in

இதுவும் தவமே (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர், கோவை

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நுழைந்த மகாலட்சுமி, மருமகள் சொல்லியிருந்த மளிகைப் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து டிராலியில் போட்டு தள்ளிக்கொண்டு வந்தார். பக்கத்தில் காஸ்மெடிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த கண்மணி மகாலட்சுமியைப் பார்த்து ‘மகா மாதிரி இருக்கே’ என நினைத்து முகம் மலர்ந்தவராக அவர் அருகில் வந்தார்.

மகாலட்சுமியின் தோளைத் தட்டி, “மகா நீ எங்கடி இங்க கோயமுத்தூர்க்காரி?” என்றார் சந்தோஷமாக.

திரும்பிப் பார்த்த மகாலட்சுமி “ஏய், கண்மணி எவ்வளவு வருஷமாச்சு உன்னைப் பார்த்து” என பாசத்துடன் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

இருவரும் பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாக ஒரே ஊரில் படித்தவர்கள். கோவையில் இவர்கள் சுற்றாத இடமில்லை. படிப்பு முடிந்ததும் வேலை, திருமணம் என அவரவர் பாதையில் பயணித்தனர்.

மகாலட்சுமிக்கு வேலை திருமணம் என எல்லாம் கோவையிலேயே அமைந்ததால் அவர் அங்கேயே  செட்டிலாகி விட்டார். கண்மணி திருமணத்திற்கு பிறகு சென்னை வந்தவர் சென்னை வாசியானார்.

“என் பையனுக்கு சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு. நானும் ரிட்டையர் ஆயிட்டேன், அதனால  எல்லாம் இங்கே வந்துட்டோம்” என்றார் மகா. 

கண்மணி மகாவின் முகத்தை பார்த்து  “மகா உங்க வீட்டுக்காரர்” என தயங்கியவரிடம்

“ம்.. அவர் தவறிப் போய் இரண்டு  வருஷமாகிடுச்சு” என்றார் மெல்லிய குரலில்.

“கோவையில் எங்க வீட்டை வித்ததுக்கு அப்புறம் நமக்குள் தொடர்பே இல்லாம போயிடுச்சு, ஐ ஆம் ஸாரி” என்றார் கண்மணி சற்று வருத்தமாக. இருவரும் பேசிக் கொண்டே பொருட்களை பில் செய்தனர்.

“ஏன் மகா, உன் பொண்ணு பையன் எல்லாம் எப்படி இருக்காங்க” என்ற கண்மணியிடம்

“எல்லாம் நல்லா இருக்காங்க. வாயேன் என் வீட்டுக்கு, இங்க பக்கத்தில தான், நடந்தே போயிடலாம்” என்றார் மகா.

“ஐயோ இவ்வளவு பொருட்களைத் தூக்கிட்டு நடந்து போறதா” என்ற கண்மணியை

“என் அறிவே ஆட்டோல போலாண்டி” என கலாய்த்து ஸ்டோர் வாசலில் நின்றிருந்த ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி தன் வீட்டுக்கு கண்மணியுடன் வந்தார் மகா. 

மகாவின் வீடு மூன்று படுக்கையறை கொண்ட பெரிய வீடாக இருந்தது. “இது வாடகை வீடுதானே மகா?” என்று வினவினார் கண்மணி. 

“ஆமாண்டி… சொந்தமா வீடு வாங்கத் தான் என் பையன் குமார் வீடு தேடிட்டு இருக்கான், உனக்கு தெரிஞ்சாலும் சொல்லுடி” என்ற மகா கண்மணிக்கு ஆரஞ்ச் ஜுஸ் போட்டு எடுத்து வந்தார்.

“நீ மாறவே இல்லை மகா, பேசிட்டே வேலையும் பார்த்துடற” என்றார் கண்மணி சிரித்தபடி.

மகாவும் சிரித்துக் கொண்டே “இது பழகிப் போச்சுடி” என்றார். 

அப்போது சளசளவென பேசிக்கொண்டே மகாவின் பேரக் குழந்தைகள் வீட்டினுள் நுழைந்தனர். மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியுமாக நான்கு குழந்தைகள் வரவும் கண்மணி திகைத்துப் போய் “ஏண்டி உன் மகனுக்கு நாலு பிள்ளைங்களா?” என ஆச்சரியமாக கேட்டார்.

“அச்சோ, என் மகனுக்கு ஒரு பையனும் ஒரு பெண்ணும், என் மகளுக்கு இரண்டும் ஆம்பள பசங்க” என்றார் மகா.

“அப்போ எல்லாம் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வா இருக்கீங்க?” என அதிர்ச்சியுடன் வினவிய கண்மணியிடம்

“இல்லை இல்லை என் மக ஆபீஸ் முடிஞ்சதும் இங்கு வந்து அவ பசங்களை கூட்டிட்டு அவ வீட்டுக்கு போயிடு வா” என்று கூறினார்  மகா.

தன் தோழியிடம் பேசிக்கொண்டே டியூஷன் க்ளாஸ் முடித்து வந்த பிள்ளைகள் நால்வருக்கும் ஸ்நாக்ஸ், பால் என கலந்து கொடுத்தார் மகா.

கண்மணியோ… இந்த வயதிலும் தன் சிநேகிதி அலுக்காமல் வேலை செய்வதைக் பார்த்து வியந்தபடி, “சரி மகா நான் கிளம்பறேன். உன் போன் நம்பர் கொடுடி, என் வீடும் இங்கிருந்து இரண்டு வீதி தான்  தள்ளியிருக்கு. நாம ஃபீரியா இருக்கும் போது மீட் பண்ணலாம்” என்று கூறி போன் நம்பரை பெற்று கொண்டார். 

கண்மணி விடைபெறும் போது வீட்டினுள் நுழைந்தாள் மகாவின் மருமகள் சுதா. மகா தன் மருமகளை கண்மணியிடம் அறிமுகப் படுத்தினார்.

சுதா கண்மணிக்கு வணக்கம் கூறியவள் மகாவிடம் “அத்தை ஸ்டோர் போய் திங்ஸ்  எல்லாம் வாங்கிட்டு வந்துட்டீங்களா?” என்று வினவினாள்.

“எல்லாம் வாங்கியாச்சுடாம்மா, சரியா இருக்கா பாரு” என்றார் மகா.

அட்டைப் பெட்டியில் இருந்த பொருட்களை சரி பார்த்த சுதா “என்ன அத்தை நீங்க டீ தூள்,  சோப்பெல்லாம் பழசை வாங்கிட்டு வந்துருக்கீங்க, நான் ஒரு பிராண்ட் சொன்னா நீங்க வேற ஒண்ணு வாங்கிட்டு வந்துருக்கீங்க,  இப்ப எல்லாம் மாத்தணும், ஒரு வேலைக்கு இரு வேலை போங்க” என்றாள் சற்று சலித்தபடி.

மகாவின் மருமகள் பேசியதைக் கேட்டு எரிச்சலுற்ற கண்மணி “நான் வரேன் மகா” என்று கூறிவிட்டு வீட்டுக்கு கிளம்பினார். 

அவர் மனம் கோபத்தில் கொந்தளித்தது.

“என்ன இவ,  இப்படி ஏச்சும் பேச்சும் கேட்டுட்டு இருக்காளே, இது என்ன வாழ்க்கை, ம்… இந்த காலத்து பொண்ணுங்க  எல்லாம் நல்லா தெளிவாத்தான் இருக்காங்க” என்று பொருமினார்.

வீட்டினுள் வந்தவர் தன் கணவர் ரவிச்சந்தரிடம் மகாவைப் பற்றி புலம்பினார். “என்ன இவ இந்த வயசிலேயும் எல்லாருக்கும் சேவகம் பண்ணிட்டு, எனக்கு பிடிக்கவேயில்லைங்க, இத்தனைக்கும் இவ பென்ஷனர் வேற, காசு பணத்துக்கு குறைச்சல் இல்லை, ஏன்தான் இப்படி இருக்காளோ?” என்று திரும்பவும் எரிச்சலானார். 

கண்மணி புலம்பியதைக் கேட்ட ரவிச்சந்தர் சிரித்தபடி “நீ ஏன் இப்படி சிந்திக்கற,  உன் தோழி எல்லாருக்கும் உதவிகரமான ஒரு வாழ்க்கை வாழறதா நினைச்சுக்கோயேன்” என்றார்.

“அப்போ அவளுக்கான வாழ்க்கை கரைந்தே  போயிடாதா, கொஞ்சம் பசங்களை விட்டு விலகியிருந்தா அவங்களுக்கு இவ அருமை தெரியும் இல்ல” என்று வினவிய கண்மணியிடம்

“இது அவங்கவங்க மனசை பொறுத்ததும்மா. இதுல நாம டிபேட் பண்ண முடியாது” என முடித்துக் கொண்டார் ரவிச்சந்தர். 

மறுநாள் காலை மகாவிடமிருந்து கண்மனிக்கு போன் வந்தது.  “ஏய், கண்மணி ஃபீரீயா இருக்கயா நான் பக்கத்தில கோவிலுக்கு வந்திருக்கேன். உன்னால இப்ப வர முடியுமா?” என்று கேட்டார் மகா.

“ஓ, வரேனே” என போனை வைத்தார் கண்மணி

கோவிலின் வெளிப் பிரகாரத்தில் அமர்ந்திருந்த மகா கண்மணியை ஒரு புன்சிரிப்புடன் வரவேற்றார்.

கண்மணியோ மகாவிடம் “ஏன் மகா நேற்று உன் மருமக உன்னை அந்தப் பேச்சு பேசறா நீ எதுவும் பேசாம சிரிச்சுட்டு இருந்தயே” என படபடவென்று பொரிந்தார்.

மகாவோ “ஏன் கண்மணி உன் பொண்ணு உன்னை இப்படி கேட்டா நீ கோவிச்சுக்குவையா, அவ என்கிட்ட உரிமையோட பேசறா, இதைப் போய் பெரிசு படுத்துருயே” என்றார் புன்னகையுடன்.

“மகா நீ ஒண்ணு புரிஞ்சுக்கோடி, எப்போதும் தூரத்துப் பச்சை தான் கண்ணுக்கு குளிர்ச்சி. எவ்வளவு நாள் நீ உன் பசங்களை தாங்குவ, அவங்க வாழ்க்கையை அவங்க பொறுப்போடு வாழட்டும். நீ கூடவே இருந்தா எல்லாம் அம்மா பார்த்துக்குவாங்கன்னு விட்டேத்தியா இருப்பாங்க பிள்ளைங்க. அவங்க செய்யற தவறுகளையும் நம்மால சகிச்சுக்கவே முடியாது. தேவையில்லாம முட்டிக்கணும். இவ்வளவு நாள் உன் குடும்பத்துக்காக நீ உழைச்சாச்சு. இனிமேலாவது உனக்கு பிடிச்சதை உன் இஷ்டம் போல செய்யேன். நீ உன் பிள்ளைகளைக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடு” என்று பேசிக்கொண்டே போன கண்மணியிடம்

“அடடா நீ தவறாகப் புரிஞ்சுட்டு இருக்க. இது பரஸ்பர அன்புடி இங்கே யாரும் யாரையும் தாங்கலை” என்றார் மகா இயல்பாக.

“போடி இவளே, உன் வாழ்க்கையை எப்படி வாழணும்ன்னு நீதான் தீர்மானிக்கணும். பெண்களை முதல்ல அப்பா அப்பறம் புருஷன் கடைசில பையன்னு ஆதி காலத்திலேந்து அடக்கி வைச்சுட்டாங்க அதுல நீ ஊறி போயிருக்க அதான், ஆனா நானெல்லாம் அப்படியில்லம்மா, இங்கே பக்கத்தில தான் இருக்காங்க என் பையன் பொண்ணு எல்லாம். ஆனா நாங்க தனியாத்தான் இருக்கோம். அப்பப்ப நாங்க மீட் பண்ணுவோம் ஜாலியா பொழுது போக்குவோம். சேர்ந்து வாழாததால எங்களுக்குள்ள அன்பு இல்லைன்னு ஆகுமா. அதனால நீ பக்கத்திலேயே ஒரு சின்ன ஃப்ளாட் பார்த்து குடி போயிக்கோ, உனக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிப் படி, பாட்டுக் கேளு, உன் விருப்பம் போல வெளியில போயிட்டு வா ஹேப்பியா இரு, அவ்வப்போது உன் பசங்க வீட்டுக்கும் விசிட் பண்ணு. என் ஐடியா எப்படி இருக்கு” என்று கேட்டார் கண்மணி பெருமையுடன். 

மகா கண்மணியை பார்த்து சிரித்தபடி “ஏய், நான் இப்போ சந்தோஷமாக இல்லைன்னு நீ நினைக்கிறயா, மக்கு நான் ரொம்ப என்கேஜ்டா இருக்கேன். என் பேரப் பிள்ளைகளோட இருக்கும் போது நான் இளமையா ஃபீல் பண்றேன். அஃப்கோர்ஸ் நீ சொல்றது மாதிரி சேர்ந்து இருந்தா சில நேரங்களில் முட்டிக்கற மாதிரி வரும். அது எப்போன்னா நாம ரொம்ப அவங்க விஷயத்தில் மூக்கை நுழைத்தால் தான். ஆனா நான் வீட்டில் ஒரு பார்வையாளனாத் தான் இருக்கேன். ஏதாவது ஒரு செயல் பெரிய தவறாயிடும்ன்னு தெரிந்தால் என்னுடைய ஆலோசனையைச் சொல்வேன். அதுபடி தான் செய்யணும்னு அவங்களை நிர்ப்பந்திக்கவும் மாட்டேன். இது ஒரு புரிதல் தான். மேலும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது கடைக்குப் போறதுன்னு சின்ன சின்ன செயல்களில் தான் நம்மோட அன்பு அவங்களுக்கு புரியும் கண்மணி. சேர்ந்து வாழும் போது தான் எதிர்பார்ப்பு  இல்லாத  அந்த அன்பு வெளிப்படும். அது வெளியில் இருந்து பார்க்கறவங்களுக்கு தெரியாது” என்று பேசிக் கொண்டிருந்த மகா, திடீரென நெஞ்சில் கை வைத்து, “எனக்கு எப்படியோ இருக்குது” என்று கூறி மயங்கிச் சரிந்தார்.

கண்மணி பதட்டத்துடன் “மகா, மகா” என அவரை எழுப்ப முயற்சித்தார். அதற்குள் கோவிலில் கூட்டம் கூடி விட்டது. 

இரண்டு நாட்கள் மகா மருத்துவ கண்காணிப்பில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என டாக்டர் கூறியதால் மருத்துவமனையில் இருந்தார் மகா.

மகாவை மருத்துவ மனையில் அட்மிட் செய்த அரை மணிநேரத்தில் மகாவின் மொத்த குடும்பமும் அங்கு ஆஜராகியிருந்தது. அனைவரும் பதறிப் போயிருந்தனர். தங்கள் நன்றியை கண்மணியிடம் கண்ணீரால் வெளிப்படுத்தினர்.

அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் மகாவின் பக்கத்தில் இருந்து அவரை கவனித்துக் கொண்டனர். 

கண்மணி, அவரையும் அறியாமல் கடந்த வருடம் தனது கருப்பை நீக்க மேஜர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவ மனையில் இருந்த நாட்களை நினைத்துப் பார்த்தார். மகன் கம்பெனியில் ஆடிட்டிங் நடக்கின்றது என்றும் மகள் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் ஒர்க் அதனால் லீவு எடுக்க முடியாது என இரண்டு நாட்கள் கழித்தே மருத்துவ மனைக்கு வந்தனர். 

“அதான் அப்பா இருக்கார் இல்லம்மா உங்க கூட”  என்றனர்.

இந்த நிலையில் அவர் மருமகளையும், மருமகனையும் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் இங்கு மகாவின் சம்மந்தி வீட்டார் கூட மருத்துவ மனைக்கு வந்து பேரப்பிள்ளைகளை நாங்க பார்த்துக்கறோம் நீங்க கவலைப்படாதீங்க என மகாவிற்கு ஆறுதல் கூறிச் சென்றனர். 

கண்மணிக்கு ஒன்று நன்றாக புரிந்தது. மகா எதிர்பார்ப்பில்லாத அன்பை தன் குடும்ப உறுப்பினர்களிடம் தனது பாசமான செயல்களால் வெளிப்படுத்தியுள்ளார். இதுவே கூட்டு குடும்ப வாழ்க்கையின் மகத்துவம்.

மகாவின் வாழ்க்கையும் ஒரு தவம் போன்றதுதான் என நினைத்த கண்மணியின் கண்கள் நீரைப் பெருக்கியது. 

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மரகத மாற்றம் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

    உன் வாழ்க்கை உன் கையில் (நாவல் – பகுதி 9) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை