in

உன் வாழ்க்கை உன் கையில் – நாவல் (பகுதி 4) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

உன் வாழ்க்கை... (பகுதி 4)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3

இதுவரை:

துரை, ரவி இருவரும்  வேறு வேறு  சந்தர்ப்பங்களில் அகாலமாக மரணம்  அடைகிறார்கள். சூர்யா தாமரையைத் தேடி கவலைப்படுகிறான்.

இனி:

கோவை கே.ஜி  மருத்துவமனை.  இரண்டாவது மாடியின் பெரிய வராண்டாவில்,  ஷூ  சத்தம் லேசாக, ஒரே சீராகக்  கேட்கும் படி நடந்து வந்து கொண்டிருந்தான் விஜய்.

ஆஸ்பத்திரிக்கே   உரிய கலவையான மருந்துகளின் வாசனை மூக்கைத் துளைத்தது. ஆங்காங்கே சீருடையில் மருத்துவர்களும், செவிலியர்களும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள், மெலிதான குரலில் தங்களுக்குள் பேசியபடி போவதும்,  வருவதுமாக  இருந்தார்கள். எல்லாம்   ஒரு  ஒழுங்குடன்  இயங்கிக்  கொண்டிருந்தது மருத்துவமனையின் சீரான நிர்வாகத்தை எடுத்துக்  காட்டியது.

மருத்துவரின் அறையை நோக்கி நடந்த விஜய், கதவைத் தட்டி  விட்டு உள்ளே நுழைந்தான்.

“வாங்க இன்ஸ்பெக்டர்  விஜய்,  குட் மார்னிங். உட்காருங்க.”

“குட் மார்னிங் டாக்டர்.”

“என்ன விஜய்,  உங்க வைஃபைப் பார்த்துட்டு வரீங்களா? இல்ல இனிமே தான் பார்க்கப் போகணுமா?”

“இல்ல டாக்டர், நான் ரம்யாவைப் பாத்துட்டு தான் வரேன். எப்படி இருக்கு அவ கண்டிஷன்?”

“எப்போ அவங்களுக்குக் கான்ஷியஸ் திரும்ப வரும்னு உறுதியா சொல்ல முடியல விஜய். பட் அபாய கட்டத்தைத் தாண்டிட்டாங்க. ஆனா கான்ஷியஸ் மட்டும் திரும்பல. ஏதோ பயங்கரமான ஆயுதத்தால தாக்கியிருக்காங்க.  எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கோம். நம்பிக்கையோட இருங்க விஜய்.”

“ஷ்யூர்  டாக்டர். எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னோட ரம்யா தைரியசாலி. அவ இந்த கடினமான சூழ்நிலைல இருந்து மீண்டு வருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் அவளை இப்படிப் பாக்கறதுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.”

“டோன்ட் வர்ரி விஜய். கூடிய சீக்கிரமே நீங்க எதிர்பார்க்கறது நடக்கும்.  விசாரணைல  ஏதாவது  முன்னேற்றம்  இருக்கா விஜய்?  யார்  உங்க வைஃபைத்   தாக்கியிருப்பாங்கன்னு ஏதாவது  க்ளூ  கிடைச்சுதா?”

“இல்ல டாக்டர், அந்த ஏரியால, அந்த  நேரத்துல  நடந்த க்ரைம் எல்லாம் விசாரிச்சுட்டேன். யார் ரம்யாவைத் தாக்கினாங்க, ஏன் இந்த மாதிரி ஒரு தாக்குதல்… ஒண்ணும் புடிபடல டாக்டர்.”

“உங்க மேல இருக்கற கோவத்துல, நீங்க கைது பண்ண யாராவது….?”

“அந்த கோணத்துலயும் விசாரணை போயிட்டிருக்கு டாக்டர். கூடிய சீக்கிரம் ஏதாவது ஒரு சின்ன தடயம் சிக்காமலா போயிரும். ஓகே டாக்டர், எப்போ ரம்யாவுக்கு நினைவு திரும்பினாலும் தயங்காம எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் கிளம்பட்டுமா? டியூட்டிக்கு  நேரமாச்சு.”

“ஓகே விஜய், ஹாவ்  எ குட்  டே.”

“சேம் டு யூ டாக்டர்.”

சொல்லி  விட்டு விஜய், டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்து, தன் வண்டியை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு விரைந்தான்.

மனமெங்கும் ரம்யா தான் நிறைந்திருந்தாள். திருமணம் முடிந்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. விஜய்க்கு ரம்யா மேல்  அளவில்லாத காதல்.  அவளுக்கு  இது போல் நடந்ததிலிருந்து,  கடந்த  ஒரு வாரமாக  மிகவும்  தளர்ந்து  போயிருந்தான்.

யார் ரம்யாவைத் தாக்கியிருப்பார்கள், ஏன் தாக்கினார்கள், என்ன நடந்திருக்கும் எதுவும் பிடிபடாமல் குழப்பியது. ஒரு வாரத்திற்கு முன்னால், திடீரென வந்த ஃபோனால், வேலையில் இருந்து அவசர கதியில் ஆஸ்பத்திரிக்கு வந்தான் விஜய்.

அவன் வந்து பார்க்கும் போதே ரம்யா சுயநினைவின்றித் தான் இருந்தாள். தலையில் அடிபட்டு, வீட்டிற்குப் பின்பக்கத் தெருவில்  புதரில் மயக்கநிலையில் இருந்த ரம்யாவை, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் போன ஒரு இளைஞன், எதேச்சையாகப் பார்த்து, ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, ரம்யாவின் மொபைலில் கடைசியாகப் பேசியிருந்த விஜயின் நம்பருக்கு ஃபோனில் தகவல் சொன்னான்.

விஜய் வந்ததும் விஷயங்களைச் சொல்லி விட்டு, அந்த இளைஞன் கிளம்ப, துடித்துப் போனான் விஜய். மேலதிகாரிகளுக்குத் தகவல் போக, தீவிரமான விசாரணை முடுக்கி விடப்பட்டது.

ஆள் அரவமற்ற தெரு என்பதால், சம்பவத்தைப் பார்த்த சாட்சி என்று யாரும் இல்லை. எங்கே ஆரம்பித்து, எப்படிக் கொண்டு போவது என்று தெரியாமல் காவல்துறை விழி பிதுங்கி நின்றது.

பலத்த சிந்தனைகளுடன் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தான் விஜய். ஐஜி இவனை எதிர்பார்த்திருந்தார்.

“வாப்பா விஜய், உனக்காகத் தான்  வெயிட்டிங்க்.”

“குட் மார்னிங்க் சார். சொல்லுங்க சார்.”

“என்னப்பா, உன் வைஃப் எப்படி இருக்காங்க? எனி இம்ப்ரூவ்மென்ட்? விசாரணை எந்த அளவுல இருக்கு?”

“சார், ரம்யா அப்படியே தான் சார் இருக்கா.  எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணைலயும் புதுசா எந்தத் தகவலும் கிடைக்கல சார். குழப்பமா இருக்கு.”

“ஓகே விஜய். இதைப் பாரு. இது இந்த கேஸ்க்கு  ஏதாவது உதவியா இருக்கும்னு நினைக்கறேன்.”

“என்ன சார் இது?”

“நகராட்சில குப்பையைச் சுத்தம் பண்றவங்ககிட்ட நீ சொல்லி வச்சிருந்தியா? அந்த ஏரியால குப்பை எடுக்கும் போது  வித்தியாசமா ஏதாவது கைல கிடைச்சா கொண்டு வந்து குடுக்கச் சொல்லியிருந்தியா? கொஞ்சம் முன்னாடி தான் ஒரு அம்மா கொண்டு வந்து, இந்தத் துணியைக் கொடுத்துட்டுப் போனாங்க.”

“அப்படியா… குடுங்க பார்க்கலாம்.”

ஆர்வத்துடன் அந்தச் சின்ன துணித் துண்டை வாங்கிப் பார்த்தான் விஜய்.

“ஆபத்து… ப்ளீஸ் ஹெல்ப்,” என்று போட்டிருந்தது.

“சார், இது எங்கே கிடைச்சது? அந்த அம்மா ஏதாவது  சொன்னாங்களா?”

“எக்ஸாக்ட்டா சொல்லணும்னா, உங்க வைஃப் ரம்யா எந்தப் புதர்ல அடிபட்டு விழுந்து கிடந்தாங்களோ, அந்தப் புதர்ல இந்தத்  துணி  சிக்கி இருந்ததுன்னு அந்த அம்மா சொன்னாங்க. நாம சொல்லியிருந்ததால, அவங்க இந்தத் துணியைப் பார்த்துட்டு, துணில ஏதோ எழுதி இருக்கேங்கற சந்தேகத்துல வந்து கொடுத்துட்டுப் போனாங்க.”

“சோ… மை கெஸ் இஸ்…. யாரோ உதவி கேட்டிருக்காங்க உங்க வைஃப் கிட்ட. அவங்க உதவி கேட்டது யாருக்கோ பிடிக்கல. அவங்கதான் ரம்யாவைத் தாக்கி இருப்பாங்கன்னு தோணுது. ரம்யாவை அப்படியே விட்டா அவங்களுக்கு ஆபத்துன்னு நெனச்சு அடிச்சுப் போட்டிருக்காங்க. அனேகமா ரம்யா உயிரோடு இருக்கக் கூடாதுங்கற எண்ணத்துல தான் அவங்க அடிச்சிருப்பாங்கனு தோணுது. அதனாலத் தான் தலைல அவ்வளவு பலமா அடிச்சிருக்காங்க.”

“சோ ரம்யாவுக்கு நினைவு திரும்பினா நமக்கு கேஸ்ல கொஞ்சம் தெளிவு கிடைக்கும்னு தோணுது. அது வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம். இதைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது விஜய்?”

“சார், இது… இந்தத் துணியைப் பார்த்தா லேடிஸ் ட்ரெஸ் மாதிரி இருக்கு. டாப்ஸ் மாதிரி…. அதைக் கிழிச்சு அதுல எழுதி, யாரோ ஒரு பொண்ணுதான் ரம்யாகிட்ட உதவி கேட்டிருக்கணும்னு தோணுது. ரம்யா அதைப் பார்த்துட்டு, ஏதாவது ரியாக்ட் பண்ணதனால,  ரம்யாவை அடிச்சுப் போட்டுட்டு தப்பிச்சுப் போயிருப்பாங்க. இப்போ இந்த உதவி கேட்ட பொண்ணு என்ன ஆனான்னு தெரியல. பார்க்கலாம் சார், என்ன பண்றதுனு தெரியாம குழம்பி இருந்த கேஸ்ல, புதுசா ஒரு நம்பிக்கை கிடைச்ச மாதிரி இருக்கு. இந்தச் சின்ன ஆதாரம் கண்டிப்பா நமக்கு குற்றவாளியை நெருங்க உதவியா இருக்கும்னு நினைக்கறேன். லெட் அஸ் ட்ரை.”

“ஓகே விஜய், ஆல் த பெஸ்ட். எனக்கு கமிஷனர் ஆஃபீஸில் மீட்டிங் இருக்கு நான் கிளம்பறேன்.”

“ஓகே சார், தேங்க்யூ.”

(தொடரும் – சனி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சொர்க்கம் நம் கையிலே ❤ (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி .

    வைராக்கியம் ❤ (பகுதி 9) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை