in

வைராக்கியம் ❤ (பகுதி 11) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

வைராக்கியம் ❤ (பகுதி 11)

மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

“சரி சிஸ்டர்” என்று சொல்லிவிட்டு உள்ளே வரும்போது அழுது கொண்டிருந்தான் கார்த்திக்.

“என்னாச்சு? ஏன் அழறேள்?” என்றவளிடம்

“நந்தினி, முட்டிக்கு மேலோட என் ரெண்டு காலையும் எடுத்துட்டா. நான் இனி என்ன பண்ணுவேன்” என்று தன் வெட்டப்பட்ட கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “எப்படி என்னோட மீதி காலத்தைக் கழிக்கப் போறேனோ தெரியலையே?” என்று குழந்தையாய் அழுதான்.

“விடுங்க. வாழ்க்கைல எல்லாருக்கும் ஏதோ ஒரு விதத்துல கஷ்டம் வரும். நமக்கு இந்த விபத்து ரூபத்தில் வந்துருக்கு. எவ்வளவு பெரிய கஷ்டமா இருந்தாலும் நாம ஒன்னா இருந்து சமாளிப்போம். கவலைப்படாதீங்க” என்று சமாதானப்படுத்தியவள், ‘இவரை எப்போ தான் நான் பழைய கார்த்திக்கா பார்க்கப் போறேனோ?’ என்று மனதிற்குள் நினைத்து வேதனைப்பட்டாள் நந்தினி.

மறுநாள் ஊரிலிருந்து பாலுவும், இந்துவும் வந்து பார்த்து விட்டு வருத்தப்பட்டவர்கள், ஆபரேஷன் முடிந்து சிதம்பரம் வந்துவிடுமாறு திரும்பவும் அழைக்க, “இல்லண்ணா. ஆபீஸுக்கு மூணு மாசம் லீவு போட்டுருக்கேன். அடிக்கடி செக்கப்புக்கு ஹாஸ்பிடல் போக வேண்டியிருக்கும். அதனால பெங்களூர்லயே பாத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். ஏன்னா, கிருஷ்ணாவுக்கும் ஸ்கூல் பார்க்கணுமே. எவ்ளோ நாள் தான் வீட்டுல வச்சுக்க முடியும்” என்று சொல்ல,

“சரிடா. நாங்க அப்பப்ப நடுவுல வந்து பாத்துக்கறோம். நீ எதப் பத்தியும் கவலப்படாதடா” என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

நந்தினியின் அம்மா வீட்டு சொந்தங்களும், மாமியார் வீட்டு சொந்தங்களும் ஃபோனில் கார்த்திக்கைப் பற்றி ஒரு வாரம் வரை மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

மூன்று பேரும் கார்த்திக்கோடு தங்க வேண்டியிருந்ததால், பெரிய அறையை எடுத்துக் கொண்டு பத்து நாட்கள் தங்கியிருந்தவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜாகி பெங்களூருக்கு வந்து சேர்ந்தனர்.

திருப்பதியில் ஆபரேஷன் செய்த டாக்டர் பெங்களூரில் இருக்கும் தனக்குத் தெரிந்த சிறந்த டாக்டரை சிபாரிசு செய்து கடிதம் கொடுக்க, அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு கார்த்திக்கின் ரிப்போர்ட்டுடன் நால்வரும் பெங்களூரிலுள்ள அந்த டாக்டரின் மருத்துவமனைக்குச் சென்றனர்.

வீட்டுக்கு வேண்டிய சாமான்களை பெண்ணுக்கு வாங்கிப் போட்ட ரகு ஒருவாரம் இருந்துவிட்டு ஊருக்குக் கிளம்பத் தயாராக, “ஏம்ப்பா, இன்னும் ஒரு பதினஞ்சு நாள் இருந்துட்டுப் போலாம் இல்லப்பா” என்று நந்தினி கேட்க

“ஊருக்கு வந்து ரொம்ப நாள் ஆறது நந்தினி. அம்மாவும் உன்னைப் பத்தி ரொம்ப கவலைப்பட்டண்டு இருப்பா. நான் போய் நேர சொன்னாதான் நிம்மதியாவா. அதுவுமில்லாம அவளும் மாப்பிள்ளையை பார்க்க வரணுமே? நான் போனாதான உங்கம்மாவ கூட்டீண்டு வர முடியும். அதனால அடுத்த தடவை வரச்ச அம்மாவ கூட்டீண்டு வந்து, பத்து பதினஞ்சு நாள் தங்கீண்டு போற மாதிரி வரேன், சரியா?” என்றார் ரகு.

“அவசரத்துல வந்ததால தான் உங்கம்மாவ விட்டுட்டு வந்தேன். அப்பறம், எதுன்னாலும் எனக்கு ஃபோன் பண்ணு. நீங்களும் உங்க உடம்பைப் பாத்துக்கோங்க மாப்ள” என்று ரகு சொல்ல

“ரொம்ப தேங்க்ஸ் மாமா. நீங்க எங்க கூட இருந்தது ஒரு பெரிய பலமா இருந்தது. இல்லண்ணா நந்தினி இன்னும் ரொம்ப கஷ்டப்பட்டுப் போயிருப்பா. நான் எங்க பேங்க்ல பேசீட்டு சீக்கிரமா உங்களுக்கு பணத்தைக் அனுப்பீடறேன்” என்றான் கார்த்திக்.

“ஒன்னும் பிரச்சினை இல்லை மாப்ள. எப்ப முடியுமோ அப்ப குடுங்கோ” என்று சொல்லிவிட்டு பேரன் கிருஷ்ணாவுக்கு முத்தத்தைக் கொடுத்தவர் ஊருக்குக் கிளம்பிச் சென்றார்.

அப்பா ஊருக்குக் கிளம்பியதும் நந்தினிக்கு மிகவும் வெறுமையாக இருந்தது. இனி நாம் தான் வெளிவேலைகளையும் பழகிக் கொள்ள வேண்டும். எல்லோரும் உற்றவர்களாக இருந்தாலும், அவரவர் சூழ்நிலையால் யாரும் வந்து தொடர்ந்து இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தாள்.

கூட்டுக் குடும்பமாக இருந்ததாலும் சரி, தனிக்குடித்தனமாக இருந்தாலும் சரி, வரும் கஷ்ட நஷ்டங்களை கணவன் மனைவியே ஒருவருக்கொருவர் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்ற பெரிய பாடத்தை‌, வாழ்க்கை சிறு வயதிலேயே நந்தினிக்கு கற்றுக் கொடுத்தது.

பதினைந்து நாளுக்கொருமுறை கார்த்திக்கும், நந்தினியும் டாக்டரைப் போய்ப் பார்த்து வந்தார்கள். செயற்கை கால்களுக்கு ஆர்டர் கொடுத்ததில், இரண்டு மாதம் கழித்து செயற்கைக் கால்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.

முதல் முறையாக செயற்கைக்கால்களைப் பொருத்தியதும், கார்த்திக்கிற்கு உயிர் போகும் வலியாய் இருந்தது. முதலில் அப்படித்தான் இருக்கும். பிறகு பழகப் பழகக் காலுக்குப் பொருந்திவிடும் என்றும் அதுவரை வாரம் ஒருமுறை வந்து காண்பிக்குமாறும் மருத்துவமனையில் கூறினார்கள்.

வலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் செயற்கைக் கால்களை கழட்டிவிட்டு ஆயிண்மென்ட்டைப் போட்டுக் கொள்ளவும் டாக்டர் பரிந்துரைத்தார்.

இதற்கு நடுவே நந்தினி பசவனகுடியிலிருந்த மகப்பேறு மருத்துவரிடம் பதினைந்து நாட்களுக்கொருமுறை செக்கப்புக்குப் போய் வந்தாள். குழந்தையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது.

தினமும் காலை கிருஷ்ணாவை பள்ளிக்குச் சென்று விட்டுவிட்டு வந்து வீட்டில் எல்லா வேலைகளையும் முடிப்பாள் நந்தினி. திரும்ப பள்ளியிலிருந்து கிருஷ்ணாவைக் கூட்டிக்கொண்டு வந்து இருவருக்கும் சாப்பிடக் கொடுத்து, மாலை பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு வீல் சேரில் கார்த்திக்கை உட்கார வைத்து கிருஷ்ணாவையும் தன்னுடன் கூட்டிச் செல்வாள் நந்தினி.

முதல்முறையாகப் பூங்காவிற்குச் சென்ற போது அடுத்தவர்கள் தனக்கு கால்கள் இல்லையே என்று என்ன நினைப்பார்களோ என்று கூச்சப் பட்ட கார்த்திக், போகப் போக ‘யார் என்ன நினைத்தால் என்ன? எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்’ என்ற முடிவுக்கு வந்தான்.

கார்த்திக்கின் விபத்துக்குப் பிறகு, தன் வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்த நந்தினி, கொஞ்சம் கொஞ்சமாக அந்த துக்கத்திலிருந்து வெளியே வந்தாள்.

என்ன நடந்தாலும் நாம் தான் நம் குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்துக்கு வந்தாள் நந்தினி.

ஆறுமாத விடுமுறைக்குப் பிறகு, அலுவலகத்திற்குச் சென்ற கார்த்திக், தினமும் அலுவலகத்துக்கு சென்று வர ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து கொண்டு தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினான்.

நாட்களும் வேகமாக நகர, நந்தினி இரண்டாவதாகவும் ஓர் அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். இந்த முறை அவள் தன் பிரசவத்தை பெங்களூரிலேயே வைத்துக் கொண்டாள். முதல் பதினைந்து நாட்களுக்கு மட்டும் பெற்றோர்கள் வந்துவிட்டுச் சென்றனர்.

கணேஷ் மற்றும் வித்யா இருவரும் வேலைக்குச் சென்றதால் அவர்களின் குழந்தைகளை வித்யாவின் பெற்றோர்களை வந்து பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ரகு தம்பதியினர் ஒரு மாதம் பெங்களூர் வந்து தங்கியிருந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டனர்.

கார்த்திக் தன் உழைப்பால் படிப்படியாக முன்னேறி பதவிஉயர்வு பெற்று மேனேஜர் பதவிக்கு உயர்ந்தான். தன் தந்தை முன்பு தன்னோடு விளையாடியது போல, தற்போது தன்னோடு விளையாடுவதில்லை என்ற எண்ணம் கிருஷ்ணாவுக்கு இருந்தாலும், குழந்தை அந்த வெற்றிடத்தை நிரப்பினான்.

பள்ளியிலிருந்து வரும்போதே தம்பியைத் தேடி அணைத்துக் கொள்பவன், நாள் முழுக்க அவனுடன் விளையாடுவதிலும், பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடம் செய்வதிலும் நேரம் போவதே தெரியாமல் இருந்தான்.

“உங்கப்பா நொண்டி, கட்டைக்காலு தான” என்று கூடப் படித்தவர்கள் கிண்டலடித்தபோது கூறிக் குறுகி நின்றவன், பெரியவனாக வளர வளர, இரண்டு கால்கள் இல்லையென்றாலும், தன் கடின உழைப்பால் வங்கியில் நல்லதொரு பதவியில் இருக்கும் தந்தையின் மனஉறுதியை நினைத்து தனக்குள் பூரித்துப் போனான்.

ஆனால் நடந்த விபத்து கார்த்திக்கின் மனநிலையில் நிறையவே மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. நண்பர்கள், சொந்தங்கள் என்று எல்லோரும் எப்போதும் நம்மைச் சுற்றி சூழ்ந்திருப்பார்கள் என நினைத்தவன், தன் குடும்பம் மட்டுமே கடைசி வரை கூட நிற்கும் என்று புரிந்து கொண்டான்.

குழந்தைகள் இருவரும் வளர வளர வீடு துக்கத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்தது. பள்ளியின் வருட விடுமுறையின் போது ஒருமுறை குடும்பத்துடன் தங்கை புவனா வீட்டிற்கு அகமதாபாத் சென்று வந்தனர்.

அம்மா, அப்பாவின் காலத்திற்குப் பிறகு சிதம்பரம் போவது குறைந்து போனது. எல்லோரும் அவரவர் வேலை, குடும்பம், குழந்தைகள் என சொந்தங்களின் விசேஷங்களில் மட்டுமே பார்த்துக் கொள்ள முடிந்தது.

கார்த்திக்கிற்கு வங்கியின் குடியிருப்பிலேயே வீடு கிடைக்க, பிறகு வாடகை வீட்டைக் காலி செய்துவிட்டு வங்கியின் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் குடியேறினான். ஒரு தளத்திற்கு பத்து வீடுகள் என நான்கு தளத்தில் நாற்பது வீடுகள் இருந்தன.

பெரும்பாலும் வேறு வேறு மாநிலத்துக்காரர்களும் சேர்ந்து வாழும் பாரதவிலாசவே இருந்தது. விளையாட நிறைய குழந்தைகள் இருந்தால் ராகுலுக்கும், கிருஷ்ணாவிற்கும் அவர்கள் இருந்த இடம் மிகவும் பிடித்துப் போனது.

கார்த்திக் தன் விபத்துக்குப் பிறகு முழுமையாக தன் வரவு செலவு கணக்குகளை மனைவியிடம் தெரிவித்தது மட்டுமல்லாமல் இருவரும் சேர்ந்த வங்கிக் கணக்கைத் தொடங்கினான்.

வீட்டு வேலையையும் செய்து கொண்டு, மார்க்கெட் செல்வது வேண்டிய பொருட்களை வாங்கிவருவது என நந்தினி எல்லா வரவு செலவுகளையும் பார்த்துக் கொண்டாள்.

வீட்டின் பால்கனியில் எப்போதும் போல் உட்கார்ந்து காஃபி குடித்துக் கொண்டிருக்கும் போது, “நந்தினி… பசங்க பெருசாறதுக்குள்ள ஒரு வீடு வாங்கீட்டா நன்னாயிருக்கும்னு யோசிக்கறேன். நீ என்ன நெனக்கற?” என்றான் கார்த்திக்.

“நல்ல யோசனை தான். ஆனா இங்க வீடு விலை ரொம்ப அதிகமா இருக்கே. தனி வீடு வாங்கறதும் முடியாத காரியம்” என்றாள் நந்தினி.

“இங்க அபார்ட்மெண்ட் தான் பரவாயில்லை. எதுக்கும் ரெண்டு மூணு வீடுகளைப் பார்த்துட்டு முடிவு பண்ணுவோம்” என்றவன், “எதுக்கும் இது சம்பந்தமாக அண்ணாகிட்ட ஒரு வார்த்தை கேக்கலாம்னு இருக்கேன். என்ன ‌சொல்ற?” என்றான் கார்த்திக்.

“அண்ணாகிட்ட மொதல்ல பேசறது தான் நல்லது” என்றவள், “பணத்தை எப்படி புரட்டப் போறோம்? என்றாள்.

“வங்கியில் லோன் போட்டுக்கலாம். அது போக மீதி பணத்துக்குத் தான் கொஞ்சம் கடன் வாங்கணும்” என்றவனிடம்,

“கடனா? வேண்டவே வேண்டாம். லோன் போட்டு வந்த பணம் போக மீதி பணத்திற்கு என்னோட கல்யாண நகைகளை வங்கியில் அடகு வைத்து பணத்தைப் புரட்டிக்கலாம். உங்க ஆபரேஷனுக்கே நெறைய பணம் செலவழிச்சாச்சு. இன்னும் வீடு கட்டன்னு நிறைய கடனை வாங்கி திணறாம இருக்கணும்” என்றாள் நந்தினி.

பிறகு, எதற்கும் பார்க்கலாம் என்று நிறைய அபார்ட்மெண்ட் வீடுகளைப் பார்த்தவர்கள், தனி வீடே கட்டலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

“ஏங்க… நாமளே வேலைக்காக ஊர் ஊரா போறோம். இப்போ போய் வீட்டைக் கட்டினா அங்க போய் இருக்கவா முடியும்?” என்று நந்தினி கேட்க,

“அப்படியெல்லாம் பார்த்தா கடைசி வரைக்கும் சொந்தவீட்டுக் கனவை மறந்துட வேண்டியதுதான். நாம வாங்கற வீட்டை வாடகைக்கு விட்டுடுவோம். நாம நம்ம வீட்டுக்குப் போகும்போது, திரும்பவும் கொஞ்சம் செலவு பண்ணினா வீடு நம்ம கைக்கு வந்துடும்” என்றான் கார்த்திக்.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் வாழ்க்கை உன் கையில் (நாவல் – பகுதி 6) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 11) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை