in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 19) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14 பகுதி 15  பகுதி 16  பகுதி 17  பகுதி 18

திருமண விருந்து முடிந்து, எல்லோரும் காரைக்கால் பீச்சில் ஆட்டம் போட்டனர். கிருத்திகா அப்போது தான் சுமனாவை கவனித்தாள். வழக்கமாக எப்போதும் சிரிப்பும், கலாட்டாவாக இருக்கும் சுமனா, முகமெல்லாம் வாடி அமைதியாக இருந்தாள்.

“சுமனா, ஏன் மிகவும் களைத்து விட்டாயா? அல்லது உன்தோழி மும்தாஜ் திருமணமாகி உன்னைப் பிரிகின்றாளே என்ற துயரமா?” என்றாள் கிருத்திகா அலைகளில் காலை நனைத்தவாறு.

“அதெல்லாம் ஒன்றுமில்லை கிருத்திகா” என்றாள் சுமனா.

அப்போது அலைகளோடு விளையாடியபடியே வயலட்டும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.

“ஆமாம், மனதிற்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். இன்னும் கொஞ்ச நாட்களில் வயலட்டும் திருமணமாகிப் போய் விடுவாள். அப்போது மிகவும் தனிமையாக உணர்வாயோ?” என்றாள் கிருத்திகா யோசனையாக.

“அவர்கள் இருவரும் தங்கள் மணவாழ்க்கையை சந்தோஷமாகத் தொடங்கப் போகிறார்கள். நான் ஏன் வருத்தப்பட வேண்டும்?” என்றாள் சுமனா எரிச்சலாக.

அவளை உற்றுப் பார்த்தாள் கிருத்திகா. சுமனாவின் கண்களில் லேசாகக் கண்ணீர் திரையிட்டிருந்தது, அதை மறைக்க லேசாக சிரித்தவாறு வேறு பக்கம் ஓடி விட்டாள்.

மீனாட்சியின் காரும், சபரீஷ்வரின் காரும் சென்னை திரும்பின. வீட்டிற்கு வந்த பிறகும் கிருத்திகாவிற்கு சுமனாவின் முகமே கண்ணெதிரில் நின்றது. சின்னக் குழந்தை போல் எதெற்கெடுத்தாலும் சிரிப்பாக இருக்கும் அவள் முகம் இன்று கசங்கிய மலர் போல் இருக்க என்ன காரணம்? மீனாட்சிக்குத் தெரியுமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

கருத்திருமனும், சாம்புத் தாத்தாவும் கூட, “என்ன யோசனை பலமாக இருக்கிறதே?” என்று கேட்டனர்.

“ஒன்றுமில்லை” என்று தலையசைத்து விட்டுத் தங்கள் அறைக்குள் வந்தாள். படுத்த பின்பும் ஏதோ யோசனை பலமாக இருந்தது.

“என்ன கிருத்திகா, யோசனை பலமாக இருக்கிறதே. களைப்பாக இருக்கிறதா? தூங்கு” என்றான் சபரீஷ்வர், அவளை லேசாக அணைத்தபடி.

“இன்று சுமனாவைப் பார்த்தீர்களா? அவள் முகம் மிகவும் வாடி இருந்தது, கண்கள் கூட கலங்கினாற்போல் இருந்தது”

“என் அருமைப் பொண்டாட்டி, படுக்கையில் படுத்த பிறகு புருஷன் ஞாபகம் மட்டும் தான் இருக்க வேண்டும். சுமனா முகம் வாடி இருந்தது, ஷீலா கண்கள் கலங்கியிருந்தன என்றெல்லாம் நினைக்கக் கூடாது. மற்றவர்கள் நினைப்பெல்லாம் நாளைக் காலையில் தான்” என்றவன், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் லேசான குறட்டையோடு தூங்கி விட்டான். ஆனால் இவளுக்குத் தான் ரொம்ப நேரம் தூக்கம் வரவில்லை.

அடுத்த நாள் காலையிலும் அதே சிந்தனையாக இருந்தாள். சபரீஷ் அவளை கவனித்துக் கொண்டிருந்தான்.

