ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இதுவரை:
தன் மனதிற்கினிய தாமரையைத் தேடும் பணியில், சூர்யாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவளது கடிதம் கைக்குக் கிடைக்கிறது. அதைத் தன் ஆருயிர் நண்பனான காவல்துறையில் இருக்கும் விஜயிடம் காட்டி ஆலோசனை கேட்கிறான். விஜயின் மனைவி ரம்யா அடிபட்டுக் கிடந்த இடத்தில் கிடைத்த சின்னத் துண்டுத் துணியில் இருந்த கையெழுத்தும், தாமரை சூரியாவிற்கு எழுதிய கடிதத்தில் இருக்கும் கையெழுத்தும் ஒன்று போல் இருப்பதை வைத்து, தாமரை தான் ரம்யாவிடம் உதவி கேட்டு அந்தச் சின்னத் துணியைக் கொடுத்திருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விஜய் ஆலோசிக்கிறான்.
தொழிலதிபர் பரந்தாமனின் கார் டிரைவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதைக் கண்டுபிடிக்கும் பணியிலும் காவல் துறையினர் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இனி:
பச்சைப் பசேலென்று பட்டாடை போர்த்தியது போல, பரந்து விரிந்திருந்தது வால்பாறை. ஒரு டெம்போ ட்ராவலர் பயணிகளை ஏற்றிக் கொண்டு, ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் மூச்சிறைக்க ஏறிக் கொண்டிருந்தது.
பதினோராவது கொண்டை ஊசி வளைவில், சற்று இளைப்பாற ஓரமாக நின்றது. உள்ளே இருந்த பயணிகள் ஆர்வமுடன் இறங்கி, ஒருபுறம் நெடுநெடுவென்று இருந்த மலையையும், இன்னொருபுறம் அதளபாதாளமாக இருந்த பச்சைப் பசுமையையும் கண்களை அகல விரித்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்படி ரசித்துக் கொண்டிருந்தவர்களில் ப்ரேமும் ஒருவன். கொண்டை ஊசி வளைவுகளில் ஏற ஆரம்பித்த போதே ப்ரேமுக்கு மனதில் கொஞ்சம் தைரியம் வந்து விட்டது.
சென்னையில் இருந்து கோவை வந்து சேரும் வரை உயிரைக் கையில் பிடித்தபடி, பலவித கற்பனை பயத்துடன் பயணித்தான் ப்ரேம். யாரிடமும் பேசக் கூட அவனுக்கு பயமாக இருந்தது. ரயிலில் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை.
எப்படியாவது வால்பாறைக்குப் போய் பரந்தாமனின் எஸ்டேட்டில் ஒளிந்து கொள்ள வேண்டியது தான். அதற்கப்புறம், யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு குருட்டு தைரியத்தில், கோவையிலிருந்து வால்பாறை செல்லும் ஒரு டெம்போ ட்ராவலரில் ஏறி, தன் பயணத்தைத் துவங்கி இருந்தான்.
பதினோராவது கொண்டை ஊசி வளைவில் வேன் நின்றதும், இறங்கி எதிரே தெரிந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்த போது, அவன் மனதில் இருந்த பயம் எல்லாம் காணாமல் போனது. வேனிலிருந்து இறங்கியவர்கள் ஆளாளுக்குக் கையில் வைத்திருந்த மொபைலில் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார்கள்.
ப்ரேமும், தன் மொபைலில், பசுமைப் பின்னணியில் தன்னை செல்ஃபி எடுத்துக் கொண்டான். சுற்றிச் சுற்றி வேறு வேறு கோணங்களில் செல்ஃபி எடுத்துக் கொண்ட ப்ரேம், ஒரு ஓரமாக ஒரு திண்டில் உட்கார்ந்து, எடுத்த செல்ஃபியைப் பார்த்தான்.
எல்லாவற்றையும் அவசரகதியில் பார்த்தவன், மீண்டும் அவற்றைப் பார்த்த போது, மனதில் இனம் புரியாத பயம் தொற்றிக் கொண்டது.
ஒவ்வொரு ஃபோட்டோவிலும் அவனுக்குப் பின்னால் யாரோ நிற்கிறார்கள். யார் என்று தெரியவில்லை. தெளிவான புகைப்படமாக இல்லை. ஆனால் ஏதோ புகைமூட்டம் போல ஒரு உருவம். இப்போது அவனது இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது.
அவன் நின்று ஃபோட்டோ எடுத்த இடத்திற்கு மீண்டும் போய் சுற்றுமுற்றும் பார்த்தான். நிறைய பேர் அங்கிருந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டு தான் இருந்தார்கள். அவர்கள் யாரும் அதுபோல எந்த பயஉணர்வையும் வெளிப்படுத்தவில்லை. இப்போது பயப்பந்து அவன் வயிற்றிலிருந்து உருண்டு, கண்கள் வழியாக அவன் பயத்தை வெளிப்படுத்தியது.
படபடக்கும் இதயத்துடன் மீண்டும் அதே இடத்தில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டான். திகிலுடன் ஃபோட்டைவை zoom செய்து பார்த்தவன் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து போனது.
அவன் பின்னால் ஒரு உருவம் இருந்தது. அதன் கண்கள் மட்டும் இவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கண்களையே ப்ரேம் சற்று நேரம் பார்த்ததில், அவனது கால்கள் அவனையும் அறியாமல் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, பாதையின் ஓரத்திற்குப் போய் நின்றது.
கண்ணெதிரே கிடுகிடு பாதாளம் அவனைக் கை நீட்டி அழைப்பது போல் தோன்றியது. அவனுடன் வேனில் வந்தவர்கள் இப்போது அநேகமாக அனைவரும் வேனுக்குத் திரும்பி இருந்தார்கள். ப்ரேம் அந்தக் கூட்டத்தில் இல்லை என்பதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக, ப்ரேமின் கால்கள் அவன் விருப்பத்தையும் மீறி விளிம்பிற்குச் சென்று அப்படியே காற்றில் பாய்ந்தது. பயம் அவன் கண்கள் முழுக்க பரவிக் கிடந்தது. அவனது செயல்கள் எதுவுமே இப்போது அவன் கட்டுப்பாட்டில் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தது.
கீழே போகப்போக, பேரிரைச்சலுடன், “உன் வாழ்க்கை என் கைலடா…” என்ற குரல் காற்றில் கலந்து அவன் காதுகளில் எதிரொலித்தது. அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போய், நடப்பதை உணர்ந்து கொள்ளும் முன், பாதாளத்தில் விழுந்து உலகை விட்டுப் போயிருந்தான் ப்ரேம்.
இன்ஸ்பெக்டர் விஜய், சென்னையில் காவல்துறையில் இருக்கும் தன் நெருங்கிய நண்பனான வினோத்திற்கு ஃபோன் செய்து, தன் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த வேண்டினான். தாமரையின் அப்பா யார் என்பது பற்றிய தகவல் தெரியாத போது எப்படி விசாரிப்பது என்று வினோத் கேட்க…
“இல்ல வினோத், டிபார்ட்மெண்ட்ல இருந்து ரகசியமா தாமரை படிக்கற காலேஜ்ல அவ ஃபேமிலி டீடைல்ஸ் கலெக்ட் பண்ணச் சொல்லியிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு அந்த டீடெயில்ஸ் கிடைச்சுடும். அது கிடைச்சதும் நான் உனக்கு மெசேஜ் பண்றேன். அதை வச்சு நீ விசாரிச்சு எனக்கு சொல்லு,” என்றான் விஜய்.
வினோத்தும் அதற்கு ஒத்துக் கொள்ள, அவனிடமிருந்து என்ன பதில் வரும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் இருந்தான் விஜய். அன்று இரவே வினோத்திடமிருந்து ஃபோன் வந்தது.
“விஜய், நீ கொடுத்த தகவலை வச்சு விசாரிச்சேன். தாமரையோட அப்பா பேரு பரந்தாமன். சென்னைல பிக் ஷாட். பெரிய பிசினஸ் மேன். பணம் கணக்கு வழக்கில்லாம புரளுது. அது எல்லாத்தையும் விட நம்ம டிபார்ட்மெண்ட்லயும், அரசியல்லயும் அவனுக்கு பயங்கரமான சப்போர்ட் இருக்கு. நிறைய பேரைக் கைக்குள்ள போட்டு வச்சிருக்கான்.”
“சமீபகாலமா…. அதாவது கிட்டத்தட்ட ரெண்டு, மூணு வாரத்துக்குள்ள அவன்கிட்ட வேலை பார்த்த நாலு டிரைவர்கள்ல மூணு பேர் மர்மமான முறைல இறந்து போயிருக்காங்க. போலீஸ் மண்டையை உடைச்சுட்டிருக்காங்க. கொலையா, தற்கொலையான்னு எதுமே கண்டுபிடிக்க முடியல.
காரணம் அவங்க உடம்புல ஒரு சின்ன காயமோ, ரத்தக் கறையோ எதுவுமில்லை. பரந்தாமனும் இதைப் பத்தி எதுவுமே தெரியாத மாதிரி, பிடிகொடுக்காமத் தான் பேசிட்டு இருக்கான். அப்படியே அவன் மேல சந்தேகம் வந்தாலும், ஈஸியா அதிலிருந்து தப்பிச்சுடுவான் பரந்தாமன்.”
“இதுதான் நான் விசாரிச்ச வரைக்கும் எனக்குக் கிடைச்ச தகவல். அவங்க குடும்பத்தைப் பத்தி ஒருத்தருமே வெளில விட மாட்டேங்கறாங்க. ரொம்ப நம்பிக்கையான ஒரு சிலர்கிட்ட கேட்டதுல, பரந்தாமனுக்கு ஒரே ஒரு பொண்ணு. அந்தப் பொண்ணு வெளியூர்ல படிச்சிட்டு இருக்கா. பரந்தாமனோட வைஃப் அவ்வளவா வீட்டை விட்டு வெளியே வந்தது கிடையாது.
அப்புறம் அந்த அம்மா, தாமரையோட சொந்த அம்மா கிடையாது…. சித்தி. அந்த பங்களால உள்ளே என்ன நடக்குதுன்னு வெளில யாருக்குமே தெரியாது. அங்க வேலை பார்க்கற யாருமே எதுவுமே வெளில சொல்ல மாட்டேங்கறாங்க. ரொம்ப மர்மமான ஆள் தான் போல அந்தப் பரந்தாமன். இப்போதைக்குக் கிடைச்ச தகவல்கள் இது. மேற்கொண்டு நான் தனிப்பட்ட முறைல ஏதாவது தகவல் கிடைச்சா விசாரிச்சுட்டு உனக்குத் தெரியப்படுத்தறேன்.”
“சரி வினோத், தேங்க்ஸ் ஃபார் யுர் இன்பர்மேஷன். குட் நைட்.”
புலிவாலைப் பிடித்த கதையாக இருக்கிறதே என்று நினைத்துக் கலங்கினான் விஜய். ரம்யா எப்போது கண் விழிப்பாள் என்ற காத்திருப்பும், தாமரைக்கு என்ன ஆனது என்ற கவலையும் ஒன்று சேர்ந்து அழுத்த, விஜயும், சூர்யாவும் அவரவர் வீட்டில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
(தொடரும் – சனி தோறும்)
GIPHY App Key not set. Please check settings