in

வைராக்கியம் ❤ (பகுதி 7) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

வைராக்கியம் ❤ (பகுதி 7)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6

காலை ஒன்பது மணிக்குள் சமையலை முடித்து விடுவாள் நந்தினி. டிபன் சாப்பிட்டு விட்டு ஒன்பதரை மணி போல ஆஃபீஸ் போகும் கார்த்திக், மாலை ஆறு மணி போல தான் வீடு திரும்புவான். சில நாட்களில் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்து போவான்.

வீட்டு வேலைகளைப் பார்ப்பது, மீதி நேரங்களில் புத்தகங்களைப் படிப்பது, தினமும் மாலை நேரம் கோவிலுக்குச் செல்வது என தன் நேரத்தை அழகாய்ச் செதுக்கிக் கொண்டாள் நந்தினி.

மாதம் ஒருமுறை போல இருவரும் சிதம்பரத்திற்குச் சென்று எல்லோரையும் பார்த்து விட்டு வந்தனர். இதற்கிடையே பெற்றவர்கள் வீட்டிற்கும் ஓரிருமுறை கூட்டிச் சென்றான் கார்த்திக்.

நாட்கள் வேகமாக ஓட, இரண்டு வருடங்களில் தங்கை புவனாவிற்கும், கணேஷிற்கும் வரன் பார்த்து ஆறே மாத இடைவெளியில் திருமணமும் நடந்து முடிந்தது.

கையிலிருந்த சேமிப்பு பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் வைத்து, ரகு மைதிலி தம்பதியர், புவனா மற்றும் கணேஷின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்தனர்.

தங்கை புவனாவிற்கு அகமதாபாத்தில் மாப்பிள்ளை அமைந்ததால் திருமணத்திற்குப் பிறகு கணவருடன் அஹமதாபாத்தில் குடியேறினாள் புவனா.

தங்கையின் திருமணத்திற்கு ஒரு வாரம் தன் பெற்றோரின் வீட்டில் இருந்து வந்தது நந்தினியின் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னரே நந்தினியைக் கொண்டு போய் பெற்றவர்கள் வீட்டில் விட்டு வந்த கார்த்திக், ஒரு நாள் முன்பு திருமணத்திற்குச் சென்று, பிறகு நந்தினியுடன் தாளவாடி வந்து சேர்ந்தான்.

தனிக்குடித்தனம் தான் அவர்களுக்குள் அந்நோன்யத்தைக் கொண்டு வந்தது. அடிக்கடி ஊருக்குப் போக முடியாததால் தன் சொந்த ஊரிலிருந்த நண்பர்கள் மற்றும் சுற்றுவட்டார உறவினர்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என சில நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தவன், பிறகு நிதர்சனத்தைப் புரிந்து கொண்டான்.

தாளவாடி சிறிய ஊராக இருந்தாலும், அவன் வாழ்வின் ஏற்றத்திற்கான முதல்படியாகவே அமைந்தது. கையில் வரும் மாத சம்பளத்தில் ஒரு பகுதியைப் பெற்றோருக்கு அனுப்பிவிட்டு, இருக்கும் பணத்தில் இருவரும் சந்தோஷமாகவே இல்லறம் நடத்தினர்.

பக்கமிருக்கும் மளிகைக் கடையில் மாத சாமான்கள் வாங்குவது, வாரம் ஒருமுறை கூடும் சந்தைக்குப் போய் காய்கறிகள் வாங்கி வருவது, ஊரிலிருக்கும் ஒரே ஒரு சினிமா கொட்டகையில் வாரம் ஒருமுறை பென்ச் டிக்கெட் வாங்கிப் படம் பார்ப்பது, மாதக் கடைசியில் கையிருப்பு குறையும் போது மாலையில் தள்ளுவண்டிக்காரரிடம் வறுகடலையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருவரும் வீட்டுக்கு காலார நடந்து வருவது என வாழ்க்கை அழகாகப் போய்க் கொண்டிருந்து.

கிராமம் என்பதால் ஒன்பது மணிக்கெல்லாம் ஊரே அடங்கிவிடும். விவசாய நிலங்கள் நிறைந்திருந்த ஊராதலால் நிலத்தில் விளையும் ராகியும், சோளமுமே அவர்களின் உணவில் பிரதானமாக இருந்தது.

ராகிக் களியையும், பச்சைத் துவரம்பருப்பையும், மொச்சைக் கொட்டையையும் கொண்டு குழம்பையும் அத்தனை ருசியாக சமைப்பாள் பக்கத்து வீட்டு மாதேஸ்வரி.

மாதேஸ்வரி அக்காவிடம் கேட்டுக் கொண்டு ராகிக்களியும், துவரைக்குழம்பும் செய்யக் கற்றுக் கொண்டாள் நந்தினி அங்கிருந்தவர்களுக்கு அரிசியும், இட்லியும் வாரம் ஒருமுறை செய்யும் விசேஷ உணவாகவே இருந்தது.

ஒருநாள் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது திடீரென நந்தினிக்கு முடியாமல் போக, பதறிப் போன கார்த்திக் அருகிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

நந்தினியை பரிசோதித்த டாக்டர் ஷீலா, நந்தினி கருவுற்ற விஷயத்தைத் தெரிவிக்க, சந்தோஷத்தில் உணர்ச்சிவசப்பட்டவன் “தேங்க்ஸ் டாக்டர்” என்றான்.

டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் விஷயத்தை பெற்றவர்களுக்கும், மாமனார் மாமியாருக்கும் உடனே ஃபோன் மூலம் தெரிவிக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்கள், நந்தினியின் உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுமாறு கார்த்திக்கிடம் கூறினர்.

பெரிதாக எந்த வேலைகளையும் வீட்டில் செய்து பழகாதவனாக இருந்தாலும் முடிந்த உதவிகளைச் நந்தினிக்குச் செய்து கொடுத்தான் கார்த்திக்.

“உனக்கு முடிஞ்ச வேலைய செய் நந்தினி. அது போதும். எதாவது வேணும்ன்னா எங்கிட்ட சொல்லு. செய்யறேன். நானா பண்ணலையேன்னு நெனக்காத. எனக்கு பழக்கமில்ல” என்ற ஆத்மார்த்தமான அந்தப் பேச்சில், கார்த்திக்கை விட்டு தாய் வீட்டிற்குக் கூட போக மனமில்லாமல், சீமந்தம் வரையில் தாளவாடியிலேயே இருந்து விட்டாள் நந்தினி.

அம்மாவின் நேர்த்தியைப் பார்த்து வளர்ந்ததால், காலையில் எழுந்து குளித்து படபடவென வேலைகளை முடித்துவிட்டு, மதியம் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டாள் நந்தினி. நடுவில் ஒருவாரம் ரகுவும், மைதிலியும் தாளவாடி வந்து விட்டுப் போனார்கள்.

குளிர்காலத்தின் மாலை வேளைகளில் வாசலின் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு அரட்டையடித்தபடியே, சூடாக செய்த ராகி அடையையும் தேநீரையும் சுவைத்துக் கொண்டு நாட்கள் இனிமையாய்க் கழிந்தன.

காலாண்டு, அரையாண்டு, வருடக்கணக்குகளை முடிக்கும் நாட்களில் கார்த்திக் ஆஃபீஸிலிருந்து வீட்டிற்கு வரவே இரவு ஒன்பது மணி போல ஆகிவிடும்.

திரும்ப சாப்பிட்டு விட்டு அரைமணி நேரத்தில் அலுவலகத்திற்கு கிளம்பும் கார்த்திக், வீட்டிலிருந்து ரேடியோவையும் எடுத்துச் செல்வான்.

விடிய விடிய பாட்டு கேட்டுக்கொண்டே வேலைகளை முடிக்கும் வங்கி அலுவலர்கள், வீட்டுக்கு வரவே மறுநாள் காலை ஏழு மணி ஆகிவிடும்.

பின்பு இரண்டு மணிநேரம் போல ஓய்வெடுத்துக் கொண்டு திரும்பத் தயாராகி அனைவரும் வங்கிக்குச் செல்வார்கள். எல்லா அலுவலர்களின் வீடுகளும் அருகருகே இருந்ததால் ஒரே குடும்பம் போலவே பழகினார்கள்.

தாளவாடிக்கு வந்த புதிதில் நந்தினிக்குத் தனியாக இருக்கப் பிடிக்கவில்லை என்றாலும், நாளாக நாளாக தனிமை அவளுக்குப் பழகிப் போனது.

வேலையை முடித்துவிட்டு வெளியே நிற்கும் சமயங்களில் பக்கத்துவீட்டு மாதேஸ்வரி அக்காவுடன் மட்டும் பேசுவாள் நந்தினி.

மாதேஸ்வரியின் கணவர் நஞ்சுண்டேஷ்வரரின் சொந்த ஊர் தாளவாடி என்பதால், உள்ளூர் மக்கள் அனைவரையும் மாதேஸ்வரிக்குத் தெரிந்திருந்தது. அதனால் நடுவில் எங்காவது வெளியே செல்ல வேண்டுமென்றால், நந்தினி மாதேஸ்வரி அக்காவுடன் சென்று வந்தாள்.

மாதங்கள் ஓட, வளைகாப்பு சீமந்தத்திற்கு நல்ல நாளைக் குறித்த சுந்தரேசன் தம்பதியர், சம்பந்திக்கும், கார்த்திக்கிற்கும் விஷயத்தை தெரிவிக்க, ஒரு நல்ல நாளில் நந்தினியின் வளைகாப்பு இனிதே நடந்தேறியது.

தலைப்பிரசவம் என்பதால் வளைகாப்பு முடிந்த கையோடு தங்கள் மகளை அழைத்துச் செல்லும் எண்ணத்தில் நந்தினியின் பெற்றோர் இருந்தனர்.

“தலச்சங் குழந்தை ரொம்ப விசேஷம்.‌ அதே சமயம் ஜாக்கிரதையாவும் பாத்துக்கணும். அதனால் இந்த நல்ல நாள்ல பெத்தவாளோட நந்தினிய நெறைஞ்ச மனசோட அனுப்பறது தான் சரியா இருக்கும்” என்று சுந்தரேசன் சொல்ல, பிரிய மனமில்லை என்றாலும், பெற்றவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்ட கார்த்திக் சம்மதம் தெரிவித்தான்.

பிறகு சீமந்தம் முடிந்து எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு பெற்றவர்களோடு கிளம்பினாள் நந்தினி.

நந்தினி ஊருக்குச் சென்றதும் மனது வெறுமையாக இருந்ததால், ஒருநாள் கூடுதலாக லீவு போட்டு வீட்டில் இருந்துவிட்டு மறுநாள் கிளம்ப முடிவெடுத்தான் கார்த்திக்.

இரவு நேரம் மட்டும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்களே தவிர, மற்ற நேரங்களில் அவரவர்கள் அவரவர் வேலையில் பரபரப்பாக இருந்தனர்.

கார்த்திக்கின் நண்பர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் வேலை நிமித்தமாக வெளியூருக்கு குடிபெயர்ந்திருந்தனர்.

வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தவன், “அம்மா… பாலு அண்ணா எங்க?” என்று கார்த்திக் கேட்க

“ஏதோ ஹோட்டல் காண்ட்ராக்ட் விஷயமா பேச வெளிய போயிருக்கான்” என்றவள், கார்த்திக்கிடம் கொஞ்ச நேரம் ஆசைதீர பேசிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் கொஞ்சம் கோபமாகவே வந்த பாலு, “இன்னைக்கு காசுக்கு தான் மதிப்பு, மனுஷாளுக்கு இல்ல” என்று பொதுவாகச் சொல்ல

“என்ன ஏதாவது பிரச்சினையா அண்ணா?” என்றான் கார்த்திக்.

“என்னத்த சொல்ல. இப்ப நெறைய ஹோட்டல் போட்டிக்கு வந்தாச்சு. இத்தனை வருஷமா நம்மகிட்ட ஆஃபிஸ் விசேஷத்துக்கு ஆர்டர் குடுத்துண்டு இருந்தவர், இப்ப விலை குறைச்சல்னு வேறுபக்கம் குடுக்கறார். விக்கற விலைவாசில எந்த கலப்படமும் இல்லாம நல்ல பொருட்களை வச்சு தான் நாம சமைக்கிறோம். அதனாலதான் பொருட்களோட விலையையும் கொஞ்சம் விலை அதிகமா வைக்க வேண்டியிருக்கு, ஆனா அதை நெறைய பேர் புரிஞ்சுக்கறதில்ல. ஹோட்டல் கட்டிடமும் பழசாயிடுத்து. முன்பக்கத்தை மட்டும் கொஞ்சம் புதுசா மாத்தி, பெயிண்ட் அடிச்சு செலவு பண்ணினா தான் நம்மால மீதி ஹோட்டல்களோட போட்டியும் போட முடியும். அப்பாகிட்ட நான் பேசினா ஒத்துக்க மாட்டேங்கறா. உனக்கு ஏதாவது பேங்க்ல லோன் ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா?” என்றான் பாலு.

“அது முடியாது அண்ணா. எங்க கிளைல என்னோட ரத்தபந்தங்களுக்கு, நான் லோன் வாங்கித் தர முடியாது. இங்க சிதம்பரத்துல இருக்கற பேங்க் மேனேஜர்கிட்ட வேணா நான் பேசறேன்” என்று கார்த்திக் சொல்ல

“சிதம்பரத்துல இருக்கற வங்கில பேசறதுக்கு நீயென்ன? இத்தனை வருஷமா கணக்கு வச்சுண்டு இருக்கேன், நானே பாத்துக்கறேன்” என்று ஏதோ கோபத்தில் அண்ணா சொல்ல

“இதுக்குதான் நான் யார்கிட்டேயும் எந்த உதவியும் கேக்காதீங்கோன்னு சொன்னனேன். கொஞ்ச நாள் பொறுத்து பார்ப்போம், அவசரப்படாதீங்கோ” என்றாள் மது மன்னி.

“அண்ணா ஒன்னும் கேக்கலை மன்னி, சும்மா தான் பேசீண்டு இருந்தோம்” என்ற கார்த்திக் மேலும் அங்கு இருந்தால் பிரச்சினையாகும் என்றறிந்து தன்னுடைய அறைக்குச் சென்று உட்கார்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் அண்ணா பையன் அர்ஜுன் பள்ளியிலிருந்து புத்தகப் பையை எடுத்துக் கொண்டு கார்த்திக்கின் அறைக்கு வந்தான்.

“டேய்… அர்ஜுன், வாடா. எப்படி இருக்க? க்ளாஸ்லாம் எப்படி போறது?” என்று கேட்க

“நல்லா போறது சித்தப்பா. இந்த பேக்கை இங்க வச்சுட்டு போறேன் சித்தப்பா” என்று தன்னிடமிருந்த பள்ளிக்கூடப் பையை அங்கே வைத்து விட்டுப் போனான்.

கொஞ்ச நேரம் எதையோ நினைத்துக் கொண்டு கண்ணயர்ந்த கார்த்திக், எழுந்தவுடன் அம்மாவைக் தேடி சமையற்கட்டுக்குப் போனான்.

மகனைப் பார்த்தவள் உடனே காஃபியைக் கலந்து கையில் கொடுக்க, “வேறென்னமா விசேஷம்?” என்றான்.

“எல்லாரும் நன்னா இருக்கோம்ப்பா. என்ன, முன்ன மாதிரி ஹோட்டல் ஓட்டமில்ல. அப்பாவுக்கும் உடம்பு தளர்ந்தாச்சு. பாலுவுக்கும், சீனுவுக்கும் சரியா இருக்கு. பிஸினஸ்னா அப்படிதான. அப்பறம் உனக்கு எப்படி போறது? அந்த ஊர் பிடிச்சுதா? நீ நன்னா இருக்கயா?” என்று கேட்க

“நல்லா இருக்கேம்மா. நீயும், அப்பாவும் கொஞ்ச நாள் என்னோட வந்து இருங்களேன்” என்று ஆசையாகக் கேட்டான் கார்த்திக்.

“வரக்கூடாதுன்னு இல்லப்பா. வீட்டுல பிஸினஸ் விஷயமா யாராவது வந்துண்டு போயிண்டுமா இருப்பா. வீட்டு வேலை, ஹோட்டல் வேலைன்னு ரெண்டையும் பாக்கணுமே? நாங்க வந்தா ரெண்டு பேருக்கும் ரொம்ப கஷ்டமாயிடும். அதே நேரம் உங்கப்பாவுக்கு, தில்லை நடராஜரையும், சங்கரமடத்துக்குப் போய் அம்பாளையும் தரிசனம் பண்ணாம தூக்கம் வராது. நந்தினியும் குழந்தையுமா அங்க வந்ததுக்கப்பறம் ஒருதரம் வந்தா போச்சு. நடுவுல நீ இங்க வந்துடு” என்றாள் அம்மா.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் வாழ்க்கை உன் கையில் – நாவல் (பகுதி 2) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 7) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை