in

பம்புசெட் (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து, சென்னை

பம்புசெட் (சிறுகதை)

மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பூந்தமல்லிக்கு அருகே மாங்கட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அம்பாள்சிட்டி எனும் அழகிய குடியிருப்பு. இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்திருக்கும் பகுதி.

அழகிய குடியிருப்பு என்று ஏன் சொல்கிறேன் என்றால், அகலமான தெருக்களில் இருபக்கங்களிலும் வரிசையாக மரங்கள் அணிவகுத்து சாலைகளில் வெயிலே படாதவாறு அமைந்திருப்பதே தனி அழகு.

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்கள் என்று வெவ்வேறு வகையான கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் கொண்டிருந்த போதும், அம்பாள்சிட்டி என்னும் ஒரே குடைக்குள் அனைவரும் சங்கமித்து ஒற்றுமையாக வாழும் இடம். 

அம்பாள் சிட்டி அமைந்திருக்கும் இடத்திற்கு பின்புறம் இன்றும் விவசாயம் நடைபெறுவதுதான் கூடுதல் சிறப்பு. நகரில் பிறந்து கிராமத்தையே பார்க்காத குழந்தைகளுக்கு நெற்பயிர் எஙகிருந்து வருகிறது என்பதனை அறிந்துக் கொள்ள அருமையான வாய்ப்பு இந்த ஏரியாவில் வசிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது.

அது மட்டுமின்றி பக்கத்து ஏரியாக்களிலிருந்து அதாவது அண்ணா நகர், மதுரவாயல், போரூர் போன்ற இடங்களில் இருக்கும் பள்ளிகளிலிருந்தும் குழந்தைகள் வந்து வயல்களை பார்த்துவிட்டு செல்கிறார்கள்.                                                                                 

இப்படி ஒரு அருமையான குடியிருப்பு பகுதியில்தான் சுந்தர்ராஜ் தன் மனைவி சீதாவுடன் இரண்டு குழந்தைகளோடு வசித்து வருகிறார்.                                                

“என்னங்க வாட்டர் பாட்டில எடுத்துக்கிட்டீங்களா?’’                                                     

“ம்ம் எடுத்துட்டேன், சீக்கிரமா வா நான் கெளம்பறேன்”னு சொல்லிவிட்டு கார் பார்க்கை நோக்கி நடந்தான் சுந்தர்ராஜ்.

கையில், பல்வேறு துண்டுகளாக ஆப்பிளை வெட்டி சில்வர் டப்பாவில் போட்டு எடுத்து வந்தாள் மனைவி சீதா. வேலைக்கு கிளம்பும்போது வாசல்வரை வந்து வழியனுப்புவது சீதாவின் வழக்கம். குழந்தைகள் கையால் டாட்டா காட்டுவதைப்போல் கண்ணால் டாட்டா காட்டிவிட்டு காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் சுந்தர்ராஜ்.                                                                                            

காரை பெருமாள் கோயிலுக்கு அருகே நிருத்திவிட்டு பக்கத்திலிருக்கும் ஏ.டி.எம் உள்ளே நுழைய முற்படும்போது, தெருநாய் ஒன்று ஏ.டி.எம்’மின் கதவின் குருக்கே சுகமாக படுத்துக் கொண்டிருந்தது.

சுந்தர்ராஜ் உள்ளே நுழையலாமா, வேண்டாமா என்று எண்ணும்போது, “ஏய் போ போ”ன்னு வாட்ச்மேன் துரத்தினார்.

“நீங்க வாங்க சார் பக்கத்துல பாத்ரூமுக்கு போயிருந்தேன், அதுக்குள்ளார வந்து படுதுக்கிச்சி” ன்னார் வாட்ச்மேன் ஆறுமுகம்.

“பராவாயில்லீங்கய்யா” என்றவன் உள்ளே சென்று பணத்தை எடுக்க ஆரம்பித்தான்.

பணத்தை எடுத்துவிட்டு வெளியேறும்போது கை தவறி பணம் கீழே விழுந்து விட்டது, உடனே வாட்ச்மேன் அறுமுகம் சுந்தர்ராஜோடு சேர்ந்து சிதறிக் கிடந்த ஐநூறு ரூபாய் நோட்டுக்களை ஒன்றன்பின் ஒன்றாக பொறுக்கி கொடுத்தார்.  

தன் மணிபர்சிலிருந்து இருபது ரூபாயை எடுத்து பெரியவருக்கு கொடுத்தான், வாட்ச்மேன் அந்த ரூபாயை பவ்யமாக வாங்கிக் கொண்டார்.     

சுந்தர்ராஜ் எப்போதும் தானம் செய்வதில் கூட ஒரு வரைமுறையை பின்பற்றுபவன். பொதுவாக எல்லா பிச்சைக்காரங்களுக்கும் சுந்தர்ராஜ் பிச்சைப் போடுவதில்லை.

அதாவது, பாத்திரம் அறிந்து பிச்சையிடுதல்னு நம்மவுங்க சொல்லியிருக்கிற மாதிரி, ரொம்ப வயசானவுங்க, கைகால் இல்லாதவுங்க, அதுக்கும் மேல இறந்துப் போன தன்னோட ஊர்க்காரங்க, தன்னோட உறவுக்காரங்கன்னு அவுங்களோட முகச்சாயல்ல யாராவது தெரிந்தாப் போதும், உடனே அவர்களுக்கு உதவி செய்வான்.

சின்ன வயசில் தனக்கு உதவி செய்தவர்களுக்கு தான் இப்பொழுது நன்றிக்கடன் செய்ததாக சுந்தர்ராஜீக்கு பெரிய சந்தோசம் கிடைக்கும். இறந்துப் போன தன் தாய்மாமன் மாதிரியே இருக்கிற அந்த ஏ.டி.எம் வாட்ச்மேனுக்கும் எப்போதும் பத்து, இருபதுன்னு டீ குடிக்க கொடுப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான் கொடுத்தான்.

காருக்கு வந்தவன் டைரியை எடுத்து உடனே ஏ.டி.எம்’மில் எடுத்த பணத்தை எழுதிவிட்டு காரை ஓட்ட ஆரம்பித்தான். அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள மைக்ரோபிட்ஸ் என்னும் கம்பெனியில் மேனேஜராக வேலைப் பார்கிறார் சுந்தர்ராஜ். சுந்தர்ராஜ் சென்றபிறகு தெரு நாய் மீண்டும் வந்து ஏ.டி.எம் வாசலில் படுத்துக் கொண்டது.

“ஏய் போ போ”ன்னு நாயை விரட்ட ஆரம்பித்தார் வாட்ச்மேன் ஆறுமுகம்.                                              

அறிவுஜோதி எனும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலமாக இந்த ஏ.டி.எம்’மில் வாட்ச்மேனாக வேலைப் பார்க்கிறார் ஆறுமுகம்.

என்ன ஆறுமுகம் மதியம் சாப்பாடு சாப்பிட்டாச்சா”ன்னு ஆறுமுகத்தை கேட்டார் அறிவுஜோதியின் மேற்பார்வையாளர்களில் ஒருவரான கணேசன்.                                          

“இல்லீங்க சார், எப்பவும் இந்த நேரதுக்கெல்லாம் வீட்லயிருந்தா சாப்பிட்டுருப்பேன், நம்ம ராமசாமி ரெண்டு நாளா லீவுங்கரதால தொடர்ந்து நானே வேலை பாக்குறதால என் சம்சாரம் சமைச்சி எடுத்துட்டு வர்றேன்னு சொல்லியிருக்கா”ன்னார் ஆறுமுகம்.                                                  

“நீங்க விட்டுக்குப் போய் சாப்பிட்டு வாங்க பெரியவரே, நான் வேணும்னா கொஞ்ச நேரம் உக்காந்திருக்கேன்”னார் கணேசன்.

“அய்யோ வேணாம் சார். நீங்க எல்லா இடத்துக்கும் போய் என்னைய மாதிரி நிறைய பேர பாக்கணும், ஏதோ ஒங்க புண்ணியத்தால வீட்டுக்கு பக்கத்துலேயே எனக்கு நம்ம முதலாளிக்கிட்ட சொல்லி வேலை போட்டு குடுத்திருக்கீங்க. அதுக்கே நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டுருக்கேன்” னார் ஆறுமுகம்.                                                

“என்னங்கய்யா பெரிய பெரிய வார்த்தைகளா பேசறீங்க. ஏதோ என்னால முடிஞ்ச உதவிய செஞ்சேன் அவ்ளோ தான். அதோ ஒங்க சம்சாரமே வர்றாங்க”

“வணக்கம்யா நல்லாயிருக்கீங்களா?” என்றாள் ஆறுமுகத்தின் மனைவி செல்வி.

“நல்லாயிருக்கேன்மா நீங்க நல்லாயிருக்கீங்களா?’’ என்று பதிலுக்கு கேட்டார் கணேசன்.

பெரிய வேப்பமரம் அதன் நிழலிலே ஏ.டி.எம் இருப்பது வெளியே நின்று சாவகாசமாக பேசுவதற்கு வசதியாக இருக்கும். ஆறுமுகம் எப்போதும் அந்த மரத்தடியிலேயேதான் உட்கார்ந்திருப்பார். எதிரே கேக் ஷாப், மட்டன் கடை, அதற்கு எதிரே வானுயர்ந்த அடுக்கு மாடி கட்டிடம்.

“சரிங்கய்யா சாப்பாடு வந்திடுச்சி, நீங்க சாப்பிடுங்க. நானும் அடுத்த சைட்டுக்கு போகனும்”னு சொல்லிவிட்டு புறப்பட்டார் கணேசன்.                                                      

“என்ன புள்ள சமைக்க லேட்டாயிடுச்சா? ஒடம்பு சரியில்லையா”ன்னு கனிவாக கேட்ட கணவனிடம்

“அதெல்லாம் ஒன்னுமில்லையா, காலையிலயிருந்து லேசா தலைசுத்தலா இருந்துச்சி… அதான் லேட்டாயிடுச்சி”ன்னாள்.                                                                           

“அப்புறமா ஏன் சமைச்ச? பக்கத்துல இருக்கிற அம்மா ஹோட்டல்ல வாங்கி சாப்புட்டுக்கிடலாம்ல?’’

“அந்தக் காலத்துலயிருந்து ஒங்களுக்கு கடையில சாப்பிட்டா ஒத்துக்காதுல்ல, அதான் சமைச்சிட்டு வந்திருக்கேன்”னாள் செல்வி.                                                                                                                     

“வயசான காலத்துல புள்ளைங்க, பேரப்புள்ளைங்க இருந்தும் உனக்கு ஒத்தாசையா இருக்க யாருமே இல்லைன்னு நினக்கும்போது வருத்தமா இருக்கு புள்ள”

“சரி சரி… எனக்காக வருத்தப்பட்டதெல்லாம் போதும். நீங்க பசித்தாங்க மாட்டீங்கன்னு சாப்பிடுங்க” ன்னாள் செல்வி.                                                                                                                     

உலகத்திலே குழந்தையாய் இருக்கும்போது தாயும், வளர்ந்து வாலிபனாய் ஆனதிலிருந்து அந்திமக்காலம் வரையில் அவன் பசி அறிந்து அன்னமிடுபவள் மனைவி மட்டும்தான். ஆறுமுகம் சாப்பிட ஆரம்பிக்கும் முன் தன் மனைவி சாப்பிட்டாளா என்று கேட்க தவறவில்லை.

நடந்து போய் சாப்பிட்டு வரும் தூரத்தில்தான் ஆறுமுகத்தின் வீடு இருந்தபோதும் பணிரெண்டு மணி நேர வேலை நேரத்தில் இடையே எங்கேயும் செல்ல மாட்டார். கடமையே கண்ணாயிரம் என்று சொல்வார்களே அதைப்போல.             

மாலை ஆறு மணி வழக்கம்போல வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பும் வேலை என்பதால், சாலைகளில் நெரிசல் அதிகமாக இருந்தது. வழக்கம்போல் ஆறுமணிக்கு சரியாக ரிலீவர் வந்திடுவார் ஆனால் இன்று ஏனோ வரவில்லை.

ஏ.டி.எம்’முக்கு அருகேயுள்ள பஜ்ஜிக்கடையில் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. பஜ்ஜி வாசனை ஆறுமுகத்தின் மூக்கை துளைத்தது, ஆனாலும் உணவு விசியத்தில் ஆறுமுகம் எப்போதும் கட்டுப்பாடுடன் இருப்பார். அதனால்தான் எழுபது வயதை தாண்டியும் பிரஷர், சுகர், கொலஸ்ட்ரால்னு எதுவுமே கிடையாது.                                                               

“சாரிங்கண்ணே… குழந்தைக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பிடலுக்கும், வீட்டுக்கும் அலைஞ்சிட்டு இருந்ததால ரெண்டு நாளா வரமுடியல. இன்னைக்காவது சீக்கிரமா வந்திடலாம்னா கொஞ்சம் லேட்டாயிடுச்சி” என்றார் ராமசாமி.                                                                                                           

“பரவாயில்லப்பா இப்ப குழந்தைக்கு உடம்பு எப்படியிருக்கு?”

“ம்ம் பரவாயில்லண்ணே, ரெண்டு நாள்ல சரியாகிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார்”

“சரிப்பா நான் கிளம்புறேன், நளைக்கு பாக்கலாம்”னு தனது வீட்டுக்கு புறப்பட்டார் ஆறுமுகம்.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே ஏ.டி.எம்’மிற்கு வந்துவிட்டார் ஆறுமுகம்.            

“அண்ணே என்ன இன்னிக்கு இவ்ளோ சீக்கிரமா வந்துட்டீங்க?”                           

“அதான் குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னியேப்பா நீ சீக்கிரமா வீட்டுக்கு போப்பா. ஒரு மணி நேரம் அதிகமா வேலைப்பார்த்தா நான் என்ன குறைஞ்சா போகப்போறேன்”னார் ஆறுமுகம்.                                                                         

“ரொம்ப சந்தோசம்ணே அப்பயிருங்க நான் ரூமை கூட்டிட்டு போறேன்” என்ற ராமசாமியை தடுத்து, “நீ போ நான் பார்த்துக்கறேன்”னார் ஆறுமுகம்.                     

“நான் நாளைக்கு வர்றேன்”னு சொல்லிவிட்டு புறப்பட்டார் ராமசாமி.                                    

பொழுது விடிந்தும், விடியாமலும் இரவுக்கு பகல் டாட்டா காட்டும் வேளையில் நகரத்து மக்கள் நடைபயிற்சியை ஆரம்பித்து விட்டார்கள். ஆறுமுகம் ஏ.டி.எம் அறையை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

தங்களது வீட்டில் மட்டும் ஏசி போட்ட ரூமை சுத்தமாக வைத்திருக்கும் ஒருசில மக்கள் அதைபோல இருக்கும் ஏ.டி.எம் அறையில் மட்டும் பணம் எடுத்தபின் வரும் ரிசீப்ட் சீட்டை டஸ்பின்னில் போடாமல் அறையின் ஏதாவது ஒரு மூலையில் கசக்கி போட்டு விட்டு போய்விடுவார்கள்.

காகித குவியல்களை கூட்டியெடுத்து டஸ்பினில் குணிந்து போடும்போது வாக்கிங் ஷூக்களோடு ஒருவர் உள்ளே நின்றிருக்க நிமிர்ந்து பார்த்தார் ஆறுமுகம்.

“யோவ் நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனாயா? எத்தனை தடவை ஏ.டி.எம்ல பணமெடுக்கும் போது பத்து, இருபதுன்னு கொடுத்திருப்பேன். நேத்து பணமெடுத்துட்டு எண்ணிப்பாக்கையில கைதவறி கீழே விழுந்தத எடுக்கும்போது நீயும் சேர்ந்துதானே எடுத்துக் கொடுத்த. நான் நேத்து நைட்டு கணக்கு பார்க்கும்போது ஆயிரம் ரூபாய் குறைவா இருக்கு. நான் நல்லா நூறு தடவைக்கும்மேல யோசிச்சி பார்த்தேன் வேற யாருக்கும் கொடுக்கல. அதுமட்டுமில்லாம நான் அப்பப்ப கணக்க கரெக்டா எழுதற ஆளு”ன்னு மூச்சுவிடாம பேசி முடித்தான் சுந்தர்ராஜ்.

“கண்டிப்பா நீதான் அந்த பணத்தை எடுத்திருப்ப. அதனாலத்தான் வயசானக் காலத்தில பாத்துக்ககூட ஆளில்லாம இந்த மாதிரி கூட்டி பெருக்கிட்டு இருகேன்”னு கடுமையாக பேசினான் சுந்தர்ராஜ்.                                                                                                                      

கை, கால்கள் நடுங்க, கண்கள் சிவப்பாகி என்ன சொல்வதென்றே தெரியாமல் பனிக்கட்டியில் உறைந்து நிற்பதைபோன்று நின்றார் ஆறுமுகம்.

“என்னய்யா பாக்குற? எனக்கு வந்த கோபத்துக்கு ஓங்கி ஒரு அரை விட்டுருப்பேன், வயசானவங்கறாதல விட்டுட்டு போறேன்”னு வெளியே சென்றான் சுந்தர்ராஜ்.

காலை ஒன்பது மணி செல்வி தன் கணவருக்கு டிஃபன் எடுத்துக் கொண்டு ஏ.டி.எம்’முக்கு வந்தாள்.

நாற்காலியில் தலைகுனிந்து உட்கார்ந்திருந்த ஆறுமுகத்தின் தாடையில் கைவைத்து தன் முகத்திற்கு நேராக நிமிர்த்திய செல்வி, “என்னையா கண்ணெல்லாம் கலங்கியிருக்கு, என்னாச்சி உனக்கு. ஏசியில உக்காந்துருக்கும்போதே உடம்பெல்லாம் வேர்த்திருக்கு உடம்பு சரியில்லையா?”    

உதடுகள் பிரிந்து அதிகாலையில் நடந்தவைகளை மெதுவாக குழந்தை தன் தாயிடம் சொல்வதைபோல சொல்லி முடிக்கும்போது ஏ.டி.எம் கதவை திறந்துக்கொண்டு நடுத்தர வயதை கடந்த பெண்மணி உள்ளே நுழைந்தாள்.

“ஐயா என்ன மன்னிச்சிடுங்க. ஒரு சின்ன தப்பு நடந்துப்போச்சி, என் வீட்டுக்காரர் அவசரப்பட்டு ஒங்கள தப்பா பேசிட்டாருங்கய்யா. நான் கார் துடக்கிறவருக்கு அவரு பர்சிலயிருந்து ஆயிரம் ரூபாய எடுத்து கொடுத்திட்டு அவர்ட சொல்ல மறந்திட்டேன். அது தெரியாம அவசரப்பட்டு வந்து உங்கள தப்பா பேசிட்டாரு. நான் பணமெடுத்தத முன்னமே சொல்லியிருந்தேனா இந்த தப்பு நடந்திருக்காதுங்கய்யா. நீங்க தப்பா நினைக்கலன்னா இந்தாங்கய்யா ஆயிரம் ரூபாயை எங்க வீட்டுக்கார கொடுத்து அவரு சார்பா மன்னிப்பு கேட்டுட்டு வர்ச்சொன்னரு” ன்னாள்.                           

“அம்மா நீங்க இப்ப குடியிருக்கிற ஃப்ளாட்லாம் ஒருகாலத்துல எங்க தாத்தா, பாட்டன் காலத்துலயிருந்து விவசாயம் பண்ணிட்டு இருந்த இடம்மா. ஏதோ எங்க தலையெழுத்து, இந்த இடத்தையெல்லாம் நாங்க பெத்த புள்ளைங்க வித்துட்டானுங்க. அத வாங்குனவுங்க ஃப்ளாட் கட்டி வித்துட்டாங்க. நான் சின்னபுள்ளையா இருக்கும்போது இந்த ஏ.டி.எம் இருக்கிற இடம்தாம்மா பம்புசெட். அதனாலத் தாம்மா என்னோட கடைசி காலமிருக்குற வரைக்கும் என்னோட அப்பா இருந்து விவசாயம் செய்த இந்த இடத்துல இருக்கனும்னு ஏ.டி.எம்’ல வாட்ச்மேன் வேலைய பார்க்கிறேன், பணமெல்லாம் தேவையில்லம்மா”ன்னு சொன்னார் பெரியவர் ஆறுமுகம்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

கடல் தாலாட்டும் கட்டுமரங்கள் (சிறுகதை) – ✍ Dr. பாலசுப்ரமணியன், சென்னை

பறக்குமோ முதலை (சிறுகதை) – ✍ பீஷ்மா