in

பாரதி கண்ணம்மா (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி.

பாரதி கண்ணம்மா (சிறுகதை)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“பாரதி! நான் இவ்வளவு சொல்றேன் ஏன் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிற?” என்றார் ராகவன்.

“அப்பா! நீங்கதான் என்னுடைய உணர்வுகளை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க”

“ஏண்டி! கல்யாணமாகி ஆறு மாசம் கூட ஆகல… அதுக்குள்ள இப்படி பிடிவாதமா வந்து நிற்கிற. மத்தவங்க என்ன நினைப்பாங்க” என்றாள் வாசுகி ஆற்றாமையுடன்.

“ஓ!!! அதுதான் உன் பிரச்சனையா? உன் மக வாழா வெட்டியா வந்து உட்கார்ந்திட்டா, அக்கம் பக்கம் உள்ளவங்களுக்கு பதில் சொல்லணும். அதுதானே உன் பயம்”

“அம்மா சொல்றத விடு! கோகுல் நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கல்யாணமான இந்த குறுகிய காலத்தில அவனை நீ முழுசா புரிஞ்சுக்கலையோன்னு தான் எனக்கு தோணுது”

“அப்பா! நீங்க போன தலைமுறை ஆளு, உங்களால சில விஷயங்களை புரிஞ்சுக்க முடியாது. எங்க ரெண்டு பேரோட கருத்தும் ஒரு நாள் கூட ஒத்துப் போனது கிடையாது. நான் சொல்ற எதையும் அவன் புரிஞ்கிட்டதேயில்லை” என்று குற்றப்பத்திரிகை வாசித்தாள் பாரதி.

“அப்படியே இருந்தாலும், கடைசியில நீ நெனச்சபடி தானே நடக்குது”

“ஒவ்வொரு முறையும் சண்டை போட்டுத்தான் காரியத்தை சாதிக்க வேண்டியிருக்கு. என்னால இவனோட போராட முடியாது. இவன் எனக்கு செட்டாக மாட்டான். என்னோட நிம்மதியே போச்சு. விவாகரத்துக்கு அப்ளை பண்ணலாம்னு இருக்கேன்” என்று அவள் கூறியதும் அப்பாவும் அம்மாவும் ஆடித்தான் போனார்கள்.

அன்று மாலையே பாரதிக்குத் தெரியாமல் மாப்பிள்ளையைப் பார்க்க கிளம்பினர்.

“மாப்பிள்ளை! பாரதி ஏதோ சிறுபிள்ளைத்தனமா பேசுறா.. எதையும் மனசுல வச்சுக்காதீங்க” என்றார் ராகவன்.

“மாமா! அத்தை! உங்க ரெண்டு பேர் மீதும் எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு. உங்க மகளப் பத்தி இப்படி சொல்றேன்னு வருத்தப்படாதீங்க… அவ சராசரி பொண்ணு இல்ல. அவளுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு. அதுக்கு என்னால ஈடுகொடுக்க முடியல.

24 மணி நேரமும் தன் கட்டுப்பாட்டிலேயே நான் இருக்கணும்னு நினைக்கிறா. ஆபீஸ் போனால் எங்க இருக்கேன்.. என்ன செய்றேன்… எப்படி சாப்பிடுகிறேன்… யார் கூட பேசுறேன்… எல்லாமே அவளுக்கு உடனுக்குடன் மெசேஜ் பண்ணனும். அப்படி பண்ணினாலும் அதிலேயும் குற்றம் கண்டுபிடிச்சு ஒரே சண்டை.

பிரெண்ட்ஸ் கூட வெளியே போகக் கூடாது.. லேட்டா வந்தாலும் சண்டை.. எனக்கு இந்த வாழ்க்கை மூச்சு முட்டுது… நான் எந்த தப்பான முடிவுக்கும் போக மாட்டேன். அவளா வழிக்கு வரட்டும்னு காத்திருக்கேன்.  இந்த பிரிவு கூட அவளை யோசிக்க வைச்சா நல்லது தான்” என்று  தன் எண்ணத்தைக் கூற, அவர்களுக்கு அவன் நிலைமை புரிந்தது.

எதையும் புரிந்து கொள்ள மறுக்கும் மகளை எப்படி மாற்றுவது என்ற கவலையுடன் வீடு வந்து சேர்ந்தனர் பாரதியின் பெற்றோர்.

“பாரதி! ஆச்சியும், தாத்தாவும் ஊருக்கு வரச் சொல்லி நிறைய தடவ போன் பண்ணிட்டாங்க! எனக்கு வேலை நிறைய இருக்கு. இந்த தடவை நானும் அம்மாவும் கிராமத்துக்கு வரல. நீ மட்டும் பாட்டி வீட்டுக்குப் போய்ட்டு வா” என்றார் ராகவன்.

பாரதி சந்தோஷமாக ஒத்துக் கொண்டாள். மனம் சலிப்பாக இருப்பதற்கு மாற்று, தாத்தா, பாட்டி வீட்டுக்கு போவதுதான் என்று தோன்றியது. அவளுக்கு பிடித்தமான இடமும் கூட.

பாரதி சென்னையில் பிறந்து வளர்ந்தவள் என்றாலும், அவள் பெற்றோரின் பூர்வீகம் தென்காசி அருகே இருக்கும் இயற்கை அழகு கொஞ்சும் இலஞ்சி தான். தாத்தாவுக்கும் ஆச்சிக்கும் தங்கள் ஒரே பேத்தியான பாரதி மேல் கொள்ளைப் பிரியம்.

பாரதியை வரவேற்க வண்டி கட்டிக் கொண்டு தென்காசி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விட்டார் தாத்தா. வீட்டிற்கு வந்ததும் ஆச்சிக்கு பாரதியைப் பார்த்து சந்தோஷம் தாங்கல.

“பாரதி! கல்யாணமான புதுசுல மாப்பிள்ளைய கூட்டிட்டு விருந்துக்கு வந்தது, அதுக்கப்புறம் இப்பதான் வர்ற. மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்” என்றாள்.

“சரி கிழவி! பேசிக்கிட்டே இருக்காதே… முதல்ல அவளுக்கு குடிக்க எதுனாச்சும் கொடு” என்றார் தாத்தா.

“தாத்தா! கண்ணம்மான்னு ஆச்சி பெயரை அழகா சொல்லி கூப்பிடாம கிழவின்னு கூப்பிடுறீங்க” என்ற  செல்லமாக சிணுங்கினாள் பாரதி.

“நீ பல்லு விளக்கிட்டு வா கண்ணு! காப்பி சேத்து தாரேன். உனக்கு பிடிக்கும்னு திரட்டுப்பால் கிளறி வச்சிருக்கேன். அங்க தான் வேலை வேலைனு அலையிற, இங்க நல்லா ரெஸ்ட் எடு. ஒரு வேலையும் செய்யக்கூடாது” என்றாள் பாசத்தோடு. ஆச்சியின் அன்பு பாரதியை நெகிழ வைத்தது.

அரண்மனை மாதிரி பெரிய வீடும், தோட்டமும், எப்போதுமே அவளுக்கு ரொம்ப பிடிக்கும். இரவு சாப்பிட்டதும், திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஜிலு ஜிலுவென வீசிய காற்று கண்ணைச் சொக்க… தூங்குவதற்கு எழுந்து உள்ளே சென்றாள். தேக்குமர கட்டிலும், இலவம் பஞ்சு மெத்தையும், இதமான தூக்கத்தை தர, ரொம்ப நாளைக்கு பின் நிம்மதியாக தூங்கினாள் பாரதி.

காலை மெதுவாக எழுந்தவள், பல்துலக்கி, பாட்டி கொடுத்த காப்பியுடன் வீட்டுக்கு பின்புறம் இருந்த தோட்டத்தில் மேடையில் அமர்ந்தாள்.

“எங்க ஆச்சி தாத்தாவைக்  காணும்?”

“வயக்காட்டுக்குப் போயிருக்காருடா”

“காலச் சாப்பாடு?”

“வழக்கமா வேலை பார்க்கிற செம்பகம் கொண்டு போய்க் கொடுத்துட்டு வருவா. இன்னைக்கு நீ வந்திருக்கறதால பலகாரம் சாப்பிட வந்திடரதா சொல்லிட்டுப் போனாரு”

“காலையில என்ன ஆச்சி ஒரே சத்தம்.. தாத்தாவுக்கும் உனக்கும் சண்டையா?”

“அத விடு கண்ணு! வழக்கமா நடக்கிற விஷயம்தான். நான் ஏனைன்னா அவரு கோணைம்பாரு. சண்டை இல்லாத புருஷன் பொண்டாட்டி யாரு இருக்கா சொல்லு”

அவர்கள் பேச்சைக் கேட்டபடியே உள்ளே நுழைந்த தாத்தா, “அம்மாடி! இந்த கிழவிக்கு திமிரு ரொம்ப ஜாஸ்தியா போச்சு! இவ கூட எப்ப பாரு அக்கப்போரு தான். பேசாம இந்த கண்ணம்மா கிழவியை ரத்து பண்ணிட்டு, செம்பகத்தை உனக்கு சின்னாச்சியா கொண்டாந்திடலாம்னு  பாக்கேன்” என்று கூறி  இடி இடியயென சிரித்தார்.

“கிழவனுக்கு ஆசையப் பாரு! கை கால் விழுந்தா செம்பவமா உன்னை கவனிக்கப் போறா. இந்த கண்ணம்மா தான் கவனிக்கணும்”  என்றாள் ஆச்சி.

“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டி” என்று மனைவியை கொஞ்சியவர், “ராசைய்யா பதனீ வித்துகிட்டு இருந்தான். உனக்கு பிடிக்கும்னு தூக்கில் வாங்கி வந்தேன். நம்ம முனியனை ஒரு குலை  செவ்விளநீர்  வெட்டிக் கொண்டு வந்து போடச் சொல்லியிருக்கேன். பாரதிக்கு சீவிக் கொடு!” என்றார் .

தாத்தா, பாட்டி இருவரின் குறும்பான பேச்சை ரசித்தபடி எழுந்தாள் பாரதி. அவர்கள் வெளியே சண்டை போடுவது போல் தெரிந்தாலும், இருவருக்குள்ளும் ஒரு பாசப்பிணைப்பு இருப்பது புரிந்தது.

பலகாரம் சாப்பிட்டு முடிந்ததும் தாத்தா, “மதிய சாப்பாட்டை செம்பகத்துக்கிட்ட கொடுத்துவிடு! புள்ள இருக்கறதுனால சாயங்காலம் வெள்ளனவே வந்திடுறேன்” என்றார்.

“மறுபடியும் செண்பகமா… ஆச்சி ஜாக்கிரதை” கலகலவென சிரித்தாள் பாரதி.

தாத்தா வயக்காட்டிற்குப் போனபிறகு பாட்டியும், பேத்தியும் ஓய்வாக உட்கார்ந்தனர்.

“பாரதி… நம்ம ரெண்டு பேரும் பல்லாங்குழி விளையாடுவோமா? எவ்வளவு நாளாச்சு விளையாண்டு! அப்படியே கடலை அவிச்சி வெச்சிருக்கேன். ஒரு தட்டில போட்டு எடுத்துட்டு வா”

“அதெல்லாம் இருக்கட்டும் ஆச்சி… தாத்தா பாட்டுக்கு வயக்காட்டிலேயே கிடக்காரு உனக்கு வீட்டுல தனியா இருக்க  போரடிக்காதா?”

“பாரதி…  ஆம்பளைங்க வெளியில போயிட்டு வந்தாத் தான் நமக்கும் கொஞ்சம் விட்டாத்தியா இருக்கும். பொழுதனைக்கும் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துகிட்டு இருந்தா அலுப்புத் தான் வரும்”

“ஆச்சி! அந்த செண்பகத்துக்கு நீ ரொம்ப இடம் கொடுக்கிற”

“தாத்தா பேசுறதக்  கேட்டு பயந்துட்டியா? அது சும்மா கிண்டலுக்கு பேசும். அவருக்கு என் மேல ரொம்ப பிரியம்.. மரியாதை..”

“அதான் பாத்தேனே! உனக்கு பிடிக்கும்னு தூக்கில் பதனி வாங்கிட்டு வந்தாரே! கோகுலும் அப்படித்தான் ஆச்சி சண்டை போடுவான்… அப்புறம் எனக்கு பிடிச்ச சாக்லேட் ஐஸ்கிரீம் எனக்கு பிடிச்ச  கடையில வாங்கிட்டு வருவான். கோபப்பட்டாலும் பாத்து பாத்து செய்வான்”

முதல் முறையாக தன்னை மறந்து கோகுலைப் பற்றி பேசினாள்.

“புருஷன்  பொண்டாட்டி உறவுங்கறது அதுதாண்டி. சண்டை சச்சரவு மாதிரிதான் அன்பும், அரவணைப்பும் இருக்கணும். எனக்கும், உங்க தாத்தாவுக்கும் எந்த விஷயத்திலும் ஒத்த கருத்து கிடையாது. நான் சொல்றது அவருக்கு சரின்னு பட்டாலும் அதை ஒத்துக்க மாட்டாரு. பொதுவா ஆம்பளைங்க சுளுவா நாம் சொல்றத ஏத்துக்க மாட்டாங்க”

“அது ஈகோ ஆச்சி”

“அது எதுவோ… முதல்ல ஏத்துக்காத மாதிரி கத்திட்டு, அப்புறம் சரின்னு சொல்லுவாங்க. நாம அதையெல்லாம் அலசி ஆராய்ஞ்சுகிட்டு இருக்கக் கூடாது. அதுபோல நீ செம்பவத்தைப் பத்தி யோசிக்கத் தேவையில்லை. அது, எத்தனை பொம்பளைங்ககிட்ட சிரிச்சுப் பேசினாலும், அதோட அன்பு, மரியாதையெல்லாமே என் மேல தான் இருக்கு.

அவங்க நம்ம மேல வச்சிருக்கிற  அன்பையும், மரியாதையையும் வெளிக்கொண்டு வருவது… தக்க வைச்சுக்கிறது… நம்ம கையிலதான் இருக்கு. அது உனக்கு இப்ப புரியாது… வயசாகி, கைகால் தளர்ந்த பிறகுதான் வாழ்க்கை துணையோடு அருமை புரியும். என்ன பாரதிம்மா! ஆச்சி பேசியே போரடிக்கிறேன்னு நினைக்கிறியா?”

“இல்லவே இல்லை ஆச்சி… நீங்க ஒரு அனுபவ பெட்டகம், அதிலிருந்து நாங்க எடுத்துக்க வேண்டிய பொக்கிஷம் நிறையவே இருக்கு” என்ற பாரதி, முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தாள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. கதை அருமை. நல்ல கருத்து. பாராட்டுகள் வாழ்த்துகள்!

    ஓரு சின்ன பரிந்துரை – உரையாடலை இன்னும் திருநெல்வேலி தமிழிலேயே சொல்லியிருக்கலாமோ? அல்லது உரையாடல் தமிழில்….இடையிடையே உரைநடைத் தமிழ் வருகிறது. வழக்கு மொழி மண்ணின் வாசனையாக இருக்குமே என்று.

    கீதா

தியாகம் (சிறுகதை) – ✍ விடியல் மா. சக்தி.

உன் வாழ்க்கை உன் கையில் – நாவல் (பகுதி 3) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை