in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

நீ எனதின்னுயிர் ❤ (பகுதி 10)

மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9

“கிருத்திகா, மாடியில் என் அறையில் போய் பூஜையில் இப்போது வைத்துக் கொடுத்தப் புடவையைக் கட்டிக் கொண்டு வா” என்றவன்,  “ஓ இதுவரை நீ மாடிக்குப் போனதில்லை இல்லையா, வா நான் காட்டுகிறேன்” என்று மாடிக்கு அழைத்துச் சென்றான் சபரீஷ்.

மாடியில் நுழைந்தவுடனே பெரிய ஹால். பப்ளிக் லைப்ரரியில் இருப்பது போல் பெரிய புத்தக அலமாரி, அதில் வரிசையாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். உட்கார்ந்து படிப்பதற்கு ஏற்றாற் போல் சின்னச் சின்ன சிங்கிள் ஸீட்டர் சோபாக்கள், எதிரே சிறிய கண்ணாடி காபி டேபிள்.

“இது அப்பாவின் லைப்ரரி, அவருக்குப் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் பிரபல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு மிகவும் பிடிக்கும்” என்றான் சபரீஷ்வர் தன் தந்தையின் நினைவில் மிதந்தபடி.

“தி.ஜ.ரா., ரா.கி.ரங்கராஜன், லக்ஷ்மி, அநுத்தமா போன்ற பிரபல கதாசிரியர்களின் நாவல்களும் இருக்கின்றனவே”

“அப்பாவிற்கு நாவல்களும் பிடிக்கும். கற்பனைக் கதைகள் என்றாலும் மனித நேயம், நாகரீகம், பண்பு எல்லாம் கற்றுக் கொள்ளலாம் என்பார் என் தந்தை”

“உங்களுக்குப் படிப்பதில் ஆர்வம் இருக்கிறதா?”

“நிறைய நல்ல புத்தகங்கள் படிப்பேன். சென்னையில் புக் பேர் நடக்கும் போதெல்லாம் கொஞ்சம் வாங்குவேன். ஆனால் ப்ளைட்டில் போகும் போது தான் நான் நிறையப் படிப்பேன்” என்றான் சபரீஷ் அவளைப் பார்த்து சிரித்தபடி.

அங்கிருந்து உள்ளே போனால் பத்தடி அகலத்தில் ஒரு நீண்ட வெராண்டா, அந்த வெராண்டாவிலிருந்து ஒவ்வொரு அறைக்கும் நுழைவாயில். அதில் இரண்டாவது அறை சபரீஷ் அறை போலும், அதனுள்ளே நுழைந்தான்.

“அடேயப்பா” என்று கிருத்திகாவின் கண்கள் விரிந்தன.

எவ்வளவு பெரிய அறை, பெரிய கட்டில், மூலையில் ஒரு டி.வி. இன்னொரு பக்கம் ஒரு சிறிய ப்ரிட்ஜ். படிக்க, எழுத ஒரு சிறிய டேபிள். அதன் மேல் ஒரு பென் ஸ்டேண்ட். ஒரு இரும்பு பீரோ.

மீதியுள்ள இடத்தில் பாய் போட்டுப் படுத்தால் பத்து, பதினைந்து பேர் படுக்கலாம், அவ்வளவு பெரிய இடம்.

அறையை ஒட்டிய பால்கனியில் ஒரு பழைய கால மர ஊஞ்சல். ஆனால் அழகான வேலைபாடுகளுடன் இருந்தது.

“கிருத்திகா எல்லாவற்றையும் கண்களாலேயே அளந்து முடித்து விட்டாயா?”

“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?”

“எல்லாவற்றையும் அளந்து முடித்து விட்டு நீ என்ன சொல்வாய் என்று ‌சொல்லட்டுமா?”

என்னவென்று கேட்பது போல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஆ… நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர். உங்கள் வீடே அரண்மனை மாதிரி இருக்கிறது. நான் உங்களுக்குக் கொஞ்சமும் பொருத்தமானவள் இல்லை, நானோ அனாதை. அதனால் நீங்கள் என்னை விட்டு வேறு ஒரு பொருத்தமான பெண் பாருங்கள் என்று சொல்ல நினைக்கிறாய்! சரிதானே?” என்றான் அவள் அருகில் நெருக்கமாக வந்து நின்று ஒரு கையால் அவள் இடுப்பை வளைத்துக் கொண்டு மறுகையால் அவள் முகத்தை நிமிர்த்தினான்.

“நான் நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே?”

“கிருத்திகா, இந்த வீடு இவ்வளவு பெரியதாக இருக்கிறதே தவிர வீட்டில் ஜீவன் இருக்கிறதா பார்!  கீழே சாம்புத் தாத்தா அவர் வேலைகளை முடித்து விட்டு அங்கேயே ஏதாவது படித்துக் கொண்டு இருப்பார். மாடியில், தனிமையில் நான்.

என்மேல் உண்மையான அன்பு காட்ட இந்த வீட்டில் சாம்புத் தாத்தாவை விட்டால் யார் இருக்கிறார்கள் சொல் ! இந்த வீடும் கம்பெனிகளும் நான் சம்பாதித்ததில்லை. என் அப்பாவும் அம்மாவும் சிக்கனமாக, திட்டம் போட்டு வாழ்ந்து சம்பாதித்தது.

நான் அதன் எஜமானனாக இருந்தாலும், அதன் காவலனாக இருந்து, என் தந்தையின் பெயரைக் காப்பாற்றக் கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்க்கையில் நீ வந்தால்தான் ஒளி மயமாகவும் இன்பமாகவும் இருக்கும். என்னவோ சொல்வார்களே ‘எவ்வளவு சொத்து இருந்தாலும் உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்’ என்று. அது தானே எனக்கும்.

உன்னுடன் பழகிய பிறகு தான், வாழ்க்கையை வாழ வேண்டும்… அதுவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஆசை வந்தது. முதன் முதலில் இன்டர்வியூவில் நீ சொன்னாயே ‘ஓ ஸ்டேண்ட்ஸ் பார் ஆர்பன்’ என்று, அந்தக் குரலில் இருந்த காரம் என் இதயத்தை உலுக்கி விட்டது. அதனால் நம்மைப் போல் ஓர் அனாதைக்கு இவள் தான் சரியான ஜோடி  என்று நான் அன்றே தீர்மானித்து விட்டேன்” என்றான்.

“இப்படியெல்லாம் நீங்கள் பேசினால் நான் என்ன செய்வது?”

“நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இந்த டிரஸ்ஸைப் போட்டுக்  கொண்டு  நீ சீக்கிரம் கிளம்பு கிருத்திகா. நாம் ஒரு இடத்திற்குப் போக வேண்டும்” என்றான் லேசான புன்னகையுடன்.

“எங்கே?”

“போகும் போதே எங்கே என்று கேட்கக் கூடாது, ஓ.கே?” என்று வெளியே போய் விட்டான்.

பூஜையில் வைத்து சபரீஷ்வர் கொடுத்த அந்த வெளிர் நீலப்பட்டுப் புடவையைப் பிரித்தாள். கருநீல பார்டர், அதில் ஒரு மூன்று அங்குல அகல கெட்டிச் சரிகை.

புடவையின் உடம்பெல்லாம் முத்துக்களும், பொடியான வண்ணக் கற்களும் வைத்து சிறுசிறு மாங்காய் டிசைன்.  புடவையின் அழகு கண்ணைப் பறித்தது. பிளவுசும் அந்த புடவைக்கு மேச்சாக முத்துக்களும், வண்ணக் கற்களும் வைத்து ஆர்னமென்டலாக இருந்தது.

டிரஸ் செய்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் கிருத்திகா. அவளைக் கண் இமைக்காமல் பார்த்த சபரீஷ், ‘டக்’கென்று அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி கன்னங்களில் முத்தமாறி பொழிந்து விட்டுப் பிறகு மெதுவாகக் கீழே இறக்கி விட்டான்.

“ஸாரி கிருத்திகா, உன் அழகு என்னைப் பைத்தியமாக அடித்து விட்டது. வெரி ஸாரி” என்று கூறி விட்டு மீண்டும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

கிருத்திகாவிற்கும் ஒன்றும் புரியவில்லை. மெய்மறந்து அவன் அணைப்பிலிருந்து விடுபட விரும்பாமல் அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து, ஒரு லாங்க் செயின் கற்கள் பதித்த டாலருடன் எடுத்து அவள் கழுத்தில் பூட்டினான் சபரீஷ். அப்படியே அவளை  அணைத்துச் சென்று தன் அறையில் உள்ள டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி எதிரில் நிறுத்தினான்.

“இப்போது சொல் கிருத்திகா, என் தேவதை எப்படி இருக்கிறாள்?”

“நீங்கள் இருந்தால் தான் அவள் தேவதை, இல்லையென்றால் இந்த கிருத்திகா வெறும் பூஜ்யம்”

சிறிது நேரம்  இருவரும் அந்த உலகத்திலேயே இருந்து,  மெதுவாக சுயநினைவிற்கு வந்தனர்.

நாணத்துடன் அவள் பிடியிலிருந்து விலகிய அவள் “வெளியில் போக வேண்டுமென்று  சொன்னீர்களே, கிளம்பலாமா?” என்றாள்.

தன் பென்ஸ் காரை எடுத்துக் கொண்டு, அவளைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு கிளம்பினான் சபரீஷ். அமைதியாக உட்காரந்து வந்தாள் கிருத்திகா.

“கிருத்திகா, ஏன் அமைதியாகி விட்டாய்?”

அவள் ஒன்றும் பேசவில்லை, அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தாள்.

“சொல் கிருத்திகா, ஏன் அமைதியாகி விட்டாய்?” என்றான் சபரீஷ்.

“என்னால் பேச முடியவில்லை, மனம் முழுவதும் ஒரே சந்தோஷம்.  இந்த சந்தோஷ தருணத்தை நினைத்து  நினைத்து ஆனந்தம் அடைகிறேன், அதனால் பேச்சே வரவில்லை” என்றாள் கனவில் பேசுபவள் போல்.

“கிருத்திகா, நாம் இப்போது எங்கே போகிறோமென்று சொல் பார்க்கலாம்”

கொஞ்ச நேரம் சுற்று முற்றும் பார்த்தவள், “எங்கள் ஹோமிற்குப் போகும் வழி போலவே இருக்கிறதே! அங்கேயா போகிறோம்?” என்றாள்.

“ஆம், இன்று மதியம் நாம் அவர்களுடன் தான் ‘லஞ்ச்’ சாப்பிடப் போகிறோம். இனிமேல் என் அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் இங்குள்ள குழந்தைகளுடன் ‘லஞ்ச்’ சாப்பிடப் போகிறோம். மாலை வரை அவர்களுடன் கழித்து விட்டுப் பிறகு தான் நம் வீட்டிற்குத் திரும்பப் போகிறோம். உனக்கு சந்தோஷம் தானே டார்லிங்?”

“எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்த ஏற்பாடெல்லாம் கருத்திருமன் அங்கிள் மூலம் செய்தீர்களா?”

“இல்லை, என் கிருத்திகாவிற்குப் பிடித்த எல்லாம் நானே தான் செய்வேன். கருத்திருமன் அங்கிள் பாவம், எவ்வளவு வேலை செய்ய முடியும்?”

கார்  ஹோமிற்குள் நுழைந்தது.

“அடேயப்பா ! எவ்வளவு பெரிய இடம். எவ்வளவு அழகான தோட்டம்” என்று வியந்தவன், காரைப் பார்க்கிங்கில் நிறுத்தினான்.

செயற்கையாக உருவாக்கப்பட்ட மலையின் மேல் இருக்கும் ‌மாதாவின் காலடியில் இருவரும் வீழ்ந்து வணங்கினார்கள். பிறகு அங்குள்ள விநாயகர் கோயிலிலும் நமஸ்காரம் செய்து மசூதிக்குள்ளும் சென்று தொழுதனர்.

உள்ளே பாதர் இவர்கள் வருகைக்குக் காத்திருந்தார். வழக்கமாகப் பாதர் யாருக்கும் காத்திருக்க மாட்டார். அதுவே கிருத்திகாவிற்கு மிக ஆச்சர்யமாக இருந்தது.

இவர்களுக்கு டீ வரவழைத்தார். டீ குடிக்கும் போது பாதர், சபரீஷ்வர் அந்த ஆச்ரமத்திற்கு செய்த நல்ல காரியங்களைப் பட்டியலிட்டார்.

ஹோமிற்கு அருகிலேயே ஆறு கிரௌண்ட் நிலம் வாங்கி ஆரம்பப்பள்ளி கட்டுவதற்கு தானமாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கிறான்.

குழந்தைகள் விளையாட ‘ஸ்போர்ட்ஸ் கம்பெனி’ மூலம் சறுக்கு மரம், ஸீஸா, ஊஞ்சல், மேலும் சில விளையாட்டுப் பொருட்கள் விளையாட்டு மைதானத்தில் அமைத்துக் கொடுத்திருக்கிறான்.

பள்ளிக் கூடத்திற்கான கட்டிட வேலைகளுக்கும் சபரீஷ்வரே பொறுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறான். பள்ளிக்கட்டிடம் கட்டப்படுவதை அவ்வப்போது சபரீஷ்வரும், கருத்திருமனும் கவனித்துக் கொள்வார்களாம்.

அப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்காக தனியாக நவீன முறையில் டாய்லெட்களும், ஆண்களுக்குத் தனி பாத்ரூம்களும் இருவேறு திசையில் கட்ட ஏற்பாடு செய்திருக்கிறான்.

வருடம் முழுவதும் சாப்பாட்டிற்குத் தேவையான நெல்லும், தேங்காயும், காய்கறிகளும் இவன் நிலத்திலுருந்தும், தென்னந் தோப்பிலிருந்தும் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான்.

கிருத்திகாவிற்குத் தெரியாமலேயே  இவ்வளவும் செய்து இருக்கிறான். அவளுக்கு மிகவும் வியப்பாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

அன்று மதியம் அங்கிருக்கும் குழந்தைகளோடும், பாதரோடும் இவர்கள் சாப்பாட்டை முடித்தனர். சபரீஷ்வர் ஏற்கனவே கிருத்திகாவின் மேல் தனக்குள்ள அளவில்லாத காதலை பாதரிடம் தெரிவித்து விட்டான் போலும்.

“யாரோ சிலரால் கிருத்திகா இங்கு கொண்டு வந்து சேர்க்கப் பட்டாளே தவிர, அவள் குணாதிசயங்களைப் பார்த்தால், ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் போல் பெருந்தன்மையாகவும், மன்னிக்கும் மனதோடும், யாரையும் நேசிக்கும் குணத்தோடும் இருப்பாள். அதெல்லாம் பிறவியிலேயே வந்த குணம். யாரையும் மரியாதையில்லாமலும், எடுத்தெறிந்தும் பேச மாட்டாள். ஆனால் அதே நேரத்தில் கோடி கொடுத்தாலும் நேர்மை தவறக்கூடாது என்ற கட்டுப்பாடும் கொண்டவள். அவளைக் கடைசி வரைக்  கண்கலங்காமல், அவள் தன் மானத்திற்கு எந்த இடையூறும் நேராமல் பார்த்துக் கொள்வதானால் இந்த ஹோமின் முழு ஆதரவும் உண்டு.

மேலும்,  பெற்றோரால் தூக்கி எறியப்பட்டவள் என்ற வருத்தமும், கோபமும் அவள் மனதில் ஆழப் படிந்திருக்கிறது. அவள் மனக்குறை போக வேண்டுமானால், அவள் ஆசைப் பட்டபடியே, கலெக்டர் படிப்பை முடித்தால் தான் அவளுக்குள் உள்ள  அந்தத் தாழ்வு மனப்பான்மை போகும், தன்னம்பிக்கை வரும் என்பது என் அபிப்பிராயம்“ என்ற நீண்ட உறையுடன் முடித்தார்.

“கட்டாயம் ஐ.ஏ.எஸ். பரீட்சையில் தேர்ச்சி பெற்று கிருத்திகா, கலெக்டராகப் பணியில் சேருவாள். இதற்கு நான் எல்லா வழியிலும் துணையாக இருப்பேனே தவிர இடைஞ்சலாக இருக்க மாட்டேன்” என்று வாக்குறுதி  அளித்தான் சபரீஷ்வர்.

அங்குள்ள குழந்தைகளோடு குழந்தையாய் அவள் விளையாடுவதைப் பார்த்து  ரசித்தான் சபரீஷ்வர்.

மாலை நான்கு மணி போல் அங்கிருந்து கிளம்பினார்கள்.

“சார், இந்தத் தங்கச் சங்கிலி உங்கள் வீட்டு பீரோவில் இருக்கட்டும். என் ஹாஸ்டலில் இவ்வளவு விலை உயர்ந்த நகைகளை போட்டுக் கொண்டு தங்க அனுமதி கிடையாது” என்றாள்.

“அது சரி; ‘சபரீஷ்‘ என்று தானே இவ்வளவு நேரம் கூப்பிட்டுக் கொண்டிருந்தாய்;  இதென்ன மீண்டும் சார்?” என்றான்.

“அலுவலகத்தில் நான் அப்படிப் பெயர் சொல்லிக் கூப்பிடக் கூடாதல்லவா? மேலும் உங்கள் வீட்டில் நாமிருவரும் தனியாக இருக்கும் போது மட்டும் தான் நான் பெயர் சொல்லிக் கூப்பிடுவேன்” என்றாள் கிருத்திகா கொஞ்சும் குரலில்.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 10) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    மூன்று அத்தியாவசியங்கள் (சிறுகதை) – ✍ புனிதா பார்த்திபன்