in

வைராக்கியம் ❤ (பகுதி 10) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

வைராக்கியம் ❤ (பகுதி 10)

மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9

“சரிம்மா, நான் பத்தாயிரம் ரூபாய்க்கு செக்கை அனுப்பிடறேன். நீ கவலைப்படாத” என்ற ரகு, நந்தினியிடமிருந்து அவர்கள் முகவரியை வாங்கிக் கொண்டு, “நான் போய் டாக்டர்கிட்ட மாப்பிள்ளைய பத்தி என்ன ஏதுன்னு கேட்டூட்டு வந்துடறேன்” என்று சொல்ல

“வேண்டாம்ப்பா. ஆறரை மணி போல இவரை ஆபரேஷனுக்கு கூட்டீண்டு போக அவாளே வருவா. இவரும் டாக்டரை பார்க்கணும்னு சொல்லீருக்கார். டாக்டர் வந்து இவர்கிட்ட ஆபரேஷனப் பத்தி சொல்லீட்டுதான் கூட்டீண்டு போவா. அதுக்குள்ள நான் போய் உனக்கு காஃபி வாங்கீண்டு வரேன். நீ ரூம்ல இருப்பா” என்றாள் நந்தினி.

“நீ அலையாதடாம்மா. குழந்தையும் தூங்கறான். அவன் தூங்கும்போது நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடு. அப்பறம் ஆபரேஷன் ஆச்சுன்னா நைட்டும் முழிச்சுண்டு இருக்க வேண்டியிருக்கும். அதனால நான் போய் காஃபியைக் குடிச்சுட்டு உனக்கு காஃபியும், பாலும் வாங்கீண்டு அப்படியே பிஸ்கெட், பிரெட்-னு எதாவது கிடைச்சா அதையும் வாங்கீண்டு சீக்கிரம் வந்துடறேன்” என்று கிளம்பிச் செல்ல, நந்தினி இரவு முழுதும் பெரிதாகத் தூங்காததால் உட்கார்ந்து கொண்டே தன்னை மீறி கண்ணயர்ந்தாள்.

முன்தினம் இரவு இருமுறை கார்த்திக் நடுவில் எழுந்தபோது அவனுக்காக எழுந்தவள், அதற்குப் பிறகு தூங்கவே இல்லை. மனது முழுக்க நல்லபடியாக ஆபரேஷன் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு நூற்றெட்டு தடவை ஸ்ரீராமஜெயம் எழுதியவள், ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும்? பணத்துக்கு என்ன பண்ணலாம்? எப்போ இவரை நம்ம ஊருக்கு கூட்டுண்டி போவோம்? என்று ஏதேதோ யோசித்தாள்.

‘இவர் முழிச்சவுடனே மருத்துவமனைல பணத்தைக் கட்ட என்னென்ன பண்ணணும்னு கேட்டு மொதல்ல பணத்தை ரெடி பண்ணி எடுத்து வச்சுக்கணும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

பிறந்த வீட்டில் பணவிஷயங்களைப் அப்பா பார்த்துக் கொண்டார். மாமியார் வீட்டில் மாமனாரும், அவருக்குப் பிறகு கணவனும் பார்த்துக் கொண்டதால், கார்த்திக்கிற்கு ஏற்பட்ட விபத்து நந்தினியின் மனோநிலையை மிகவும் பாதித்தது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற மனநிலையிலேயே இருந்தாள்.

பத்து நிமிடத்தில் காஃபியைக் கொண்டு வந்து நந்தினிக்கு கொடுத்த ரகு, “வரும் போது ரிசப்ஷன்ல நம்ம ரூம் நம்பரை சொல்லிக் கேட்டேன். டாக்டர் இப்ப ரூமுக்கு வந்துடுவார்னு சொன்னா” என்று சொல்லவும்,

“சரிப்பா” என்றவள், “உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். இந்த நேரத்துல கஷ்டமா இருந்தாலும் சொல்லிதான் ஆகணும்” என்றாள் நந்தினி.

“என்ன விஷயம் மா? எதா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லு. நான் உங்கூடவே இருப்பேன். கவலைப்படாத” என்று சொல்ல

“நான் இரண்டாவது குழந்தை கன்சீவ் ஆயிருக்கேம்ப்பா” என்றாள் நந்தினி.

‘ஆண்டவா… இது என்ன சோதனை?’ என்று ஒரு நிமிடம் யோசித்தவர்

“ரொம்ப சந்தோஷம்மா. கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு நிம்மதியா இரு. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று சொன்னார் ரகு.

கார்த்திக்கிடம் ஆபரேஷன் விவரத்தைக் தெரிவிக்க, டாக்டரும், சீனியர் நர்ஸூம் ரூமிற்கு வந்தனர்.

“என்ன கார்த்திக் சார்… நல்லா தூங்கினீங்களா? எனக்கு கொஞ்சம் தமிழ் வரும். சென்னைல தான் எம்.எஸ் படிச்சேன்” என்றவர், “பை தி பை… உங்களுக்கு ஏற்பட்ட விபத்துல, எங்களால முடிஞ்சளவு ட்ரை பண்ணி பாத்துட்டு முடியாம தான் ரெண்டு காலையும் எடுக்கற முடிவுக்கு வந்திருக்கோம்.

உயிரா, கால்களா’னு வரும் போது உயிருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும். உங்க மனைவி விஷயத்தை சொல்லியிருப்பாங்கன்னு நெனக்கறோம். இந்த ஆபரேஷனுக்கு உங்களோட முழு சம்மதம் இருந்தாதான் நாங்க ஆபரேஷன் பண்ண முடியும். இது முழுக்க முழுக்க உங்க முடிவு” என்று சொல்லி முடித்தார் டாக்டர்.

டாக்டர் சொன்னதை ஆழமாக யோசித்த கார்த்திக், “ஆபரேஷன் பண்ணிகிட்டா என்னால வாழ்க்கை முழுதும் நடக்க முடியாதா டாக்டர்” என்று மனம் நொந்தவனாய்க் கேட்க

“இன்னைக்கு எடை அதிகமில்லாத செயற்கை கால்கள் கிடைக்குது. ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதும், அதப் பத்தின விவரங்களை சீனியர் நர்ஸ் உங்களுக்கு சொல்வாங்க. அப்பறம் அதோட உதவியால நீங்க காலம் பூரா நல்லாவே நடக்கலாம்” என்றார் டாக்டர்.

கொஞ்சம் மனநிம்மதி அடைந்தவனாய், “சரி டாக்டர், நான் ஆபரேஷன் பண்ணிக்கிறேன்” என்றான் கார்த்திக்.

ஆபரேஷன் டிரஸ்ஸை மனைவியின் உதவியுடன் சீனியர் நர்ஸ் கார்த்திக்கிற்கு போட்டு விட்டாள்.

நந்தினியை அருகில் அழைத்த கார்த்திக், “மாமா ஹாஸ்பிடல்ல ஆகற செலவைப் பாத்துப்பா. நான் மாமாகிட்ட பேசீட்டேன். அப்பறமா நாம குடுத்துடலாம். நீதான் தைரியமா இருக்கணும். ஊருக்கு போனவுடனே பேங்க்லருந்து பணத்தை எடுத்து கொடுத்துடறேன். பையனப் பாத்துக்கோ” என்று சொல்ல

“போலாமா?” என்ற நர்ஸின் கேள்வியில்

“போலாம் சிஸ்டர்” என்று சொல்லவும் கார்த்திக்கை ஸ்ட்ரெக்ச்சரில் படுக்க வைத்தவர்கள் ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு சென்றனர்.

“அப்பா… பாவம்ப்பா அவரு” என்று அழுதாள் நந்தினி.

“என்ன பண்றது? விடு. கிருஷ்ணாவுக்காகவும், பொறக்கப் போற இந்தக் குழந்தைக்காகவுமாவது நீ தைரியமா இருக்கணும் நந்தினி” என்றவரிடம்

“தாத்தா, அம்மாவ அழவேண்டாம்னு சொல்லு தாத்தா. நான் தூங்கி எப்ப முழிச்சாலும் அம்மா அழுதுண்டே இருக்கா. ஊசி போட்டா கொஞ்ச நேரம் தான் வலிக்கும். அப்பறம் சரியா போயிடும் தான. இது கூட அம்மாவுக்குத் தெரியல” என்றான் கிருஷ்ணன்.

பேரனைக் கட்டிக் கொண்டவர், “ஆமாண்டா. எல்லாம் சரியா போயிடும்” என்றார்.

மதியம் போல ரூமிற்கு ஆபரேஷன் முடிந்து கொண்டு வந்து விட்டவர்கள், “அனஸ்தீஷியா குடுத்து ஆபரேஷன் பண்ணியிருக்கு.‌ முழுசா ஞாபகம் வர நைட் ஆகிடும். கொஞ்சம் அரை மயக்கத்தில தான் இருப்பாங்க. அதனால எதாவது சொன்னாலும் பெருசா எடுத்துக்காதீங்க” என்று சொன்ன சீனியர் நர்ஸ், நந்தினியின் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

முதலில் பணியாட்கள் கார்த்திக்கைப் போர்த்தியபடி படுக்கையில் விட்டுச் சென்ற பிறகு போர்வையை விலக்கிப் பார்த்தாள் நந்தினி. கார்த்திக்கின் இரண்டு கால்களும் இல்லாமல் பார்ப்பதற்கு நெஞ்சே உறைந்து போனது போல நந்தினிக்கு இருந்தது. மிடுக்குடன் நடக்கும் அந்தக் இரண்டு கால்களும் முட்டிக்கு மேலோடு வெட்டப்பட்டிருந்தன.

சத்தமாக அழக்கூட திராணியற்றவளாய் தந்தையின் சட்டைக் காலரைப் பிடித்து, “ஏம்ப்பா எனக்கு மட்டும் இவ்ளோ கஷ்டம். நான் என்னப்பா தப்பு பண்ணினேன். வாழ்க்கை முழுக்க நான் இவரை வச்சுண்டு எப்படி சமாளிப்பேன்? காலைல எழுந்தவுடனே இவர நான் எப்படி சமாதானப்படுத்தப் போறேனோ தெரியலையேப்பா” என்று கதறினாள் நந்தினி.

தன் பெண்ணின் வாழ்க்கை இப்படி ஒரு நிலைக்கு வந்ததை எண்ணி வருத்தப்பட்டவருக்கு, ஜோசியர் சுப்ரமணியம் சொன்னது தான் ஞாபகம் வந்தது. “மனசை விட்டுடாத நந்தினி. தைரியமா இரும்மா” என்றவர், “ஒரு வாரமோ, பத்து நாளோ இங்க இருந்து பாத்துண்டு அப்பறம் நம்ம ஊர்பக்கம் இருக்குற ஆஸ்பத்திரிக்கு கூட்டீண்டு போயிடலாம். மொதல்ல அவங்க பேசற பாஷை புரியும். ஆளுகளைத் தெரியும். இங்க இவா பேசறது கூட நமக்குப் புரியறதில்ல” என்று சலித்துக் கொண்டார்.

“சரிப்பா. இதப்பத்தி நாம டாக்டர்கிட்ட பேசீட்டு அப்பறமா முடிவெடுக்கலாம்” என்றவள், “அவா ஆத்துலருந்து ஃபோன் பண்ணி என்னைத் திட்டினாப்பா. சிதம்பரம் கூட்டீண்டு வந்துருக்கலாம்லனு கேட்டா. நான் பேசறத பேசிகட்டும்னு விட்டுட்டேன். இவர் இருந்த சூழ்நிலைனு ஒன்னு இருக்குல்லப்பா.

உடனே இங்க‌ கொண்டு வந்ததுனால உயிராவது மிஞ்சித்து. அதுவுமில்லாம அந்த நேரத்துல எனக்கு என்ன பண்றதுன்னே தெரியாம இருந்தது. அந்த நேரத்துல சுத்தி இருந்தவா தான், தெய்வம் மாதிரி உடனே இந்த ஹாஸ்பிடல்ல நன்னா பார்ப்பான்னு சொன்னா. மறுபேச்சு பேசாமல் ஆம்புலன்சில் அவருடன் கிளம்பினேன்” என்றவள்

“நாளைக்கு மாமியார் ஆத்துலருந்து பாலு அத்திம்பேரும், சீனுவும், இந்துவும் இவரைப் பார்க்க வரேன்னு சொல்லியிருக்கா” என்று தந்தையிடம் சொன்னாள்.

சலைன் பாட்டில் ஒரு பக்கம், யூரின் பேக் ஒரு பக்கம் என்று போய்க் கொண்டிருக்க, மருந்துகளை சலைன் பாட்டிலின் மூலம் நர்ஸ்கள் செலுத்திக் கொண்டு இருந்தனர்.

நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது சில்லென்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு நந்தினி அடித்துப் பிடித்து எழுந்திருக்க, கார்த்திக் சலைன் பாட்டில் ஸ்டேண்டை கீழே தள்ளி விட்டிருந்தான்.

“ஏங்க… என்னாச்சு?” என்று நந்தினி பதறிக் கொண்டு கேட்க, “எத்தனை தடவை கூப்பிடறேன். நீ பாட்டுக்கு தூங்கற” என்றவன் கோபத்துடன் முறைக்க

சத்தம் கேட்டு ஓடிவந்த நர்ஸ் இந்து, “ஏன் சார் இப்படி பண்ணறீங்க? அந்த பொண்ணு பாவம். பேசாத படுங்க சார்” என்று சொல்லிவிட்டு அங்கே பணியிலிருந்த ஆளை அழைக்க, பணியாள் கண்ணாடிச் சில்லுகளை எடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்தினாள்.

“எனக்கு சாப்பிட எதாவது வேணும். நர்ஸ்கிட்ட பேசி எதாவது குடுக்கச் சொல்லு” என்றான் கார்த்திக்.

“நேத்து தான் ஆபரேஷன் ஆயிருக்கு. டாக்டர் சொல்ற வரைக்கும் சலைன் மட்டும் தான். அதுவரை உங்க உடம்புக்குத் தேவையான சத்தை இந்த மருந்தே கொடுக்கும். பசிக்காது” என்ற நந்தினி நர்ஸிடம் தனியே போய்ப் பேசினாள்.

“விபத்து நடந்தப்போ கீழே விழுந்ததில் பின்தலையிலும் கொஞ்சம் அடிபட்டிருக்கு. அதில்லாம ஆபரேஷனுக்கு குடுத்த அனஸ்தீஷியானால கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்கறார். தொடர்ந்து ரொம்ப கோபம், துக்கம், திடீர்னு அழுகை மாதிரி இருந்தா தலைல ஸ்கேன் செஞ்சு பார்க்கணும். அதனால யாரோ ஒருத்தர் எப்பவும் கூட இருக்கணும். தனியா விடாதீங்க” என்று நர்ஸ் சொல்லிச் சென்றாள்.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் வாழ்க்கை உன் கையில் (நாவல் – பகுதி 5) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை