மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
கங்கையில் குளிப்பதற்கு தன் மகள் சரோஜா மற்றும் மாப்பிள்ளை ரகுவுடன், கிருஷ்ண ஐயர் அனுமன் காட்டில் உள்ள கங்கை படிகளில் இறங்க ஆரம்பித்தார்.
அப்போது எதிரே குளித்துவிட்டு வந்த நடேசய்யர், “ஹலோ… கிருஷ்ணய்யர், எப்படி இருக்கிறீர்கள்?” என கேட்க
“ஹலோ நடேசய்யர்… what a surprise” என இருவரும் ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டார்கள்.
அதற்குள் கிருஷ்ணய்யரின் சாஸ்திரிகள் அவரை கூப்பிட… அவர், ”நான் அருணாச்சல சாஸ்திரிகள் வீட்டில் தான் தங்கி இருக்கிறேன் அங்கு வாருங்கள்” எனக் கூறிவிட்டு கங்கையில் குளிக்க இறங்க ஆரம்பித்தார்.
நடேச ஐயரும் அவர் மனைவி மீனாட்சியும், கிருஷ்ண ஐயரையும் அவரது கூட இருந்த மகளையும், அவளுடன் இருந்த வரையும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றனர்.
மீனாட்சி தன் கணவரைப் பார்த்து, “ஏன்னா… கிருஷ்ண ஐயர் மாப்பிள்ளை நான்கு வருடங்களுக்கு முன் இறந்து விட்டதாக நீங்க சொன்னதாக ஞாபகம். அவருடன் செல்லும் சரோஜாவை பார்த்தால் அப்படி தெரியவில்லையே. அதுவும் இல்லாமல் அவள் கையை கோர்த்துக் கொண்டு ஒரு ஆண் செல்வதை பார்த்தால் கணவன் மனைவி போல் தோன்றுகிறது, ஒன்றுமே புரியவில்லையே” எனக் கூறினாள்.
அதைக் கேட்ட நடேச ஐயர், “நானும் அதைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
அதற்குள் அவர்கள் தங்கி இருக்கும் சங்கர மடம் வரவே பேச்சு அத்துடன் நின்றது.
அன்று மாலையே இருவரும் சாயரட்சை பார்க்க கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடிந்து வரும் வழியில், ஒரு கடை அருகே மறுபடியும் கிருஷ்ணய்யர் குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது.
நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே முன்னால் நடக்க, மீனாட்சி சரோஜாவை பார்த்து, “குழந்தைகள் சௌக்கியமா?” என்று கேட்டுக் கொண்டே பக்கத்தில் இருந்தவரை ‘இவர் யார்?’ என்பதைப் போல் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
இதை சூசகமாக புரிந்து கொண்ட சரோஜா “குழந்தைகள் சென்னையில் இருக்கிறார்கள், இவர் என் கணவர் ரகு” என நேரடியாகவே கூறினாள்.
மேலும், “அப்பா காசிக்கு வந்து தாத்தா பாட்டிக்கு மற்றும் அம்மாவிற்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்ய வேண்டுமென்றார். அவரை எப்படி தனியாக இந்த வயதில் காசிக்கு அனுப்புவது என்று நானும் என் கணவரும் கூட வந்திருக்கிறோம்” என்றாள்.
சரோஜா பேச பேச தலையை மீனாட்சிக்கு தலைசுற்றியது. ஏனென்றால் சரோஜாவின் கணவர் பிரகாஷ் நான்கு வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் மூன்று வருடங்கள் அவதிப்பட்டு இறந்தது தெரியும்.
பிரகாஷ் ஸ்டேட் பேங்கில் மேனேஜர் பதவியில் இருந்தார். முத்தான மூன்று குழந்தைகள், ஒரு பையன் இரண்டு பெண்கள். பெண் பி.இ முடித்து வேலைக்கு செல்ல தயார் நிலையில் இருக்கும்பொழுது பிரகாஷ் இறந்து விட்டான். ஒரு பையனும் ஒரு பெண்ணும் கல்லூரி செல்ல வேண்டிய நிலை, நடுக்கடலில் சிக்கிய கப்பல் போல் குடும்பம் தடுமாறியது.
கிருஷ்ண ஐயர் மனைவியை இழந்தவர். தன் மகள் குடும்பத்தை காப்பாற்ற மதுரையிலிருந்து சென்னையில் உள்ள தன் மகள் வீட்டிற்கு வந்து விட்டார் என்பது வரை, அவர் குடும்பத்தை பற்றி விவரம் தெரியும். அதற்குப்பின் மீனாட்சியும் அவள் கணவரும் யூ.எஸ்’ல் இருக்கும் மகன் வீட்டிற்கு சென்று விட்டார்கள்.
அதன்பின் அங்கிருந்து தன் சொந்த ஊரான கும்பகோணம் சென்று விட்டார்கள். எனவே சரோஜாவின் குடும்பம் பற்றிய விவரம் தெரிய வாய்ப்பு இல்லாமல் சென்று விட்டது. எனவேதான் சரோஜா கூறியதைக் கேட்டு திகைத்து நின்றாள் மீனாட்சி.
மீனாட்சி திகைத்து நின்றதை பார்த்த சரோஜா, “என்ன மாமி அப்படியே திகைத்து நிற்கிறீர்கள்?” என கேட்டதும்
மீனாட்சி சுயநினைவு வந்து, “அது இல்லை… நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை” என்றாள்.
அதைக் கேட்டதும் சரோஜா சிரித்துக் கொண்டு, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரியுது மாமி. நான் விவரமாக சொல்கிறேன்” என்று கூறிவிட்டு சொல்லத் தொடங்கினாள்.
“பிரகாஷ் இறந்ததும் என் அப்பாவுடன் நான் சென்னையில் குழந்தைகளுடன் இருந்தேன். சென்ற வருடம் என் அப்பா பெரிய பெண்ணிற்கு வரம் பார்க்க ஆரம்பித்தார். தினமும் பேப்பரில் மேட்ரிமோனியல் பகுதியை பார்ப்பது வழக்கம்.
அப்படி பார்க்கும் பொழுது ரகு கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்தார். உடனே என்னைப் பற்றிய விவரங்களை எழுதி போட்டார். அவர்கள் வீட்டில் என் விவரங்களை பார்த்து அவர்கள் அப்பாவும் அம்மாவும் சென்னையில் இருந்ததால் என் அப்பாவிற்கு ஃபோன் செய்து நேரில் பேச வருவதாக சொன்னார்கள்
அப்போதுதான் எனக்கு என் கல்யாண விஷயம் பற்றி தெரிய வந்தது. நான் என் அப்பாவுடன் தர்க்கம் செய்தேன். ஆனால் என் குழந்தைகளும் அப்பாவும் என் கல்யாணத்தைப் பற்றி காரணங்களை கூறினார்கள்.
அதாவது தாங்கள் (குழந்தைகள்) திருமணமாகி வெளிநாட்டிற்கு போக வாய்ப்பு உள்ளது. அதேபோல் அப்பாவிற்கு பிறகு என் வயதான காலத்தில் எனக்கு என்று யாரும் கிடையாது எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதே இந்த கல்யாணத்திற்கான காரணம் என்றனர்.
ரகுவின் பெற்றோருக்கு என்னை பிடித்தது. நானும் ரகுவும் தனியாக சந்தித்து பேசினோம். என் குழந்தைகளுக்கு பாதுகாவலராக அவரும் அவர் பையனுக்கு தாயாக நானும் இருப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டோம். எங்கள் திருமணம் ஒரு பெரிய சத்திரத்தில் உறவினர்கள் நண்பர்கள் ஆசியுடன் நடந்தது. இப்போது சொல்லுங்கள் என் கல்யாணம் திருப்தி தானே?” என்றாள்
இதைக் கேட்ட மீனாட்சி ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு, “உலகில் மாற்றம் ஒன்று மட்டும் தான் மாறாதது. தற்காலத்தில் நிமிடத்திற்கு நிமிடம் டெக்னாலஜி மாற்றம் நடந்து கொண்டே உள்ளது. அதேபோல் கணவன் மனைவி என்ற உறவுகளின் இலக்கணமும் மாறுகிறதோ?”” என மனதில் நினைத்துக் கொண்டாலும், “சந்தோஷமாக வாழுங்கள்” என அவர்களை வாழ்த்தினாள்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings