sahanamag.com
சிறுகதைகள்

அப்பாவின்  தியானம் (சிறுகதை) – ✍ சசிகலா ரகுராமன்

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ரவு ஒன்பது மணி. மாலையில் ஆறு மணிக்கு பிறகு, மூன்றாவது முறையாக படுக்கையறைக்குள் நுழைகிறேன். 

படுக்கையின் மேல் கிடந்த காய்ந்த துணிமணிகள், விரைப்புடன் என்னை அழைத்து நான் வராமல் போகவே, என்னைப் பார்த்து, “வா வா” என கெஞ்சின. 

அவசர அவசரமாக இஸ்திரி போட வேண்டியதை அதற்கான கூடையிலும், துண்டுகளை அலமாரியில் இருந்த  அதற்கான இடத்திலும், திணித்தேன்.

ரெண்டே நிமிடத்தில் வேலை முடிந்தது. இதற்கு தான் இந்த துணிகளை இவ்வளவு அலைக்கழித்தேனா. துணிமணிகள் மிகவும் டல்லடித்தன, என்னைப்  போலவே அவை என் அப்பாவை தேடுகின்றனவோ?

அப்பாவின் நினைவலைகள் என்னை சூழ்ந்தன.

கல்யாணம் ஆன பிறகு, ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு என் அம்மா வீட்டிற்கு சென்றேன். தடபுடலாக சாப்பாடும் வரவேற்பும் இருந்தது.

“அப்பா ரிட்டயர் ஆனது ரொம்ப சவுகரியமாக இருக்குடி ! எல்லா வேலையிலும் ஹெல்ப் பண்றார்டி” என்றாள் அம்மா. அம்மா சந்தோஷமாக இருப்பது கண்டு மனம் குளிர்ந்தது

‘பாவம் அம்மா, ஜாலியாக இருக்கட்டும்’ என நினைத்தேன். அப்பா என்னென்ன வேலைகள் செய்கிறார் என பார்க்கவோ, கேட்கவோ முற்படவில்லை.

அடுத்த முறை சென்ற போது, அம்மாவுடன் நீண்ட நேரம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.

“அப்பா துணி மடிக்கிறார் பார்த்தியா?” என்றாள்.

“இல்லையே! இதில் என்ன பெரிய விசேஷம்” என்றேன்.

“நன்னா கவனிடி” என்றாள், தன் சிறு கண்கள் மலர, என் காதுக்குள்.

அப்பா துணிகளை படுக்கை மேல் பரத்தி வைத்துக் கொண்டார். சிறு துணிகளான உள்ளாடைகள், ரவிக்கை போன்றவற்றை தனியாகவும், துண்டுகள் தனியாகவும், உடுப்புகள் தனியாகவும் பிரித்தார்.

உள்ளாடைகள், பிளவுஸ்கள்  போன்றவற்றை ஒரு டப்பாவில் போட்டார். வேஷ்டி, துண்டு, புடவை போன்றவற்றை நன்றாக நீவி விட்டு, சுருங்கிய  பார்டரை அழுத்தி பிரித்து விட்டார்.

பலமுறை அழுத்தி தடவி, பிறகு மடித்து அழுத்தினார். சுமார் பதினைந்து நிமிடங்கள் அதை செய்தார். நாங்க பார்த்ததைக் கூட கவனிக்கவில்லை.

‘வேற வேலை இல்லை அப்பாவுக்கு. இந்த சின்ன விஷயம் அம்மாவை இப்படி கவர்கிறதே. அப்பா மேல் அம்மாவுக்கு அவ்வளவு காதல் போலும்!’ என்றே எண்ணினேன். அப்பாவின் இந்த செயலை ரசித்த அம்மாவே என்னை வியப்பூட்டினாள்.

வேலை! வேலை! என அலுவலக வேலையை கட்டி அழுது கொண்டிருந்த அந்த காலத்து சின்சியர் சிகாமணி அவர். அதனால் வீட்டு வேலைகள் எதுவும் செய்து நான் பார்த்ததே இல்லை. எல்லாம் கையில் கிடைக்கும்.

ஆனால் ஓய்வு பெற்ற பின், காய் நறுக்குவது, பால் காய்ச்சுவது, துணிகள் மடித்து வைப்பது போன்ற சில வேலைகளை தனதென்று சுவீகரித்துக் கொண்டார். மெதுவாக அவர் செய்யும் எல்லா வேலையையும் கவனிக்க ஆரம்பித்தேன்.

தினந்தோறும் பால் காய்ச்சும் போது, அதனருகிலேயே நின்று, கண்ணும் கருத்துமாக, முதல் முறை புது வீட்டிற்கு வந்தவுடன் பால் காய்ச்சும் சிரத்தையுடன், பாவத்துடன் காய்ச்சுவார்.

அவர் பாலை வழிய விட்டு நான் பார்த்ததேயில்லை. அதே போலத்தான் அவர் செய்யும் எல்லா செயல்களும்.

அம்மாவின் மறைவினால் நிலைகுலைந்து போனவரை, சில காலம் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தோம். அப்போதும் அவர் இந்த வேலைகளை தொடர்ந்தார்.

என் துணிகள் மடிப்பதை பார்த்த என் கணவர், “அங்க பாரேன். அவர் துணிமணிகளை மடிக்கிறாரா, இல்ல தியானம் பண்றாரா?” என வியப்பார்.

கொரோனா காலகட்டத்தில், ‘அப்பாவின் வேஷ்டி’ என்ற பிரபஞ்சனின் சிறுகதையை படித்தேன். எனக்கு என் அப்பா துணி மடிப்பதுதான் சட்டென நினைவுக்கு வந்தது.

அப்பாவின்  அருகில் அமர்ந்து அவர் துணி மடிப்பதை பலமுறை  ரசித்தேன்.

நான் ஏதேனும் பேச முற்பட்டால், “இரு இரு, ரெண்டு துணிதான். முடிச்சுட்டு வரேன்” என்பார்.

‘மடித்துக்கொண்டே பேசினால், துணி கோவிச்சுக்குமா என்ன?’ என்று மனதில் தோன்றியதை கேட்க மாட்டேன்.

சில நாட்களில், துணி மடிப்பதை நிறுத்தி விட்டு, “நான் அப்புறம் மடிச்சுக்கிறேன். நீ என்னன்னு சொல்லும்மா” என்பார்.

இன்று இவரை மடக்கியே தீருவது என நினைத்து, “செஞ்ச வேலையவே திரும்ப திரும்ப செய்யறது போர் அடிக்கலையாப்பா? எப்படி முதல் தடவை போல பண்ற?” எனக் கேட்டேன். இதற்கான பதில் கண்டிப்பாக அப்பாவிடம் இருக்காது என்றே தோன்றியது.

“வேலை இல்லாமல் இருந்தா தான் போர் அடிக்கணும். எப்படித்தான் உங்களுக்கு எல்லா வேலையும், போர் அடிக்கறதோ. முதல்ல அத சொல்லு” என எதிர்கேள்வி போட்டார். 

பல பணிகள் செய்யும் இந்த அவசர யுகத்தில், தியானம் மாதிரி நினைத்து வேலைகளை மனம் ஒன்றி செய்து பார்ப்போமே. சாதாரண செயல்களை அசாதாரண முறையில் செய்த அப்பா, ஒரு சாமான்யரே அல்ல.  அசாதாரணமானவர். ஒரு கர்ம யோகி.

இந்த ஞானம் அவர் இறந்த பிறகாவது கிட்டியதே. நாமும் அப்பா மாதிரி ஓரிரெண்டு வேலைகளை செய்து பார்த்தால் என்ன?.

இன்று ஆறு மணிக்கே துணி மணிகள் என் கையில் சிக்கின. அப்பா மாதிரியே பரத்தி  வைத்துக் கொண்டு, தியானம் செய்யும் நோக்கில் என்னை தயார்படுத்திக் கொண்டு அமர்ந்தேன்.

இரண்டு துணி மடித்தவுடன் உள்ளே வந்த என் பெண், “அம்மா! நான் டான்ஸ் வகுப்பிற்கு போகணும். டிரஸ் மாத்தணும். இடத்த காலி பண்ணு” என்றாள். 

அவள் சென்ற பின் மீண்டும் அமர்ந்தேன். “சிக்ஸ்!” என்று சத்தம் வந்தது. ஓடிப் போய் யார் அடித்தார்கள் என்று பார்த்தேன். மீண்டும் அமர்ந்தேன்.

இந்த முறை ஒரு போன் வந்தது. ஆக மொத்தம் “இதெல்லாம் உனக்கு முடியாது” என்பது போல் துணிமணிகள் என்னைப் பார்த்து கெக்கலித்தன.

 ‘ஒரு நாள் நானும்  அந்த  கலையை கற்பேன்’ என மனதில் சூளுரைத்தேன்.

(முற்றும்)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!