in

மரகத மாற்றம் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

திரவன் மேற்குத் திசையில் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தான். அஸ்தமனத்திற்கு தோதாக… வெயில் சுள்ளென்று அடித்து தன் இளஞ்சிவப்பு கதிர்களால் அந்தப் பள்ளிக்கு சிகப்பு வர்ணம் பூசிக் கொண்டிருந்தான்.

நகரின் பிரபலமான பள்ளி அது, பள்ளி முடிந்து, மணி அடித்ததும், ரோஜாகூட்டமென வெளியே ஓடிவந்தனர் பிள்ளைகள். இரண்டாம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணனும், சஜனும் வெளியே வந்து ஸ்கூல் பஸ் வர காத்திருந்தனர்.

“ஏன்டா  கிருஷ் டல்லா இருக்க? சரியாகவே பேச மாட்டேங்குற. மிஸ் தனியா கூப்பிட்டு ஏதோ கேட்டாங்களே என்னடா?”

“மிஸ் என்ன பகவத்கீதை ஒப்பிக்கிற காம்படிஷன்ல சேர்றியான்னு கேட்டாங்க.. நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்”.

“என்ன ஆச்சு கிருஷ், ஏதாவது ப்ராப்ளமா? எங்கிட்ட கூட ஷேர் பண்ண மாட்டியா? மிஸ் என்ன சொன்னாங்க? குட் பிரண்ட்ஸ் எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணிப்பாங்க. பிரண்ட்க்கு  ஹெல்ப் தேவைன்னா பண்ணுவாங்கன்னு சொன்னாங்களே, நீ ஏதோ டல்லா இருக்க, என்கிட்ட சொல்லுடா”.

“சஜன், நேத்திக்கு எங்க மம்மியும், டாடியும் ரொம்ப சண்டை போட்டாங்க டா”

“இதுக்கு போயா  கவலைப்படுற, எங்க வீட்டில எப்ப பாரு ரெண்டு பேரும் சண்டை தான்!”

“இது வேற மாதிரி சண்டைடா”.

“புரியலை…  வேற மாதிரின்னா?”

“மம்மியும் டாடியும் பிரியப் போறாங்களாம். என்னமோ சொல்றாங்கடா…  கோர்ட்,  டைவர்ஸ்னு எனக்கு ஒண்ணும் புரியல. ரொம்ப பயமா இருக்கு. மம்மியும் டாடியும் பிரிஞ்சிடுவாங்களா? எனக்கு மம்மியும் வேணும்… டாடியும் வேணும். அம்மாச்சி சொல்றாங்க நான் மம்மி கூடத்தான் வளரணுமாம். ஜட்ஜ் ஆன்ட்டி கேட்கும்போது எனக்கு மம்மி தான் வேணும்னு சொல்லணுமாம்” என்றவன் உடைந்து போய் அழ ஆரம்பித்தான்.

“கிருஷ் ப்ளீஸ் அழாதடா!”

“சஜன்… எனக்கு டாடியை ரொம்ப பிடிக்கும். அவர் ரொம்ப நல்லவர். அவர் இல்லாம என்னால இருக்க முடியாது. ஸ்கூல்ல எல்லாருக்கும் டாடி இருப்பாங்க. எனக்கு மட்டும் இல்லைன்னா எல்லாரும் சிரிப்பாங்க”

சஜன் ஒன்றும் புரியாமல் நின்றான்.

“கிருஷ் நாம வேணா நம்ம கீதா மிஸ் கிட்ட சொல்லி ஹெல்ப் கேட்போமா?”

“வேணான்டா சஜன்! மிஸ் எல்லாம் சின்ன பிள்ளைங்க சண்டையைத்தான் தீர்த்து வைப்பாங்க. பெரியவங்க சண்டையெல்லாம் ஜட்ஜ் ஆன்ட்டி தான் சரி பண்ணுவாங்க. அதனால மிஸ் கிட்ட சொல்ல வேண்டாம்.

அதற்குள் ஸ்கூல் பஸ் வந்து விட அவர்கள் பேச்சு அத்துடன் முடிந்தது.

“கீதா மிஸ் சண்டை போடக்கூடாது… எல்லோரும்  பிரண்ட்ஸ்ஸா இருக்கனும்னு சொல்றாங்களே! அப்படியே சண்டை போட்டாலும், ஹேண்ட் ஷேக் பண்ணி… ஹக் பண்ணி, ‘பிரண்ட்ஸ்’ அப்படின்னு சொல்ல சொல்றாங்களே! அது மாதிரி மம்மியும் டாடியும் சொல்லி சேர்ந்துட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்” ஏக்கத்துடன் நினைத்த கிருஷ், வீடு வர இறங்கினான்.

மறுநாள் காலை பள்ளியில் மலர்விழி மிஸ் கிளாஸ் எடுத்துவிட்டு வெளியே வர, கீதா மிஸ் எதிர்பட்டார், “மேடம் ஒரு விஷயம் உங்ககிட்ட பேசணும், ஃப்ரீயா இருக்கீங்களா?”

“சொல்லுங்க மலர், ப்ரீயா தான் இருக்கேன் கிளாஸ் இல்லை” என்றார் கீதா.

“உங்க கிளாஸ்ல கிருஷ்ணன்னு ஒரு ஸ்டூடண்ட் பத்தின மேட்டர் தான் மேடம். அவன் என்னவோ நார்மலாகவே இல்லை. பாடம் நடத்தும் போது கவனம் இல்லை. இந்த மாதம் டெஸ்டில் கூட புவர் மார்க்ஸ். எது கேட்டாலும் ஆன்சர் பண்ண மாட்டேங்குறான். நீங்க அவன் கிளாஸ் மிஸ்! கொஞ்சம் விசாரிங்க மேடம்! இல்லை அவன் பேரண்ட்ஸ்ஸைத் தான் ஸ்கூலுக்கு வரச் சொல்லனும்”

“ஆமாம் மலர்! நானே அதை கவனித்தேன். அவன் கிட்ட பேசுறேன்!” என்றார் கீதா.

கிருஷ்ஷை நேரடியாக விசாரிக்க வேண்டாமென தீர்மானித்து சஜனை கூப்பிட்டனுப்பினார்.

“சஜன்! கிருஷ் உன்னோட பெஸ்ட் பிரண்ட். அவனுக்கு என்ன பிரச்சனை? ஏன் ரொம்ப டல்லா இருக்கான்? எதுவானாலும் என்கிட்ட தயங்காமல் சொல்லு. நீ சொன்னாதான் நான் அவனுக்கு ஹெல்ப் பண்ண முடியும்”.

“நானும் அப்படித்தான் சொன்னேன். கீதா மிஸ் கிட்ட ஹெல்ப் கேட்போம்ன்னு, அவன்தான் அதுக்கெல்லாம் மிஸ் ஹெல்ப் பண்ண முடியாது. ஜட்ஜ் ஆன்ட்டி தான் ஹெல்ப் பண்ண முடியும்ன்னு  சொல்லிட்டான்”.

“ஜட்ஜ் ஆன்ட்டியா? நீ என்ன சொல்ற சஜன்? எனக்கு புரியலையே !”

“மிஸ் அவங்க அப்பாவும், அம்மாவும் பிரியப் போறாங்களாம். கோர்ட்டில் ஜட்ஜ் ஆன்ட்டி, ‘உனக்கு அம்மா வேணுமா? அப்பா வேணுமா?’ன்னு கேட்பாங்களாம். கிருஷ் எனக்கு ரெண்டு பேரும் வேணும்னு சொல்லி அழுகிறான். ரெண்டு பேரும் இல்லைன்னா நம்ம ஸ்கூல் வாட்ச்மேன் தாத்தா சாமி கிட்ட போனார் இல்ல, அது மாதிரி நானும் சாமி கிட்ட போயிடுவேன்னு சொல்றான் மிஸ்!” என்ற சஜன் அழ ஆரம்பித்தான்.

கீதா அவனை சமாதானபடுத்தினாலும் உள்ளுக்குள் அதிர்ந்து போனார். அந்த பிஞ்சு மனதுக்குள் எவ்வளவு வேதனை.

“சஜன் நீ கிருஷ்கிட்ட ஒன்னும் சொல்ல வேண்டாம். நான் பார்த்துகிறேன். நீ கிளாசுக்குப் போ” என்று அவனை அனுப்பியவர், அந்த ஞாயிற்றுக்கிழமையே கிருஷ் வீட்டுக்கு போவதென்று தீர்மானித்துக் கொண்டு அவன் வீட்டு விலாசத்தையும் ஆபீஸில் வாங்கிக்கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ் வீட்டிற்கு சென்றவர் காலிங் பெல்லை அடித்துவிட்டு காத்திருந்தார். கதவைத் திறந்தவர் நல்ல சிவப்பாக உயரமாக இருக்க, அவர் கிருஷ்ஷின்  அப்பாவாக இருக்கவேண்டும். அப்படியே அதே சாயல். கிருஷ், அப்பாவின் ஜெராக்ஸ்ஸாகத்தான் இருக்கிறான் என்ற நினைப்பு மனதில் ஓடியது.

“எஸ்! யார் வேணும்?”

“ஐயம் கீதலட்சுமி ராகவன்! உங்க சன் கிருஷ்ஷோட கிளாஸ் மிஸ்”.

“ஓ! ஐ’யம் சாரி! நீங்க யாருன்னு தெரியாம வாசல்ல நிக்க வச்சுட்டேன். ப்ளீஸ் கம் இன்சைட்.”

இந்த வரவேற்பு இதமளிக்க, கீதா உள்ளே சென்றார்.

கிருஷ் ரூமுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தான். ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து, அடுத்த நிமிடம் ஓடி வந்தவனை ஆரத் தழுவிக் கொண்டார் கீதா.

“எங்க கீதா மிஸ் டாடி! நான் கூட உங்ககிட்ட சொல்லி இருக்கேனே! எல்லோருக்கும் கீதா மிஸ்ன்னா ரொம்ப பிடிக்கும்” ஆர்வமாய் பேசும் மகனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டான் ராஜேஷ்.

“உங்களப் பத்தி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பான்! நீங்க உங்க ஸ்டூடெண்ட்ஸை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணியிருக்கீங்க.”

“மிஸ் மம்மிகிட்ட சொல்லிட்டு வர்றேன்!” என்று ஓடினான்.

கிருஷ்ஷின் அம்மா வந்தவள், “வாங்க மேடம்! நான் ரம்யா, கிருஷ்ஷின் அம்மா!” என்று தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாள்.

சமையல் அம்மா பாதாம் பாலை கொண்டு வந்து கொடுத்தார். கீதா பாலை அருந்த, ஒரு கனத்த மௌனம் அவர்களிடையே நிலவியது.

“மேடம் நீங்களே வீடு தேடி வந்திருக்கீங்களே, கிருஷ் பற்றி ஏதாவது?” என்று ராஜேஷ் கேட்க

“நோ! நோ! கிருஷ் மாதிரி ஸ்டூடெண்ட் எங்க ஸ்கூலுக்கு பெருமைதான். படிப்பு, விளையாட்டு, எக்ஸ்ட்ரா கரிகுலர் எல்லாத்திலேயும் பஸ்ட். நல்ல பையன்”

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ஷை அருகில் அழைத்து, “கண்ணா! கொஞ்ச நேரம் நீ கீழே போய் விளையாடிகிட்டு இரு! மிஸ் போகும்போது கூப்பிடுகிறேன்!” என்று கூறியதும் கிருஷ் விளையாட கீழே ஓடினான்.

“மிஸ்டர் ராஜேஷ்! மிஸஸ் ரம்யா! நான் இந்த ஸ்கூல்ல 25 வருஷமா ஒர்க் பண்றேன். சீனியர் மோஸ்ட்.  நான் ஜாயின் பண்ணுன போது இருந்த ஸ்டூடண்ட்ஸ்க்கும், இப்ப உள்ள ஸ்டூடண்ட்ஸ்க்கும், நிறைய டிஃபரன்ஸ். இப்ப உள்ள பிள்ளைங்க ரொம்ப சென்சிட்டிவ்.

கிருஷ்ஷை இந்த ரெண்டு வருஷமா பார்த்துகிட்டிருக்கேன். ஒரு பர்பெக்ட் ஸ்டூடண்ட். ஆனா இப்ப மூணு மாசமா அவன்கிட்ட நிறைய சேன்ஞ்ச். மார்க்ஸ் குறைஞ்சு போச்சு. கிளாஸ்லயும் கவனமில்லை. விளையாடவும் போறதில்ல. ரொம்ப சோர்வா இருக்கான். காம்படிஷன்னா முதல்ல கை தூக்கறவன், இப்ப நான் கலந்துக்கல மிஸ்ங்கறான். அவனுக்குள்ள நிறைய குழப்பங்கள்.

“நாங்க என்ன செய்யனும் மேடம்? அவனை கவுன்சிலிங் அழைச்சிட்டு போக வா?” என்றான் ராஜேஷ்.

“மிஸ்டர் ராஜேஷ்! மிஸ்ஸஸ் ரம்யா! உங்க பர்சனல் லைஃப்ல  தலையிடறேன்னு நினைக்காதீங்க! கவுன்சிலிங் அவனைவிட, உங்களுக்குத்தான் தேவை. உங்களுக்குள்ள என்ன மனகசப்புன்னு எனக்கு தெரியாது, அதுக்குள்ள போகவும் நான் விரும்பல. அது உங்க பர்சனல் லைப். ஆனால் அது அந்த குழந்தையை எவ்வளவு தூரம் பாதிச்சிருக்கும்ன்னு உங்களுக்கு புரியுதான்னு  எனக்கு தெரியல.”

“நான் கவனிச்சதில நீங்க ரெண்டு பேருமே அவன்கிட்ட பாசமாத்தான் இருக்கீங்க. அதனாலதான் அவன் உங்க ரெண்டு பேர்ல யாரையுமே இழக்க விரும்பலை. இவ்வளவு உங்க மேல பாசம் வைச்சிருக்கிற உங்க குழந்தைக்காக நீங்க கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? வெளிஉலகத்துல பாருங்க எத்தனை பேர் குழந்தை இல்லைன்னு  ஏங்கறாங்க. குழந்தைகள் இருந்தாலும் கிருஷ் மாதிரி ஒரு புத்திசாலி அன்பான குழந்தை எத்தனை பேருக்கு கிடைக்கும்?”

“நீங்க ரெண்டு பேருமே செல்ப் எம்ப்ளாய்ட். பிரிஞ்சாலும் சிங்கிள் பேரன்டா, குழந்தையை வளர்க்கக் கூடிய பினான்ஷியல் பேக்ரவுண்ட் உள்ளவங்க! ஆனா அந்தக் குழந்தை ஏங்கற தாய்- தந்தை அன்பை நீங்க எவ்வளவு பணம் செலவு பண்ணினாலும் கொடுக்க முடியுமா? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்கின ஒரு உயிருக்கு நீங்க செய்ற துரோகம் இல்லையா?

கொஞ்சம் யோசிச்சு பார்த்தா உங்களுக்கே நீங்க பண்றது தப்புன்னு புரியும். ரெண்டு வருஷம் பழகின நானே, கிருஷ் மேல உள்ள அக்கறையில் முன்பின் தெரியாத உங்ககிட்ட அவனுக்காக பேசிகிட்டிருக்கேன். நீங்க அவனை பெத்து, வளர்த்து, எட்டு வருஷமா மனசுல சுமந்துகிட்டிருக்கீங்க! அவனுடைய மன வருத்தம் உங்களுக்கு உறுத்தலையா?

பிரியறதுல மட்டும் தான் சந்தோஷம் இல்லை, பிள்ளைக்குப் பண்ணுற தியாகமா நெனச்சு நீங்க சேர்ந்து வாழ்ந்தாலும் சந்தோஷம் கிடைக்கும். உங்களுடைய மனக்கசப்புகளை அவனுக்கான தியாகமா மாற்றிப் பாருங்க! அது அந்த பிஞ்சு மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். அவன் வளர்ந்து பெரியவனாகும் போது இந்த சமுதாயத்தில், உயர்ந்த நிலைக்கு வந்து, உங்களுக்கும் பெருமை தேடிக் கொடுப்பான்.

உங்க பர்சனல் லைஃப்ல நான் தலையிடுறது தப்பு. நான் எல்லை மீறி பேசியதா நீங்க நெனச்சா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதுல எனக்கு எந்த வெட்கமும் இல்லை ஏன்னா நான் கிருஷ்ஷை சந்தோஷமா பார்க்க ஆசைப்படுறேன். யோசிச்சு நல்ல முடிவுக்கு வாங்க! நான் வர்றேன். இவ்வளவு நேரம் நான் பேசியதை பொறுமையா கேட்டதற்கு நன்றி!”.

தெருவில் இறங்கி நடந்தார் கீதா! ஒரு மரகத மாற்றத்தை எதிர்நோக்கி! இப்போதெல்லாம் சஜன் சொல்கிறான், கிருஷ் பழைய சந்தோஷத்தோடு பள்ளிக்கு வருவதாக!!!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    இதுவும் தவமே (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர், கோவை