in

உன் வாழ்க்கை உன் கையில் – நாவல் (பகுதி 3) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

உன் வாழ்க்கை... (பகுதி 3)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2

இதுவரை:

கார்  டிரைவராக  வேலை  செய்யும்  துரை,  அசம்பாவிதமாக உயிரை  விடுகிறான்.  வேலை  விஷயமாக  அமெரிக்கா  போய் விட்டுத்  திரும்பிய  சூர்யா,  சென்னையில்  தன்  மனம்  கவர்ந்த தாமரையைப்  பற்றித்  தகவல்  சேகரிக்க முயற்சிக்கிறான். ஆனால்  அவள்  வீட்டிற்கு  அருகில்  போவதே  யோசிக்க  முடியாத சவாலாக  இருந்ததால்,  கோவை  செல்ல தீர்மானித்துக் கொண்டு  தன்  அறைக்குத் திரும்புகிறான்.

இனி:

இரவு  10 மணிக்கு மேலிருக்கும். தெருவிளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அந்த  வெளிச்சத்தில், அன்பு நகரின் நசநசப்பான, குறுகலான  ஒரு  தெருவில், முட்டுச்சந்தில் உட்கார்ந்து  கொண்டு,  வம்பளந்து  கொண்டிருந்தது ஒரு கும்பல்.  எல்லாம்  நடுத்தர  வயது  முரட்டு  ஆண்கள்.  சிகரெட்  புகை  அந்த  இடத்தையே  மூக்கைச்  சுளிக்க  வைத்தது.

அந்தக்  கும்பலில்  இருந்து  எழுந்தான்  ரவி.

“இன்னா  ரவி, கிளம்பறயா?  என்ன  அவசரம்?”

“ஆமா  மாரி, காலைல  சீக்கிரம்  வேலைக்குப்  போகணும். கெளம்பறேன்.”

“உனக்கென்னப்பா,  குடும்பம்  இருக்கா, குழந்தை, குட்டி இருக்கா? ஒண்டிக்  கட்டை  தானே.  இன்னொரு  பத்து நிமிஷம்  உட்காரேன்.”

“இல்ல,  முதலாளி  காலைல  சீக்கிரம்  வரச்  சொல்லியிருக்காரு.  போகணும்.  நாளைக்குப்  பேசலாம்.”

“சரி…. சரி… வாழ்ந்தா  உன்னை  மாதிரி  வாழ்ந்துட்டுப்  போயிடணும்.   நல்ல வசதியான இடத்துல வேலை.  அதுவும்  எப்படி, முதலாளிக்குக்  கைத்தடி  மாதிரி.  பிக்கல்  பிடுங்கல்  இல்லாத  வீடு. வாழ்வு  தான்.”

“ஆமா… எனக்கு  ராஜா  நான்  தான்.  என்ன  வேணா நடக்கட்டும்  சந்தோஷமா  நான்  இருப்பேன்…..”

பாடிய  படியே  அங்கிருந்து  தன்  வீட்டை  நோக்கி  நடக்க  ஆரம்பித்தான் ரவி.  பத்தடி  தூரத்தில்இருந்த  தன்  வீட்டை  நோக்கி  வேகமாக  நடந்தான்.

தீப்பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தது போல், வரிசையாக, சின்னச் சின்னதாய் வீடுகள்.அநேகமாக  எல்லா வீடுகளிலும் தூங்கி விட்டிருந்தார்கள். இருட்டடித்துக் கிடந்த அந்தக் குறுகலான சந்தில் நடந்து, தன் வீட்டுக் கதவைத் திறந்தான் ரவி.

“ரகிட ரகிட ரகிட ரகிட…. ஹே  என்ன வேணா நடக்கட்டும்  நான் சந்தோஷமா இருப்பேன், உசுரு  இருக்கு  வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்….”

பாடிக்  கொண்டே  உள்ளே நுழைந்தவன், சட்டென்று  நிறுத்தினான்.  மூக்கை உறுஞ்சி, வித்தியாசமான  மணத்தை  உணர்ந்தான்.

“இன்னாடா  இது, வீடு மாறி  வந்துட்டனா? நம்ம  வீட்டுக்குள்ள  இப்படி  நல்ல  வாசம்  வீசாதே…. ஒண்ணு  அழுக்குத்  துணி  நாத்தமடிக்கும்,  இல்லேன்னா  பீடி, சிகரெட்  வாசம் தானே சுத்திக்கினு இருக்கும். இது… ஏதோ பூ வாசம் மாதிரி இருக்கே….”

தனக்குத் தானே பேசிக் கொண்டு, விளக்கைப் போட்டான். ஆனால் லைட் எரியாமல் அடம் பிடித்தது. மொபைல் வெளிச்சத்தைப் பரப்ப விட்டு, கதவைச் சாத்திக்  கொண்டு உள்ளே வந்தான்.

“என்னங்கடா இது, நம்ம வூட்டுல மட்டும் கரெண்ட்ட புடுங்கிட்டாங்களா? இல்ல, பல்பு  புட்டுக்கிச்சா?”

சட்டையைக் கழற்ற ஆரம்பித்தவன், சட்டென்று கலவரமானான்.

“ரகிட ரகிட ரகிட…. என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்…” என்று மெலிதான குரலில் யாரோ பாடும் சத்தம் வீட்டுக்குள் கேட்டது.

சில்லிட்டுப் போனான் ரவி.

‘என்னது, இன்னைக்கு வீட்டுக்குள்ள என்னவோ சரியில்லையே.. கதவைத் திறந்த உடனே ஏதோ  நல்லதா ஒரு பூ வாசம் மாதிரி வாசம் வீசுது. ஆனா அது எங்கேயோ பழக்கமான வாசம் மாதிரி… ஏதோ சென்ட் வாசம் மாதிரி இருக்கு. சட்டுனு நினைவுக்கு வரல. லைட்டை போட்டா லைட் எரிய மாட்டேங்குது. நான் பாடிட்டு வந்த பாட்டை வேற யாரோ பாடறாங்களே… பொம்பளக் குரல் மாதிரி இருக்கே. என்னது வில்லங்கமா இருக்கு’

முணுமுணுத்துக் கொண்டே கையிலிருந்த மொபைலின் வெளிச்சத்தை அறை முழுவதும் பரவ விட்டுத் தேடினான் ரவி. அறையில் யாரும் இல்லை. பக்கத்தில் இருந்த சின்ன சமையலறையிலும் தேடினான். யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை.

ஆனால் பாடல் முனகும் சத்தம் மட்டும் மெலிதாகக் கேட்டுக் கொண்டே இருந்தது. இப்போது ரவிக்கு  வியர்க்க ஆரம்பித்திருந்தது. கலவரத்துடன் அறையின் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து தேடினான்.

கட்டிலுக்கடியில், அறையின் மூலையில் என யாராவது இருக்கிறார்களா என்று கண்ணைத் தேய்த்துக் கொண்டு பார்த்தான்.

வீட்டிற்குள் யாரும் இல்லை. ஆனால் அந்தப் பூ வாசமும், பாடலும் மட்டும் போகவே இல்லை.

“யாரது… வீட்டுக்குள்ள? இன்னா கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்கீங்களா? யாரா இருந்தாலும் தைரியமா முன்னாடி வந்து பேசு. இந்த ரவி எதுக்கும் அசந்தவன் கிடையாது.”

“சரிடா, முன்னாடி வந்துட்டேன். இப்போ பேசு பார்க்கலாம்,” என்றது குரல்.

“வந்துட்டியா….    முன்னாடி யாருமே இல்லையே….”

“நான் உன் முன்னாடி தான் நிக்கறேன். உனக்குத் தெரியலேன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல. இப்ப பேசு டா.”

“டா வா? யாருகிட்ட பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறியா?”

“நல்லா தெரிஞ்சு தான் பேசறேன்.”

சொல்லிக் கொண்டே அந்தக் குரலுக்குச் சொந்தமான அது, அவன் மேல் பாய்ந்தது. வாயைத் திறந்து கத்தக் கூட அவனுக்கு நேரம் கொடுக்காமல், அவன் மேல் ஏறி உட்கார்ந்து, அவன் மூச்சுக் காற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த ஆரம்பித்தது.

“என்னடா… செத்துருவோம்னு பயமா இருக்கா? உன் கண்ணுல  மரணபயத்தைப் பார்க்கறேன். இப்போ உன் வாழ்க்கை உன் கைல இல்ல… என் கைல டா…”

இந்த வாசகத்தைக் கேட்டதும் அதிர்ந்து போன ரவி, கண்களை அகல விரித்து தன் சந்தேகத்தைக் கேட்கும் முன்பே, அதற்குக் கூட சக்தி இல்லாமல்,  பயத்தோடு உயிரை விட்டிருந்தான்.

வந்த வேலையை முடித்த அது, ரகிட ரகிட ரகிட ரகிட என்று சன்னமான குரலில் பாடியபடியே காற்றோடு கலந்தது.

(தொடரும் – சனி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாரதி கண்ணம்மா (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி.

    வைராக்கியம் ❤ (பகுதி 8) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை