in

தியாகம் (சிறுகதை) – ✍ விடியல் மா. சக்தி.

தியாகம் (சிறுகதை)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சிவகாமிக்கும், அருணாச்சலத்திற்கும் திருமணமாகி முப்பது வருடங்கள் ஆகியிருந்தது. ஒரே மகன் சந்திரன், அவன் வற்புறுத்தியதன் பேரில், கணவனை விட்டு முதன்முறையாகப் பிரிந்து மகன் வீட்டுக்கு வந்திருந்தாள் சிவகாமி.

இரண்டாவது தினத்தில், “ம்மா, ஏம்மா என்னாச்சு சாப்பிடலியா?”

“இல்லப்பா ங்கொப்பாவ நெனச்சாத்தான் கவலையா இருக்கு”

“ம்மா, நீதாம்மா அவர நெனச்சுக்குற அந்த மனுசனுக்கு  உன்னோட நெனப்பே இருக்காது, பேசாம சாப்பிடுமா” என்று கூறியதும் சிவகாமி அரைகுறையாக சாப்பிட்டு முடித்து எழுந்து கொண்டாள்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு, சந்திரன் சிவகாமியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, “ம்மா, ஏம்மா நீ சரியா சாப்பிடறதே இல்லையாம். எப்பப் பார்த்தாலும் அறைக்குள்ள போய் அழுதுக்கிட்டு இருக்கியாம்?. ஆனந்தி சொல்றா?” என்று அவன் கேட்டதற்கு, சிவகாமி எந்த பதிலும் சொல்லவில்லை.

ஆனால் அவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் கசிந்தது.

அதைப் பார்த்த சந்திரன், “ம்மா, என்னாச்சும்மா நீதாம்மா சொல்லுவ அந்த மனுசன் என்னப்பத்தி ஒரு நாளுகூடக் கவலைப் பட்டதே இல்லன்னு. அது ஏம்மா நாங்கூட பார்த்திருக்கேன், அப்பா உங்கிட்ட ஒரு நாளு கூட வாய்விட்டு பேசுனதில்ல. அப்பெல்லாம் எனக்கு தோணும்மா, நான் பெரியவனானதும் உன்னைய ராணி மாதிரி பார்த்துக்கனுன்னு.  நீ அவரப் பத்திக் கவலப்படாத, அவரு செஞ்ச பாவத்துக்கு தனியா கெடந்து அனுபவிக்கட்டும். அப்பதான் அவருக்கு பொண்டாட்டியோட மகிமை புரியும்”

சந்திரன் கூறிவிட்டு எழுந்து அவன் மனைவியுடன் அவர்களின் அறைக்குச் சென்றான்.

ஒரு வாரம் கழித்து சந்திரனின் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது, அதில் பேசியதும் அவன் அம்மாவிடம் வந்து, “ம்மா, அந்த மனுசனுக்கு கடவுள் தண்டனை கொடுத்துட்டாரும்மா”

அதைக்கேட்ட சிவகாமி மிகப்பெரிய அதிர்ச்சியுடன், “என்னப்பா ஆச்சு?”

“உங்கிட்ட பேசாம, வாழ்நாள் முழுக்க உன்னைய ஒரு பொண்டாட்டியாக்கூட மதிக்காம இருந்தாருல்ல. அதெல்லாம் சகிச்சுட்டு நீ எப்படியெல்லாம் மௌனமா இருந்து அழுதுருப்ப. இப்ப அந்த மனுசனுக்கு கையும், காலும் இழுத்துக்கிச்சாம், கெடந்து அனுபவிக்கட்டும்” என்று கூறியவுடன்

சிவகாமி அடுத்த பத்து நிமிசத்துல அவளுடைய துணிமணிகளை எல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு, “சந்திரா என்னைக் கொண்டு வந்து விட்டுறு”

“ம்மா, அந்த மனுசன் உன்னை ஒரு பெண்ணாக்கூட மதிச்சதில்லம்மா”

“அதுக்காக, அவர அப்படியே விட்டுறுலாங்கிறியா? அவரு எம் புருசன், என்னைய அவரு மனைவியா மதிக்காம போயிருக்கலாம், ஆனா அது அவரு செஞ்ச தியாகம்…”

“ம்மா, ஏம்மா பொய் சொல்ற? நீ அங்க போகக் கூடாது”

“சந்திரா நீயா என்னைக் கொண்டு வந்து விடுறியா, இல்ல நானே போகட்டா” என்று சிவகாமி கோபமாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரன், அவளைக் கூட்டிக் கொண்டு அப்பாவைப் பார்க்கச் சென்றான்.

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த சிவகாமிக்கு பழைய நினைவுகள் மனதில் கறுப்புக் காட்சிகளாக ஓடியது.

திருமணமாகி இரண்டாவது நாளிலேயே அருணாச்சலத்தை விட்டு விட்டு சிவகாமி அவள் காதலித்த வெள்ளைச்சாமியோடு ஊரைவிட்டுப் போயிருந்தாள். அருணாச்சலத்துக்கு மட்டுமே அவள் எழுதி வைத்துப்போன கடிதத்தின் மூலம் அந்த உண்மை தெரியும். துக்கம் தாளாமல் அருணாச்சலம் அப்போதே அந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்று விட்டிருந்தார்.

இரண்டு வருடங்கள் கழித்து டவுனில் கையில் ஒரு வயதுக் குழந்தையுடன் தவித்து நின்றவளை திரும்பவும் தன்னுடன் சேர்த்துக் கொண்டவர் அருணாச்சலம்.

வீட்டை அடைந்ததும் அருனாசலத்தின் கால்களில் சென்று விழுந்த சிவகாமி,  “என்னை மன்னிச்சுருங்க” என்று அழுதவளைப் பார்த்து வாய் கோணிப் போயிருந்த அருணாச்சலம், “சிசி.. வ்வ..காமி” என்று பாசத்தோடு திக்கி அழைத்தார்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – இறுதி பகுதி) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை

    பாரதி கண்ணம்மா (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி.