in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

பகுதி 11  பகுதி 12  பகுதி 13

வளுக்குள் இருந்த மனஅழுத்தத்தை மாற்ற பேச்சை வேறு திக்கில் திருப்பினாள்.

“சபரீஷ்வர், உங்களுக்கு விசிலடித்துப் பாடத் தெரியுமா?”

“ஏனாம்?” என்று அவள் தலையை வருடியபடியே, மென்மையாகக் கேட்டு விட்டு அவள் கண்களில் தன் இதழ்களைப் பொறுத்தினான் சபரீஷ்வர்.

“இன்று ஆபீஸில் மீனாட்சி என்னைப் பார்த்தவுடன் விசிலடித்தாள், அதனால் தான் கேட்டேன்”

”எனக்குக் கூட அப்படித்தான் தோன்றியது பெண்ணே!  இந்தப் பூப்போட்ட சேலையில், ஒற்றைப் பின்னலில், உன் அதிகாரியோடு நீ திரும்பி ஜீப்பில் வரும்போது பார்த்தால் உன்னை அப்படியே அள்ளி அணைத்து  கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்று தோன்றியது. இத்தனைக்கும் நீ பார்ப்பதற்கு அவ்வளவு களைப்பாய் இருந்தாய். உன் சுருண்ட கூந்தல் நெற்றியில் புரள, ஏதோ வானத்துத் தேவதை மண்ணில் வந்தாற்போல்” என்றான்.

அவன் வர்ணிப்பில் அவள் முகம் ரோஜாப்பூவாய் சிவந்தது, மலர்ந்தது.

“போதுமே உங்கள் வர்ணனை. இப்படி வர்ணித்துத் தான் என்னை அடியோடு மாற்றி விட்டீர்கள்” என்றாள் கிருத்திகா.

“நிஜமாகவே பார்ப்பதற்கு அப்போது மிகவும் களைப்பாக இருந்தாய். எனக்கு அந்த நேரத்தில்  உன் சீனியர் ஆபீஸர் அந்தப் பெரியவரிடம் எவ்வளவு கோபம் வந்தது  தெரியுமா?” என்றான் சபரீஷ்வர்.

“ஐயோ அவர் ரொம்ப நல்லவர், குடும்பஸ்தர். உங்களையும் அவருக்கு நன்றாகத் தெரியுமாம். உன் ஒரு மணி நேர பர்மிஷனை நான் வீணாக்க மாட்டேன் என்று நேரத்தோடு என்னைக் கொண்டு வந்து சேர்த்தார்”

சாம்புத் தாத்தாவும், கருத்திருமனும் சாப்பிட்டு முடித்து சபரீஷ்வர் அறையில் ஆளுக்கொரு பாயை விரித்துக் கொண்டு படுத்து விட்டார்கள்.

கிருத்திகாவும் அவனுக்கு ‘குட்நைட்’ சொல்லி விட்டு தனக்கென்று ஒதுக்கப்பட்ட  அறையில் படுத்தாள்.

அடுத்த நாள் காலை சனிக்கிழமை. எல்லோரும்  ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது கிருத்திகா, “புதன்கிழமை காலை பதிவுத் திருமணம் என்று சொல்கிறீர்களே, அப்படியானால் நான் எத்தனை நாள் விடுமுறை எடுக்க வேண்டும்?” என்று கேட்டாள்.

“புதன்கிழமை ஒரு நாள் மட்டும்  விடுமுறை எடுத்தால் போதும். காலையில் பதிவுத் திருமணம். நீ இருந்த ஹோமிற்குப் போய் பாதரின் கையால் மாலை மாற்றிக் கொள்ள வேண்டியது தான். அன்று ஹோமில் எல்லோருடனும் மதிய உணவு. ‘சிம்பிள் பட் கிரேஸ்புல் மேரேஜ்’. வியாழக்கிழமை நீ உன் ஆபீஸ், நான் என் கம்பெனி, ஓ.கே?” என்றான்.

“நம் ஜாதி முறைப்படித் திருமணம்?” என்று கேட்டார் கருத்திருமன்.

“ரிஸப்ஷன் மட்டும் தான் அங்கிள் நம் ஜாதி முறைப்படி. எங்கள் நலம்  விரும்புவோர்கள் நீங்க, சாம்புத் தாத்தா, பாதர், மீனாட்சி மற்றும் மும்தாஜ், வயலட் மட்டும் தான். வயலட்டும், மும்தாஜும் சென்னையில் இல்லாததால் தற்போது நீங்கள் நால்வர் மட்டும் தான்.  நீங்கள் பதிவுத் திருமணத்திற்கும், மோதிரம் மாற்றும் போதும் கூடவே இருக்கப் போகிறீர்கள். என்னை வெறுப்பேற்றுவதற்காகவும்,கிருத்திகாவை அவமதிப்பதற்காகவும், என் அந்தஸ்தை எடை போடுவதற்காகவும் வரும் பெரியப்பா, சித்தப்பா மற்றும் சொந்தக்காரர்கள் குடும்பத்திற்கு ரிஸப்ஷன் போதும்” என்றான்.

உறவினர் மேல் இருக்கும் வெறுப்பு அவன் பேச்சிலேயே தெரிந்தது. திங்களும் செவ்வாயும் அலுவலகத்திற்குப் போய்விட்டு வந்தாள். புதன்கிழமை ஒரு நாள் சபரீஷ்  சொன்னது போல் விடுமுறை எடுத்துக் கொண்டாள். மீனாட்சியும் அன்று விடுமுறை தான்.

புதன்கிழமை விடியற்காலையிலேயே மீனாட்சிப் பட்டுப் புடவைக் கட்டிக் கொண்டு, நகைகளைப் போட்டுக் கொண்டு அவளே கல்யாணப் பெண் போல வந்திருந்தாள். அவளுடன் அவள் தங்கை சுமனாவும் சிம்பிள் டிரஸ்ஸில் வந்திருந்தாள். இருவரும் அவ்வளவு காலையில் கருத்திருமன் வீட்டின் கதவைத் தட்டவும் அவர் ஆச்சர்யப்பட்டார்.

“ஒரு கலெக்டரம்மாவும், டாக்டரம்மாவும் இவ்வளவு அதிகாலையில் நம் வீட்டில். மீனாட்சி வந்த பிறகு தான் கல்யாணமே களை கட்டுகிறது” என்று கலாட்டா செய்தார் கருத்திருமன். இருவருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தார்.

கிருத்திகாவைத் திருமணப் பெண்ணாக மிக அழகாக அலங்கரித்து விட்டார்கள் மீனாட்சியும் சுமனாவும். தங்கநிற ஜரிகை சேலையுடன், ஒளி விடும் வைர நகைகளுடனும் கிருத்திகா பார்ப்பதற்கு தங்கச் சிலை போல் இருந்தாள். அலங்காரம் முடிவதற்குள் சபரீஷ் தன் பென்ஸ் காரை எடுத்துக் கொண்டு கிருத்திகாவையும் மற்றவர்களையும் அழைத்துச் செல்ல வந்து விட்டான்.

கருத்திருமன், இரண்டு பெரிய ரோஜா மாலைகளோடும், தாலிச் சரடுடனும் தன் காரில் சாம்புத் தாத்தாவையும் அழைத்துக் கொண்டு சென்றார். மீனாட்சியும் சுமனாவும் தங்கள் காரை கருத்திருமன் வீட்டில் ‘பார்க்’  செய்து விட்டு கிருத்திகா, சபரீஷுடன் சென்றனர்.

சபரீஷோ பட்டுப் புடவையிலும், நகைகளிலும் தேவதையாக மின்னும், தன் பக்கத்தில் உட்கார்ந்து வரும் கிருத்திகாவைப் பார்த்து பிரமித்து நின்றான்.

“சபரீஷ், ரொம்பப் பார்க்காதே, திருஷ்டி பட்டுவிடப் போகிறது” என்று கிண்டல் செய்தாள் மீனாட்சி.

திருமணப் பதிவு அலுவலகத்தில், திருமணம் நடைபெறும் சரியான நேரத்தில், பார்வதி, தன் கணவன், குழந்தை மற்றும் மாமனார், மாமியாருடன் வந்து சேர்ந்தாள். பாதரும், ஹோமில் உள்ள சிலரும் திருமணத்திற்கு வந்தனர்.

திருமணம் முடிந்த பிறகு சபரீஷ்வர் ஏற்பாடு செய்திருந்தபடி எல்லோரும் ஹோமிற்கு சென்றனர். மும்தாஜால் வர முடியவில்லை என்று வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தாள்.

பாதரிடம் இரண்டு மோதிரங்கள் கொடுத்து ஆசீர்வாதம் பெற்ற பிறகு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். மதிய சாப்பாடும் ஹோமிலேயே எல்லா மக்களோடும் முடிந்தது. வயலெட்டும் கடைசியாக ஹோமில் வந்து கலந்து கொண்டாள்.

அங்கிருந்து கிளம்பும் போது, “உங்கள் இராமாயணத்தில் ஜனக மகாராஜா சீதாப்பிராட்டியை, ஸ்ரீ ராமனிடம் ஒப்புவித்து போல். நான் கிருத்திகாவை உங்களிடம் ஒப்புவிக்கிறேன் சபரீஷ்வர்” என்றார் பாதர்.

“கிருத்திகாவை என் உயிர் போல் காப்பேன். அதில் ஒன்றும் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம் பாதர். உங்கள் அன்பும், ஆசீர்வாதமும் மட்டும் எங்களுக்கு என்றும் வேண்டும் பாதர்” என்று கூறிய சபரீஷ்வர், கிருத்திகாவின் கையைப் பிடித்துக் கொண்டு பாதர் காலில் விழுந்து வணங்கினான்.          

பாதர் அவர்களை ஆசீர்வதித்தார்.

“கிருத்திகா, நீங்கள் தம்பதிகளாகச் சென்று உன்னுடைய இலாகா அமைச்சரிடமும், முதல் அமைச்சரிடமும் ‘ரிசப்ஷன்’ அழைப்பிதழ் கொடுக்க வேண்டும்” என்றார் பாதர்.

“பாதர், இது பதிவுத் திருமணம். உங்கள் ஆசீர்வாதத்தில் மோதிரம் மாற்றிக் கொண்டோம். திருமணத்திற்கு அழைக்காமல், ரிசப்ஷனுக்கு, அவர்களுக்கு எப்படிப் பத்திரிகை கொடுப்பது?” என்றாள் கிருத்திகா பயத்துடன்.

“இதில் பயப்பட என்ன இருக்கிறது?”

“கட்டாயம் நீங்கள் இருவரும் முதலமைச்சருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வைக்க வேண்டும், இது என் வேண்டுகோள். கிருத்திகாவைத் தொட்டிலில் கண்டெடுத்த அன்று முதலமைச்சர் இங்கு வருகை தந்திருந்தார். அதிலிருந்து அவர் எப்போது என்னைப் பார்த்தாலும் ‘தொட்டில் குழந்தை’ எப்படி இருக்கிறது என்று கேட்டு அவளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதை வழக்கமாக் கொண்டு இருந்தார். அதனால் தான் முதல் அமைச்சருக்கு கட்டாயம் அழைப்பிதழ் தரவேண்டும்” என்றார்.

ரிசப்ஷன் பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்தான் சபரீஷ். உறவினர்களுக்கு தபாலில் அழைப்பிதழ் அனுப்பி விட்டான்.   

கிருத்திகா பணிபுரியும் இலாகா அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் மட்டும் அவர்கள் பி.எ. மூலம் நேரில் பார்க்க அனுமதி பெற்று இருவருமாக அழைப்பிதழ் கொடுத்து விட்டு வந்தனர். ‌

ஷீலா, இளங்கோ தவிர மற்ற எல்லா நண்பர்களும், திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர். பெரியப்பாவும், சித்தப்பாவும் வேண்டா வெறுப்பாகத்தான் ரிஸப்ஷனுக்கு வந்தார்கள்.

பியூட்டி பார்லரலிருந்து ஆட்களை வரவழைத்திருந்தாள் மீனாட்சி. அவர்கள் அவள் முகத்தில் என்னென்னவோ தேய்த்து, அவளை மேலும் அழகாக்கியிருந்தார்கள். 

இந்த அலங்காரம் இல்லாமலே கிருத்திகா ரொம்ப அழகு என்று மீனாட்சியோடு வாதிட்டுக் கொண்டிருந்தார்கள் மும்தாஜ், வயலட், சுமனா எல்லோரும்.

கிருத்திகாவிடம் அசிஸ்டென்ட்டாக இருந்த இரண்டு ஜூனியர் ஆடிட்டர்கள், கிருத்திகாவைப் பார்த்து சிரித்தார்கள்.

“பிரவீண், அஷோக் ஏன் சிரிக்கிறீர்கள்?” என்றாள் கிருத்திகா.

“மேடம், உங்களைப் பார்த்தால் நம்ம பாஸ் ‘ப்ப்ப்பா பேய்’ என்று சொல்லி ஓடப் போகிறார். யப்பா என்னா மேக் அப் டா சாமி” என்று சொல்லி விட்டு ஓடி விட்டனர்.

அவர்கள் இருவரையும் கிருத்திகாவிற்கு மிகவும் பிடிக்கும். சிரித்து கொண்டே உள்ளே போய் விட்டாள். தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்து ரிசப்ஷன் ஹாலை எட்டிப் பார்த்தாள்.

முதல் வரிசை முழுவதும் முதலமைச்சர், அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் வரிசையில் அவன் பெரியப்பா, சிற்றப்பா குடும்பமும் மற்ற உறவினர்களும் இருந்தனர். அவர்களுக்கு வலப்புறமாக பாதர், ஹோமின் முக்கிய நிர்வாகிகள், மீனாட்சியின் பெற்றோர், மும்தாஜ், வயலட் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் இருந்தனர்.

கருத்திருமனும், பார்வதியும் போவதும் வருவதுமாக பிஸியாக இருந்தார்கள். குழந்தை சந்தியா தன் அப்பாவின் மடிமேல் உட்கார்ந்து காதுகளில் ஜிமிக்கிகள் ஆட பெரிய மனுஷி போல் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். பட்டுப் பாவாடையும், சட்டையும், ஜிமிக்கியும் அவளுக்கு மிக அழகாக இருந்தது. அவள் தாத்தா, பாட்டியும் பக்கத்தில்  இருந்தனர், சாம்புத் தாத்தா அவள் கூடவே இருந்தார்.

“கிருத்திகா, வெளியே என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேள்விக் கேட்டுக் கொண்டே வம்பிழுக்க வந்தார்கள் மும்தாஜும் வயலெட்டும்.

“இல்லை, கூட்டம்  எப்படி இருக்கிறதென்று பார்த்தேன்” கிருத்திகா.   

“கூட்டத்தைப் பார்த்தாயா, இல்லை சார் எங்கே என்று தேடுகின்றாயா?” என்று கலாட்டா செய்தாள்  மும்தாஜ்.

‘சுமனாவைப் போலவே இவர்கள் இருவரும் சரியான அரட்டைகள் போல் இருக்கிறது’ என்று அங்கே வந்த மீனாட்சி அவர்களைப் பார்த்து நினைத்துக் கொண்டாள்.

மீனாட்சியைப் பார்த்தால் அவர்கள் இருவருக்குமே கொஞ்சம் பயம்.  அவளுடைய ‘பாப்’ செய்யப்பட்ட தலையும், விலையுயர்ந்த ஆடைகளும், அவளுடைய பதவியை அவள் உபயோகித்த விதமும், அவளிடைய அதிகாரமான பேச்சும்  அவர்களைக் கொஞ்சம் விலகியே நிற்க வைத்தன.  அதே சுமனாவோடு மிகவும் ஜாலியாகவும், சந்தோஷமாகவும் பழகினார்கள். ஒன்றாக சினிமாவிற்கெல்லாம் போக ஆரம்பித்து  விட்டார்கள்.

அமைச்சரும், முதலமைச்சரும் வந்தவுடன் சபரீஷ்வராலும், பாதராலும் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.  அவர்களுக்கு வேண்டிய பழரசங்களை சபரீஷ்வரனே எடுத்து வந்து உபசரித்தான்.

முதலமைச்சர் சபரீஷ்வரோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். இருவரையும் முதலமைச்சர் தலைமேல் கை வைத்து ஆசீர்வதித்தார். முதலமைச்சர் நேரில் வந்து அவர்களை ஆசீர்வதிப்பார் என்றே அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. அவர் நேரில் வந்ததும், அவரிடம் ஆசீர்வாதம் வாங்கியதும் கனவோ என்று இருந்தது இருவருக்கும்.

மீனாட்சியின் பெற்றோரும், மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மரியாதைக்காக எழுந்து  சென்று வணங்கினர்.

முதலமைச்சர், ஹோமிற்கும் தனக்கும் உள்ள பிணைப்பைப் பற்றிக் கூறினார். தன் அப்பா அந்த ஹோமிற்கு நிறைய டொனேட் செய்திருப்பதாகவும், அந்த ஹோம் எனக்கும் பிறந்த வீடு தான் என்றும் கூறினார்.

தன் சிறு வயது முதலே பாதரிடம் மிக மதிப்பு வைத்திருப்பதாகவும், அந்த ஹோமில் வளரும் குழந்தைகளை சிறு வயதிலிருந்து தெரியும் என்றும் கூறினார். குழந்தை முதலே கிருத்திகாவின் வளர்ச்சியை  தொலைவில் இருந்து பார்த்து வருவதாகவும், கிருத்திகாவிற்குத் தான் என்னைத் தெரியாதே தவிர எனக்கு அவளின் ஒவ்வொரு அசைவும் நன்றாகத் தெரியும் என்றும் சிரித்துக்கொண்டே கூறினார்.

முதலமைச்சர் என்ற பதவியில்லாமல் ஒரு தந்தையைப் போல் நான் கொடுக்கும் இந்தச் செக்கைக் கிருத்திகா வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

செக்கை வாங்க கிருத்திகா கொஞ்சம் தயக்கம் காட்ட, ‘செக்’ கை வாங்கிக் கொள்ளும்படி லேசாக இடித்து சைகை காட்டினான் சபரீஷ். அப்போதும் கிருத்திகா அமைதியாக இருந்தாள்.

“கிருத்திகா, இந்தப் பணம் அரசாங்கப் பணம் இல்லை. முதலமைச்சர் நிதியிலிருந்தும் கொடுக்கப்பட்டதல்ல, இது என் சொந்தப்பணம். இந்த ஒரு வார்த்தைக்குத் தானே காத்திருந்தாய். நாதரின் வளர்ப்பு அப்படி, நீ என்ன செய்வாய்” என்று சொல்லிச் சிரித்தார் முதலமைச்சர்.

அவர் காலில் விழுந்து, பாதத்தைத் தொட்டு வணங்கி விட்டு செக்கை வாங்கிக் கொண்டாள். இரண்டு இலட்சம் ரூபாய்க்கு ‘செக்’. கிருத்திகாவின் பெரிய கண்கள் இன்னும் அகலமாக விரிந்தன.

“இது உன் அம்மா வீட்டுப் பரிசு என்று நினைத்துக் கொள்” என்றவர் அவள் நெற்றியில் முத்தமிட்டார். “இது உன் நேர்மைக்கும், தைரியத்திற்கும், உழைப்பிற்கும் கொடுத்த பரிசு” என்றவர் அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.

அங்கேயிருந்த எல்லா சீனியர் ஆஃபீஸர்களுக்கும், ஏன் மற்ற அமைச்சர்களுக்கும் கூட முதலமைச்சர் பேச்சும், அவர் கிருத்திகாவிடம் காட்டிய பாசமும் மிகவும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

சபரீஷ்வருக்கே மிக ஆச்சரியமாக இருந்தது. முதலமைச்சர் பிரியமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. தன் கீழ், ஏன் பல படிகள் கீழ் பணிபுரியும் ஒரு அதிகாரியிடம் இவ்வளவு அன்பைக் காட்ட முடியுமா என்று ஆச்சரியப்பட்டான்.

அவன் பெரியப்பாவும் சித்தப்பாவும் கூட பிரமித்து நின்று விட்டார்கள். “நல்லவேளை, நாம் ஒரேயடியாக இந்த சபரீஷ்வரையும், அந்தப் பெண்ணையும் விரோதித்துக் கொள்ளவில்லை. முதலமைச்சர் இந்தப் பெண்ணிடம் எவ்வளவு பிரியமாக இருக்கிறார், நமக்கு வேண்டிய கான்டிராக்ட் எல்லாம் கூட இவர்கள் மூலம் முடிக்கலாம் போல் இருக்கிறதே” என்று இருவரும் பேசிக் கொண்டனர்.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 14) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    மரகத மாற்றம் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி