in

வைராக்கியம் ❤ (பகுதி 12) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

வைராக்கியம் ❤ (பகுதி 12)

மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10 

பகுதி 11

டுத்த முடிவை அண்ணா பாலு, சீனு இருவரிடமும் கார்த்திக் ஃபோனில் சொல்ல, “நான் ஒரு யோசனை சொல்லறேன். உனக்கு சரின்னு பட்டுதுன்னா மேற்கொண்டு பேசலாம்” என்றான் பாலு.

“சொல்லுண்ணா. அதுக்காகத் தான உங்கிட்ட சொல்றேன்” என்றான் கார்த்திக்.

“நம்ம வீடு ரொம்ப பழசாயிடுத்து. இந்த வீட்டையும், இடத்தையும் யாருக்கோ வித்துட்டு போறதை விட, இந்த வீட்டை இடிச்சுட்டு, இதே எடத்துல நாலு வீடு இருக்கற மாதிரி அபார்ட்மெண்ட் போல கட்டிக்கலாமா?” என்றான் பாலு.

“நாம கடைசி காலத்துலயும் பக்கத்துல ஒண்ணா இருந்துக்கலாம். இல்ல, வெளியில பசங்களோட போய் இருந்தாலும் வீட்டை வாடகைக்கு விட்டுக்கலாம். வாடகை பாட்டுக்கு வந்துண்டு இருக்கும். வீட்டைச் பாத்துக்கறதும் சுலபமா இருக்கும்” என்றான் பாலு.

“சூப்பர் ணா. இது விஷயமா நேரா பேசினாத் தான் சரியா வரும். நான் ரெண்டு நாள் குடும்பத்தோட வரேன். இந்துகிட்டயும் பேசறேன். நீ சீனுகிட்டப் பேசு. அப்பறம் என்னன்னு பார்ப்போம்” என்று சொல்ல, “சரிடா” என்றான் பாலு.

எல்லோரும் நீண்ட நாள் கழித்து சிதம்பரத்தில் சந்திக்க, பாலு அண்ணா சொன்ன யோசனை எல்லோருக்குமே சரியாய்ப் பட்டது. எல்லோருமே சம்மதித்தார்கள்.

சொந்த ஊர் என்பதால் வீடு கட்டும் பொறுப்பை அண்ணாமார்கள் பாலு, சீனுவிடமே ஒப்படைத்தான் கார்த்திக். இந்துவும், மாப்பிள்ளையும் இந்த ஏற்பாட்டிற்கு சம்மதித்தனர்.

அலுவலகத்தின் வேலைப்பளுவுக்கு நடுவே வீட்டின் பூமிபூஜைக்கு நந்தினியும், கார்த்திக்கும் குழந்தைகளோடு சென்றவன், “அண்ணா… வீட்டு ப்ளான் போட்டு குடுத்தாச்சு. எல்லாமே காண்ட்ராக்ட் தான் பேசியிருக்கு. அதனால அவா வேலை ஒழுங்கா பண்றாளான்னு மட்டும் பாத்துண்டா போறும். எதுன்னாலும் நீயும், சீனு அண்ணாவும் பாத்துக்கோங்கோ” என்றான் கார்த்திக்.

“அது சரி. நீயும் நடுவுல வந்து வீடு எப்படி ஆயிண்டு இருக்குன்னாவது பாத்துட்டு போடா. அப்பறம் என்னைக் குறை சொல்லக்கூடாது” என்றான் பாலு.

ஆர்த்தி, “ஏங்க நீங்க எதுவும் சொல்லமாட்டீங்களா?” என்று கணவன் சீனுவிடம் சொல்ல

“அண்ணாவுக்கே எல்லாம் தெரியும். எதாவது கேக்கணும்னா அண்ணாவே எங்கிட்ட கேப்பான்” என்றான் சீனு.

ஆர்த்தி சீனுவிடம் முணுமுணுப்பதைப் பார்த்த பாலு, “நாலு வீட்டுப் ப்ளானும் ஒண்ணுதான். உள்ளுக்குள்ள எதாவது மாற்றம் பண்ணணும்னா அவங்கவங்க தாராளமா பண்ணிக்கலாம். அதுக்கான அதிகமாகற பணத்தை மட்டும் அவங்க குடுத்துடணும். என்ன சீனு சரிதான?” என்று பாலு கேட்க, “சரிண்ணா” என்றான் சீனு.

மூவரும் அதிகம் எப்போதும் பேசிக்கொள்வதில்லையென்றாலும் மூவருக்குமுள்ள ஒற்றுமையை நினைத்து மனதிற்குள் இருந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு சந்தோஷப்பட்டாள் ஆர்த்தி.

“சீனுவும் கார்த்திக்கும் என் தம்பிங்கன்னு சின்னதுலருந்தே கொஞ்சம் உரிமையா இருக்கேன். பேசறேன். அவ்வளவுதான். ஆனா, அவங்கள என்னைக்கும் குறைச்சு நெனச்சதுமில்ல. மதுவுக்கும் இவங்க ரெண்டு பேரும் பசங்க மாதிரிதான்.

என்னடா, அண்ணா இன்னைக்கு இவ்வளவு பேசறாளேன்னு நெனக்காதம்மா. இத்தனை நாள் ஒரே வீட்டுல இருந்தோம். ஆனா இப்ப தனித்தனி வீடா கட்டப் போறோம். குடும்பம் பெருசாறதுனால நாலு வீடா கட்டப் போறோம். ஆனா, ஒன்னு போல தான் கட்டப் போறோம்” என்று ஆர்த்தியின் உண்மையான கவலையைப் போக்கினான் பாலு.

“அண்ணா, இதுக்கு எவ்வளவு பணம் ஆகும்னு சொல்லு. நான் ஓரளவு பணம் சேத்தி வச்சுருக்கேன். கொஞ்சம் கடன் வாங்கியும் சீக்கிரம் தந்துடறேன்” என்று சீனு சொல்ல

“பாத்துக்கலாம்டா. நீ இத்தனை வருஷமா தொடர்ந்து எங்கிட்ட இருக்கறதால… நான் மாசாமாசம் உனக்குன்னு ஒரு RD போட்டு அது சேர்ந்ததும் டெபாஸிட்டாகவும் போட்டுருக்கேன். அப்பறம் மீதி பணத்தைப் பாத்துக்கலாம்.” என்றான் பாலு.

பாலுவும், மதுவும் பார்ப்பதற்கு பிடிவாதக்காரர்களாகத் தெரிந்தாலும், குடும்பத்துக்காக எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்பவர்கள். ஆனால் மனதளவில் சீனுவையும், கார்த்திக்கையும் தங்கள் பிள்ளைகளாக பாவிப்பவர்கள்.

அதுவுமில்லாமல் அம்மா, அப்பா மறைவுக்குப் பிறகு, மனதளவில் கூடப்பிறந்தவர்கள் மீதான ஒட்டுதல் அதிகரித்தே இருந்தது.

இதற்கு நடுவே பாலுவின் மகனுக்கு பெங்களூரிலுள்ள கல்லூரியில் இடம் கிடைக்க, முதலில் கார்த்திக்கின் வீட்டில் தங்கி கல்லூரிக்குச் சென்றான். கல்லூரிக்குச் சென்றுவர தினமும் நீண்ட நேரமானதால் ஹாஸ்டலில் சேர்ந்து கொண்டான்.

பாலு சீனுவின் மேற்பார்வையில் அபார்ட்மெண்ட் அழகாய் கட்டப்பட்டது. நால்வரின் குடும்பமும் சேர்ந்து கிரஹப்ரவேசத்தை நடத்தினார்கள். பிறந்த வீட்டின் சார்பில் நந்தினியின் கூடப் பிறந்தவர்கள் அனைவரும் வந்தனர்.

ரகுவிற்கும், மைதிலிக்கும் இத்தனை கஷ்டங்களையும் தாண்டி தங்களின் மகள் குடும்பத்தை நன்றாகக் கொண்டு செல்கிறாள் என்று சந்தோஷமடைந்தனர்.

லோன் போக மீதி பணத்திற்கு நந்தினியின் நகைகளை வங்கியில் அடகு வைத்து பணத்தைப் புரட்டியவர்கள் வீட்டை நல்லபடியாக கட்டி முடித்தனர். கிரஹப்ரவேசத்திற்குப் பிறகு வீட்டினை வாடகைக்கு விட்ட கார்த்திக், அதில் வரும் வாடகைக்கு மேல் கொஞ்சம் சேர்த்து வீட்டுக்கடனை அடைத்துக் கொண்டு வந்தான்.

விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வெளியூர் சென்று வந்தான் கார்த்திக். குழந்தைகள் இருவரும் நன்றாக படித்தனர். வருடங்கள் வேகமாக உருண்டோடின.

எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் திடீரென கார்த்திக்கின் அலுவலகத்திலிருந்து ஃபோன் வந்தது. ஃபோனை எடுத்தவள், “ஹலோ” என்று சொல்ல

மறுமுனையிலிருந்து பேசிய கார்த்திக்கிற்கு கீழ் வேலை செய்யும் அதிகாரி, “மேடம்… நான் பசவப்பா பேசறேன். இன்னைக்கு சாருக்கு ஏதாவது உடம்புக்கு முடியலையா?” என்று கேட்டார்.

“அதெல்லாம் இல்லங்க. ஒரு தடவை விபத்துல கால்களை இழந்துட்டாரு. அதுக்கப்பறம் நிறைய சிகிச்சை குடுத்ததுக்கப்பறம் நல்லா ஆயிட்டார். எந்த பிரச்சனையும் இல்லையே” என்று சொல்ல

“இல்ல மேடம். ஆஃபீஸ்ல எப்பவுமே அதிக வேலைதான். ரஷர் எல்லாருக்குமே இருக்கும். ஆனா கொஞ்ச நாளாவே சார் எல்லார்கிட்டயும் அளவுக்கதிகமான கோபப்படறார். சில சமயம் க்ளார்க்கெல்லாம் எங்கிட்ட வந்து கம்ப்ளெயின்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

ஆனா, அவர் குணம் எனக்கு நல்லா தெரியும். அப்படி சட்டுன்னு எல்லார்கிட்டயும் கோபப்படமாட்டார். அதனால தான் உங்களுக்கு தனியா ஃபோன் போட்டு கேட்டேன்.‌ அவரை எதுக்கும் டாக்டர்கிட்ட கூட்டீட்டுப் போய் ஒருதடவை பாத்துட்டு வந்துடுங்க. நான் ஃபோன் பண்ணிண விஷயம் அவருக்குத் தெரிய வேண்டாம் மேடம்” என்றார்.

“ரொம்ப தேங்க்ஸ் சார். அவர் குணம் தெரிஞ்சு புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ். நான் என்னனு பாக்கறேன். அதே மாதிரி நீங்க ஆஃபீஸ்ல எதாவது பிரச்சனைன்னா உடனே சொல்லுங்க சார்” என்று ஃபோனை வைத்தவள் அப்படியே ஷோபாவில் உட்கார்ந்தாள்.

எத்தனையோ வேதனைக்குப் பிறகு கார்த்திக் இயல்பான நிலைமைக்கு வந்து எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது எனும் நிலையில் திரும்ப அடுத்த இடியாய் வந்திறங்கியது அலுவலகத்திலிருந்து வந்த செய்தி.

கல்லூரியிலிருந்து வந்த கிருஷ்ணாவுக்கும், ராகுலுக்கும் கையில் காஃபியைக் கொடுத்துவிட்டுப் போய்ப் படுத்துக் கொண்டாள் நந்தினி.

சிறிது நேரம் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணா, “அம்மா… என்னாச்சு? உடம்பு முடியலையா? ஏம்மா படுத்துண்டு இருக்க? என்ன பண்றது?” என்று கேட்க

“ஒண்ணுமில்லடா. என்னவோ மனசு சரியில்லை” என்றாள்.

எப்போதும் தங்களுடன் கலகலவென இருக்கும் அம்மா எதையோ மறைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன், “எங்கிட்ட சொல்ல உனக்கு என்ன பிரச்சினை? சொல்லும்மா” என்றான் கிருஷ்ணா.

அலுவலகத்திலிருந்து வந்த ஃபோன் விவரத்தை நந்தினி சொல்ல, “என்னம்மா இது புது பிரச்சினை. இப்பத் தான் எந்த தொந்தரவும் இல்லாம நாம நிம்மதியா இருக்கோம். அதுக்குள்ள மறுபடியுமா?” என்றவன் “அப்பாகிட்ட பேசினயா?” என்றான்.

“இல்லடா. இப்ப வேண்டாம். அவரு வரட்டும். இத மெதுவா தான் சரிபண்ணணும்” என்றவள், “யார்கிட்டயும் இதப்பத்தி பேசிக்காத. நமக்குள்ளேயே இருக்கட்டும். எதா இருந்தாலும் பாத்துக்கலாம்” என்றாள் நந்தினி.

“சரிம்மா” என்றவன் அம்மாவை நினைத்து கவலைப்பட்டான். தன் சிறுவயது முதல், அப்பாவுக்காக அம்மா படும் கஷ்டங்களைப் பார்த்தே வளர்வதால் அம்மாவின் மீது எப்போதும் உயிராய் இருந்தான். பொதுவாகவே நந்தினியும் எல்லா விஷயங்களையும் கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொள்வாள். மூவருக்கும் செல்லப் பையனாக ராகுல் இருந்தான்.

அனுபவத்தால் வந்த வலிகள் அவளை அதிகமாகவே பக்குவப் படுத்தியிருந்தது. ஒரு நடுத்தர வயது பெண்ணுக்கு உண்டான நிதானமும், அனுபவங்களும் அவளை யோசிக்க வைத்தன.

கார்த்திக்கின் பிரச்சனை, குழந்தைகளின் படிப்பையும், சந்தோஷத்தையும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தாள் நந்தினி.

அன்று ஆஃபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த கணவனிடம் காஃபியைக் கொடுத்துவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது, “இன்னைக்கு ஆஃபீஸ் எப்படி போச்சு? வேறென்ன விசேஷம்?” என்று எதேச்சையாக விசாரிக்க

“சொன்னா சொன்ன நேரத்துல எனக்கு கீழ இருக்கறவங்க வேலையை முடிக்கறதில்லை. ஆனா மேல இருக்கறவங்களுக்கு இந்த கஷ்டம் எங்க புரியுது? மீட்டிங்ல என்னைப் புடிச்சு திட்ட வேண்டியது. ஆனா இப்பல்லாம் கோபம் வந்தா என்னால கண்ட்ரோல் பண்ண முடியல நந்தினி” என்ற கார்த்திக், “அதனால ஸ்டாஃப் மீட்டிங் ஒன்னு போட்டு எல்லாரும் ஒழுங்கா வேலையை செய்யணும்னு புடிச்சு கத்தி விட்டேன்” என்றான்.

“ஏங்க… இப்பல்லாம் உங்களுக்கு அடிக்கடி கோவம் வருது. இந்த தடவை டாக்டர்கிட்ட மாஸ்டர் செக்கப்புக்கு போகும்போது இதையும் கேட்டு பாத்துடணும்” என்று சொல்ல

“சரி சரி… போறதும் போறோம். ஞாயிற்றுக்கிழமையா அப்பாயிண்மென்ட் வாங்கு. அப்பதான் ஆஃபீஸ் பிரச்சினை இல்லாம நிம்மதியா இருக்கும்” என்றான் கார்த்திக்.

பிறகு அந்த வாரமே சனிக்கிழமை டாக்டரைப் போய்ப் பார்த்தனர். ரூமிற்குள் சென்று கார்த்திக்கைப் பரிசோதித்த டாக்டர் சேதுராமன், நந்தினியிடம் என்ன பிரச்சினை என்பது போல விசாரித்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் கேட்டுக் கொண்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ரிசல்ட்டை வந்து வாங்கிக் கொள்ளுமாறு மருத்துவமனையில் சொல்ல, இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இலக்கணம் மாறுதோ? (சிறுகதை) – ✍ சியாமளா வெங்கட்ராமன், சென்னை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 12) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை