in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 7) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

நீ எனதின்னுயிர் ❤ (பகுதி 7)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6

தாவது ஆட்டோ பிடித்துக் கொண்டு போய் விடலாம் என்று நினைத்து ரிஸப்ஷனை ஒட்டிய வெளி வெராண்டாவில் வந்து நின்றாள் கிருத்திகா. அப்போது சபரீஷ்வர் லிஃப்டிலிருந்து வெளியே வந்தான்.

“கிருத்திகா, இன்னும் நீங்கள் போகவில்லையா? என் காரில் வாருங்கள். நான் உங்களை ‘டிராப்’ செய்து விட்டுப் போகிறேன்” என்றான்.

“வேண்டாம் சார், கொஞ்ச நேரத்தில் மழை நின்று விடும். ஏதாவது ஆட்டோ பிடித்துப் போய் விடுவேன்” என்றாள்.

“இப்போதே இருட்டி விட்டது. இருட்டில், மழையில் தனியாக நிற்பது பாதுகாப்பு இல்லை, வாருங்கள்” என்றான் கண்டிப்பான  குரலில்.

தயக்கத்துடன் கிருத்திகாவும் காரில் ஏறிக் கொண்டாள். நல்ல மழை, ரோடே தெரியவில்லை. டிரைவர் நல்ல திறமையானவர்.  வைப்பரை ஆன் செய்து முன்னால் உள்ள கண்ணாடியில் படியும் தள்ளித் தள்ளி கிருத்திகாவின் ஹாஸ்டலில் வாசலில் கொண்டு வந்து நிறுத்தினார். மும்தாஜ் இறங்கி காருக்கருகில் ஓடி வந்தாள்.

“வெரி ஸாரி சார், நான் கிருத்திகாவை விட்டுத் தனியே  வந்திருக்கக் கூடாது”

“பரவாயில்லை, ஆஃபீஸ்  நேரத்திற்குள் எவ்வளவு வேலை செய்ய முடிகின்றதோ அவ்வளவு செய்யுங்கள். நீங்கள் எல்லோரும் சின்சியர் ஹார்ட் ஒர்க்கர்ஸ் என்று எனக்குத் தெரியும். ஒருவருக்கொருவர் துணையாக இருந்தால் இன்னும் நல்லது” என்றவன் கிருத்திகாவிடமும், மும்தாஜிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

அன்று இரவு டின்னர் முடித்து விட்டுத் தங்கள் அறையில் மும்தாஜும் , கிருத்திகாவும் ஆளுக்கொரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தனர்.

கிருத்திகாவின் கையில் புத்தகம் இருந்ததே தவிர எண்ணம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது.

மும்தாஜ், தன் கையிலிருந்த புத்தகத்தை மூடி ஒரு ‘புக் மார்க்’ வைத்து விட்டு கிருத்திகாவின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“கிருத்திகா, என்ன யோசனை பலமாக இருக்கிறது. கையில் புத்தகம் இருக்கிறது. ஆனால் யோசனை எங்கோ இருக்கிறதே?” என்றாள்.

கிருத்திகா அவளிடம், சபரீஷ்வர் பற்றி கருத்திருமன் கூறியதைச் சொன்னாள்.

“நீ என்ன சொன்னாய் கிருத்திகா?”

“இதெல்லாம் தேவையில்லாத ஆசை, நடக்கக் கூடாதது. அவர் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கிறார், நான் அதல பாதாளத்தில் இருந்து ஏதாவது ஒன்றைப் பற்றி மேலே எழுந்து வர முயற்சி செய்பவள். படிப்பும் அதனால் கிடைக்கும் உயர்வும் மட்டும் தான் முறையாக இருக்கும் என்று நம்புபவள். ஒரு பெரிய தொழிலதிபர் கிடைத்தார் என்று என் வாழ்க்கையை நான் முடக்கிக் கொண்டால் இன்னொரு கிருத்திகா தான் உருவாக முடியும்”

“என்னடி சொல்கிறாய்?”

“ஆமாம், நன்றாக யோசித்துப் பார். எனக்கு அம்மா அப்பா யாரென்றே தெரியாது. கோயிலில் கண்டெடுக்கப்பட்ட அனாதை. என்ன ஜாதி என்ன மதம் என்று தெரியாது. பல நாட்கள் எங்கள் ஹோமில் பணவசதி இல்லாததால், பணக்காரர் வீட்டு விருந்தில், சாப்பிட்ட இலையில் மிச்சமானதையெல்லாம் கொண்டு வந்து தருவார்கள்.

இப்போது உள்ள பாதர் தான் ‘குடிப்பது கஞ்சியாக இருந்தாலும் இவர்களுக்கு அதுவே போதும். பிறர் வேண்டாமென்று ஒதுக்கியதை, வீணாக்கியதைக் கொடுக்காதீர்கள். என் குழந்தைகள், மற்றவர் எச்சிலைச் சாப்பிடக் கூடாது. அவர்கள் பிச்சைக்காரர்கள் இல்லை’ என்று கண்டிப்புடன் கூறினார். எங்களையும் அடுத்தவர் பொருளுக்கு, அடுத்தவர் வாழ்க்கைக்கு ஆசைபடக் கூடாது  என்று கூறி வளர்த்தார்.

எந்தப் பொருளை அடைந்தாலும் அதற்கொரு விலை கொடுக்க வேண்டும் என்பார். தன் மானமும், சுயகௌரவமும் தான் முக்கியம் என்று வலியுறுத்துவார். இப்போது சொல்… பணத்தோடும், சுற்றத்தோடும் பிறந்து வாழ்கின்ற அவர் எங்கே? நான் எங்கே? யோசித்துப் பார்” என்றாள்.

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மும்தாஜ், பிறகு மெதுவாக்க் கூறினாள்.

“நீ என்னதான் சொன்னாலும், வித்தியாசம் பாராட்டினாலும், அவர் பார்வையில் உன் மேலுள்ள அன்பும் காதலும் நன்றாக வெளிப்படுகிறது. உண்மையான அன்பில்லை என்றால், கருத்திருமன் சாரோடு உன்னை ரென்டல் காரில் ஹோமிற்கு அனுப்புவாரா? நீ மழையில் நனையக் கூடாதென்று இவ்வளவு பெரிய கம்பெனிகளின் உரிமையாளர் உன்னை ஏன் அழைத்து வந்து உன் இருப்பிடத்தில் சேர்க்க வேண்டும்? நன்றாக நீ யோசித்துப் பார்” என்றாள் மும்தாஜ்.

“மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் என்னால் யோசிக்க முடியாது  மும்தாஜ். என் தகுதி பற்றித்தான் பேச முடியும். போதுமே இந்தப் பேச்சு, டின்னர் சாப்பிட்டுப் போய் படுக்கலாம் வா” என்று அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் கிருத்திகா.

விளக்கையெல்லாம் அணைத்துப் படுக்கையில படுத்த பிறகு தான் கிருத்திகா ‘மனம் ஒரு குரங்கு’ என்று புரிந்து கொண்டாள். இவ்வளவு நேரம் எதிர்வாதம் பண்ணிக் கொண்டிருந்த அவள் மனம், ‘டக்’கென்று சபரீஷ்வரைப் பற்றி யோசிக்கத் தொடங்கியது.

இளங்கோவினால் தனக்கு ஏற்படவிருந்த ஆபத்தை உணர்ந்து கருத்திருமன் வீட்டில் தங்க வைத்தது. இவளுடைய இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போர்ட்டை நம்பி அப்படியே  ஏற்றுக் கொண்டது, அடிக்கடி தன்னைக் காரில ஏற்றிக் கொண்டு கிளாஸில் சேர்த்தது, கருத்திருமன் அங்கிளை விட்டு இரவில் கொண்டு வந்து பல நாட்கள் வீட்டில் விட்டது. அவனுடைய வீட்டில் சமையல்கார சாம்புத் தாத்தா மூலம் உபசரித்தது என, பல நிகழ்ச்சிகள் நினைவிற்கு வந்து போயின.

அன்று இரவு ஏதேதோ யோசனைகளில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். தூங்கவே கடைசியில் இரவு இரண்டு மணி ஆகியிருக்கும்.

அடுத்த நாள் காலை அடித்துப் பிடித்து எழுந்து பார்த்தால் மணி ஏழைக் காட்டியது. அந்த ஹாஸ்டலில் குளிப்பதற்கு வேறு குளியலறை சுலபத்தில் கிடைக்காது. ஒரு வழியாக எல்லாம் முடித்துக் கொண்டு ஆஃபீஸ் செல்ல தயாராவதற்குள் கொஞ்சம் ‘லேட்’ டாகி இருந்தது. மும்தாஜ் ஓடி விட்டிருக்கிறாள்.

கிருத்திகா போய் சீட்டில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் சபரீஷ்வரன் கூப்பிட்டான்.

“கண்கள் ஏன் இப்படி சிவந்திருக்கின்றன கிருத்திகா? இரவெல்லாம் படித்தாயா? அல்லது என்னை நினைத்து தூக்கம் வரவில்லையா?” என்றான்.

அவன் முகம் மட்டுமல்ல, கண்களும் சிரித்தன. கிருத்திகா அவனை முறைத்தாள்.

“என்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும், நீங்கள் என்னை விரும்புவதாகவும், திருமணம் முடிக்க ஆவலாக இருப்பதாகவும் கருத்திருமன் அங்கிள் கூறினார். வேடிக்கை தான்! இந்த எண்ணம் என் மேல் ஏற்பட்ட பரிதாபத்தால் இருக்கலாம். என்னைப் பார்த்து யார் பரிதாபப்பட்டாலும் எனக்குப் பிடிக்காது” என்று கோபமாகக் கூறினாள்.

“கூல் பேபி கூல், நீ என்ன சொன்னாலும் நீ தான் என் மனைவி என்று என் மனம் பல முறை கூறி என் மூளை அதை ரெகார்ட் பண்ணி ‘சேவ்’ செய்து விட்டது. என் உடல் அழியும் போது தான் இனி அந்த எண்ணம் மறையும்” என்றான் உறுதியாக.

கண்கள் கலங்க ‘டக்’ கென்று அவன் வாயைப் பொத்தினாள் கிருத்திகா.

“இனி இந்த மாதிரி எப்போதும் பேசக் கூடாது” என்று விம்மினாள்.

“அப்படியானால் என் கேள்விக்கு உன் மனதில் உள்ளதை உண்மையாகக் கூறு” என்றவன் வாயைப் பொத்திய அவள் கைகளைப் பிடித்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.

“என்ன சொல்ல வேண்டும்?” என்று விம்மியவள், மெதுவாக அவன் கைகளில் இருந்து தன் கைகளை உருவிக் கொண்டாள்.

அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் கர்சீப்பால் துடைத்த சபரீஷ், “உன் கண்களில் வழிந்த கண்ணீரும், நீ என் வாயை மூடிய விதமும், உன் உள்ளத்தில் நான் இருக்கிறேன் என்று தெரிந்து விட்டது. ஆனால் உன் உள்ளத்தில் இருப்பது உன் வாயில் வர வேண்டும்” என்றவன், தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவள் இருகைகளையும் பிடித்துக் கொண்டு அவள் தலையில் தன் தலையை முட்டினான்.

அவள் கைகளை விலக்காமல், முட்டிக் கொண்டிருந்த தலையை எடுக்காமல் கண்களை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்து சிரித்தாள்.

மஞ்சள் வெயில் மாலையில், வானவில் தலைக்கு மேல் கிரீடமாய் ஒளிர, இதமான வெயிலில் லேசான சாரல் மழை அடித்தாற்போல் இருந்தது அவள் சிரிப்பு.

“ஐ லவ் யூ” என்றான் அவன் தன்னை ‌மறந்தவாறு.

“நானும் தான்” என்றாள் கிருத்திகா.

“இப்படியெல்லாம் சொன்னால் ஒத்துக் கொள்ள முடியாது. வாயைத் திறந்து நான் சொன்னது போல் ‌சொல்ல வேண்டும்” என்றான் பிடிவாதமாக அவள் இரண்டு தோள்களையும் மென்மையாக அழுத்தி.

“ஓ.கே. ஐ டூ லவ் யூ” என்றாள் கிருத்திகா முகமெல்லாம் சிவக்க.

சொன்னவள் அவனிடம் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு கதவருகில் ஓடியவள் திரும்பி அவனைப் பார்த்து சிரித்தாள்.

கிருத்திகா போய் தன் இருக்கையில் அமர்ந்த பிறகு ‘இது கனவா நனவா’ என்று யோசித்தாள். நாம் யாருடைய ஆசைக்கும் ஒத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்தோம். சபரீஷ்வர்  சென்டிமென்ட்டலாகத் தன்னை ‘டச்’ பண்ணி இப்படி மனம் திறந்து பேச வைத்து விட்டாரே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

இன்டர்காமில் சபரீஷ்வர் அழைத்தான். மும்தாஜூம், வயலெட்டும் தலைகுனிந்து சிரித்தனர்.

“என்னடி இளிப்பு உங்களுக்கு?” என்றாள் கிருத்திகா லேசாக சிடுசிடுத்த குரலில்.

அதற்குள் சபரீஷ்வர் அவர்கள் கேபினுக்கு வந்தான்.

“கிருத்திகா நீ வேண்டுமானால் நாளை வந்து கொஞ்சம் வேலைகளை முடித்துவிட்டு நாளை மறுநாள் முதல் ஒரு பத்து நாட்கள் ‘லீவ்’ எடுத்துக் கொள்” என்றான்.

“பத்து நாட்களா, ஏன் சார் ?” என்றாள் ஆச்சர்யத்துடன்.

“பரீட்சைக்குப் படிக்க வேண்டாமா?”

“ஒரு பேப்பர் பொது அறிவுக் கேள்விகள். இன்னொரு பேப்பர் ஸெலக்டிவ்  சப்ஜெக்டிலிருந்து. இதில் பத்து நாட்கள் படிக்க என்ன இருக்கிறது ?”

“பொது அறிவு, சப்ஜெக்ட் எல்லாம் நன்றாகத் தெரியுமா?”

“என்னமோ படிப்பது போல் தான் ஸார் இருக்கிறது. பிறகு படித்ததை யோசித்துப் பார்த்தால் மண்டை காலியாக இருக்கிறது” என்றாள் கிருத்திகா சிரித்துக் கொண்டு.

“சார், எங்களுக்கும் ஒரு பத்து நாட்கள் லீவ் கொடுங்கள்” என்றனர் வயலெட்டும், மும்தாஜும்.

“கிருத்திகா பாஸ் செய்து விட்டால் நம் எல்லோருக்கும் பெரிய பார்ட்டி வைப்பாள் இல்லையா? அப்போது வேண்டுமானால் அரைமணி நேரம் அனுமதி தரலாம்” என்றான்  அவனும் சிரித்துக் கொண்டே.

சபரீஷ்வர் அப்படித்தான். வேலை வாங்கும் போது எம்.டி.யாக அதிகாரம் பண்ணுவான், கரடியாக கத்துவான். ஆனால் யாரையும் வயிற்றில் அடிக்க மாட்டான்.

வேலை முடிந்த பிறகு அவனே வந்து சகஜமாக பழகுவான். அதிலும் அவனுக்குக் கிருத்திகா, அவள் ஆடிட் செக்‌ஷனில் உள்ள இளைஞர்கள், வயலெட், மும்தாஜ் எல்லோருடனும் ஓய்வு நேரத்தில் அரட்டை அடிப்பதும் பிடிக்கும்.

கிருத்திகா போன்றவர்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள் என்பதை விட, வேலையைப் புரிந்து அதைச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

சபரீஷின் உள்ளத்தை முதலில் கவர்ந்ததே கிருத்திகா வேலையில் காட்டிய சின்ஸியாரிட்டி தான். பிறகு தான் அவள் அழகு அவனை பாதித்தது. அவன் குணாதிசயங்களால், அவனையும் அவன் கீழ் வேலை புரியும் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.

ஒரு வாரம் விடுமுறை வேண்டும் என்று விண்ணப்பம் எழுதி சபரீஷ்வரனிடம் கொடுத்தாள்.

அதில் ஒப்புதல் கையொப்பமிட்ட அவன், “நான் எப்படி உன்னை ஒரு வாரம் பார்க்காமல் இருப்பது? அதனால் தினமும் மூன்று முறை நீயாக என்னுடன் போனில் பேச வேண்டும். அது மட்டுமல்ல, நான் எப்போதெல்லாம் போனில் பேசுகிறேனோ அப்போதெல்லாம் நீயும் பேச வேண்டும். இது கண்டிஷன், சரியா?” என்றான் குறும்புடன் சிரித்து.

“எப்போதும் போனிலேயே இருந்தால் நான் எப்போது படிப்பது?”

“இந்த கண்டிஷனை மீறினால் நான் உன் ஹாஸ்டலுக்கு நேரே வந்து விடுவேன்”

“ஆஹா” என்று அழகு காட்டி விட்டு சிரித்துக் கொண்டே வெளியே ஓடி விட்டாள்.

‘இந்த கிருத்திகா நம் வாழ்க்கையில் வந்த பிறகு வாழ்க்கையே இனிமையாக இருக்கிறது. பாரதி அதனால் தான்… காற்றிலேறி விண்ணையும் சாடுவோம், காதல் பெண்கள் கடைக்கண் பார்வையிலே என்று பாடினான் போலும்’ என்று நினைத்தான்.       

பரீட்சைக்கு முதல் நாளே கிருத்திகாவிற்கு போன் செய்து, “நான் தான் தினம் பரீட்சை ஹாலுக்கு அழைத்துப் போய் விடுவது, பிறகு பிக்அப் செய்து ஹாஸ்டலில் விடுவது எல்லாம் செய்வேன்” என்று சொல்லி விட்டான்.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 7) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    மருமகள் (சிறுகதை) – ✍ பீஷ்மா