in

மருமகள் (சிறுகதை) – ✍ பீஷ்மா

மருமகள் (சிறுகதை)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

காலை பிரேக் பாஸ்ட் இட்லி, இட்லிக்கு சட்னி, கூடுதலாக சாம்பார் வைத்து மதியம் லஞ்ச்க்கு நிறைய  காய்கறிகள் சேர்த்து குழம்பு செய்து தனது மாமியாருக்கு பத்திய சாப்பாடு தயார் பண்ணி,  சித்ரா இடுப்பு வலியுடன் நிமிரவும்… வாசலில் ஆபீஸ் கார் ஹார்ன் சப்தம்   கேட்டது.

இந்த மாதிரி தினமும் காலை காபி முதல் மதியம் லஞ்ச் வரை எல்லாம் செய்து விட்டுக் கிளம்புவதற்குள் தளர்ந்து போய், ஆபீஸில் ஒழுங்காக வேலையில் கவனம் கொள்ள இயலாமல் அவஸ்தைப் பட்டு தலைவலியும் இடுப்பு வலியும் அவளைப் பாடாய்ப் படுத்தும்.

ஒரு நாள் கூட லேட்டாகப் போக  முடியாது, கரெக்ட்டாக எட்டு மணிக்கெல்லாம் ஆபீஸ் கார் வந்து  விடும்.

கணவன் சங்கர் மூலம் மாமியாரிடம் வேண்டுகோள் விடுத்துப் பார்த்தாள், சமையலுக்கு ஆள் வைத்து சமைத்தால் தனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும் என்று.

ஆசாரமான அவள் மாமியார் சமையலுக்கு ஆள் வைத்து சமைப்பதை சாப்பிட மறுத்து விட்டார்.

கணவன் சங்கரும், “வயசான அம்மா, இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் தன்னோட பழக்க வழக்கத்தை மாத்திக்கணும்னா முடியுமா? நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போயேன்” என்று சொல்லி விட்டான்.

வேலையை விட்டு விடலாம்னு பார்த்தால் செலவுகள் முழி புதுங்கச் செய்து விடும். இப்போதைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவர் சம்பாத்தியம் குழந்தைகள் பராமரிப்பு, படிப்பு ஏனைய செலவுகளுக்கு கட்டுப்படியாகாது.

ஆபீஸில் சித்ரா அடுத்த பொறுப்புகளுக்கான ஓட்டத்துக்கு தயாரானாள். அடுத்த வாரம் ஒரு பெரிய ஸெமினார், நிறைய எக்ஸிகூட்டிவ்ஸ் பிரசென்ட் பண்ணுவார்கள்.

அதற்கெல்லாம் வேண்டியவற்றைத் தயார் செய்ய வேண்டியது சித்ராவின் பொறுப்பு. மேலும், பிரேக் பாஸ்ட், லஞ்ச் எல்லாவற்றிற்கும்  தேவையான மெனு. வெளியூர்களிலிருந்து வரும் எக்ஸிகூட்டிவ்ஸ்க்கு தங்கும் வசதி, பிக்கப், ட்ராப் கேப்ஸ் ஏற்பாடுகள், அனைத்தையும் ஸ்டாப்ஃ மீட்டிங்கில் டிஸ்கஸ் செய்து ஆபீஸ் விட்டுக் கிளம்புவதற்கு அன்று நிறைய  நேரமாகி விட்டது.

சோர்வு மிகுதியாய் வீட்டுக்குப்  போனால், அங்கே நாத்தனார் அவள் ரெண்டு குழந்தைகளுடன்  வந்திருக்க நொந்து போனாள்.

நொந்து போன சித்ரா வேறு வழியின்றி அனைவருக்கும் டின்னர் தயார் பண்ணி, தனி ஒருத்தியாய்ப் பரிமாறி கிட்சனைக் க்ளீன் பண்ணிப் படுப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

காலையில் மெதுவாய் எழுந்து வெளியில் வந்த நாத்தனாருக்கும், அவளுடைய ரெண்டு குழந்தைகளுக்கும் காபி, பால் முதலானவற்றைக் கையில்  கொடுக்க வேண்டும்.

எழுந்திருக்க முடியாமல் எழுந்து, செய்ய முடியாமல் செய்து, அவள் ஆபீஸ் கிளம்பும் வரை அவள் கணவன் ரெடியாகாமல் அவள் கிளம்பும் நேரம் அவளை டிபன் போடச் சொன்னான்.

எரிச்சல் மேலோங்கி, நாத்தனாரிடம், “கொஞ்சம் அவருக்கு டிபன் போட்டுடறீங்களா?”

கேட்டு முடிக்கு முன், “இது என்னடி கூத்து… கட்டின புருஷனுக்கு காலைல ஒரு டிபன், காபி கூட கொடுக்க முடியாம அப்படி என்னடி ஆபீஸ்”

மாமியாரின் வாயிலிருந்து அமில வார்த்தைகள் தெறிக்க ஆரம்பிக்க, கணவன் சங்கருக்கு டிபனும், காபியும் கொடுத்து அவசரம் அவசரமாய்க் கிளம்பும் போது…

“என்ன பெரிய ஆபீஸ்… வீட்டுக்கு  வந்திருக்கற நாத்தனாரையும் அவ குழந்தைகளையும் கவனிக்கறதுக்கு ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டாத் தான் என்ன?”

மாமியாருக்கு எவ்வளவு  செய்தாலும் திருப்தி என்பதே இல்லை. சித்ரா பதிலேதும் பேசாமல் ஆபீஸ் கிளம்பினாள்.

அந்த வாரத்தில் வந்த செமினார் வேலையின் பளுவும், வீட்டு வேலை செய்யும் அழுத்தமும் தாங்காமல் செமினார் முடிந்த மறுநாள் ஆபீஸில் ஒரு நாள் லீவ் அப்ளை பண்ணி நன்றாக ரெஸ்ட் எடுக்க பிளான் பண்ணி சோர்வுடன் வீட்டுக்கு வந்தால், அவள் வந்து தான் டின்னர் ரெடி பண்ண வேண்டுமென்று மாமியாரும், நாத்தனாரும் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வேறு வழியில்லாமல் சோர்வோடு சோர்வாக நைட் டின்னர் ரெடி பண்ணிக் குழந்தைகள் முதற்கொண்டு அனைவருக்கும் பரிமாறி விழுந்த பாத்திரங்களைத் தேய்க்க முடியாமல் திணறித் திணறித் தேய்த்து அலம்பி வைத்து, கிட்சனைக் க்ளீன் செய்து படுக்கையில் விழுந்தவள் தான். எப்போது தூங்கினாள் என்றே தெரியாமல் ஒரு வித மயக்கத்தில் தூங்க ஆரம்பித்தாள்.

“அண்ணி… அண்ணி… இன்னுமா எழுந்திருக்கல! குழந்தைங்க எல்லாம் பாலுக்கும், காபிக்கும் ஏன் நாங்களும் வெயிட் பண்ணிட்டுருக்கோம், கொஞ்சம் சீக்கிரம் வாங்க”

கதவை டம் டம் மென்று தட்டி எழுப்பினாள் நாத்தனார் சுமதி.

ஆத்திரமும், எரிச்சலும், வெறுப்பும் ஒரு சேர எழ, “ஏன் , கால் எல்லாம் நல்லாத் தானே இருக்கு! செஞ்சு சாப்பிட வேண்டியது தானே!” போய்க் கத்தி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தாள்.

மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட, வலுக்கட்டாயமாய் பொறுமையை வர வழைத்துக் கொண்டு போர்வையை உதறி மடித்துக் கூட வைக்காமல் கதவு திறந்தவள், “என்ன சுமதி உனக்கு காபி போடவே தெரியாதா?”

பேச்சு ஒருமையில் வந்ததைக் கவனித்த சுமதி, “உங்க வீட்டுக்கு வந்து நான் காபி போடறதா?”

கொஞ்சம் கோபம் கலந்து கேட்டவளைப் பார்த்து, “ஓஹோ, அப்போ உங்க வீட்டுக்கு நான் வந்தப்போ நான்தானே காபி போட்டு எல்லாருக்கும் கொடுத்தேன். இங்க பாருங்க சுமதி, இன்னிக்கு முழுக்க நான் எதுவும் செய்ய முடியாது… நீங்க தான் காபி, டிபன், சாப்பாடு எல்லாம் எல்லாருக்கும் ரெடி பண்ணனும். என்னை எதிர்பார்க்காதீங்க”

சொல்லி விட்டு, சட்டென்று கதவை மூடித் திரும்பவும் படுத்து போர்வைக்குள் நுழைந்தாள்.

அந்த நேரம் நைட் ஷிப்ட் முடித்து சங்கர் வீட்டினுள் நுழைய ஒரே நேரத்தில் மாமியாரும், நாத்தனாரும் அவனிடம் மூக்கைச் சிந்தி அழாத குறையாக புகார்ப் பட்டியல் வாசிக்க, என்ன, ஏதேன்று புரியாமல் அவன் முழிக்க…

‘சே… நிம்மதியா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க முடியுதா லீவ் போட்டும் இந்த வீட்ல’ எரிச்சலுடன் எழுந்து முகம், கை, கால் கழுவி சோர்வைப் போக்கிக் கொண்டு வெளியில் வந்தாள்.

“என்ன சித்ரா, நைட் ஷிப்ட் முடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு வீட்டுக்கு வந்தா இந்த பாடு படுத்தறே? வீடா இது!? வர வர வீட்டுக்கு வர்றதுக்கே வெறுப்பாயிருக்கு”

பதிலேதும் சொல்லாமல் கிட்சன் போய் காபி போட்டு எல்லோருக்கும் கொடுத்து, குழந்தைகளுக்கு பால் கொடுத்து டிபன் செய்ய ஆரம்பித்தாள்.

“இப்ப எப்படி அண்ணி, எல்லாம் செய்ய முடியுது?” எகத்தாளமாய்க் கேட்டாள் சுமதி.

மௌனமாய் எல்லா வேலைகளையும் முடித்துப் பின் மெதுவாய் ஆபீஸ் கிளம்பிப் போனாள்.

“என்னம்மா டயர்டா இருக்கு ஒரு நாள் லீவ் வேணும்னு லீவ் போட்டுட்டு இப்ப ஆபீஸ் வந்து நிக்கற?”

மேனேஜரின் கரிசனமான கேள்வி அவள் அழுகையைக் கிளப்பி விட, அவள் முக வாட்டம் பார்த்து ஏதோ புரிந்து கொண்ட மேனேஜர் அவளுக்கு ஒரு காபி தருவித்து, “நீ இன்னிக்கு வேலை எதுவும் செய்ய வேண்டாம்மா.. ரெஸ்ட் எடுத்துக்க” என்று மீட்டிங் ஹாலுக்கு அவளை அனுப்பி யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாமென்று சொல்லிச் சென்றார்.

மதியம் லஞ்ச் சாப்பிட மீட்டிங் ஹால் வந்தவர்கள் சித்ரா சரிந்த நிலையில் ஒரு மாதிரி விழுந்து கிடப்பதைப் பார்த்துப் பதறி மேனேஜரிடம் ஓடினர்.

மேனேஜர் அவள் கணவன் சங்கருக்குத் தகவல் சொல்லி, சித்ராவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து ட்ரிப்ஸ் ஏற்றி ஒரு வார சிகிச்சைக்குப் பின் மெதுவாய் டிஸ்சார்ஜ் ஆகும் போது கலங்கிய கண்களுடனும், பாரமான மனதுடனும் உண்மையான கரிசனத்துடனும் சங்கர் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தான்.

தன் நாத்தனார் மாமியாரைப்  பார்த்துக்  கொள்வாள் என்று  நினைத்திருந்த சித்ராவுக்கு ஓர் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் வீட்டில் காத்துக் கொண்டிருந்தது.

வீடு திரும்பிய சித்ராவை மாமியார் என்றுமில்லாத அன்புடன் வரவேற்றார். வீட்டில் சமையல் செய்வதற்கு ஒரு பெண்மணி வந்து சமையல் செய்து கொண்டிருந்தார்.

மாமியார் மௌனமாய் சித்ராவைப் பார்க்க சித்ரா, மாமியாரிடம் தன் நாத்தனாரைப் பற்றிக் கேட்டாள்.

மாமியார் தலை குனிந்தது.

“உனக்கு உடம்பு சரியில்லாமப் போன மறுநாளே அவ வீட்டுக்குப் போயிட்டாம்மா. என்னதான் இருந்தாலும் உன்னை மாதிரி அவ கிடையாது. நான் உன்னை ரொம்ப படுத்தி எடுத்துட்டேன். என்னை மன்னிச்சுடும்மா”

கண்களில் நீர் கோர்த்து மறைக்க, சித்ராவின் கைகளைப் பற்றி உண்மையான அன்புடன் சொன்னார் மாமியார்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 7) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – இறுதி பகுதி) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை