in

வைராக்கியம் ❤ (பகுதி 9) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

வைராக்கியம் ❤ (பகுதி 9)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8

கார்த்திக்கின் கால்களை அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்க, கதறி அழுதாள் நந்தினி.

“இது அழறதுக்கான நேரமில்லம்மா. நீதான் முடிவெடுக்கணும். அப்பதான் ஆபரேஷன் பண்ணுவாங்க”

“ஐயோ… நான் என்ன பண்ணுவேன். எங்க வீட்டு மனுஷங்ககிட்டயும், இவங்க வீட்டு மனுஷங்ககிட்டயும் என்னன்னு சொல்லுவேன். அப்பா, அண்ணா கூட இல்லையே” என்று நந்தினி அழ

“வாழ்க்கைல சிலநேரம் நம்ம தான் முடிவெடுக்கணும்மா. உள்ள இருக்கறது உன்னோட புருஷன், நீதான் முடிவெடுக்கணும்” என்று கூட இருந்த இருவரும் ஆதங்கமாகச் சொல்ல, நந்தினி யோசித்தாள்.

பிறகு தீர்மானமாக முடிவெடுத்தவள், “ஆபரேஷன் பண்ணிடுங்க டாக்டர், எனக்கு அவரோட உயிர் தான் எனக்கு முக்கியம்” என்று சொல்ல,

“சரி… உடனே பத்தாயிரம் ரூபாய் ஆபரேஷனுக்கு கட்டீடுங்க. மத்த விஷயத்தை ரிசப்ஷன்ல சொல்லுவாங்க” என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினார் டாக்டர்.

“சரி டாக்டர்” என்றவள் தன் கைப்பையைப் பார்க்க, ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது.

“அண்ணா… எப்படியாவது எனக்கு பத்தாயிரம் ரூபாய் குடுங்க. அதுக்கு பதிலா இப்போதைக்கு இந்த நகையை வச்சுக்கோங்க” என்று நந்தினி தன் கழுத்திலிருந்த செயினையும், கை வளையல்களையும் கழட்டிக் கொடுக்க

“எங்களுக்கும் தங்கச்சி இருக்காம்மா. முதல்ல நகையை கழுத்துலயும் கையிலயும் போடும் மா, நாங்க பணம் கட்டீடறோம். நீ பொறுமையா பணத்தைக் குடும்மா போதும்” என்று சொல்லிவிட்டு பணத்தை ரிசப்ஷனில் கட்டினார்கள், கார்த்திக்கை மருத்துவமனைக்கு அழைத்து வர உதவி செய்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

நந்தினியிடமிருந்து ஃபோன் வந்தவுடனேயே பதறிப்போன ரகு, உடனே அவசரத்துக்கு கொஞ்சம் பணத்தை கடன் வாங்கிக் கொண்டு உடனே திருப்பதிக்குக் கிளம்பினார்.

“தப்பா எடுத்துக்காதம்மா. உங்க அப்பா நாளைக்கு வந்துடுவாரு. நாங்க அப்படியே கிளம்பறோம். நீ தைரியமா இரு. கடவுள் இருக்காரு” என்ற அண்ணன், தம்பி இருவரும் கிளம்பத் தயாரானார்கள்.

“உங்க முகவரி குடுங்கண்ணா, நான் பணத்தை சீக்கிரம் அனுப்பிடறேன்” என்று அவர்களிடம் முகவரி வாங்கிக் கொண்டவள்

“இந்த அவசரத்துல நான் உங்க ரெண்டு பேர் பேரைக் கூட கேட்கவே இல்லையே அண்ணா. உங்க பேருண்ணா?” என்றளிடம்

“நான் பெரியவன் ராமன், இவன் என் தம்பி லட்சுமணன்” என்று அவர் சொன்ன அந்த கணம் நந்தினி, கடவுளே நேராக வந்து தனக்கு உதவி செய்ததாகவே நினைத்துக் கொண்டாள்.

அவள் தாங்கள் கிளம்புவதை நினைத்து வருத்தப்படுவதை உணர்ந்தவர்கள், “கவலைப்படாதம்மா. உயிர்க்கு ஆபத்து இல்லன்னு டாக்டர் சொல்லியிருக்காங்களே. உயிர் ஒன்னு இருந்தா எப்படி வேணாலும் பொழச்சுக்கலாம். ஒண்ணும் ஆகாது. தைரியமா இரும்மா. சரி… அப்ப நாங்க கிளம்பறோம்” என்று இருவருமாக கிளம்பினார்கள்.

அவர்கள் கிளம்பி சிறிது நேரத்தில் திரும்ப அழைத்த டாக்டர், “நாளைக்கு காலைல ஆபரேஷன்மா. அப்பறம் ஒரு வாரம், பத்து நாள் தங்க வேண்டியிருக்கும். அதுக்கப்பறம் தான் நிலைமையைப் பொறுத்து டிஸ்சார்ஜ் பத்தி சொல்ல முடியும். ஆபரேஷனுக்கு ஆகும் செலவு, ரூம் வாடகை எல்லா விவரங்களையும் ரிசப்ஷன்ல சொல்லுவாங்க. ஆபரேஷனுக்கு முன்னாடி நீங்க ஒரு ஒப்புதல் கடிதம் ஒண்ணு குடுக்க வேண்டியிருக்கும். நாளைக்கு காலைல வெறும் வயித்துல தான் ஆபரேஷனுக்கு கூட்டிட்டு போவோம், அதனால இன்னைக்கு இரவு எப்பவும் போல அவருக்கு சாப்பிடக் குடுத்துடுங்க” என்று எல்லா விவரத்தையும் சொன்னார் டாக்டர்.

“சரி டாக்டர்” என்று சொல்லி நாற்காலியில் இருந்து எழ முயன்றவள் திரும்ப மூர்ச்சையாக, உடனே நர்ஸின் உதவியுடன் அவளை ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து பரிசோதித்த டாக்டர், “இவங்க கூட யாரு இருக்காங்க?” என்று கேட்டார்.

“யாருமில்லை டாக்டர், நாளைக்கு தான் இவங்க அப்பா வரப் போறதா சொன்னாங்க” என்றாள்.

“ஷி ஈஸ் ப்ரெக்னண்ட்” என்றவர், “நாளைக்கு இவங்க அப்பாவும் வந்த பின்னாடி ரெண்டு பேர்கிட்டயும் கொஞ்சம் பேசணும். நோட் பண்ணிக்குங்க” என்றார்.

பிறகு கார்த்திக்கிற்கு அறை ஒதுக்கப்பட, மகன் கிருஷ்ணாவைக் கூட்டிக் கொண்டு நந்தினி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தாள்.

“அம்மா… அப்பாவுக்கு என்னாச்சும்மா? ஏன் அப்பாகிட்ட கூட்டீட்டு போக மாட்டேங்கற?” என்ற கிருஷ்ணாவிடம்

“அப்பாவுக்கு கால்ல அடிபட்டுருக்கல்ல, அதனால ஊசி போட கூட்டீண்டு போயிருக்கா. வந்துடுவா, நீ தூங்கு” என்று அறையின் ஓரத்தில் இருந்த படுக்கையில் குழந்தையை படுக்க வைக்க

“அம்மா… எனக்கு பசிக்கறதும்மா” என்று கிருஷ்ணா சொல்லவும் தான், குழந்தைக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தபின் எதுவும் சாப்பிட வாங்கித் தரவில்லையே என்று நந்தினிக்குத் தோன்றியது.

தன் கணவன் கார்த்திக்கைத் தவிர வேறு சிந்தனையே இல்லாது இருந்த நந்தினி, கருவுற்றிருக்கும் விஷயத்தை டாக்டர் மூலம் தெரிந்து கொண்ட போதும் கூட அதை சந்தோஷமான மனநிலையில் எடுத்துக் கொள்ள முடியாமல் உணர்ச்சியற்றவளாகவே இருந்தாள். வாழ்க்கையைப் பற்றிய பயமே அவள் கண்முன் வந்து போனது.

குழந்தையின் பேச்சில் நினைவுக்கு வந்தவள், “சரி…. நீ இங்கயே இருடா கிருஷ்ணா. நான் வந்துடறேன்” என்று நர்ஸிடம் சொல்லி விட்டு, மருத்துவமனைக்கு வெளியே இருந்த கடையில் மூன்று பேருக்குமாய் இட்லியை வாங்கிக் கொண்டு வந்தாள்.

கிருஷ்ணாவிற்கு இரண்டு இட்லிகளை ஊட்டிவிட்டு அவனைத் தூங்க வைக்கவும், கார்த்திக்கை ரூமிற்கு கூட்டிக்கொண்டு வந்து படுக்கையில் விடவும் சரியாக இருந்தது.

லேசாக மயக்கம் தெளிந்த கார்த்திக், “நந்தினி… நந்தினி…” என்று முனகினான்.

“நான் பக்கத்துல தான் இருக்கேன். ஒண்ணுமில்ல, நான் பாத்துக்கறேன்” என்று மனதிலிருந்த துக்கத்தை அடக்கிக் கொண்டு கார்த்திக்கிடம் பேசினாள் நந்தினி.

மெதுவாகக் கண் முழித்தவன், “எனக்கு காலே அசைக்க முடியாத மாதிரி இருக்கு, வலிக்கறது நந்தினி” என்றான்.

“முதல்ல இப்ப நீங்க கொஞ்சமா இட்லி சாப்பிடுங்கோ. அப்பறம் நான் நர்ஸ்கிட்ட சொல்லி வலி குறைய மாத்திரை தர சொல்றேன்” என்றாள் நந்தினி.

வலியில் துடித்தவன், “நீ மொதல்ல வலி குறைய மாத்திரை தரச் சொல்லு” என்று பிடிவாதமாகக் கத்தினான் கார்த்திக்.

“கொஞ்சம் நான் சொல்றத பொறுமையா கேளுங்க” என்று அவன் தலையை தடவிக் கொடுத்தவள், “உங்க ரெண்டு காலையும் எடுக்கணும்னு சொல்லியிருக்கா” என்று நிதானமாகச் சொல்ல, ஒரு கணம் மனதளவில் சுக்குநூறாய் உடைந்து போனான் கார்த்திக்.

“நான் டாக்டரைப் பார்க்கணும், இப்பவே பார்க்கணும்” என்று கார்த்திக் பிடிவாதம் பிடிக்க, அவனைக் கட்டுப்படுத்த முடியாத நந்தினி நர்ஸை அழைத்தாள்.

உடனே ஓடிவந்த நர்ஸ், “சார், கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. ரெண்டு கால்மேலயும் பேருந்து ஏறி எலும்பு மொத்தமும் நொறுங்கிப் போயிடுச்சு. எங்களால முடிஞ்ச வரை பாத்துட்டு தான் கால்களை எடுக்க முடிவெடுத்திருக்கோம். அதுவும் நீங்கள் விருப்பப்படலைன்னா ஆபரேஷனை நிறுத்திக்கலாம். ஆனா, மற்ற பாகங்களுக்கும் பாதிப்பு வந்துடும். அப்பறம் உங்க இஷ்டம். நைட் ஒரு அவசர கேஸ் வந்ததுனால டாக்டர் ஆபரேஷன் பண்ணப் போயிருக்கார்.

உங்க மனைவி பாவம் சார். நீங்க தான் கொஞ்சம் புரிஞ்சுக்கணும். அவங்க கர்ப்பமா வேற இருக்காங்க, இன்னைக்கு தான் அவங்களுக்குத் அதுவும் தெரியும். ஆனா, அவங்க அதக் கூட சந்தோஷமா மனசுல எடுத்துக்கக் கூடிய மனநிலைல இல்ல. இப்ப சாப்டுட்டு எதையும் யோசிக்காம தூங்குங்க. காலைல உங்கள வந்து டாக்டர் பார்ப்பார்” என்று சொல்லிவிட்டு நர்ஸ் கிளம்பிச் சென்றாள்.

“நந்தினி… நர்ஸ் சொல்றது உண்மையா? ஏன் எங்கிட்ட முன்னமே சொல்லல?” என்றவனிடம்

“ரெண்டு காலுக்கும் எக்ஸ்ரே எடுத்த டாக்டர், ஒன்னுக்கு ரெண்டு டாக்டரோட ஆலோசனையை கேட்டுட்டு தான் காலை எடுக்கணும்னு முடிவு பண்ணியிருக்கா” என்றவள்

“மயக்கம் தெளிஞ்சு இப்பதான் உங்களுக்கு நெனவே வந்துருக்கு. அப்பறம் எப்படி இந்த நான் உங்ககிட்ட சொல்றது. அதுவுமில்லாம இருக்கற சூழ்நிலைல ரெண்டாவது குழந்தை வேணுமான்னு நான் யோசிக்கறேன்” என்றாள் நந்தினி.

“என்ன பேசற நீ? எனக்கு இப்படி ஆனதுக்கு வயித்துல இருக்கற குழந்தை என்ன பண்ணும்? கண்டிப்பா இந்த குழந்தை நமக்கு வேணும். நமக்கப்பறம் கிருஷ்ணாகிட்ட நன்னாயிருக்கயான்னு கேக்கறதுக்காவது இன்னொரு குழந்தை வேணும்” என்றான் கார்த்திக்.

“இப்பதான் கிருஷ்ணாவுக்கு மூணு வயசாறது. இன்னும் நம்ம வாழ்க்கைல நாம எவ்வளவு வருஷம் ஓட வேண்டியிருக்கு. இந்த குழந்தை இன்னொரு பாரமா நமக்கு ஆயிடுமோன்னு இருக்கு” என்றாள் வருத்தத்துடன் நந்தினி.

“ரெண்டு காலுமில்லாம இவன் எப்படி நம்மள வச்சு பொழப்பான்னு நெனக்கறயா நந்தினி?” என்ற சுருக்கென்ற கேள்வியில்

“இப்படி சுடச்சுட பேசாதீங்கோ. நான் எதுவும் சொல்லல. முதல்ல, இப்ப கொஞ்சமா இந்த இட்லியை சாப்பிடுங்கோ. மாத்திரை குடுக்கணும்” என்று சொல்ல

“அப்ப குழந்தை வேண்டாம்னு நெனக்கற எண்ணத்தை அடியோடு விட்டுடு. என் உயிர் இருக்கற வரை உங்கள நான் பாத்துப்பேன்” என்று கார்த்திக் சொல்ல

“சரி… சரி…. உங்க இஷ்டம் தான் என் இஷ்டம். நான் எதுவும் பேசல” என்று கொஞ்சமாக இட்லி ஊட்டி விட்டவள், சிறிது நேரம் கழித்து மாத்திரைகளைக் கொடுத்தாள்.

சலைன் பாட்டில் வழியாக மருந்தும் இறங்கிக் கொண்டிருக்க, கார்த்திக் தன்னை மறந்து தூங்கினான்.

நடுநடுவே வந்த நர்ஸ்கள் பி.பி., சுகர் என பரிசோதித்துவிட்டுச் செல்ல, இரண்டு மணிக்கு மேல் கீழே போர்வையை விரித்துப் படுத்த நந்தினி சிறிது கண்ணயர்ந்தாள்.

நாலரை போல வந்த ஒரு நர்ஸ், “ஆறு மணி போல ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போகணும். அதுக்கு முன்ன டாக்டர் வந்து பேசுவார்” என்று சொல்லி விட்டுப் போனாள்.

பிறகு நந்தினியின் தந்தை ரகு காலை ஐந்தரை மணி போல மருத்துவமனையை விசாரித்துக் கொண்டு வந்து விட்டார்.

அப்பாவைப் பார்த்ததும் அப்பாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டவள், “ரொம்ப பயமா இருக்குப்பா. இப்படியெல்லாம் நடக்கும்னு கனவுல கூட நெனக்கலப்பா” என்று தன் கவலையை சொல்லிக் கொண்டு அழ

“இப்படி நடக்க வேண்டாம். என்ன பண்றது? விடு பாத்துக்கலாம். என்னல்லாம் வரம் வாங்கீண்டு வந்துருக்கமோ அதையெல்லாம் அனுபவிச்சு தான ஆகணும். கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டு காரியத்தைப் பார்ப்போம்” என்று நந்தினிக்குச் சமாதானம் சொன்னவர், மனதளவில் கலங்கிக் தான் போயிருந்தார்.

‘இவ்வளவு சின்ன வயசுல எங்கொழந்தைக்கு இப்படி ஒரு கஷ்டமா?’ என நொந்து கொண்டவர், “கிருஷ்ணா எப்படி இருக்கான்? என்ன சொன்னான்?” என்று கேட்க

“நல்லா இருக்கான். அப்பாவ கேட்டுண்டே தான் இருந்தான். அப்பாவுக்கு கால்ல அடிபட்டிருக்கு, ஊசிபோட வந்திருக்கோம்னு தான் நேத்து முழுக்க சமாளிச்சேன்” என்றாள்.

“ராம், லட்சுமணன்னு ரெண்டு பேர் தான் கூடப் பொறந்தவங்க மாதிரி அடிபட்ட இடத்திலிருந்து, ஹாஸ்பிடல் வரைக்கும் வந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கட்டி தெய்வம் மாதிரி ரூம் அட்மிஷன் முடிச்சுட்டு கிளம்பிப் போனாப்பா. அவாளுக்கு முதல்ல பணத்தை அனுப்பணும்ப்பா” என்றாள் நந்தினி.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் வாழ்க்கை உன் கையில் – நாவல் (பகுதி 4) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை