மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பொழுது புலர்ந்தது. புலர்வதற்கென்றே காத்திருந்தது போல் கணேசனின் அர்ச்சனையும் வழக்கம் போல் தொடங்கியது.
கணேசனுக்கு ஒரு மகன் சந்திரன், ஒரு மகள் நீலா. மகள் நீலா படிப்பில் படு சுட்டி. மகன் சந்திரனோ படிப்பு ஏறாமல் படிப்பில் மிகச் சுமார்.
கணேசன் தான் படிக்க இயலாமல் போன MBBS படிப்பைத் தன் மகள் முடிக்க வேண்டுமென்று விருப்பம் கொண்டு மகள் இப்போது மருத்துவப் படிப்பை நோக்கி.
மகன் சந்திரனை IAS படிக்க முயற்சி செய்து அது முடியாமல் போனதில் வருத்தமும், கோபமும் ஒரு சேர மன அழுத்தத்தில் தள்ளி மகனைப் பார்க்கும் போது மட்டுமல்ல, நினைக்கும் போதும் வெறுப்பைக் கக்கினார்.
படிப்பில்தான் சந்திரன் சூட்டிகையில்லையே தவிர மற்ற விஷயங்களில் எக்ஸ்ட்ரா activitiesல் முக்கியமாய் ஸ்போர்ட்ஸில் சிறந்தவனாக இருந்தான்.
தனது தங்கை இரண்டு வருஷம் சிறியவளாக இருந்தாலும் தனக்கு முன்பே படிப்பை முடித்து NEET எக்ஸாம் க்கு தயாராகிக் கொண்டிருந்த போது arrears மேல் arrears வைத்து முழி முழி யென்று முழித்துக் கொண்டிருந்த போது கொரோனா உபயத்தில் அனைத்து arrearsம் clear ஆகி கொரோனாவால் பாஸ் ஆகியிருந்தான்.
அவனுக்கு நன்றாகத் தெரியும் தான் IAS படிக்க இயலாதென்று. டென்னிஸும், கிரிக்கெட்டும் மாறி, மாறி விளையாடி இரு விளையாட்டுக்களிலுமே சாம்பியன் ஆக இருந்தான்.
ஆனாலும் கணேசன் படிப்பு மட்டுமே குறியாக தன் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத மகன் மீது எரிச்சலும், கோபமும் கொண்டு வார்த்தைகளால் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் டென்னிஸ் அகாடமியின் மேனேஜர் கணேசனை சந்தித்தார்.
“சார், சந்திரன் முயன்றால் டென்னிஸில் அடுத்தடுத்த லெவலில் சாதிக்க முடியும். அதற்கு உங்கள் அனுமதி கேட்க பயந்து விலகி நிற்கிறான். நீங்கள் ஏன் அவனிடம் பேசக்கூடாது?”
கடுப்பான கணேசன், “ஒரு டிகிரி முடிக்க வக்கில்லாம கொரோனா பாஸ் பண்ணின அவனுக்கு அந்த விளையாட்டை வைத்து வாழ்க்கையில் என்ன சாதிக்க முடியும்?”
“சார், படித்து முடித்துத்தான் நல்ல career அமைய வேண்டுமென்று அவசியமில்லை. ஸ்போர்ட்ஸ் quotaவில் அவனால் மிகப் பெரிய அளவில் வேலை தேடிக் கொள்ள முடியும். படிப்பு அவசியமில்லை”
திகைத்த கணேசன், “என்ன சார் சொல்றீங்க?” என்றார்.
“ஆமாம் சார், சந்திரனுக்கு ஸ்போர்ட்ஸில் மிகப் பெரிய எதிர் காலம் இருக்கு. அதற்கு நான் காரண்டி. நல்லதொரு வேலைக்கும் நான் பொறுப்பு”
“படிப்பே ஏறாதவன் எப்படி சாதிக்க முடியும்?”
“சார், கரையில கார் ஓட்டத் தெரிஞ்சவனுக்கு கடல்ல இறங்கி மீன் பிடிக்கத் தெரிய வேண்டிய அவசியமில்ல. கடல்ல புழங்கறவனுக்கு கரையில கார் ஓட்டத் தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியமென்ன? ஒருத்தனுக்கு எது நல்லா வருதோ, அதை விடாமத் தொடர்ந்து பழகினா, அவன் அதில ஈஸியா வெற்றி பெறலாம். எல்லாராலயும் தவளையைப் போல, முதலையைப் போல நீர்லயும், நிலத்திலயும் வாழ முடியாது. பறவைகள் பறப்பது போல தவளையும், முதலையும் வானத்தில பறக்க முடியாது”
கணேசனுக்கு சுரீரென்று உறைத்தது. அந்த நிமிடம் முதல் தன் மகனை மதிக்கத் தொடங்கி பிராயச்சித்தம் செய்ய ஆரம்பித்தார்.
“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற”
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
(முற்றும்)