in

வைராக்கியம் ❤ (பகுதி 5) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

வைராக்கியம் ❤ (பகுதி 5)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4

ரு வாரம் நந்தினியோடு நாத்தனார் இந்து தங்கி இருந்ததில்,  தில்லை நடராஜர் கோயில், காளியம்மன் கோயில், பாடல் பெற்ற ஸ்தலமான பிரம்மபுரீஸ்வரர் கோவில், என எல்லா கோவில்களுக்கும் இருவரும் சென்று வந்தனர்.

சிதம்பரத்திலுள்ள காஞ்சி மடத்துக்கு இரண்டு மன்னிமார்கள் மற்றும் நாத்தனார் இந்துவுடன் சென்று மகாபெரியவாளின் தரிசனம் பெற்று வந்தது, நந்தினியின் மனதுக்கு நிறைவாக இருந்தது.

பின்னர் இந்து ஊருக்கு கிளம்பிப் போக, நந்தினி வீட்டின் தினசரி வேலைகளுக்குப் பழகியிருந்தாள்.

காலையில் எழுந்து வாசலில் கோலம் போட்டு விட்டு உள்ளே வந்தால், மது போட்டுக் கொடுக்கும் காஃபியை எல்லோருக்கும் கொண்டு கொடுப்பாள் நந்தினி. மாமியார் சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தால், பெரிய மன்னி மது காலை டிபன் மற்றும் சமையலை ஒன்பது மணிக்குள் முடித்து விடுவாள்.

பின்னர் நந்தினி வீட்டைப் பெருக்கிவிட்டு கொல்லைப்புறம் சென்றால், சின்ன மன்னி ஆர்த்தி தேய்த்து வைத்த பாத்திரங்களை எடுத்து வந்து சமையலறையில் அடுக்கி வைப்பாள்.

பிறகு ஹோட்டலுக்குள் தேவையானவற்றை நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு மாமனாரிடம் சொல்வது, வீட்டு சாமான்கள் வாங்க ஆள் அனுப்புவது என எல்லா வேலைகளையும் மது இழுத்துக் கட்டி பார்த்துக் கொண்டு இருந்தாள். இப்படியே சில மாதங்கள் ஓடின.

ஒருநாள் சுந்தரேசனும், சீதா மாமியும் சாயங்கால வேளையில் கோவிலுக்குப் போகும் போது,  கார்த்திக்கின் கடைக்குச் சென்றார்கள். கடையில் வேலை பார்க்கும் ஜெகன்நாதனே ஜூஸ் கடையையும், பூஜைப் பொருட்கள் கடையையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஜெகன்நாதா… எப்படி இருக்க? கடையெல்லாம் எப்படி போயிண்டு இருக்கு? உங்க முதலாளி என்ன சொல்றார்?” என விளையாட்டாய்க் கேட்டார் கார்த்திக்கின் அப்பா சுந்தரேசன்.

“வாங்கோப்பா. நான் நன்னா இருக்கேன். நீங்க நன்னா இருக்கேளா? என்னப்பா கடைப்பக்கம் வந்துருக்கேள்?  கார்த்திக் அண்ணாட்ட ஏதாவது சொல்லணுமா?” என்றான் ஜெகன்நாதன்.

“ஒண்ணும் இல்லை. சும்மா இந்த பக்கம் வந்தேன், அப்படியே கடையைப் பாத்தூட்டு போலாம்னு வந்தேன்” என்ற சுந்தரேசன், “எத்தனை மணிக்கு வருவார் உங்க முதலாளி?” என  ஜெகன்நாதனிடம் கேட்டார்.

“கொஞ்சம் வேலையிருக்கு சாயங்காலம் தான் வருவேன் கடையை பாத்துக்கோன்னு, சொல்லீட்டு தான்  போனார்” என்று சொன்னான் ஜெகன்நாதன்.

“எப்பவாவது தான் இப்படி நடக்கிறதா, இல்ல அடிக்கடி இப்படிதான் நடக்கிறதா?” என கண்டிப்பான குரலில் சுந்தரேசன் கேட்க

“ம்… அது வந்துப்பா…” என்று தயங்கிய ஜெகன்நாதனைப் பார்த்து

“என் ஸ்நேகிதன் பையன் என் பையன்‌ மாதிரின்னு நெனச்சு தான் உன்னை கார்த்திக்கோட கடைல வச்சுக்க சொன்னேன். அதனால அப்பா நான் கேக்கறேன், உண்மையச் சொல்லு” என்றார் சுந்தரேசன்.

“இப்பல்லாம் அண்ணா கொஞ்சம் அடிக்கடி வெளிய போறார்” என்று தயங்கியபடியே ஜெகன்நாதன் சொல்ல

“சரி… சரி… நாங்க இப்ப வந்து போனதப் பத்தி கார்த்திக்கிட்ட எதுவும் பெருசா சொல்லிக்க வேண்டாம்” என்றவர், மனைவியுடன் அங்கிருந்து நடராஜர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டு வீடு திரும்பினார்.

வந்தவர் ஊஞ்சலில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க, “அப்பா… சமையல் காண்டிராக்ட்டுக்காக ஒரு ஃபோன் வந்தது.  நான் எடுத்து பேசப் பேச, பிடுங்காத குறையாக மது மன்னி எங்கிட்டயிருந்து ஃபோனை வாங்கீண்டு அவாகிட்ட பேசினாப்பா. ஏன் யாராவது பிஸினஸ் விஷயமா பேசினா நான் பேசக் கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லையா?” என நேரடியாகக் கேட்டாள் நந்தினி.

“மொதல்ல உன் ஆம்படையான் என்ன பண்றான், ஏது பண்றான்னு பாரும்மா. வீட்டு சமாச்சாரம், கான்ட்ராக்ட் சமாச்சாரம், வெளிவிஷயம் எல்லாத்தையும் அப்பறம் பாக்கலாம்” என்று கோபமாக எழுந்த சுந்தரேசன், தோளிலிருந்த துண்டை உதறிவிட்டு விடுவிடுவென அவரின் அறைக்குச்  சென்று விட்டார்.

தான் கேட்டதற்கு தன் பக்க நியாயத்தைப் காது கொடுத்துக் கூட கேட்காமல், சம்பந்தமே இல்லாமல் மாமனார் பேசிவிட்டு போகிறாரே என்று எண்ணி வருத்தப்பட்ட நந்தினி, தனக்கு புகுந்த வீட்டில் யாருமே ஆதரவாக இல்லை என தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

மாமனார் நந்தினியைக் கடந்து சென்றதும், அங்கு வந்த மன்னி மது, “உனக்கு பத்து வருஷம் முன்னாடியே இந்த வீட்டுக்கு வந்தவள் நான். என்னயே குத்தம் சொல்லீண்டு இருக்கயா. இங்க உன்னால் ஒன்னும் பண்ண முடியாது. உன் மட்டும் நீ பாத்துக்கோ” என சுருக்கென சொல்லி விட்டு நகர்ந்தாள்.

நடந்த அனைத்தையும் துணியை மடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஆர்த்தி, “ம்… இங்க எல்லாம் இப்படித்தான். இதெல்லாத்தையும் பெருசா எடுத்துக்காத நந்தினி. இங்க மன்னி வச்சது தான் சட்டம். மாமனார், மாமியார் ரெண்டு  பேரும் மன்னி சொன்னபடிக்குத் தான் ஆடுவா” என ஆரம்பிக்க

“விடுங்கோ மன்னி. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. இந்த பிரச்சினையை நான் பெருசாக்க விரும்பல” என்ற நந்தினி, வருத்தத்துடன் அவள் ரூமிற்குச் சென்று விட்டாள்.

நந்தினி, ஆர்த்தியிடம் வம்பை வளர்க்கவில்லையே தவிர, ஆர்த்தி சொல்வதுதான் அங்கு நடந்து கொண்டிருந்தது.

மது வீட்டின் எல்லா விஷயங்களையும் அவளது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தாள். மாமியார் காய்கறி நறுக்கிக் கொடுத்து கூடமாட உதவி செய்வதோடு சரி, மற்றபடி  சமையல் டிபார்ட்மெண்ட் மொத்தத்தையும் மதுவே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின்னர் ஹோட்டல் மற்றும் சமையல் காண்டிராக்ட்டிற்குத் தேவையானவற்றிற்கு லிஸ்ட் போட்டு வாங்குவதில் இருந்து எல்லாவற்றிலும் மாமனார், பெரியவன் பாலு மற்றும் மனைவி மதுவே முடிவெடுத்து வாங்குவார்கள்.

சாமான்கள் வாங்கி வருவது, பேங்க்கிற்குச் செல்வது, வீட்டிற்கு கரண்ட் பில், தண்ணிவரி கட்டப் போவது என, இன்னபிற வேலைகளை சின்னவன் சீனு பார்த்துக் கொண்டிருந்தான்.

நந்தினியின் கணவன் கார்த்திக்கோ, காலை எழுந்தவுடன் குளித்து காலை டிபனை முடித்துக் கொண்டு கடைக்குச் சென்றால், மதியம் மூன்று மணி போல சாப்பிட வருவான்.

அதுவரை சாப்பிடாமல் காத்துக் கொண்டு இருக்கும் நந்தினி, அவன் சாப்பிட்ட பிறகு தானும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் கண்ணயர்வாள்.

திரும்ப வெளியில் சென்றால், இரவு பதினோரு மணி போல வருவான் கார்த்திக். வீட்டில் பெரியவர்கள் இருந்ததால்,  நந்தினியால் கார்த்திககை  தனிப்பட்ட முறையில் எதுவும் கேட்க முடியாமல் போனது.

ஒருநாள் இரவு கார்த்திக் இரவு பதினோரு மணிக்கு கதவைத் தட்ட, மாமனார் கார்த்திக்கைப் பற்றி சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு பொறுமை மீறி கதவைத் திறந்தவள், “ஏன் ஒவ்வொரு நாளும் இவ்வளவு லேட்டா வரேள், கொஞ்சமாவது சீக்கிரமா வரக் கூடாதா?” என்று கார்த்திக்கைக் கேட்க

சத்தம் கேட்டு வந்த மாமியார், “ஏன் ஓய்ஞ்சு போய் வீட்டுக்கு வர பையனை நிக்கவச்சு கேள்வி கேட்டுண்டு இருக்க. ஓடற காலத்துல ஓடியாடி சம்பாதிச்சாதான் சம்பாத்யம். வீட்ல வெறுமனே உக்காந்துண்டு இருந்தா எதுவும் பண்ண முடியாது. வெளிய போனா வர சித்த நாழி ஆகத்தான் செய்யும். அதுக்காக நிக்கவெச்சு கேள்வி கேட்டுண்டு இருப்பயா?” என்றவள்…

“மொதல்ல அவனுக்கு சாப்பிட எடுத்து வை” என்று மகனுக்கு பரிந்து பேசிவிட்டு, “நீ போய் கை, கால் அலம்பீண்டு வாப்பா. சாப்பிடுவயாம்” என்றாள்.

“உனக்கு முடிஞ்சா கார்த்திக் வரும் போது கதவைத் திறந்து சாதம் போடும்மா. இல்லயாணா விட்டுடு, நான் பாத்துக்கிறேன். நீ ரொம்ப கஷ்டப்படவேண்டாம்” என்றாள் சீதா மாமி.

நந்தினிக்கு முதன் முதலில் சுருக்கென தன்னைத் தைத்தமாதிரி இருந்தது மாமியாரின் பேச்சு. மாமியார் விலகிச் சென்றவுடன், அங்கு நடந்த அத்தனையையும் காதில் வாங்கிக் கொண்டு வந்த சுந்தரேசன், “சீதாவுக்கு கார்த்திக்’னா  உசுரு, சின்னவனில்லையா. அவளுக்கு மனசுல ஏதோ கவலை போல, அதான் கொஞ்சம் அதிகமா பேசீட்டா. எதுவும் மனசுல நெனச்சுக்காதம்மா நந்தினி” என்றார்.

பிறந்த வீட்டில் கோபம் வந்தால் அப்பாவிடமே எதிர்த்து சண்டை போட்டு அடி கூட வாங்கத் தயங்காத நந்தினி, புகுந்த வீட்டில் அமைதியாக, எல்லோரும் இருந்தும் ஏனோ யாருமில்லா அனாதையைப் போல தனிமையை உணர்ந்தவள், எதுவும் பேசாமல் ஊமையாகி ஒடுங்கிப் போனாள்.

கார்த்திக், வீட்டில் நடக்கும் விஷயங்களைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை. ஆனால் நந்தினிக்கு மது தன்னிடம் இருந்து ஃபோனை பிடுங்காத குறையாக வாங்கியது உறுத்திக் கொண்டே இருந்தது.

அன்றிரவு சுந்தரேசன், “சீதா… சீதா…”  என அழைக்க

“என்னன்னா?” என்றாள் சீத்தம்மா.

“நந்தினி எங்கிட்ட ஏதோ சொல்ல வந்தா. நான் ஏற்கெனவே கார்த்திக் மேல  இருந்த கோபத்துனால சரியா பேசல. நீ கொஞ்சம் என்னன்னு நாளைக்கு பாரு சீதா” என்றார்.

“சரின்னா” என்ற சீதா மாமி, “ஏன்னா கவலையாய் இருக்கேள்?” என கேட்க

“நம்ம கார்த்திக் கல்யாணம் ஆனா, பொண்டாட்டி, குழந்தை குட்டின்னு பொறுப்பா சந்தோஷமா இருப்பான்னு நெனச்சேன். ஆனா கல்யாணமாகியும் ஒரு நாளைப் போல பதினோரு மணிக்கு வரான். புதுசா கல்யாணமான மாதிரியே இல்லையே. இந்த பொண்ணும் நாம இருக்கோம்னு அவனை எதுவும் கேட்கறதில்லை பாவம்” என்றார்.

“ஏன்னா… கார்த்திக்குக்கு ‌ஏதாவது பிரச்சினை வரும்னு நெனக்கறேளா?” என்று கேட்ட மனைவியைப் பார்த்து சிரித்த சுந்தரேசன்

“பெத்த மனசு பித்து. புள்ள மனசு கல்லுன்னு சும்மாவா சொன்னா பெரியவா. ம்… .எதையும் யோசிக்காத தூங்கு. எல்லாம் அந்த காமாட்சி பாத்துப்பா” என்றவர் மனதில் வேதனையுடன் உறங்கிப் போனார்.

மறுநாள் காலை சமையற்கட்டில் செய்து வைத்த இட்லி, சட்னி, சாம்பாரை பாத்திரத்திற்கு மாற்றிய மது ஆர்த்தியிடம் கொடுக்க, நந்தினி தண்ணீர் சொம்புகளைக் கொண்டு வந்து கூடத்தில் வைத்தாள்.

எப்போதும் போல சுந்தரேசனுக்கு தட்டை வைத்து சீதா மாமி பக்கத்திலேயே உட்கார்ந்து டிபனை பரிமாறிக் கொண்டிருக்க, “என்னம்மா நந்தினி, உன் வீட்டுக்காரன் கடைக்கு கிளம்பி போயாச்சா?” என்று சாப்பிட்டுக் கொண்டே கேட்டார் சுந்தரேசன்.

“ஆமாம்ப்பா, இப்பதான் பத்து நிமிஷம் முன்னாடி கிளம்பினார்ப்பா” என்றவளிடம்

“சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதம்மா. வீட்டுக்காரன் வெளியே போயிட்டு லேட்டா வந்தா, என்ன ஏதுன்னு கொஞ்சம் கேளும்மா. கல்யாணத்துக்குப் பின்னாடி நீதான் ஏதா இருந்தாலும் கேக்கணும். நீயே  எதுவும் கேக்கலன்னா, யாரு பொறுப்பேத்துப்பா சொல்லு?” என்று முந்தின நாள் நடந்ததைக் குறித்து நந்தினியைப் பார்த்து கேட்டார் சுந்தரேசன்.

“ஒருநாள் நான் ஏன் லேட்டா வந்தேள்னு கேட்டதுக்கே அம்மா என்னைக் கோவிச்சுண்டாப்பா. இப்ப தான் நான் இந்த ஆத்துக்கு வந்திருக்கேன். பெத்தவா நீங்க சொல்லறதயே கேக்காதவர் நான் சொல்லியா கேட்கப் போறார்?” என்று கோபமாகக் கேட்டவள்

மீறி கேட்டா, “ஆமா… லேட் ஆயிடுத்து. என்னை என்ன பண்ணச் சொல்ற. என்னை என்னோட படிக்கு இருக்கவிடு, அதான் உனக்கு வேணுங்கறத எல்லாம் நான் வாங்கித் தரேனேங்கறார் உங்க புள்ள” என நந்தினி கார்த்திக் பற்றி சொல்ல

“என்னவோ போம்மா, வீட்டுக்காரனை உன் கட்டுக்குள்ள வச்சுக்கத் தெரியணும். பெத்தவாகிட்ட சொல்லாததக் கூட பொண்டாட்டிட்ட புருஷங்காரன் சொல்லுவாம்பா. இனியாவது கொஞ்சம் பாத்து நடந்துக்கோ” என மாமனார் சொல்ல

எல்லோர் முன்னிலும் மாமனார் தன்னையும் கார்த்திக்கையும் பற்றிச் சொன்னது நந்தினிக்கு மிகவும் வருத்தமாக இருக்க,  ரூமிற்குச் சென்று தாழிட்டுக் கொண்டவள், தன் சூழ்நிலையை நினைத்து அழுதாள்.

மாமனார் தன்னிடம் சொல்லும் போது, மன்னிமார்கள் இருவரும் அங்கு இருந்தும் கூட எதுவும் சமாதானம் சொல்லவில்லை. தனக்கென்று பரிந்து பேச இந்த வீட்டில் யாருமில்லை என்று நினைக்க நினைக்க, நந்தினிக்கு தன் பெற்றோரின் நினைவு கண் முன்னே வந்து போனது.

பிறகு காலை பதினோரு மணி போல வந்த போஸ்ட்மேன், கார்த்திக் பேருக்கு வந்த ரிஜிஸ்டர் தபாலை, அவன் இல்லாததால் அப்பா சுந்தரேசனிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு கொடுத்துவிட்டுப் போனார்.

தபாலின் விபரமறியாதவர், என்னவோ ஏதோ என்று கார்த்திக்கிற்கு ஃபோன் செய்து  உடனே வீட்டுக்கு வருமாறு அழைக்க, அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வந்தான் கார்த்திக்.

தபாலினைப் பிரித்துப் பார்த்தவன், சந்தோஷத்தில் அம்மாவையும், நந்தினியையும் அழைத்தான்.

“அம்மா, அப்பா ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்கோ” என்றவன், “எனக்கு அரசு வங்கியில கிளார்க் உத்யோகம் கிடைச்சுருக்குப்பா. அதுக்கான அரசாணை தான் வந்திருக்கு, கைல புடிங்கோ” என்று தபாலைக் கொடுத்துவிட்டு தன் மனைவி நந்தினியுடன் பெற்றவர்கள் காலில் விழுந்தான்.

“நாங்க கும்பிட்ட தெய்வம் எங்களை கைவிடல, குடும்பமா சேஷமமா ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யத்தோட நன்னா இருங்கோ” என்று இருவரும் மனதார ஆசீர்வதித்துவிட்டு ஆனந்தத்தில் கண் கலங்கினர்.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஸ்ரீப்ரியா ராஜகோபாலனின் சிறுகதைத் தொகுப்பு மற்றும் கவிதைத் தொகுப்பு

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை