in

மணிப்பர்ஸ் மாமி (சிறுகதை) – ✍ மரு உடலியங்கியல் பாலா, சென்னை

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“யாரடாப்பா அது, எங்க வீட்டாண்ட குப்பைய கொட்டினது. இவாளுக்கெல்லாம் எவ்ளோ சொன்னாலும் புத்தியே வராதா?” மாமியின் வெங்கலக்குரல் கேட்டு,  எழும்பூர் கெங்குரெட்டி தெருவே திரும்பி பார்க்கும்.

நெட்டையான ஒல்லியான உருவம். நெற்றியில் அழகான குங்குமப்பொட்டு, மஞ்சள் பூசிய முகம். முகத்துக்கு பாந்தமான கருப்பு ஃபிரேம் மூக்குக்கண்ணாடி, மூணு தலைமுறை தாண்டிய  சிறிய ஒத்தக்கல் வைரமூக்குத்தியுடன், தழைய தழைய கட்டின மடிசார் புடவை. நிறம் கருப்பானாலும் களையான சற்றே சிடுசிடுப்பான முகபாவம்.

ஆம்! இவைதான் ஐம்பது வயதை கடந்த “ஜானு மாமியின்” சிறப்பு தோற்றம். மாமி இப்படி சத்தம் போட ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டாங்கறது  கனப்பிரசித்தம். 

தன் சமையற்கார  கணவன், வயத்துல புள்ளய கொடுத்துட்டு, சொல்லாம கொள்ளாம எவளோ ஒருத்திய கூட்டிண்டு ஊரவிட்டு ஓடினப்புறம், தனக்கு சீதனமா கிடச்ச அந்த “சிமெண்ட் ஷுட்” வேய்ந்த, நான்கு சிறுசிறு போர்ஷன்கள் கொண்ட வீட்டையும், தான் பெத்த ஒத்த பிள்ளையையுமே உலகமா நினைத்து இதுநாள் வரை கௌரவமா வாழ்ந்துட்டா.

அந்த வீட்டின்  வாடகைப்பணம்தான் ஜானு மாமியின் பிரதான வருமானம். புள்ளையாவது நல்லா படிச்சி பெரிய உத்தியோகத்துக்கு போய் தனக்கு நிம்மதியை தேடித்தருவான்னு அவள் மனக்கோட்டை கட்ட, அவனோ அப்பனுக்கு தப்பாது பிறந்து, சோம்பேரியா ஊரசுத்திகிட்டு, பிஸினஸ் பண்றேன் பேர்வழின்னு சொல்லிகிட்டு, அம்மா குருவிமாதிரி சேத்துவச்ச காசையெல்லாம் தொலைச்சிபுட்டு, அவள் ஆசைல மண்ணை வாரிப் போட்டுட்டான்.

எப்படியோ கஷ்டப்பட்டு,  ஒரு   அரைசெவிட்டு ஏழை பொண்ணை அவனுக்கு கல்யாணம் கட்டிவச்சி, மொத்த குடும்ப பாரத்தையும் இந்த வயசுலயும் மாமிதான் சுமக்கிறாள். அந்த மாமியின் சிடுசிடுப்பான முகத்துக்கு காரணம் இப்போ உங்களுக்கு நன்னா புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

அது 1966இன் இறுதிக்காலம்…

நான் அப்போது எழும்பூர் கெங்கு ரெட்டி தெருவில் வசிக்கும், “பாலர் குருகுல பள்ளியில்” ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன். எங்கள் எதிர்வீடுதான் ஜானுமாமியின் வீடு.

பாட்டிகளின் கையில் சுருக்குப்பை புழங்கிய அக்காலத்திலேயே, ஜானு மாமியின் கையில் மட்டும் பளபளவென்று தங்க நிறத்தில்  கனமான மணிப்பர்ஸ் ஒன்று எப்போதும் (கர்ணனின் கவசகுண்டலம்போல்) வைத்திருப்பதை கண்ட எங்கள் மழலை பட்டாளம் உட்பட அனைவரும் “மணிப்பர்ஸ் மாமி” என அவளுக்கு அன்புடன் புனைப்பெயர் சூட்டினோம்.

மாமி யாருடனும் கலகலப்பா பேசமாட்டா, வந்த சண்டைய விடமாட்டா. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பா. தன் வீட்டு குடித்தனக்காரர்களுக்கு அவள் ஒரு சிம்ம சொப்பனம்.

ஒன்பது மணிக்கு மேல யார் வீட்டிலாவது குண்டுபல்பு எரிஞ்சா அவங்கள உண்டு இல்லன்னு ஆக்கிப்பூடுவா! கரண்ட்பில் கட்றது பாவம் மாமிதானே. ஆனால் ஜுரோ வாட்ஸ் இரவு  பல்புக்கு மட்டும் அனுமதி உண்டு.

நாங்கள் சிக்ஸர் அடிக்கும் பந்துகளை கபளீகரம் செய்து, எங்களை கண்டமேனிக்கு திட்டவும் செய்வாள். ஆனா அவள் ஒரே பேரன் நாணு (நாராயணன் என்பதன் சுருக்கம்) அடுத்த நாள் அதே பந்துடன் வந்து, எங்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட் குழுவுடன் சங்கமமாகி பேட்டிங் செய்கிறேன் பேர்வழி என்று “ஓவர்காஜி” அடிப்பான். நாணா என் பள்ளித்தோழன் என்பது ஒரு கூடுதல் தகவல்.   

ஆங்.. ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே. மாமி படு கஞ்சூஸ், யாருக்கும் காலணா கிள்ளி தெரிக்கமாட்டா. ஆனா தன் ஓரே பேரன் நாணுவின் மேல் கொள்ளை பிரியம். அதனால அவனுக்கு காசு கீசு கொடுப்பாளோன்னு மட்டும் தப்பு கணக்கு போட்டுடாதீங்கோ. அவனுக்கு அடிக்கடி, சுவையோ சுவையான பட்சணங்களை மட்டுமே, தன் கைப்பட செய்து கொடுப்பாள்.

மளிகை சாமான்களை தூபர்தண்டி போல் வீணடித்து விடுவாளோ என்ற அச்சத்தால் மருமகளை அடுப்படி பக்கமே மாமி அனுமதிப்பதில்லை. ஆனா ஒண்ணு மருமகளுக்கும் மாமியாருக்கும் இதுவரை சண்டை வந்து நாங்க பார்த்ததேயில்லை (மாமி என்ன திட்டினாலும் மருமகள் காதில் விழாததால் இருக்குமோ?).

அதல பாருங்க, எப்பனாச்சும் மாமிக்கு திடீர்னு நல்ல மூடு வந்துடுச்சின்னு வைங்க, எங்க மழலை பட்டாளத்தை அன்புடன் அழைத்து “திடீர் உப்புமா” செய்து கொடுப்பாள். அது என்னது திடீர் உப்புமா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

திடீர் உப்புமா என்றால், காலை செய்த இட்லி எதிர்பாராத விதமாய், மிக அரிதான சந்தர்ப்பங்களில் மீந்துபோய் விட்டால், அதை உதிர்த்து, கடலைபருப்பு உளுத்தம்பருப்பு காஞ்சமிளகாய், இஞ்சி, முந்திரி மற்றும் இன்னபிற, எங்களுக்கு தெரியாத ரகசிய வஸ்துக்களை சேர்த்து, சுடச்சுட நாலுசொட்டு பசுநெய்விட்டு வாழையிலையில் வைத்து ஆளுக்கு ஒரு கரண்டி மட்டுமே பரிமாறப்படும் உப்புமாவே, “அவசர உப்புமா” என்று மாமியால் அன்போடு அழைக்கப்படும், இட்லி உப்புமாவாகும். 

அந்த உப்புமாவின் சுவைக்கு ஈடு இணையேது? இன்றும் அந்த உப்புமாவின் சுவை என் நாவில் ஆனந்த நர்த்தனம் ஆடுகிறதுனா பார்த்துக்கோங்களேன்.

அவள் பேரனுக்கு மட்டுமே அது அன்லிமிட்டட் உப்புமா, எங்களுக்கெல்லாம் ஒரு கரண்டிக்கு (அதுவும் சின்ன கரண்டி) மேல் பேராது.

இந்த கருப்பு மாமி எப்ப பார்த்தாலும், ஒரு எல்.ஜி. பெருங்காய மஞ்ச பையில் கண்டதை நிறப்பிக்கொண்டு, தூக்கமுடியாம தூக்கிகிட்டு விடியகாலைல, அவசர அவசரமாக கிளம்பி வெளியே போறத அந்த தெருவே பார்த்து மௌனமாய் சிரிக்கும்.

பக்கத்துவீட்டு பொக்கைவாய் “சின்சாமி தாத்தா” தன் முழு தைரியத்தையும் திரட்டி, எப்பனாச்சும் “ரொம்ப தூரமோ?” என இளித்தபடி மாமியை பார்த்து கேட்டால், பதிலேதும் கூறாமல் அவரை எரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்துட்டு, விடுவிடுவென எட்டி நடப்பாள்.

நான் ஒருமுறை நாணாவிடம் இதற்கு விளக்கம் கேட்டபோது “எங்க பாட்டி, பழைய நியூஸ்பேப்பர், உதவாத பொருளை எல்லாம் வித்துட்டு, ஆத்துக்கு வேண்டிய கரிகா, பழங்க, அரிசிபருப்பு, துணிமணி, எவர்சில்வர் சாமான் இப்டி எல்லாத்தையும், நடை பயணமாகவே ஜார்ஜ் டவுனுக்கு போய் (இன்றைய பாரிமுனை) வாங்கிண்டு வருவா. சிலசமயங்களில் நேக்கு பிடித்த ஆரிபவன் பாதாம் அல்வாவும்,  பட்ணம் பக்கோடாவும் அந்த லிஸ்ட்ல இருக்கும்” என அவன் சொல்லுகையில், என் நாக்குல எச்சில் ஊறும். எனக்கு இப்டி ஒரு பாட்டி இல்லையேன்னு நினச்சி கவலைப்பட்டதும் உண்டு.

ஒருநாள், காலங்காத்தால ஜார்ஜ் டவுனுக்கு கால்நடையாக போன மாமி, இரவாகியும் வீடு திரும்பாததால், அந்த தெருவே கவலையில் மூழ்கி அவளை தேடி அலைந்து திரிந்தது. அன்றிரவு முழுதும் மாமியை நினைத்து அழுது கொண்டே தூங்கி போனேன்.

பொழுது விடிந்ததும் மாமியின் வீட்டுக்கு ஓடினேன். மாமி தன் ஆஸ்தான ஆசனத்தில்  அமர்ந்திருந்ததை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டேன். மாமி என்னை ஆரத்தழுவிக் கொண்டு ஏனோ விம்மி விம்மி அழுதாள். ஆனால் அவள் முகத்தில் பற்பல வரவேற்கத்தக்க மாற்றங்களை கண்டேன்.

அவள் ஏதோ சிலபல நினைவுகளில் மூழ்கிப்போய், பாரிஸ் கார்னரில் உள்ள “மாடர்ன் கேஃப்” (அன்றைய தேசப்பிரகாஷ் குரூப்ஸ்) ஓட்டல் படிக்கட்டில் அமர்ந்திருந்ததை  தன் அப்பா, நள்ளிரவு 12 மணியளவில் தேடிக் கண்டுபிடித்து, பத்திரமாக அவளை வீட்டுக்கு அழைத்து வந்ததாக, நாணா என்னிடம் அடுத்த நாள் பள்ளியில் விளக்கி கூறினான்.

அன்றிருந்து மாமி தலைகீழாக மாறிப் போயிருந்தாள். அமைதியின் முழு உருவமாகிப் போயிருந்தாள். யாரையும் திட்டுவதில்லை, குடித்தனகாரர்களிடம்  சண்டை போடுவதுமில்லை, நிறைய தர்மகாரியம் செய்கிறாள்.

திடீர் உப்புமா செய்தால் “போதும் போதும்” என்று கூறும்வரை பரிமாறுகிறாள். இப்பயிப்ப சின்சாமி தாத்தாவிடம் கலகலப்பாகவும் பேசுகிறாள். சிக்ஸர் பந்துகள் மாமியால்  திருப்பி அளிக்கப்படுகின்றன!

ஆங்…ஒண்ண சொல்ல மறந்துட்டேனே. இப்பவெல்லாம் மஞ்சள் எல்.ஜி.பெருங்காய பையை தூக்கிண்டு, ஜார்ஜ் டவுன் பக்கம் மாமி போறதேயில்லை. 

இந்த திடீ‌ர் மாற்றத்துக்கு என்ன காரணம்னு கெங்கு ரெட்டி தெருவாசிகள் எவ்ளோ “இன்வெஸ்டிகேட்” பண்ணியும் கடைசிவரை யாராலும், எந்த ஒரு துப்பையும் கண்டுபிடிக்கவே முடியல. 

ஓரிரு மாதங்களில் என் அப்பாவுக்கு “பாம்பேவுக்கு” டிரான்ஸ்பர் கிடைத்ததால் நாங்கள் கெங்கு ரெட்டி தெருவுக்கு “டாடா” சொல்லி பிரியாவிடை பெற்றோம். மாமியிடம் நான் விடைபெற்ற போது, இருவரும் பிழிய பிழிய அழுதோம்.

என் கையில் அந்தக்கால பெரிய 5 ரூபாய் நோட்டை அழுத்தி “நன்னா பெரிய படிப்பெல்லாம் படிச்சி, ஷேமமா இருடா கண்ணா”ன்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணா.

அவள் ஆசீர்வாதத்தாலயோ என்னமோ நான் பொறியியல் பட்டம் பெற்று ,ஐஓசி நிறுவனத்தில் உயர்பதவி வகித்து, பணிஓய்வும் பெற்று விட்டேன்.

அண்மையில் ஒருநாள் நான் கெங்குரெட்டி தெரு பக்கம் போக நேரிட்டபோது, “மணிப்பர்ஸ் மாமியின்”  சிமென்ட் ஷுட் வீட்டை ஆவலுடன் தேடிப்பார்த்து கண்டுபிடித்தபோது, அது புத்தம்புது நான்கடுக்கு மாடிவீடாய் மாறி பளபள என்று பரிமளித்து கொண்டிருந்ததை கண்டேன்.

விசாரித்து பார்த்ததில், அதை ஒரு மார்வாடி பணக்காரன் வாங்கி மாளிகையாக்கி இருந்ததை அறிந்தேன்.  மணிப்பர்ஸ் மாமி பற்றி விசாரித்த போது, அருகிருந்த அனைவரும் பேந்த பேந்த விழித்தனர். மாமியின் நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடி, விழியில் நீர்த்துளிகளை பெருக்கியது.

மாமியின் 5ரூபாய் பரிசை எந்த ஜென்மத்தில் அவளுக்கு திருப்பி பரிசளிக்க போகிறேனோ தெரியவில்லை. மாமியின் மனமாற்றத்துக்கான உண்மை காரணத்தை அறிந்து கொள்ள இன்றும் என் மனதினுள் பேரார்வம் ஏற்படுவதுண்டு.

(என் இனிய வாசகர்களே, இங்கு “நான்” என்பது நானல்ல, நான் படைத்த “மூர்த்தி” என்னும் பெயர் கொண்ட கற்பனை கதாபாத்திரமே!.)

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மதங்களை கடந்த மனிதம் (சிறுகதை) – ✍ கீதா இளங்கோ

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 20) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை