்று வந்தனர். பின்னர் அடுத்த நாள் நந்தினியும் கார்த்திக்கும் மட்டும் மேட்டூரின் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப் போனார்கள்.

“என் மனசுக்குப் பிடிச்ச இடம் இது. ரொம்ப சந்தோஷமானாலும், துக்கமானாலும் இந்த கோவிலுக்கு தான் வருவேன்” என்றாள் நந்தினி.

விநாயகர், முருகர், அம்பாள் நவக்ரஹ சன்னதி என எல்லா ஸ்வாமிகளையும் தரிசனம் செய்தவர்கள் பிரதக்ஷனமாக கோவிலைச் சுற்றி நடந்து வரும் போது, “இந்த பக்கம் கொஞ்சம் வாங்களேன்” என்று பக்கவாட்டிலிருந்த சிறிய கதவைத் திறந்து கொண்டு கார்த்திக்கை வெளியே அழைத்துச் சென்றாள் நந்தினி.

அழகாய் வீசும் தென்றல் காற்றிற்கு நடுவே ஒரு மிகப் பெரிய வேப்ப மரமும், அதைத் தாண்டி ஒரு பெரிய பாறையுமிருக்க, மலையிலிருந்து கீழே பார்த்தால் மேட்டூர் அணை கடல் போல் பரந்து விரிந்து காட்சியளித்தது.

“கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்துட்டு போவோமோ?” என்றவளிடம்,

“ம்……தாராளமா, மெதுவா போலாம். அவசரமே இல்ல” என்று கார்த்திக் சொல்ல, அந்த அமைதியான இடத்தில் உட்கார்ந்த இருவரும் மனதார சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

“உங்களுக்கு அரசு வேலை கிடைச்சதுல எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்” என்றாள் நந்தினி.

“உனக்கு?”என்றான் கார்த்திக்.

“ரொம்ப சந்தோஷம் தான். ஆனா எல்லாரையும் விட்டுட்டு போகணுமனு நெனக்கறச்ச தான் கஷ்டமா இருக்கு” என்றாள் நந்தினி.

“எல்லாத்தையும் கடந்து போய் தான் ஆகணும் நந்தினி. இப்பவரை நாம ரெண்டு பேரும் நம்ம குடும்பத்தோட நிழல்லயே இருந்துட்டோம். இனி நாம தான் அதுலருந்து  வெளிய வந்து கொஞ்சம் நம்மள பாத்துக்கணும். அதே மாதிரிவங்கியில தான் வேலைன்னாலும் மாத சம்பளம் தான். அளவாதான் வரும், அதை வச்சுத்தான் மாசம் பூரா ஓட்டியாகணும். வீட்டு ச்செலவு, ஊருக்குப் போய் வர ஆகும் செலவுன்னு, நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும். மேல போகப் போக ஊர் ஊரா இடம் மாத்தினாலும் சலிக்காம போக வேண்டியிருக்கும்” என்று கார்த்திக் சொல்ல,

“எந்த ஊரா இருந்தாலும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போகற பட்சத்துல எனக்கு சந்தோஷம் தான்” என்றாள் நந்தினி.

கதிரவன் மறையும் பொருட்டு செவ்வானம் பார்க்கவே ரம்யமாய் இருக்க, “கிட்டத்தட்ட நூற்றைம்பது படி கீழ இறங்க வேண்டியிருக்கு மகராஜி. நேரமாச்சு. கிளம்புவோமா?” என்று கார்த்திக் எழுந்திருக்கவும்,

“ம்……” என்று எழுந்தவள், அவன் கரத்தைப் பற்றியபடியே படியிறங்கி இருவருமாய் வீடு வந்து சேர்ந்தனர்.

மறுநாள் கிளம்பி சிதம்பரம் வந்தவர்கள். ஒருநாள் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாள் தனிக்குடித்தனத்துக்கான பொருட்களை வாங்க குடும்பமாகக் கடைவீதிக்குச் சென்றனர்.

“அம்மா, கல்யாணம் பாத்திரம் வேற இருக்கு. அது போக மீதி சாமானெல்லாம் வாங்கீண்டா போறும்” என்று நந்தினி சொல்ல,

“நீ பேசாத இரு. உனக்கு ஒன்னும் தெரியாது. சின்ன குழந்தை. ஆத்துக்கு நாலு பேர் சேர்ந்து வந்தா ஒரு ஃபில்டர்ல  எப்படி காஃபி போடுவ? வீட்டுக்கு பத்து பேர் சேர்ந்து வந்தாலும் இருக்கற மாதிரி பாத்திரம் வாங்கி வச்சுக்கணும். இதெல்லாம் அடிக்கடியா வாங்கப் போறோம்? ஒரு தடவை வாங்கீண்டா அது பாட்டுக்கு காலம் பூரா வரப்போறது. இதுலல்லாம் கணக்கு பார்க்கக் கூடாது” என்றாள் சீதாலட்சுமி மாமி.

“அம்மா நாலு டவரா டம்ளர் செட், பால் காய்ச்சற வால் பாத்திரம், சமையல் பாத்திரம் நான் எடுக்கிறேன்” என்று ஆர்த்தி வைக்க,

வீட்டுக்குத் தேவையான குக்கர், கத்தி, கேஸ் ஸ்டௌவ், ஃபேன் என மதுவும், பட்க்ஷணம் பண்ணத் தேவையான பொருட்களை சீதா மாமியும் எடுத்து வைத்தாள்.

ஒருவழியாக சந்தோஷமாக எல்லா பொருட்களையும் வாங்கியவர்கள் இளநியை வாங்கிக் குடித்து விட்டு சாமான்களை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னாலேயே இரண்டு ஆட்டோவில் எல்லோருமாக வீடு வந்து சேர்ந்தனர்.

இதற்கு நடுவே தாளவாடி கிளையில் வேலை செய்யும் அலுவலர் மூலம் ஒரு வீட்டையும் கார்த்திக் பார்த்து முடிக்க, வீட்டுக்கு பால் காய்ச்சி குடிக்க குடும்பமே சிதம்பரத்திலிருந்து வேன் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் சேலம் வழியே சத்தியமங்கலம் பண்ணாரியில் வண்டியை நிறுத்தியவர்கள், பண்ணாரியம்மனை வழிபட்டு விட்டு அங்கிருந்து திம்பம், ஹாசனூர் வழியே தாளவாடியை அடைந்தனர்.

சிதம்பரத்தின் வெய்யிலில் இருந்து பழகியவர்கள் வண்டியை விட்டு இறங்கும் போதே தாளவாடியின் குளுமையை உணர்ந்தனர். நந்தினியின் பெற்றோரும் சேலம் வழியே சரியான நேரத்துக்கு வீடுவந்து சேர்ந்தனர்.

கீழும் மேலுமாய் இருந்த வீட்டில் மேல் போர்ஷனை வாடகைக்குப் பேசியிருந்தான் கார்த்திக். ஒரு ஹால், கிச்சன், பெட்ரூம்,ஸ்வாமி ரூம், பாத்ரூம் என வீடு சிறிதாக இருந்தாலும் அமைப்பாக இருந்தது. வீட்டிற்கு பக்கத்தில் பெரிய விவசாய நிலம். ராகி பயிரிட்டிருந்தார்கள்.

“வீடு சின்னதா இருந்தாலும் அமைப்பா இருக்கு. இங்க ஒவ்வொரு வீடும் தள்ளி தள்ளி இருக்கு. எல்லோரும் நன்னா தான் பழகுவா. கிராமத்துக்காரா .இருந்தாலும் எல்லார்கிட்டயும் ‌ஜாக்கிரதையா பழகுங்கோ” என்று சுந்தரேசன் சொல்ல,

“கார்த்திக் ஆஃபீஸ் போயாச்சுன்னா கதவை சாத்தீண்டு நிம்மதியா வேலை பண்ணு நந்தினி. ஏன்னா பக்கமே தோட்டமா இருக்கு. பூச்சி பொட்டு எதுவும் சட்டுனு உள்ள வந்தா தெரியாது. யாராவது வந்தாலும் மெதுவா போய் என்னன்னு பாரு” என்று அக்கறையாய்ச் சொன்னாள் சீதாலட்சுமி மாமி.

நல்ல நேரத்தில் பாலைக் காய்ச்சியவர்கள் பூஜையறையில் கார்த்திக்கின் குலதெய்வமான திருப்பதி வெங்கடாஜலபதி, நந்தினியின் பெற்றோர் குலதெய்வமான பழனி முருகன் மற்றும் விநாயகர், லக்ஷ்மி, சரஸ்வதி படங்களின் முன் வைத்து நல்லபடியாக நெய்வேத்யம் செய்ய,  எல்லோருக்கும் பாலைக் கொடுத்தாள் சீதாலட்சுமி மாமி.

இருவரின் பெற்றோரும் வீட்டிலிருக்க மற்றவர்கள் அன்று ஒரு நாள் அந்த ஊரிலுள்ள கடைத்தெருவிற்குப் போய் வீட்டுக்கு வேண்டுமென்கிற காய்கறிகள், சாமான்களை வாங்கிக் கொண்டு மெதுவாக நடந்து வீடுவந்து சேர்ந்தனர்.

அடுத்த நாள் கார்த்திக் அனைவரும் மைசூர் சென்று வர ஏற்பாடு செய்திருந்தான். வேன் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிட, எல்லோரும் முதலில் சாம்ராஜ் நகரின் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சென்று சிவனை வழிபட்டவர்கள் அங்கிருந்து மைசூர் சென்றனர். மைசூர் அரண்மனை, சாமுண்டேஸ்வரி கோவில், ஸ்ரீரங்கபட்டினம் சென்றவர்கள் மாலை பிருந்தாவன் பூங்காவைச்சுற்றி பார்த்துவிட்டு திரும்ப இரவு தாளவாடி பதினோ மணி போல வந்து சேர்ந்தார்கள். அசதியில் விரித்த ஜமக்காளத்தில் ஆளுக்கொரு பக்கமாக தூங்கினர். மறுநாள் காலையில் டிபன் சாப்பிட்டு எல்லோரும் ஊருக்குக் கிளம்பத் தயாராக ,

“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுபோலாமே” என்று கார்த்திக்கும், நந்தினியும் சொல்ல,

“மூணு நாள் ஹோட்டலுக்கு லீவு விட்டுட்டு வந்திருக்கு. உங்களுக்கே தெரியும். எப்பவும் நம்ம கடைக்குன்னு வரவா இருக்கா. தொடர்ந்து லீவு விட்டா நன்னா இருக்காது. அதனால லீவு கெடைக்கறச்ச நீங்க ரெண்டு பேரும் கிளம்பி வாங்கோ. இன்னொரு தரம் வந்தா போறது” என்றார் சுந்தரேசன். பிறகு அவர்களை வேனில் அனுப்பி வைத்துவிட்டு சிறிது நேரம் கார்த்திக்கும், நந்தினியும் வெறுமையாக உட்கார்ந்து கொண்டிருக்க,

“என்ன பண்றது நந்தினி. அவா அவா வேலைன்னு ஒண்ணு இருக்கே. எல்லாரும் உட்கார்ந்துண்டே இருந்தா காரியம் ஆகுமா?அவா சொல்றது நியாயம் தானே”என்றவள்,

சமையலறையில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அடுக்கி வச்சுருக்கேன். மதியத்துக்கு சமைச்சாச்சு. சாப்டூட்டு நாங்களும் அப்படியே கிளம்பறோம்மா. புவனா, கணேஷ் வேற வீட்டுல தனியா சமாளிச்சுண்டு இருக்கா. அப்பறம் பொறுமையா ஒவ்வொரு வேலையா செய். ஒரு வாரமானா பழகீடும். லீவு கெடைக்கறச்ச ரெண்டு பேருமா வீட்டுக்கு வாங்கோ” என்றாள் அம்மா.

பிறகு மதியம் சாப்பிட்ட பிறகு இருவரையும் சேலம் பஸ்ஸுக்கு கொண்டு போய் விட்டுவிட்டு வந்தான் கார்த்திக் .எல்லோரும் சென்ற பின் வீடே அமைதியாக இருக்க, அழுத நந்தினியை சமாதானப்படுத்தினான் கார்த்திக். கார்த்திக் நந்தினியின் தனிக்குடித்தன வாழ்க்கையும் இனிதே ஆரம்பித்தது.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!