பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“சரவணா, உன் அத்தை அவளோட மகள் ஸாதனாவின் போட்டோவை அனுப்பியிருக்கிறாள். போட்டோவைப் பார்த்து விட்டு உன் அபிப்பிராயம் சொல். நாம் நீடாமங்கலம் போய் பெண் பார்த்து விட்டு வரலாம்” என்றாள் அம்மா.
இப்போதெல்லாம் அடிக்கடி இந்த பாட்டுத்தான் பாடிக்கொண்டு இருக்கிறாள் அம்மா. ஆனால் சரவணனுக்குத்தான் இதொன்றும் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதையும் விட திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது.
அவனுடைய நண்பர்கள் நிறைய பேர் ஆசையாசையாய் திருமணம் செய்து கொண்டு எல்லோருக்கும் பார்ட்டி வைத்து ஜாலியாகக் கடற்கரை பீச், சினிமா என்று சுற்றியவர்கள் தான். ஆனால் அவர்களில் பலர் இப்போது விவாகரத்து கேஸிற்காக கோர்ட்டும் கையுமாக அலைந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் இவர்களுக்கு குழந்தைகள் வேறு. இவர்களுக்குப் பிறந்த பாவத்திற்காக அந்தக் குழந்தைகள் நம் எதிர்காலம் அம்மாவுடனா அல்லது அப்பாவுடன் இல்லை ஏதாவது ஒரு ஹாஸ்டலிலா என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறதுகள்.
அவர்கள் வாழ்க்கையே சோகக் கடலில் வீழ்ந்து விட்டதாக நினைத்து சில நண்பர்கள் சாராயக் கடலில் வீழ்ந்து தத்தளிக்கிறார்கள். சிலர் தாடி வளர்த்துக் கொண்டு நவீன தேவதாசாகச் சுற்றி வருகிறார்கள்.
இவர்களின் கையாலாகதத் தனத்னைப் பயன்படுத்திக் கொண்டு இதற்காகவே காத்திருந்தாற் போல் கையில் பெண் குழந்தையோடு காத்திருக்கும் சில வேறு மாதிரிப் பெண்கள் இவர்கள் வாழ்க்கையில் குடும்பக் குத்து விளக்காக உள்ளே நுழைந்து விடுகின்றனர்.
முதல் திருமணத்தில் சிங்கமாக கர்ஜித்தவர்கள், இடையில் வந்த பெண்களிடம் வாயைக் கூட திறக்க பயப்படுகிறார்கள். நண்பர்களோ அவர்களுடைய பெற்றோரையும் கவனிக்க முடியாமல், அவனுக்கே பிறந்த குழந்தைகளுக்கு ஜீவனாம்ச தொகை வழங்கிக் கொண்டு, இடையிலே நுழைந்த குடும்ப குத்துவிளக்கிற்காகவும், அவளுடன் ஒட்டிக் கொண்டு வந்த உறவுகளுக்காகவும், ஆடம்பரமாக செலவு செய்து கொண்டு வாழ்கிறார்கள்.
இந்த வாழ்க்கை எங்கே போய் முடியுமோ, அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இத்தகைய திருமணம் தேவையா, குழந்தைகளைப் பற்றி யோசிக்காத பெண்களுக்காக தங்கள் காலம் பொருள் எல்லாம் செலவிட வேண்டுமா என்று யோசித்தான்.
இத்தனைக்கும் என் நண்பர்கள் ஏறக்குறைய ‘ஆசை’ ‘படத்தின் அஜீத் போல் இருந்தவர்கள். நானோ அவ்வளவு நிறமில்லை. தெற்றுப் பல் வேறு. சுமாரான பர்ஸனாலிட்டி தான். அவர்கள் வாழ்க்கையே தலை கீழாக நின்று கும்மியடிக்கிறது. நான் எம்மாத்திரம்?
“டேய் சரவணா” என்று உலுக்கினாள் அம்மா.
“என்னம்மா ! ஏன் கத்துகிறாய் ? நான் உன் பக்கத்தில் தானே இருக்கிறேன்” சரவணன்.
“நீ இருக்கிறாய், ஆனால் உன் நினைவெல்லாம் வேறு எங்கோ இருக்கிறதே. இந்தக் காலத்துப் பிள்ளைகள் போல் நீயும் யாரையாவது லவ் பண்ணுகிறாயா? அப்படி இருந்தால் அதையும் சொல்லிவிடு”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா. இப்போது இவ்வளவு அவசரமாக ஒரு கல்யாணம் தேவையா? என்று தான் யோசனையாக இருக்கிறது”
“உனக்கே இருபத்தெட்டு வயது ஆகிறது; பயிரையே ஆடிப்பட்டம் தேடி விதை என்கிறார்கள் . காலாகாலத்தில் எல்லாம் நடக்க வேண்டும் சரவணா. சரி, உன் அத்தை அனுப்பிய சாதனாவின் போட்டோ டேபிள் மேல் ஒரு கவரில் இருக்கிறது பார். பெண் கிளியாட்டம் உனக்குப் பொருத்தமானவளாக இருக்கிறாள். நீ சரியென்று சொன்னால் மேற்கொண்டு ஆவதை உடனே கவனிக்கலாம்” என்றவள் ஒரு கட்டு முருங்கைக் கீரையை ஒரு முறத்தில் வைத்துக் கொண்டு உருவத் தொடங்கினாள்.
சரவணன் மெதுவாகச் சென்று அந்த கவரைப் பிரித்து போட்டோவைப் பார்த்தான், ஆச்சர்யப்பட்டான். சிறிய வயதில் நல்ல போண்டா போல் குண்டாக இருப்பாள். ஆள் என்னவோ சிவப்புத்தான். எப்போதும் வாயில் எதையாவது அரைத்துக் கொண்டேயிருப்பாள்.
தலைமுடி வேறு ஒழுங்குபடுத்தாமல் முகத்தை மூடிக்கொண்டிருக்கும். அந்த எண்ணெய் வேறு முகத்தில் வழியும். அவள், இவன் அருகில் வந்தாலே ஏதோ அழுக்கு மூட்டை போல் இருக்கும்.
“தூர போடி” என்று முகத்தை சுளிப்பான். அவளும் விடாது அருகில் வந்து அவள் அழுக்கு முகத்தை இவன் சட்டையில் தேய்ப்பாள். சட்டையில் அது வரையில் அப்படியே கரையாகப் படியும்.
ஒரு முறை கோபம் வந்து சரவணன் அவளைப் பிடித்து வேகமாகத் தள்ளி விட்டான். கீழே விழுந்த அவள் கண்களில் நீர் வழிய கைகளில் ஒட்டிய மணலைத் தள்ளியபடி, “போடா கருவாயா, தெற்றுப் பல்லா” என்றும் மேலும் பல கெட்ட வார்த்தைகளாலும் திட்டினாள்.
சொத்து தகராறில் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், அத்தைக்கும் இவர்கள் குடும்பத்திற்கும் கொஞ்சம் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு அவர்களுடன் போக்குவரத்தே நின்றுவிட்டது. மீண்டும் இப்போது தான் சில ஆண்டுகளாக யாரோ உறவினர் வீட்டுத் திருமணத்தில் சேர்ந்திருக்கிறார்கள்.
‘அந்த சாதனாவா இவள்?’ என்று ஆச்சர்யப்பட்டான். உடம்போடு ஒட்டிய சுடிதர், கொடி போன்ற உடல். கனவு காணும் கண்கள், மயக்கும் குறும்பு புன்னகை. சீராக வெட்டப் பட்டு அழகாகப் போடப்பட்ட போனி டெயில். அதையும் மீறி நெற்றியிலும் காதோரத்திலும் தொங்கும் ஸ்பிரிங் முடி. தேவதையோ இவள்? என்று ஆச்சர்யப்படும்படி இருந்தாள்.
“என்ன சரவணா, போட்டோவைத் தானே பார்க்கிறாய் ! இப்படி ஆச்சர்யப்பட்டு நிற்கிறாயே”
“அதில்லை அம்மா, சின்ன வயதில் வேற மாதிரி இருந்தாள். இப்போது இவ்வளவு அழகாக இருக்கிறாளே”
“இதில் என்ன ஆச்சர்யம். கல்லூரிப் படிப்பு, தகுந்த வயது, அதுவுமல்லாமல் இப்போது தான் ஆன்லைனில் என்னென்னவோ பார்த்து கற்றுக் கொள்கிறார்களே. அது போகட்டும், உனக்கு சம்மதமானால் மேற்கொண்டு வேலைகளைத் தொடங்கலாமா?” என்றாள்.
அதுவரையில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருந்த அவன் தகப்பனார் சுவாமிநாதன், “சிவகாமி கொஞ்சம் பொறுமையாக இரு, அவசரப்படாதே. நேருக்கு நேர் இருவரும் பார்த்துக் கொள்ளட்டும். இது அந்தக் காலம் இல்லை சிவகாமி. உறவுப் பெண்ணானாலும் ஒருவரோடு ஒருவர் பேசி கருத்துப் பரிமாறிக் கொள்ளட்டும். சரவணா, நான் சொல்வது சரிதானே” என்றார்.
“இன்னும் என்ன யோசனை? காரில் பெட்ரோல், ஆயில் எல்லாம் செக் பண்ணிக்கொள்.நீ டாமங்கலம் தானே, அப்படியே கும்பகோணம் கோயில்களுக்கும் போய் விட்டு வரலாம்” என்றாள் அம்மா .
“அதில்லை அம்மா, உறவில் பெண் எடுக்கக் கூடாது என்கிறார்கள். அதுவுமல்லாமல் இவள் அவ்வளவு அழகாக இருக்கிறாளே, எனக்கு சரிபடுமா என்று யோசிக்கிறேன்” என்றான் சரவணன் தயக்கமாக.
“உனக்கென்னடா ராஜா, ஜாண் பிள்ளையென்றாலும் ஆண்பிள்ளை. உன் படிப்பும் உன் வேலையும் யாருக்குப் பிடிக்காமல் போகும்? நேரில் பேசினால் புரிந்து கொள்வாய்” என்றாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையை விட்டு வெளியூர் போவதால் எல்லோருக்குமே அந்த பயணம் மிகவும் பிடித்திருந்தது. அடைத்து வைத்திருந்த பறவையை பறக்க விட்டது போல் அம்மாவின் முகத்தில் ஒரு சந்தோஷம். மேலும் சரவணன் ஒரு ‘கால் டிரைவரை’ ஏற்பாடு செய்து கொண்டதால் நிம்மதியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.
சென்னையின் பிஸியான வாழ்க்கையில் இருந்து வயல்கள் சூழ இருந்த திருவாரூர் மாவட்டமும், அதில் அடங்கிய நீடாமங்கலமும் அங்கே ஓடும் வெண்ணாறும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.
அத்தையின் வீட்டிற்குள் நுழையும் போதே வரவேற்பு பலமாக இருந்தது. அத்தையும் மாமாவும் தேவையேயில்லாமல் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு சொத்து விஷயமாகத் தகராறு செய்ததற்கு மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
எல்லோருக்கும் ஸாதனா தான் டிபனும் காபியும் கொண்டு வந்தாள்.
“நீண்ட பயணம், மிகவும் களைத்திருப்பீர்கள். சாப்பிடுங்கள் பிறகு பேசலாம்” என்றார் அவள் தந்தை .
“பரவாயில்லை, நாங்கள் வழியில் சாப்பிட்டு விட்டுத்தான் வந்தோம். முதலில் பையனுக்கு பெண்ணையும், பெண்ணுக்குப் பையனையும் பிடித்திருந்தால் அப்புறம் சந்தோஷத்துடன் ஜாம்ஜாமென்று சாப்பிடலாம். எங்கள் பிள்ளைக்கு ஸாதனாவை மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் தான் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று வந்தோம்” என்றார் சுவாமிநாதன் மனம் திறந்து.
“மாமா நான் ஸாதனாவுடன் கொஞ்சம் பேச வேண்டும்” என்றான் சரவணன்.
“உன் மாமா பெண்தானே, பக்கத்தில் உள்ள அறையில் தாராளமாகப் பேசலாம்” என்று அனுமதி அளித்ததுடன், “ஸாதனா , மாமாவை அழைத்துக் கொண்டு பேசிவிட்டு வாம்மா” என்றனர் .
ஸாதனா சரவணனைப் பார்த்து புன்முறுவலுடன், “வாருங்கள்” என்பது போல் தலையசைத்தாள். இருவரும் அங்கேயிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர்.
சரவணனுக்கு பேசுவதற்கு வார்த்தைகளே வரவில்லை. பரிட்சை ஹாலில் போய் உட்கார்ந்தவுடன் கை கால்கள் எல்லாம் வேர்க்குமே, அப்படி ஒரு பயத்துடன் இருந்தான். ஆனால் ஸாதனா மிகவும் தெளிவாக இருந்தாள், அவன் நிலையைப் புரிந்து கொண்டாள்.
“மாமா… என்ன கேட்க நினைக்கிறீர்களோ அதை தாராளமாகக் கேளுங்கள்” என்றாள் புன்னகையுடன்.
“எனக்கு ஒரு பயம்” என்றான் சரவணன்
“என்னிடமா?” என்றாள் ஸாதனா வியப்புடன்.
“ஸாரி உன்னிடம் இல்லை, பொதுவாகவே திருமணம் என்றால் பயம்”
“ஏன்?”
அப்போது தான் சரவணன், காதலித்து திருமணம் செய்து கொண்ட, ஏன் பெரியோர்கள் பார்த்து திருமணம் செய்து கொண்ட தன் நண்பர்களுக்கு ஏற்பட்ட அவல நிலையைப் பற்றி விளக்கினான்.
“இப்போதைல்லாம் திருமணங்கள் நீடித்து நிலைப்பதில்லை. கடைசியில் கஷ்டப்படுவது குழந்தைகள் தான். அதனால் தான் திருமணம் என்றாலே பயமாகவும், வெறுப்பாகவும் இருக்கிறது” என்றான்.
“மாமா, நான் என் மனதில் உள்ளதைச் சொல்லட்டுமா?”
“தாராளமாக”
“மாமா… திருமண வாழ்க்கை ஒன்றும் சிங்கத்துடனோ புலியுடனோ ஒரு கூண்டுக்குள் வாழ்வதில்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை. யார் விட்டுக் கொடுத்தாலும் கெட்டுப் போக மாட்டார்கள். கணவன் மனைவியை தன்னுடைய குழந்தையாகவும், மனைவி கணவனைத் தன்னுடைய குழந்தையாகவும் நினைத்தால் வீண் பிரச்சனைகளே வராது என்பது என் எண்ணம். அவரவர் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்தாலே போதும், ஒன்றும் பெரிய தியாகம் எல்லாம் செய்ய வேண்டியதில்லை. நம் அம்மா அப்பா எப்படி வாழ்கிறார்களோ அப்படி வாழ்ந்து விட்டுப போகவேண்டியது தான்” என்றாள்.
“நீ எப்படி இவ்வளவு தெளிவாக இருக்கிறாய்?” சரவணன் ஆச்சர்யமாக அவளைப் பார்த்தான்.
“நம் பெரியவர்கள் வாழும் வாழ்க்கை தான் நம் கண் முன்னால் திறந்த புத்தகமாக இருக்கிறதே ! அதைப் பார்த்து அப்படியே காப்பி அடிக்க வேண்டியது தான்” என்றாள் ஸாதனா அழகாக சிரித்துக் கொண்டு .
“இன்னும் ஒரு சந்தேகம். நீ இவ்வளவு அழகாக தங்கச் சிலை போல் இருக்கிறாய். நானோ தெற்றுப் பல்லும் கருவாப் பயலாக இருக்கிறேனே, உனக்கு என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?”
“மாமா… இவ்வளவு படித்திருக்கிறீர்கள். இந்த அழகு நிலையானதல்ல என்பது உங்களுக்கும் தெரியும். ‘நெஞ்சத்து கல்வியழகே அழகு’ என்று நாலடியாரில் படிக்கவில்லையா? ஒரு அம்மை நோய் வந்தாலோ, அல்லது ஒரு புற்றுநோய் வந்தாலோ எல்லா அழகும் கொள்ளை போய்விடும், இல்லையா?
மேலும் கருப்பு ஒரு நிறம் தானே மாமா. உலகப் பேரழகி கிளியோபாட்ரா கருப்பு நிறம் தானே, நடிகர் விஜயகாந்த் கருப்பு நிறம் தானே. அவருடைய ஈகை குணம் வேறு யாருக்காவது இருக்கிறதா? அவர் சினிமாவை விட்டுப் போய் எத்தனை ஆண்டுகள் ஆகின்றன, இன்னும் அவருடைய பேரும் புகழும் மறையவில்லை.
எதனால் ? அவருடைய நிறத்தாலா? அவர் மற்றவர்களின் பசியறிந்து உணவளித்ததால் தானே. மேலும் வயதானால் பல் போய் பொக்கை வாயாக, கண் பார்வை மங்கி, காதும் கேட்காது. அப்போது அழகு எங்கே இருக்கிறது? ஒருவர் விழும்போது ஒருவர் தாங்கிப் பிடிக்கிறோமே, கடைசி வரை உனக்கு நான் எனக்கு நீ என்று இருக்கிறோமே, அது தான் அழகு.
அந்தக் காலத்திலேயே இராமனுக்கு சீதை என்றும் , சீதைக்கு இராமன் என்றும் இருந்ததால் தான் இராமாயணம் பெரிய காவியமாகி இருக்கிறது ! இல்லையா மாமா?” என்றாள்.
“அடேயப்பா! இன்னும் ஒரே ஒரு சந்தேகம், உறவுக்குள் திருமணம் செய்வது பரவாயில்லையா?”
“எனக்கு அது தான் பாதுகாப்பு. உறவு என்னும் வளையத்துள் நான் மிக தைரியத்துடன், சந்தோஷத்துடன் இருப்பேன்”
“அப்படியானால் நாம் திருமணம் செய்து கொண்டால் சந்தோஷமாக இருப்போமா?”
“கட்டாயம் மாமோய். வாழ்க்கை சொர்க்கம் ஆவதும் நரகம் ஆவதும் நம் கையில் தான். சொர்கம் எப்போதும் நம் கையிலே ; அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே” என்று கலகலவென்று பாடி சிரித்தாள் குறும்போடு.
“இன்னும் எவ்வளவு நேரம் தான் பேசுவீர்கள். எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகுப் பேசிக் கொள்ளலாம், வாருங்கள் வெளியே” என்று சிரித்துக் கொண்டே கோரஸாக்க் குரல் கொடுத்தார்கள் வெளியே காத்திருந்தவர்கள்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings