in

உன் வாழ்க்கை உன் கையில் (நாவல் – பகுதி 5) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

உன் வாழ்க்கை... (பகுதி 5)

மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இதுவரை:

துரை, ரவி இருவரும் அகாலமான முறையில் இறந்து போகிறார்கள். அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த சூர்யா, தாமரையைத் தேடித் தவிக்கிறான். இன்ஸ்பெக்டர் விஜய் தன் மனைவி ரம்யாவுக்கு எப்போது நினைவு திரும்பும் என்ற கவலையிலும், அவளைத் தாக்கியது  யார்  என்ற விசாரணையிலும் தீவிரமாக  இருக்கிறான்.

இனி:

நகரத்தின்  பெரும்புள்ளி, தொழிலதிபர்  பரந்தாமனின்  கம்பீரமாக  எழுந்து  நிற்கும்  அந்தப் பெரிய  பங்களாவில்,  காலையிலேயே  காவல்துறையைச்  சேர்ந்த  இருவர்   வாசலில்  இருந்த செக்யூரிட்டியிடம் பேசிக்  கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அநேகமாக தெரியாது  என்றே  பதில்  வந்து  கொண்டிருந்தது செக்யூரிட்டியிடம்  இருந்து.

“சரி, மிஸ்டர் பரந்தாமனைப் பார்க்கணும்.  இந்த ஏரியா ஸ்டேஷன்ல இருந்து செல்வமும், ராஜவேலுவும்  வந்திருக்கோம்னு சொல்லுங்க. ஒரு பத்து நிமிஷம் பேசணும்.”

“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.  நான் சார்கிட்ட கேட்டு சொல்றேன்.”

அந்த செக்யூரிட்டி ஃபோனில் பரந்தாமனிடம் பேசி விட்டுத் திரும்பினார்.

“சார், உங்க ரெண்டு பேரையும் உள்ளே வரச் சொல்றாங்க.  உள்ள போங்க.”

ராஜவேலுவும், செல்வமும் உள்ளே போக, பரந்தாமன் அன்றைய செய்தித்தாளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

“வாங்க ராஜவேலு, என்ன இவ்வளவு சீக்கிரம்? இது யாரு புதுசா இருக்கே… ஸ்டேஷன்ல புதுசா ஜாயின் பண்ணியிருக்கற பையனா?”

“வணக்கம் சார். ஆமா, ஒரு வாரம் தான் ஆச்சு. எனக்கு ஜூனியரா ஜாயின் பண்ணி இருக்காப்ல. சார், ஒரு சின்ன என்க்வயரி”

“என்ன விஷயம், சொல்லுங்க ராஜவேலு. ஏதாவது சந்தேகம்னா ஃபோன்லேயே கேட்டிருக்கலாம். ஏன் வீடு வரைக்கும் வந்திருக்கீங்க?”

“இல்ல சார், கமிஷனர் தான் எதுக்கும் நேர்ல போய் விசாரிச்சுட்டு வந்துருங்கன்னு சொன்னார். அதான்…”

“சொல்லுங்க, என்ன விஷயம்?”

“சார், உங்ககிட்ட ரவின்னு யாராவது வேலை பார்க்கறாங்களா?”

“ம்ம்ம்…. எந்த ரவி?  டிரைவர் ரவியா?”

“ஆமா சார்”

“அவன் ரெண்டு நாளா வரலையே”

“ஏன் வரலன்னு ஏதாவது தெரியுமா சார்?”

“தெரியல. பசங்ககிட்ட கேட்டுப் பார்த்தேன். ஒருத்தரும் ஒண்ணும் சரியா பதில் சொல்லல”

“ரவி மட்டும் தான் வரலையா, இல்ல… வேற யாராவது… துரைன்னு….?”

“துரை… அவனும் என்கிட்ட டிரைவரா இருக்கான். எங்கிட்ட ஏழெட்டு கார் இருக்கு.  ஆஃபீஸ் உபயோகத்துக்கு, பக்கத்துல ஊருக்குப் போனா, வீட்டு உபயோகத்துக்கு…. இப்படி எல்லாத்துக்கும் டிரைவர் வேணும்.  அதனால என்கிட்ட நாலு பேர் ட்ரைவரா இருக்காங்க. மாத்தி மாத்தி வந்துகிட்டே இருப்பாங்க. துரை திடீர்னு இறந்துட்டதா ரவி என்கிட்ட சொன்னான்.  எப்படி, என்னன்னு விசாரிக்கச் சொன்னேன். ஆனா அதுக்கப்புறம் ரவி வரல. சரி, இரண்டு நாள் தானே ஆகுது…. உடம்பு ஏதும் முடியலையான்னு பசங்ககிட்ட கேட்டுப் பார்த்தேன். ஒருத்தரும் சரியா பதில் சொல்லல. என்ன விஷயம்?”

“துரை, ரவி இரண்டு பேருமே இப்போ உயிரோட இல்ல. துரை  நடுரோட்டுல இறந்து கிடந்தான். ஆனா எங்கேயும் அடிபட்டதுக்கான அடையாளம் எதுவும் இல்லை. அதே மாதிரி ரவி அவனோட வீட்டுல இறந்து கிடந்தான். அவனுக்கும் உடம்புல எந்தக் காயமும் இல்லை. அதனால எங்களுக்கு ஒண்ணும் புரியல. கொலையா, தற்கொலையான்னு ஒண்ணுமே தெரியல. உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்கத் தான் வந்தோம்”

“எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது. ரவி இறந்ததே இப்ப நீங்க சொல்லித் தான் எனக்குத் தெரியும். எனக்கு வேலை டென்ஷன், மீட்டிங், ஏகப்பட்ட ஃபோன் கால்னு இதுவே சரியா இருக்கு. அது போக,  இங்கே  இருக்கும்  போது  அவங்களுக்கு  ஏதாவது  நடந்திருந்தா,  நான்  பதில்  சொல்ல  முடியும்.  அவங்க  வேலை முடிச்சு  இங்க  இருந்து  போன பிறகு  எப்படி  இருக்காங்க,  என்ன  பண்றாங்க  இதுல எல்லாம்  நான்  தலையிட  மாட்டேன்.”

“அவங்க தண்ணி போட்டுட்டு யார்கிட்டயாவது தகராறு  பண்ணியிருப்பாங்க. அதனால ஏதாவது முன் விரோதத்துல  கொலை பண்ணியிருப்பாங்க. அந்த  கோணத்துல விசாரிச்சுப்  பாருங்க.”

“சரி சார், துரை, ரவி தவிர உங்ககிட்ட ட்ரைவரா வேலை பார்க்கற மத்த ரெண்டு பேரும்  இப்போ  இங்கே  இருக்காங்களா?”

பரந்தாமன் தன் உதவியாளரைப்  பார்க்க,  அருகிலேயே  நின்றிருந்த  உதவியாளர்  சுகுமார்  சட்டென  பதில்  சொன்னான்.

“கனகு இன்னும் வேலைக்கு வரல சார். ப்ரேம் வாசல்ல  உங்களைக்  கூட்டிட்டுப்  போறதுக்காகக் காத்துட்டிருக்கான் சார்.”

“கனகு வந்து, இது  விஷயமா உங்களுக்கு ஏதாவது தகவல் சொன்னா, எங்களுக்கு  சொல்லுங்க சார்.”

“கண்டிப்பா சொல்றேன் ராஜவேலு.”

“சரி சார், நாங்க கிளம்பறோம்.  போகும்  போது  ப்ரேம்கிட்ட  விசாரிச்சுட்டுப் போறோம்.”

“ஓ…. தாராளமா….”

சொல்லி விட்டு செல்வமும், ராஜவேலுவும் பரந்தாமனின் அந்த பரந்து  விரிந்த பங்களாவில் இருந்து வெளியே வந்தார்கள். வழியில் ப்ரேமிடம் கேட்டதற்கு, அவனும் எதுவும் தெரியாது என்றே சொன்னான்.

வெளியே  வந்ததும், செல்வம் தான் முதலில் ஆரம்பித்தான்.

“ராஜவேலு சார், நீங்க என்ன நினைக்கறீங்க?”

“என்னப்பா, எதைப் பத்தி கேக்கற?”

“இல்ல, அந்த பரந்தாமன் சொன்னதெல்லாம் நிஜம்னு நினைக்கறீங்களா?”

“நிஜமோ பொய்யோ… அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்.  அங்கேயே நீ எதுவும் வாயைத் திறக்கக் கூடாதுனு அதுக்குத் தான் உனக்கு சொல்லி, கூட்டிட்டு வந்தேன். இது எல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.”

“என்ன சார் சொல்றீங்க? நம்ம காவல்துறைக்கு சந்தேகம்னு  வந்த  பிறகு,  எதுக்குப் பேசாம வரணும்? அந்த பரந்தாமனோட அசிஸ்டன்ட்டைப் புடிச்சு நாலு உதை உதைச்சா, எல்லா உண்மையையும் கக்கிடுவான். எனக்கு என்னவோ அவங்க ரெண்டு பேருக்குமே துரையும், ரவியும் இறந்தது பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சு இருக்கும்னு தோணுது. ஆனா வேணும்னே தெரியாத மாதிரி நடிக்கறாங்க.”

“யப்பா தம்பி… செல்வம், இத்தோட நிறுத்திக்க. இதுவே நீ பேசினது அக்கம்பக்கத்துல யாரும் கேட்டுரக்கூடாது. அதான் பெரிய இடத்து விவகாரம், இது வெறும் கண்துடைப்புன்னு சொல்றேன் இல்ல. இதுக்கு மேல இதைப் பத்தி ஆராய்ச்சி பண்ணாதே.”

“என்ன சார்…. இப்படிச்  சொல்றீங்க?”

“ஆமாம்  பா, அந்த பரந்தாமன் சாதாரண ஆள் கிடையாது. பணம் பாதாளம் வரைக்கும் பாயும்ங்கற மாதிரி, பரந்தாமனோட பணம் எங்கே வேணா, என்ன வேணா பண்ணும். ஏன்னா அந்த பரந்தாமனுக்கு அரசியல் பின்புலம் எல்லாம் பயங்கரமா இருக்கு. நம்ம டிபார்ட்மெண்ட்லயே அவருக்கு ஜால்ரா அடிக்க நிறைய பேர் இருக்காங்க. அந்த பரந்தாமனே இவங்க ரெண்டு பேரையும் கொன்னிருந்தா கூட, நம்மளால ஒரு ஆணியும் புடுங்க முடியாது. அதனால போனோமா, விசாரிச்சோமா,  அதைப்  போய்  மேலிடத்துல சொன்னோமான்னு   விட்டுரணும்.”

செல்வம் ஒன்றும் புரியாமல் ராஜவேலுவை அரண்டு போய் பார்த்துக் கொண்டு இருந்தான்.

கோவை

கோவை ரயில் நிலையத்தில் இறங்கிய சூர்யா, வீட்டிற்கு வந்து சேர்ந்தான். பெற்றோருக்கு சூர்யாவைப் பார்த்ததும் மிகுந்த சந்தோஷம்.

சூர்யாவுக்கும் அப்பா, அம்மாவைப் பார்த்த சந்தோஷம் இருந்தாலும், தாமரை பற்றி ஏதாவது தகவல் கிடைக்காதா என்ற துடிப்பு மட்டுமே அதிகமாக இருந்தது.

கொஞ்ச நேரம் அப்பா, அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு, குளித்து, காலை டிஃபனை சாப்பிட்டு விட்டு, வெளியில் கிளம்பினான்.

“அம்மா, கொஞ்சம் வெளிய வேலை இருக்கு. முடிச்சிட்டு வரேன். அப்பா கடைல இருந்து வந்ததும் சொல்லிருங்க.”

நேராக தாமரை தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்தான். அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. சுமார் 12 வீடுகள் இருக்கும் வீடு. அங்கு கல்லூரி மாணவிகளும், வேலைக்குச் செல்லும் பெண்களும் தங்கியிருந்தார்கள்.

வாசலில் இருந்த செக்யூரிட்டியிடம் தாமரையைப் பார்க்க வேண்டும் என்று கேட்க, செக்யூரிட்டி “தேவையில்லாமல் ஆண்களை உள்ளே விட முடியாது” என்று அடம் பிடித்தான். 

தாமரைக்கு என்ன உறவு என்று எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தான். “யாரைப் பார்க்க வேண்டுமோ, அவர்கள்  செக்யூரிட்டிக்குத் தகவல்  தந்தால்  மட்டுமே  உள்ளே அனுமதிக்க  முடியும்”  என்றான்.

சூர்யாவுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு கல்லூரி மாணவி அவர்களைக் கடந்து போகவே, செக்யூரிட்டி சட்டென்று அந்த மாணவியைக் கூப்பிட்டான்.

“மேடம்,  கல்பனா  மேடம்,  இங்க வாங்க.  சார்,  நீங்க சொல்ற  தாமரை  இவங்க கூட தான் தங்கியிருக்காங்க.  இவங்ககிட்ட  கேட்டுத்  தெரிஞ்சுக்கோங்க.”

கல்பனா  குழப்பத்துடன்  சூர்யாவைப்  பார்த்தாள்.

“மேடம், தாமரையைப் பார்க்கணும். இப்போ ரூம்ல இருக்காங்களா?”

“நீங்க யாரு?”

“நான் சூர்யா, தாமரையோட ஃப்ரெண்ட்.”

“அப்படியா? உங்களை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லையே…”

“இல்ல… நான் இங்கே எல்லாம் வந்து, தாமரையைப் பார்த்ததில்லை. வெளில தான் சந்திப்போம்.”

“ஓ…  தாமரை ரூம்ல இல்லையே சார். பத்து நாள் இருக்கும்…. எங்கே போனான்னு  தெரியல. போகும்  போது என்கிட்ட சொல்லல. காலேஜுக்கும் வரல. ஃபோனும் எடுக்க மாட்டேங்கறா. எனக்கு ஒரு தகவலும் தெரியலையே.”

“காலேஜ்ல லீவ் எதுவும் சொல்லியிருக்காங்களா? அதைப்  பத்தி ஏதாவது தெரியுமா?”

“காலேஜூக்கும் எந்தத் தகவலும் சொல்லல. ப்ரொஃபஸர் எல்லாம் தாமரை ஏன் வரலன்னு என்னைத் தான் கேட்டுட்டு இருந்தாங்க. அவ இந்த மாதிரி சொல்லாம எல்லாம் போனது கிடையாது. அப்படியே போனாலும் ஃபோனாவது பண்ணவா. நானும் ஒரு ரெண்டு மூணு தடவை ஃபோன் பண்ணிப் பார்த்தேன். ம்ஹூம்…..  எடுக்கவே இல்ல. உபயோகத்தில் இல்லைன்னு வருது. அப்புறம் ஃபோன் பண்றதை விட்டுட்டேன். ஒருவேளை சென்னைக்கு அவங்க அப்பா அம்மாவைப் பார்க்க போயிருக்காளா என்னன்னு தெரியல.”

“சரி, தாமரை ஏதாவது உங்களுக்கு ஃபோன் பண்ணா, தயவு  செஞ்சு எனக்கு சொல்லுங்க. இந்தக் கார்டை வச்சுக்கோங்க. இதுல என் நம்பர் இருக்கு. கண்டிப்பா எனக்குத் தெரியப்படுத்துங்க.”

“கண்டிப்பா சொல்றேன் சார். அதே மாதிரி உங்ககிட்ட தாமரை ஏதாவது பேசினாலும், எனக்கு ஃபோன் பண்ணச் சொல்லுங்க.”

தலையை ஆட்டி விட்டு, கலங்கிய மனத்துடன் அங்கிருந்து கிளம்பினான் சூர்யா.

(தொடரும் – சனி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பறக்குமோ முதலை (சிறுகதை) – ✍ பீஷ்மா

    வைராக்கியம் ❤ (பகுதி 10) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை