in

மூன்று அத்தியாவசியங்கள் (சிறுகதை) – ✍ புனிதா பார்த்திபன்

மூன்று அத்தியாவசியங்கள் (சிறுகதை)

மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தூங்கா நகரத்தின் பரபரப்பான அந்த வீதியோரம் அமைந்திருந்த குட்டிச் சுவற்றில் தன் வயதை ஒத்த நண்பர்களோடு என்றும் போல் அமர்ந்து, வெண்புகையால் சொந்த உடலுக்கே சூனியம் வைத்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் சுகுமார்.

புறணி பேசுவதில் ஆண்களும் கைதேர்ந்தவர்கள் என்பதை பறைசாற்றும் படி அவர்களின் பேச்சு; அரட்டை, சிரிப்பு, கேலி எனும் வடிவில் அரங்கேறிக் கொண்டிருந்தது.

ஒற்றை விளக்கின் ஒளியில் பொரிக் கடைகள் தொடங்கி, தலைகீழாய் கோழிகள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்த சிக்கன் கடைகள் வரை அந்த ரோட்டை அடைத்து நிறைத்திருக்க, மோட்டார் வைத்த ட்ரை சைக்கிளில் இத்தனை என எண்ணி விட முடியாதபடி குடங்களில் நீரேற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

ஒவ்வொரு குடத்திற்கும் ஒரு மூடி போட்டு, நீர் ததும்பாமல் இருக்க நூலினால் கட்டி வைத்திருந்தவரின் வண்டி, குட்டிச் சுவற்றின் அருகே “புஸ்” என்ற சத்தத்துடன் நின்று போனது. இப்படி வழியில் மோட்டார் பழுதாவது, அவருக்குப் பழக்கப்பட்ட ஒன்று தான் என்பது பரபரப்பற்ற அவர் முகத்திலேயே தெரிந்தது.

ஊருக்குள் இருக்கும் ஏரியாக்களில் இருந்து கார்ப்பரேஷன் தண்ணீரை அடித்துக் குடங்களில் நிரப்பி, நல்ல தண்ணீர் தலை காட்டாத ஹவுசிங் போர்டு போன்ற ஏரியாக்களில் ஒரு குடத்துக்கு பன்னிரெண்டு ரூபாய் என விற்கும் பலரில் இவரும் ஒருவர்.

கிட்டத்தட்ட நாற்பது குடங்களுக்கு மேல் நிரம்பி இருந்த அந்த மோட்டார் பழுதான ட்ரை சைக்கிள் அவர் இழுவைக்கு வர மறுத்தது.

“தம்பிகளா! ஒரு கை தள்ளி, அந்த மேட்டை மட்டும் கடந்து விடுங்கப்பா” என்றார் குட்டிச்சுவற்றின் மீது அமர்ந்திருந்த குடும்பஸ்தர்களைப் பார்த்து.

அமர்ந்திருந்த ஆறு பேரில் நால்வர், விரலிடுக்கில் இருந்த சிகரெட்டுக்காக நிகழ்ந்ததைக் காணாதது போல் வேறு பக்கம் திரும்பியிருக்க, சுகுமாரும் அவனுடைய நண்பன் ஒருவனும் இறங்கி வந்து வண்டியைத் தள்ளினர்.

இளவயது வலுவான கைகள் வண்டியைத் தள்ளுகிறது என்கின்ற அலட்சியம் இல்லாமல் தானும் வலுக்கொண்ட அளவு வண்டியைத் தள்ளி இளவயது கைகளோடு, தோல் சுருங்கிய தன் கைகளாலும் பாரத்தைச் சமமாகப் பகிர்ந்து கொண்டார் அந்தப் பெரியவர்.

“என்ன பெரியவரே! புள்ளைக சரியில்லையா, இந்த வயசுல இந்த வேலை பாக்குறீகளே” எனக் கேட்டான் சுகுமாரின் நண்பன் பல்லிடுக்கில் வெண்ணுடைக் குச்சியைக் கவ்வியபடி.

பல் தெரிய சிரித்த பெரியவர், “புள்ளைகள்லாம் தங்கமான புள்ளைக தான்ப்பா, எல்லாம் நல்ல நிலைமையில இருக்குக. என் வாழ்க்கைக்கு நான் தான உழைக்கணும்” என்றார்.

“நல்ல வேலைல இருக்காகன்னா, உட்கார்ந்து சாப்புடுறத விட்டுட்டு இப்படி ஈரக்குலை நடுங்க தண்ணீ அடிச்சுத் தள்ளணுமாய்யா?” எனக் கேட்டான் சுகுமார்.

தலையை ஆட்டி மெதுவாய் சிரித்தவர், “புள்ளைக தலை எடுத்துட்டா அதுக காசுல உட்கார்ந்து சாப்பிடணும்னு இருக்காய்யா! தன்மானத்தை விட்டுறக் கூடாது தம்பி, உழைச்சு உடம்பு தேஞ்சு தான் சாகணுமே தவிர, மனசு தேஞ்சு சாகக் கூடாது.

கேட்டா காசு குடுக்குற புள்ளைக தான், ஆனா இன்னும் என் உடம்புல தெம்பு இருக்குறப்ப, நான் ஏன்ப்பா புள்ளைக காசுல உட்கார்ந்து சாப்பிடணும்? இதெல்லாம் இப்போ உங்களுக்குப் புரியாது, வயசானப்பெறகு புரியும். உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?” எனக் கேட்டார் பெரியவர்.

“ஆகிடுச்சுய்யா” என்றான் சுகுமார்.

“புள்ளைக எத்தனையா, எங்க வேலை பாக்குறீக?” என அவர் அடுத்த கேள்வியைக் கேட்க

“பெருசு வாய்க்கு பாக்கு போட இன்னைக்கு நாம தான் கிடைச்சோம் போல” என மெதுவாய் சுகுமாரிடம் முணுமுணுத்தபடி போனை எடுத்துக் காதில் வைத்து கழன்று சென்று விட்டான் சுகுமாரின் நண்பன்.

அவன் செய்கையை சரி என ஒப்புக் கொள்வது போல், கண்ணைக் காட்டிய சுகுமார், “எனக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைகய்யா, இங்க மில்லுல தான் வேலை பாக்குறேன், உங்களுக்கு ஆம்பிளப்பிள்ளைக இல்லையாய்யா” எனக் கேட்டான்.

“இருக்குகையா, குறையில்லாம ஆணும், பொண்ணும் கணக்கா இருக்குக” என்றவர் அவன் கேள்வியின் அர்த்தம் புரிந்தவராய்,

“ஆம்பிளப்பிள்ளை இருந்தா அக்கடான்னு உட்கார்ந்து சாப்பிடலாம், மீசைய முறுக்கிட்டு சுத்தலாம்ங்குற கதையெல்லாம் நான் நம்புறதே இல்லை தம்பி. கடைசி வரைக்கும் நம்ம உழைப்புதான் நம்மளக் காக்கும்னு இளசுலயே புரிஞ்சுக்கிட்டேன்.

ஒரு மனுசனுக்கு அத்தியாவசியம் உணவு, உடை, இருக்க இடம்னு பொதுவா சொல்லுவாக. ஒரு ஆம்பளைக்கு அவசியம் என்ன தெரியுமா! ‘கையளவாவது சொந்த வீடு, கிழவியாப் போனாலும் பொண்டாட்டி கழுத்துல, காதுல ஒரு துளி தங்கம், கடைசி காலத்துல சொந்த உடலைத் தூக்கிப் போடக் காசு’, வாழ்க்கையில எத சேர்க்குறியோ இல்லையோ இத மூணையும் சேர்த்துப்புடணும். 

இந்தா, வாரம் ரெண்டு நாள் தண்ணீ வரும். ஒரு நாளைக்கு ஐநூறு வர கிடைக்கும், இந்த வருமானத்தை வச்சு இந்த மதுரக் காட்டுல வீட்டு வாடகை கட்ட முடியுமா? ஏதோ உடல்ல தெம்பு இருந்தப்ப ஓடி ஆடி சின்னதா சொந்த வீடு ஒண்ணக் கட்டிப்புட்டேன்.

இன்னைக்கு வயிறு நிறையேனாலும், என் பூமின்னு போய் படுக்கையில மனசு நிறைஞ்சு போயிருதுல்ல, கடைசி வர என் பொண்டாட்டி காதுல கிடந்த கம்மலையும், கழுத்துல கிடந்த தாலிக் கொடியையும் கழட்ட விடலையே.

கிழவியானாலும், பொட்டுத் தங்கம் போட்டுருந்தா தான ஊர் உலகம் மதிக்குது. மகராசி போன வருசம் செத்துப் போயிட்டா, கடைசி வர அவள யார்ட்டையும் தலை தாழ்ந்து போக விடலன்னு மனசு நிறைஞ்சு தூக்கிப் போட்டேன்.

எனக்காகன்னு வாழ்க்கை பூரா ஓடுனவ, எனக்கும் அவளுக்குமான்னு ரெண்டு பேருக்கும் தூக்கிப் போட சேத்து வச்சுருந்த காச மொத்தமா போட்டு பூப்பல்லக்கு கட்டி அவள அனுப்பி வச்சேன். இப்போ என் ஓட்டம் என் சாவுச் செலவுக்கு.

நாளைக்கு நம்ம பொணத்த நடுவூட்ல போட்டுட்டு நீ பாதி குடு, நீ மீதி குடுன்னு புள்ளைக பங்கு போட்டுறக்கூடாதுங்குற ஒரு வைராக்கியம் தான் அம்பது பானைத் தண்ணீயையும் அடிக்க வைக்குதுய்யா” என்றபெரியவரின் வார்த்தைகளில் அழுத்தமான தெளிவு இருந்தது.

“அதுக்குன்னு வயசு கடந்துருச்சுலைய்யா, அதையும் பாக்கணும்ல” என்றான் சுகுமார்.

“வயசெல்லாம் நம்மளா வச்சுக்குற பொய்க்கணக்கு தான்யா. ஓடணும்யா கால்ல பலம் இருக்குற வர ஓடணும். உட்கார்ந்துட்டா பறந்து போற காக்கா கூட ஏளனமா தான் பார்க்கும். புள்ளைக வாரி வாரிக் குடுத்தாலும், நம்ம கை தாழ்ந்து போகக் கூடாதுயா. வாழையப் போல குடுத்துக்கிட்டே இருக்கணும்னு தான், கடவுள் சந்ததியை குடுக்குறான். நம்ம புள்ளைக்கு செஞ்சது போக, பேரப்புள்ளைகளுக்கும் இயன்றத செய்யணும்” என்றவரின் கை பலத்தோடு, மன பலமும் தன்னை விட அதிகம் என்பது சுகுமாருக்குப் புரிந்தது.

“எப்படிய்யா இத்தனை குடத்தையும் ஒத்த ஆளாவா அடிச்சுத் தூக்குனீங்க” எனக் கேட்டான் சுகுமார் மேட்டின் உச்சியில் வண்டியை வலுக்கொண்டு தள்ளியபடி.

“இது இன்னைக்கு ஏத்துக்கிட்ட பொழப்பு இல்ல தம்பி, இளவயசுல செங்கச் சோலையில வேலை பாத்தப்ப இருந்து செய்றது தான். அங்க ஆறு மணிக்கு பொழப்பு முடிஞ்சு போகும். அப்புறம் சிநேகிதங்க கூடி ஊர் வம்பு பேசுறது பொழப்பா இருந்துச்சு.

ஒருநா ராத்திரி யோசிச்சுப் பாத்தப்ப தான் ஆறு மணிக்கு மேல ஊதாரியா சுத்துறது புரிஞ்சிச்சு. சைக்கிள்ல வச்சு, பத்து, பத்துக் குடமா தண்ணீ தள்ள ஆரம்பிச்சேன். அப்ப வெறும் நால்னா, எட்டனா தான் ஒரு குடத்துக்கு கிடைக்கும்.

உடல் அலுப்பா இருந்தாலும், சட்டப் பைக்குள்ள உருண்டுபோற காசு சத்தம் ஒரு சுகம் தரும் பாரு. தண்ணீல சேர்த்த காசு தான், கடைசி வரைக்கும் என் பொண்டாட்டி கழுத்துல ஒரு துளி தங்கம் கிடக்கக் காரணமா இருந்துச்சு” என்றவர் அங்கங்கு காணாமல் போயிருந்த பற்களின் இடைவெளியோடு சிரித்தபடி அவனைத் திரும்பிப் பார்க்க, அமைதியாய் வந்து கொண்டிருந்தான் சுகுமார்.

“என்னய்யா, இந்தக் கிழவன் வீண் பொழப்பு பாக்குறதுமில்லாம, பேசிப் பேசி நம்ம காத வேற புண்ணாக்குறியான்னு நினைக்கிறியா?” என மீண்டும் உருட்டி விட்ட குடமாய் சிரித்தவர்,

“ஒரு நாளைக்கு ஒத்த ரூபா சம்பாதிச்சாக் கூட அது நம்ம காசுலய்யா. இளவயசுல செங்கச் சோலை, தண்ணீக் குழாய்னு ஓடுனப்ப, அஞ்சுக்கும், பத்துக்கும் காசு பேய் புடிச்சு ஓடுறேன்னு என் சிநேகிதங்களே புறம் பேசத்தான் செஞ்சாங்க. ஆனா பின்னாடி போய், நாம என்ன பண்ணலாம், எப்படி அந்த அஞ்சு பத்த சம்பாதித்திக்கலாம்னு யோசிச்சாங்க.

வேகமா ஓட முடியுற வயசுல எல்லாத்தையும் செஞ்சுப்புடணும்யா. ஓடிச் சேர்த்துட்டா வயசானப்பிறகு உட்கார்ந்து சாப்புடுறோமோ இல்லையோ, கடைசி வரைக்கும் தன்மானத்தோட நிம்மதியா வாழலாம். ஒரே உதிரத்துல வந்த புள்ளைகனாலும், காசுக்கும், கவனிப்புக்கும் நம்மள பாரமா நினைச்சுறக் கூடாது.

எழுபதத் தாண்டிட்டேன், இது வரைக்கும் யாருக்கும் பாரமா இருந்தது இல்ல. இனி சாகுற வர யாருக்கும் பாரமில்லாம இருக்க கையில ரெண்டு காசு கிடக்குங்குற நிம்மதியில வண்டிய ஓட்டிக்கிட்டு இருக்கேன்” என்றபடி சுகுமாரோடு மேட்டிலிருந்து இறங்கியவர்

“ரொம்ப நன்றிய்யா தம்பி வண்டியத் தள்ளுனதுக்கு” எனக் கைக்கூப்பி நன்றி கூறினார்.

‘மேடேரும் வயதில் ஓய்ந்து கிடந்தால், காலம் கடந்த பின் சாதாரண மேடு கூட ஏற முடியாத மலையாகிவிடும்’ என்ற தத்துவத்தைச் சொல்லாமல் சொல்லிவிட்டு, நிம்மதியாய் அவர் ட்ரை சைக்கிளைத் தள்ளிக் கொண்டு செல்ல, ஒரு நொடி அவரை நின்று பார்த்த சுகுமார், வேகமாய் அவர் பின்னால் ஓடி, “தள்ளுங்கைய்யா நான் குடத்தை இறக்கி வைக்கிறேன்” என்றான்.

“இல்லைய்யா தம்பி, இன்னைக்கு நீ இறக்கி வச்சா, அடுத்து யாரும் உதவி பண்ண மாட்டாகளான்னு தான் மனசு ஏங்கும். கையில இன்னும் பலம் இருக்குய்யா, நான் இறக்கிருவேன். நீங்க காலாகாலத்துல வீட்டுக்கு போங்க” என்றார் பெரியவர்.

“ரொம்ப நேரம் காக்க வச்சுட்டனா தாயி?” என்றபடி குடத்தோடு நின்றிருந்த பெண்ணிடம் பேசியபடி வண்டியில் இருந்து ஒவ்வொரு குடமாய் இறக்கி வைத்தவரைப் பார்த்தபடி, மேடேறி வந்தான் சுகுமார். 

என்றும் மாலை நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டை அடிக்கும் இடத்தைத் திரும்பிப் பார்த்தவனின் கண்களுக்கு இப்போது அந்தக் குட்டிச் சுவர் தெரியவில்லை. பெரியவர் சொன்ன மூன்று அத்தியாவசியங்களை சம்பாதிக்க ஏராளமான வழிகள் அங்கு நிறைந்து கிடப்பது அவன் கண்களுக்குள் முதன் முதலாய் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. 

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

அமெரிக்கப் பறவை! (சிறுகதை) – ✍ இரஜகை நிலவன், மும்பாய்