in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 11) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

நீ எனதின்னுயிர் ❤ (பகுதி 11)

மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

ரண்டு மாதங்கள் ஓடி விட்டன. ஐ. ஏ. எஸ். பிரிலிமினரி பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தன. தமிழ் நாட்டில் தேர்ச்சி பெற்றவர்களில் மூன்றாவது இடத்தில் வந்திருந்தாள். அன்று ஆபீஸில் கருத்திருமனும், சபரீஷ்வரனும் ஒரே கலாட்டா செய்து ஒரு சிறிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள்.

“மெயின் எக்ஸாம், இன்டர்வியூ, டிரெயினிங்  எல்லாம் முடிய இரண்டு ஆண்டுகள் முடிந்து விடும் இல்லையா கிருத்திகா?” என்று கேட்டான் சபரீஷ்.

“ஆமாம்; அதன் பிறகு ப்ரபேஷனரி பீரியட்  ஒரு ஆறுமாதம் என்று ஏறக்குறைய மொத்தமாக மூன்று வருடங்கள் முடிந்த பிறகு தான் ரெகுலர் போஸ்டிங்க்ஸோடு வெளியே வரமுடியும்  என்று நினைக்கிறேன்”

மும்தாஜும், வயலட்டும் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். ‘எங்கள் ப்ரண்ட்’ ஒரு கலெக்டர் என்று கர்வத்துடன் சொல்லிக் கொள்வோம். “நாங்கள் கூட அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தான் உன்னைப் பார்க்க முடியுமா?” என்று கலாட்டா செய்து சிரித்தார்கள்.

கிருத்திகாவிடம் அசிஸ்டென்ட்டாக இருந்த இரண்டு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள், கிருத்திகாவிடம் வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

ஒருநாள் மும்தாஜ், பெற்றோர்கள் அவளுக்குத் திருமணம் முடிக்க விரும்புகிறார்கள் என்று மெதுவாக ராகம் இழுத்தாள்.

வயலட்  அவளைப் பிடித்துக்கொண்டாள். பிறகு தான் மும்தாஜ் அவள் ஊருக்கு போய் வந்த போது, அவர்கள் உறவினர், தங்கள் மகனுக்கு அவளை மணமுடிக்க ஆசைப்பட்டனர் என்ற விவரத்தை மிகுந்த வெட்கத்துடன் வெளியிட்டாள்.

“மாப்பிள்ளை பேர் என்னடி?” வயலட்.

“அவர் பேர் இக்பால். போட்டோ கூட என்னிடம் கொடுத்திருக்கிறார்கள்”

“திருட்டுக் கழுதை, இன்ஸ்டால்மென்டில் விஷயம் சொல்கிறாள் பார்” என்றாள் கிருத்திகா பலமாக‌ சிரித்தபடி.

“போட்டோவைக் காட்டேண்டி. அதை ஏன் பத்திரமாக வைத்திருக்கிறாய்?” வயலட் அவளை லேசாக இடித்து.

“இருடி காட்டுகிறேன். இந்த ஹேண்ட் பேகில் ‌தான் இருக்கிறது” என்ற மும்தாஜ், இக்பாலின் ஃபோட்டோவை, கிருத்திகாவிடமும், வயலட்டிடமும் காட்டினாள்.

மும்தாஜின் திருமண ஏற்பாட்டிற்காக, அவள் தந்தை அடிக்கடி சென்னை வரவேண்டி இருந்தது. சென்னை வரும் போது அவளை அலுவலகத்தில் பார்த்து, மகளிடம் கொடுக்க வேண்டிய பலகாரங்களைக் கொடுத்து விட்டுப் போவார்.

அவர் சபரீஷ்வரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வயலட்டிடமும், கிருத்திகாவிடமும் நிறைய நேரம் அரட்டை அடிப்பார்.

“நீங்கள் இருவரும் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே வந்து விட வேண்டும்” என்றார்.

“எங்கேடி வேலை செய்கிறார் ?” என்று கேட்டாள் வயலட் .

மும்தாஜின் அப்பா “மாப்பிள்ளை கூட இஞ்ஜினீயர் தானம்மா, பஹரைனில் வேலை செய்கிறார். எண்ணெய் கிணறுகளில் தான் வேலை. பையன் ரொம்ப நல்லவன், அவன் அம்மாவும் அப்பாவும் பல வருடங்களாகப் பழக்கம்.  ரொம்ப நல்லவர்கள்” என்றார்.

“அப்படியானால் திருமணத்திற்குப் பிறகு மும்தாஜ் எங்களையெல்லாம் விட்டு பஹ்ரைனிக்குப் போய் விடுவாள் இல்லையா?” கிருத்திகா.

“கட்டாயம்” என்றார் மும்தாஜின் அப்பா. சென்னையில் ஒரு ஹோட்டலில் நிச்சயதார்த்தம் வைத்துத் திருமணத் தேதி முடிவு செய்து விட்டார்கள்.

திருமண நிச்சயம் ஆனவுடன் மும்தாஜை ராஜிநாமா செய்ய வைத்து அவளைக் கையோடு  ஊருக்கு அழைத்துச் சென்று விட்டனர் அவள் பெற்றோர்.

“திருமணத்திற்கு நான் அழைப்பிதழ் அனுப்புவேன். கட்டாயம் அவர் வேண்டும்” என்று கூறி பிரியாவிடைப் பெற்றாள் மும்தாஜ்.

மும்தாஜ் கிளம்பிய சில நாட்களுக்கெல்லாம் மெயின் எக்ஸாமிற்கு தயார் செய்ய வேண்டும் என்று கிருத்திகாவும் வேலையை ராஜிநாமா செய்தாள்.

“மும்தாஜ் தான் இல்லையே! இனிமேல் அங்கே தனியாக இருக்க வேண்டாம். என் வீட்டிலோ அல்லது கருத்திருமன் அங்கிள் வீட்டிலோ இருக்கலாமில்லையா?” எனக் கேட்டான் சபஷ்வரன்.

“இல்லை; நான் ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளுகிறேன். இங்கு எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. மணி அடித்தால் சோறு. நான் பாட்டிற்கு படிக்க வசதியாக இருக்கும்” என்றாள் கிருத்திகா.

ஒருவழியாக மெயின் எக்ஸாமும் முடிந்தது. கருத்திருமன் வீட்டில் இருந்து கொண்டு மீண்டும் சபரீஷின் அலுவலகம் வந்து தற்காலிக வேலையில் சேர்ந்தாள். ஏதேதோ காரணங்களால் ரிசல்ட் தள்ளிப் போய்க் கடைசியில் அந்த நாளும் வந்தது.

கிருத்திகா கம்ப்யூட்டரில் உட்கார்ந்து மௌஸை உருட்டிக் கொண்டு இருந்தாள். தேர்வு முடிவுகள் ‘அப்டேட்’ ஆகி  வந்து கொண்டு இருந்தது. வயலட்டும், முன்பு கிருத்திகாவிடம் ஜூனியர்களாக இருந்த இரண்டு ஆடிட்டர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர். சபரீஷ் தன்னுடைய மடிக்கணினியில் அதே ரிசல்ட்டைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

கிருத்திகா, பன்னிரண்டாவது ராங்க்கில் ஆல் இண்டியா லெவலில் தேர்ச்சி பெற்றிருந்தாள். அதைப் பார்த்தவுடன் சபரீஷ் எழுந்து வந்து கை குலுக்கினான். எல்லோரும் வாழ்த்துப் சொல்லிவிட்டு அவன் அறையில் இருந்து வெளியேறினர்.

கருத்திருமன், தன் மகிழ்ச்சியையும், வாழ்த்தையும்  வெளியிட்டு விட்டு, “கிருத்திகா, நீயும் சபரீஷ்வரும் போய் பாதரிடத்தில் நேரில் விஷயத்தை சொல்லி விட்டு வாருங்கள். இந்த வெற்றி கிருத்திகாவின் வெற்றி மட்டும் அல்ல, உன்னைக் கண்ணும் கருத்துமாக குழந்தையிலிருந்து பாதுகாத்த பாதரின் வெற்றியும் கூடத்தான்” என்றார்.

பயிற்சி காலம், ப்ரபேஷன் பீரியட் எல்லாம் முடிந்து சென்னைத் தலைமைச் செயலகத்தில்  ஒரு துறையில் அசிஸ்டென்ட் செக்ரட்டரியாக வேலைக்கு உத்தரவு கிடைத்தது.

“நல்லவேளை, சென்னையிலேயே போஸ்டிங்ஸ் கிடைத்தது. எனக்கு ரொம்ப வசதியாகப் போயிற்று” என்றான் சபரீஷ்வர் குதூகலமாக.

“சென்னை மிக அமைதியான ஊர். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது அதிக கலாட்டா இல்லாத ஊர்” என்றார் கருத்திருமன்.

“எந்த மாநிலமாக இருந்தாலும் என்ன அங்கிள்? தலைமைச் செயலகத்தில் வேலை கொடுத்தால் அவ்வளவாக வேலைப்பளு இருக்காது. ரொட்டீனாக் காலைப் பத்து மணிக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு வரும் வேலை தான்” கிருத்திகா .

சபரீஷ்வர் காரில் கிருத்திகாவை அவளை வளர்த்த பாதரிடம் அழைத்துச் சென்றான். அவர்கள் திருமணத்தைப்  பற்றிப் பேசினான். பாதர் மிகுந்த மகிழ்ச்சியோடு திருமணத்திற்கு சம்மதித்தார். நல்லநாள் குறித்துக் கொடுத்தால் மாதா கோயிலிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்து விடுவதாகவும் அறிவித்தார்.

பாதரிடம் தங்கள் திருமணத்தைப் பற்றிப் பேசி விட்டு வந்த விஷயத்தைப் பற்றி சாம்புத் தாத்தாவிடமும், கருத்திருமனிடமும்  விவரித்தான் சபரீஷ்.

“எந்தத்  முறைப்படித் திருமணம் செய்தாலும் பதிவுத் திருமணம் முக்கியம்” என்றார் கருத்திருமன்.

சாம்புத்தாத்தா திருமண ஏற்பாடுகள் பற்றிக் கேள்விப் பட்டவுடன் கல்யாணச் சமையல் போலவே, ஸ்வீட்டோடு சாப்பாடு தயாரித்து விட்டார்.

“கிருத்திகா, முன்பு ஒரு நாள் என்னிடம் சொன்னாயே ஞாபகம் இருக்கிறதா? ‘எல்லா சாமியும் கும்பிடுவேனே தவிர பக்தியென்று பார்த்தால் ஆழ்மனதில் ஒன்றும் பக்தியோ, நம்பிக்கையோ இருப்பதாகத் தெரியவில்லை  என்றாயே! இப்போது என்ன சொல்கிறாய்? நல்ல அழகான, அறிவான, அன்பான வாழ்க்கைத்துணை கிடைத்திருப்பதில் சந்தோஷம் தானே ! இப்போது கடவுள் மேல் நம்பிக்கை வருகிறதா?” என்று கேட்டார் கருத்திருமன்.

“இப்போது கூட பயம் தான் அங்கிள் வருகிறது ! ஒரு அநாதைக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கை ! மிக உயரத்திற்கு எடுத்துச் சென்று என் விதி அங்கிருந்து அதல பாதாளத்தில் தள்ளி விடும் என்ற பயம் தான் அதிகமாக இருக்கிறது” என்று பதிலளித்தாள் கிருத்திகா.

“கடவுளிடம் நம்பிக்கை வை கிருத்திகா; மனிதர்களிடமும் நம்பிக்கை வை. அப்போது உனக்கு இப்படி ஒரு பயம் தோன்றாது. எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும், நம்மைக் காக்கக் கடவுளும், நமக்குப் பிரியமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை வரும்” கருத்திருமன்.

“அப்படியா அங்கிள்!” என்றாள் கிருத்திகா, தாயிடம் பாடம் கேட்கும் சின்னக் குழந்தை போல்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அதுவரை அமைதியாக இருந்த சபரீஷ்வர், “ஆமாம்  கிருத்திகா, எனக்கு ரொம்ப மனவருத்தமோ அல்லது அழுத்தமோ ஏற்பட்டால் ‘முருகா, முருகா என்று சொல்’ என்று அங்கிள் சொல்லிக் கொடுத்திருக்கிறார். யார் யாருக்கு எந்தக் கடவுள் பிடிக்குமோ, அல்லாவோ, ஏசுவோ, அல்லது முருகனோ அவர் மேல் நம்பிக்கை வைத்து வணங்கினால் மனதிற்கு தைரியமும், நம்பிக்கையும்  வரும். நீ எந்தக் கடவுளை நினைத்துக் கொள்வாய் கிருத்திகா?”

“நான் சபரீஷ்வரைத் தான் நினைத்துக் கொள்வேன்” என்றாள் கிருத்திகா சிரித்துக் கொண்டே. கருத்திருமனும் சிரித்து விட்டார்.

“போடி போக்கிரிக் கழுதை!”  என்று செல்லமாக அவள் கன்னத்தைத் தட்டி விட்டு, சிரித்துக் கொண்டே எழுந்து போய் கம்ப்யூட்டர் எதிரில் அமர்ந்து கொண்டு ஈமெயில் ‘செக்’ செய்தான் சபரீஷ்வர்.

“கிருத்திகா, அங்கிள் இந்த மெயிலைப் பார்த்தீர்களா?  வயலட்டிற்கும்  திருமணம் பேசி முடித்துவிட்டார்களாம். பையன் லண்டனில் டாக்டராக இருக்கிறாராம். நேரே வந்து திருமணம் அழைப்பிதழ் தருவதாகவும், கருத்திருமன் அங்கிளிற்கும், கிருத்திகாவிற்கும் தனித் தனி மெயில் அனுப்புவதாகவும்  எழுதியிருக்கிறாள்”

“வேடிக்கைப் பார்த்தீர்களா அங்கிள்! மூன்று பேரும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் வேலையில் சேர்ந்தோம்.  இப்போது ஒரே நேரத்தில் வேலையை ராஜிநாமா செய்து விட்டு வேறு வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கிறோம். இது கூட கடவுளின் செயல் தானோ” என்றாள் கிருத்திகா பெருமூச்செறிந்து.

“ஆமாம் அம்மா, அவனன்றி ஓரணுவும் அசையாது” என்றார் கருத்திருமன்.

மெல்லிய நீரோட்டம் போல் எந்த வித அதிர்வும் இல்லாமல் கிருத்திகாவின் உதவிச் செயலாளர் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

அவள் அழகையும், திறமையும் பார்த்து உடன் வேலை செய்யும் அந்த அரசாங்க அலுவலகத்தில் பலரும் ஆச்சர்யப்பட்டனர்.

பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அவளோடு நட்பு கொள்ள விரும்பினார்கள். அவர்களுள் மீனாட்சியும் ஒருத்தி .’பார்ன் வித் ஸில்வர் ஸ்பூன்’ என்பார்கள்; அதெல்லாம் மிகச் சாதாரண உதாரணம். ஆனால் இவளோ பார்ன் வித் பிளாட்டினம் ஸ்பூன். அப்பா ரிடையர்ட் கலெக்டர். அம்மா ஒரு கல்லூரிப் பேராசிரியர். தங்கை சுமனா ஒரு டாக்டர்.

கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கே உரிய மஞ்சள் நிறமும், மென்மையும் மீனாட்சியிடமும் காணப்பட்டன. சிறந்த அழகிதான். பாப் செய்யப்பட்ட தலை. நல்ல உயரம். வெண்ணையில் செய்தாற் போன்ற உருவம்.

ஆனால் மீனாட்சியும், கிருத்திகாவும் ஒன்றாகப் போனால் எல்லோரும் கிருத்திகாவைத் தான் திரும்பிப் பார்ப்பார்கள். மீனாட்சியை விட இரண்டு அங்குலம் தான் கிருத்திகா உயரமாக இருப்பாள். ஆனால் அந்த குறைந்த வித்தியாசம் மிக அதிகமாகத் தெரிந்தது. கிருத்திகாவின் கொடி போன்ற உடல், அவள் உயரத்தை இன்னும் அதிகமாகக் காட்டியது.

அடர்த்தியான, நீண்ட சுருண்ட முடி. அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வழக்கமான இரட்டைப் பின்னல் தான் அவள் தலையலங்காரம். பால் போன்ற வெண்ணிறம், மஞ்சள் நிறம், ரோஜாவின் நிறம் எல்லாம் கலந்தாற்போல் ஓர் அழகு நிறம். பெரிய நீண்ட அழகிய கண்கள். லிப்ஸ்டிக் போடாமலே சிவந்த ரோஜா நிற உதடுகள். இப்படி ஒரு அழகை அள்ளிக் கொடுத்து இருக்கிறான் கிருத்திகாவிடம்  இறைவன்.

மீனாட்சி, கிருத்திகாவை விட ஒரு வருடம் சீனியர். ஆரம்பம் முதல் மீனாட்சி நல்ல கான்வென்ட்டில் படித்ததால் அவள் பேசும் ஆங்கிலம், உச்சரிக்கும் முறையெல்லாம்  மிகவும் பிடிக்கும்.

அதேப் போல் கிருத்திகாவின் மென்மை, நூறு சதவீதம் சட்டத்தை மதிக்கும் அவள் கம்பீரம் மீனாட்சிக்கு மிகவும் பிடிக்கும்.

தன் கீழ் வேலை செய்யும் அரசு அதிகாரிகளிடமும் மரியாதையுடன் நடத்தினாள்.

கிருத்திகா ஒரு கோப்பில் ‘நோட்’ எழுதி மேலதிகாரிக்கு அனுப்பினால் அவரால் அதற்கு மறுத்து எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அவள் எழுதியதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்க முடியாது. அப்படியே ஒத்துக் கொண்டு கையெழுத்துத் தான் போடமுடியும். பல நேரங்களில் அது மேலதிகாரிகளுக்கு சங்கடமாகக் கூட இருக்கும்.

சந்தேகமான இடங்களில் மீனாட்சியிடம் யோசனை கேட்பாள். மீனாட்சியோ ‘பண்டமென்டல் ரூல்ஸ், பினான்ஷியல் கோட்’ என்று இன்னும் ரூல்களின் எண்களையெல்லாம் போடுவாள். அத்தோடு மேலதிகாரிகள் எந்தக் கேள்விகளும் கேட்கக் கூட  முடியாது.

ஒரு நாள் சபரீஷ்வர் கிருத்திகாவைத் தேடி  தலைமைச் செயலகம் வந்தான். அப்போது கிருத்திகா சபரீஷ்வரிடம் மீனாட்சியை அறிமுகப்படுத்தினாள்.

“என் குரு… என் தோழி” என்றாள்.

மீனாட்சியோ “இந்த சபரீஷ் என் ப்ரெண்ட் கிருத்திகா” என்றாள் சிரித்துக் கொண்டே .

“நிஜமாகவா? ஏற்கனவே நீங்கள் நண்பர்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் கிருத்திகா.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 11) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    இலக்கணம் மாறுதோ? (சிறுகதை) – ✍ சியாமளா வெங்கட்ராமன், சென்னை