காரில் போகும் போது அவளை சமாதானப் படுத்துவதற்காக, “மீனாட்சி அவளைக் காரணமில்லாமல் ஏதாவது திட்டியிருப்பாள், அவளுக்கு எப்போதுமே மற்றவர்களை கமாண்ட் பண்ணிக் கொண்டேயிருப்பதில் ஒரு சந்தோஷம்” என்றான்.

“ஆனால் சுமனா ஒன்றும் அதெல்லாம் கண்டுகொள்ள மாட்டாள்” என்றாள் கிருத்திகா.

கொஞ்சம் யோசனை செய்த சபரீஷ், “நீ சொல்வது சரிதான். சுமனா, மீனாட்சி மாதிரி ஸீரியஸ் டைப் இல்லை. நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா? நீ ஏன் இன்று அவளோடு லஞ்ச் சாப்பிடக் கூடாது, அப்போது காரணம் கேட்கலாமல்லவா?”

“நான் கேட்டால் சொல்லுவாளா? அவளிடமே நேரிடையாக நேரிடையாகக் கேட்டால் டெலிகேட்டாக பீல் பண்ணுவாளோ?” என்றாள் கிருத்திகா.

“சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது பலன் தெரியும். எப்போது ஒரு சின்னக் கேள்விக்காக பீச்சில் உன்னிடம் கண் கலங்கினாளோ, அவளிடம் நீ கொஞ்சம் சாமர்த்தியமாகப் பேசினால் உண்மையைச் சொல்லி விடுவாள் என்று தான் நினைக்கிறேன்” என்றான் சபரீஷ்வர்.

“சரி முயற்சி செய்து பார்க்கிறேன்” என்றவள், சுமனாவிடம் ‘இன்று மதியம் லஞ்ச்சிற்கு அருகில் உள்ள ரெஸ்ட்டாரன்டிற்கு அவள் வர முடியுமா?’ என்று போனில் அழைத்தாள்.

“ஏன் மீனாட்சி வரவில்லையா?”

“இல்லை… மேடம் இன்று பயங்கர பிசி. காலையில் ஒரு மீட்டிங். பாரின் டெலிகேட்சுடன் ஒரு ரெஸ்டாரென்டில் மதியம் லஞ்ச். இன்று முழுவதும் மேடத்தை கையில் பிடிக்க முடியாது”.

“உங்கள் பிரண்ட் வராததால் தான் என்னைக் கூப்பிடுகிறீர்களோ?” என்றாள் சுமனா கேலியாக.

“சுமனா நீ என்னைப் பற்றி அப்படி நினைக்கலாமா? நான் உன்னுடன் அப்படியா பழகுகிறேன்?” கிருத்திகா கனிவாகக் கேட்டாள்.

“நான் விளையாட்டிற்காகச் சொன்னேன் கிருத்திகா, கட்டாயம் வருகிறேன்” என்றாள்.

அன்று பிற்பகல் அருகில் உள்ள ஒரு நல்ல ஹோட்டலுக்கு இருவரும் போனார்கள்.

சுமனா, கிருத்திகாவிடம், “இப்போது கேட்க வேண்டியதைக் கேளுங்கள்” என்றாள் நேரிடையாக.

கிருத்திகா அவளைப் பார்த்து சிரித்தாள். “நீ ரொம்ப புத்திசாலி சுமனா. நீ எப்படி நேரிடையாகக் கேட்டாயோ, அப்படியே நானும் கேட்கிறேன். அன்று பீச்சில் உன் கண்கள் கலங்க காரணம் என்ன? இல்லையென்று மட்டும் சொல்லி விடாதே. உன் கலங்கிய கண்களும், சோர்ந்த முகமும் என்னை இரவு முழுவதும் தூங்க விடாமல் அடித்து விட்டது தெரியுமா?”

“வெரி ஸாரி, ஆனால் எனக்கு எப்படித் தொடங்குவதென்று தெரியவில்லை?”

“நீ யாரையாவது காதலிக்கின்றாயா சுமனா? அதனால் வரும் துன்பம் மட்டும் தான் நம்மை உருக்குலைத்து விடும்”
மௌனமாக அவளை நிமிர்ந்து பார்த்தாள் சுமனா.

“என்னை நம்பு சுமனா, நான் உனக்கு உதவியாக இருப்பேனே தவிர உபத்திரவமாக இருக்க மாட்டேன். எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் உன்னை இப்படிச் சோகச் சித்திரமாகப் பார்ப்தற்கு நிஜமாகவே ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது”.

சுமனா தலையைக் குனிந்து கொண்டாள். கிருத்திகா அவள் முகத்தை நிமிர்த்தினாள். சுமனாவின் கண்களில் கண்ணீர், அதைத் தன் கர்சீப்பால் துடைத்து விட்டாள் கிருத்திகா.

“நான் ஒருவரை விரும்புகிறேன். அதற்கு அம்மாவும், அப்பாவும் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்”

“ஏன்?”

“அவர் ஒரு முஸ்லீம்”

“என்ன வேலை செய்கிறார்?”

“அவர் எப்.ஆர்.சி.எஸ். டாக்டர். எங்கள் மருத்துவமனையில் தான் வேலை செய்கிறார், இஸ்மாயில் என்று பெயர்”

“அவருடன் எவ்வளவு நாட்களாகப் பழக்கம்? அவர் குடும்பப் பின்னணி எல்லாம் தெரியுமா?”

“நான் அவரிடம் தான் முதலில் ஜூனியராக வேலையில் சேர்ந்தேன். இரண்டு வருடங்களாகப் பழக்கம். அவருடைய அப்பா மீன்பிடி படகு வைத்திருக்கிறார், மீன் வியாபாரம். அம்மா வீட்டில் தான் இருக்கிறார். ஒரு அண்ணாவும் ஒரு தங்கையும், இருவருமே டாக்டர்கள் தான். நாகூரில் தங்கையும், திருச்செந்தூரில் அண்ணாவும் மருத்துவராக பணபுரிகிறார்கள். இருவருமே அரசாங்க மருத்துவமனையில் டாக்டர்கள்”

“மீனாட்சி மேடத்திற்குத் தெரியுமா?”

“தெரியும், ஆனால் ஏனோ அக்காவும் அத்திம்பேரும் ரொம்ப அமைதியாக இருக்கிறார்கள். அப்பா, அம்மாவிடம் பேச மறுக்கிறார்கள்” என்றாள்.

“மீனாட்சியும், அவர் கணவரும் பேசினால் உன் பெற்றோர் ஒப்புக் கொள்வார்களா?”

“ஒப்புக் கொள்ளலாம்” என்றாள்.

“சரி, மீனாட்சியிடம் நான் பேசுகிறேன். நீ தைரியமாக இரு“ என்று பேசி விட்டு, அன்றைய மதிய உணவை முடித்து கிளம்பினார்கள். அடுத்த நாள் மீனாட்சியிடம் பேசலாம் என்றால் அவள் எங்கோ வெளியூர் ‘கேம்ப்’ என்றார்கள்.
சனிக்கிழமை தான் கிருத்திகா, மீனாட்சியிடம் பேச முடிந்தது. சுந்தரம் தான் போனை எடுத்தார்.

“என்னம்மா கிருத்திகா, எப்படி இருக்கிறாய்? ஒரு நிமிடம் இரு, உன் தோழி வந்து விட்டாள்… அவளிடம் போனைத் தருகிறேன்” என்றவர் போனை மீனாட்சியிடம் கொடுத்தார்.

“கிருத்திகா… அனாவசியமாக போன் செய்ய மாட்டாயே, என்ன விஷயம்? சபரீஷ் வீட்டில் இல்லையா?”

“மீனாட்சி மேடம், அவர் வீட்டில் என் பக்கத்தில் தான் சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார். போனை அவரிடம் தருகிறேன்” என்றவள் போனை சபரீஷிடம் கொடுத்தாள்.

“ஹலோ மிஸ்டர் அண்ட் மிஸ்ஸ் சுந்தரம்… என் பெண்டாட்டிக்கு சாம்புத் தாத்தா சமையல் ரொம்ப போர் அடித்து விட்டதாம், அதனால் ஞாயிற்றுக்கிழமை மதியம் லஞ்ச் உங்கள் வீட்டில் என்றாள். நீயாச்சு உன் தோழியாச்சு… நீங்களே பேசிக் கொள்ளுங்கள்” என்றான் போனை கிருத்திகாவிடம் கொடுத்து.

சபரீஷிடம், கிருத்திகா ஏற்கெனவே சுமனாவிடம் பேசியதைக் கூறி விட்டிருந்தாள்.

“கிருத்திகா, உனக்கென்ன மசக்கையா? அன்று சுமனாவுடன் சாப்பாடு, நாளை என்னோடு சாப்பிடப் போகிறேன் என்கிறாயே” என்று கிண்டல் செய்தாள் மீனாட்சி.

“ச்சீ என்ன மேடம், அண்ணா எதிரில் இப்படி கலாட்டா செய்கிறீர்களே. சீனியர் நீங்கள் இருக்கும் போது நான் எப்படி?” என்றாள் வெட்கத்துடன்.

“இதிலெல்லாம் சீனியர் ஜுனியர் என்று கிடையாதம்மா. உனக்கு என்ன வேண்டும், அதைச் சொல். சமையல்காரரிடம் சொல்லி சமைத்து வைக்கிறோம்” என்றார் சுந்தரம் கிண்டலாக அவர் பங்கிற்கு.

“இன்று என்னவோ உங்கள் இரண்டு பேருக்கும் நான் தான் கிடைத்தேன் போல் இருக்கிறது. அண்ணா, நான் போனை வைத்து விடுகிறேன்” என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

ஞாயிறு மதியம், கிருத்திகாவும் சபரீஷ்வரும் லஞ்சிற்கு மீனாட்சி வீட்டிற்குப் போனார்கள். சுமனாவிற்காக வக்காலத்து வாங்கி கிட்டத்தட்ட சண்டையே போட்டாள் கிருத்திகா.

“சுந்தரம் அண்ணா, நீங்கள் தான் போலீஸில் இருக்கிறீர்களே. இஸ்மாயில் எப்படிப்பட்டவர் என்று விசாரித்தீர்களா? அவர் குடும்பம் எப்படிப்பட்ட தென்று விசாரித்தீர்களா?”

“எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் முஸ்லிம் என்பதால் மதம் மாற மீனாட்சியின் அம்மாவும், அப்பாவும் ஒத்துக் கொள்ளவில்லை”

“அண்ணா, நான் எந்த மதத்தைச் சேர்ந்தவள் என்று எனக்கே தெரியாது. ஆனால் என்னிடம் நீங்கள் எல்லோரும் எவ்வளவு அன்பாக இருக்கிறீர்கள். சபரீஷ் என் மேல் உயிரே வைத்து இருக்கிறார். ஜாதி மதம் பார்த்துத்தான் என்னோடு பழக வேண்டும் என்றால் என்னோடு யாருமே பழக மாட்டார்கள். அனாதை என்று ஒரு மதம் இருந்தால் அந்த மதத்தை சேர்ந்தவள் நான்”

“அசடு மாதிரி பேசாதேடி. நீ எங்களுக்கு மிகவும் உயர்ந்தவள். எந்த மதத்தில் நீ இருந்தால் என்ன? எங்களுக்கு எங்கள் கிருத்திகா மிக உயர்ந்தவள்” என்ற மீனாட்சி, அவளை அணைத்துக் கொண்டாள்.

“நமக்கு சுமனாவின் சந்தோஷம் முக்கியம். அவள் விரும்பிய வாழ்க்கையைத் தர வேண்டும், நாம் விரும்பிய வாழ்க்கையை அவள் மேல் திணிக்கக் கூடாது” என்றாள் கிருத்திகா.

“உங்கள் இருவரின் ஆதங்கம் எங்களுக்கும் புரிகிறது. உங்களுக்காக நாங்கள் பேசுகின்றோம். சுமனாவின் மேல் நீங்கள் இருவரும் காட்டும் பாசம் பொய்க்கக் கூடாது. கவலைப்படாதீர்கள், இனிமேல் சுமனாவிற்காக நாங்கள் பேசுகிறோம்” என்றனர் சுந்தரமும் மீனாட்சியும்.

ஒரு வாரம் சென்றது. யாரிடமும் எந்த ரியாக்ஷனும் இல்லை, சுமனாவைப் பார்க்கவே முடியவில்லை. மீனாட்சியும் அவள் ஆபீஸில் பயங்கர பிஸியாக இருந்தாள். கிருத்திகாவிற்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது. திடீரென்று ஒரு நாள் காலை பதினோரு மணிக்கு சுமனாவிடமிருந்து போன்.

“கிருத்திகா, இன்று பிற்பகல் அரைநாள் கட்டாயம் எனக்காக உன் ஆபீஸில் விடுமுறை கொடுத்து விட்டு என்னோடு வாருங்கள். நாம் போய் லஞ்ச் சாப்பாட்டோமே, அதே ரெஸ்டாரென்ட்டிற்கு வாருங்கள். சபரீஷ் அண்ணா கூட கட்டாயம் வருவார், மேற்கொண்டு என்னை ஒன்றும் கேட்காதீர்கள்” என்றவள் போனை பட்டென்று வைத்து விட்டாள். அவள் குரலிலிருந்து சந்தோஷமா, கோபமா என்று ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சபரீஷிற்கு போன் செய்து கேட்டாள் கிருத்திகா. அவனோ, “உன்னிடம் என்ன சொன்னாளோ, அதையே தான் என்னிடமும் கூறினாள்” என்றான்.

ஒரு மணி போல் அங்கே போனாள் கிருத்திகா. இவளுக்கு முன்பே சுந்தரம், மீனாட்சி, சுமனா அவள் கூட ஒரு உயரமான ஆண் நின்றிருந்தார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சபரீஷ்வரன் வந்து சேர்ந்தான். சுமனாவோடு இருந்தவர் தான் இஸ்மாயில். சுந்தரம் அவரை கிருத்திகாவிற்கும், சபரீஷற்கும் அறிமுகப்படுத்தினார். கிருத்திகாவின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் சுமனா.

“உன்னால் தான் இத்திருமணத்திற்கு என் பெற்றோர் ஒத்துக் கொண்டார்கள்” என்றாள் மீனாட்சி கிருத்திகாவிடம். இஸ்மாயிலும் பழகுவதற்கு எளிமையாகத்தான் இருந்தார்.

“திருமணம் மட்டும் ஆறு மாதம் கழித்துத் தான் என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார்கள்” என்றார் சுந்தரம்.

“சுமனாவின் அம்மா மிகவும் ஐதீகமாக இருக்கிறார்கள். எங்கள் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம், ஆனால் அவர்களுக்கு என் அம்மாவையும், அக்காவையும் மிகவும் பிடித்து விட்டது. எங்கள் அண்ணியும் பிராமின் தானே, இருந்தாலும் அண்ணி அண்ணாவிடம் பழகும் விதமும், அண்ணா, அண்ணியிடமும் குடும்பத்துடனும் பழகும் விதமும், காட்டும் அக்கறையும் சுமனாவின் பெற்றோருக்கு மிகவும் பிடித்து விட்டது” என்றார் டாக்டர் இஸ்மாயில்.

“ஆனால் கிருத்திகா மட்டும் அன்று முட்டி மோதி என்னிடம் சண்டை போடா விட்டால் என்னால் இவர்களுக்கு இவ்வளவு தீவிரமாக சிபாரிசு செய்திருக்க முடியாது” என்றாள் மீனாட்சி.

“கிருத்திகா சண்டை போட்டார்களா?” என்று சுமனா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நாயம் (சிறுகதை) – ✍ ரகுநாத் சத்யா

    அடையாளம் (சிறுகதை) – ✍ லோகநாதன் மகாலிங்கம்