ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு ட்யூஷன் சென்றால் இரவு ஏழரை மணி போல தான் இருவரும் வீட்டுக்கு வருவார்கள்.
ஒரு குறிப்பிட்ட வயது வரை இருவரும் அடிதடி சண்டையென்று ஓரியாடிக் கொண்டிருந்தார்கள். அதன்பின் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டனர்.
கிருஷ்ணா பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வணிகவியல் துறையில் கல்லூரிப் படிப்பு முடியும் தருவாயில் இருக்க, தன் நண்பர்கள் அனைவரையும் ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தான்.
கல்லூரியில் கிருஷ்ணாவின் நெருங்கிய நண்பர்கள் சில பேர் ஏற்கனவே வீட்டுக்கு வந்திருந்ததால் ஓரளவு அவர்களைத் தெரிந்து வைத்திருந்தாள் நந்தினி.
“ஆன்ட்டி, கிருஷ்ணா தான் எங்க டிபார்ட்மென்ட்லயே ஃபர்ஸ்ட் மார்க் வாங்கறான். நாங்க மேல படிக்கறதுக்காக நிறைய காலேஜுக்கு அப்ளை பண்ணியிருக்கோம். ஆனா கிருஷ்ணா இதுவரைக்கும் எந்த காலேஜுக்கும் அப்ளை பண்ணவே இல்ல. ஏண்டா பண்ணலன்னு கேட்டா, ‘விடுடா பாத்துக்கலாம்’னு சொல்றான்.
நீங்களே என்னன்னு கேளுங்க ஆன்ட்டி. இப்ப கையோட படிச்சா ரெண்டு வருஷம்’ங்கறது சீக்கிரம் முடிஞ்சுடும். இதே வேலைக்குப் போய்ட்டா, படிக்க நேரமே கிடைக்காது ஆன்ட்டி. நீங்க சொன்னா மட்டும் தான் கிருஷ்ணா கேப்பான்” என்று சொல்ல…
வீட்டின் சூழ்நிலையைப் புரிந்த மகனாக ஒரு பக்கம் கிருஷ்ணாவை நினைத்து சந்தோஷமாகவும், நன்றாக படிக்கும் மகனை அதற்கு மேல் படிக்க வைக்க முடியாத சூழ்நிலையை நினைத்து நந்தினிக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
கிருஷ்ணாவின் ஃப்ரண்ட்ஸ் வந்ததைப் பற்றியும், பேசியதைப் பற்றியும் கார்த்திக்கிடம் நந்தினி சொல்ல, “நான் கிருஷ்ணாகிட்ட பேசறேன்” என்றான் கார்த்திக்.
அன்று பௌர்ணமி இரவு. வீட்டுக்கு வெளியே பால்கனியில் அப்பாவும், பிள்ளைகளுமாய் உட்கார்ந்திருக்க, மூவருக்கும் பிடித்த மசால் தோசையும், பூரியும், தயிர் சாதமும் செய்து கொண்டு பால்கனிக்கு எடுத்து வந்தாள் நந்தினி. எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
பேசிக் கொண்டிருக்கும் போதே, “கிருஷ்ணா நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கார்த்திக் சொல்லவும்
“சொல்லுப்பா” என்றான் கிருஷ்ணா.
“மனசுலருந்து பேசறேண்டா. நீ மேல படிக்கணும். ஒரே ஒரு டிகிரி பத்தாது. என்னப் பத்தி யோசிக்காத. கடன் வாங்கினாலும் கொஞ்ச காலத்துல கட்டிடலாம். இந்த காலம் போனா மேல படிக்கற வாய்ப்பே கிடைக்காம போனாலும் போயிடும். என்னைப் பத்தியும் வீட்டைச் பத்தியும் யோசிச்சு உன் வாழ்க்கையை விட்டுடாத” என்றான் கார்த்திக்.
“அதுக்குக்கில்லப்பா. வேலைக்குப் போயிண்டே படிக்கலாம்னு இருக்கேன். நானும் என் ஃப்ரண்டும் ஒரு ஆடிட்டர்கிட்ட சேரலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அப்படியே அரசு வேலைக்கும் பரிட்சை எழுதினா கண்டிப்பா ரெண்டு மூணு வருஷத்துல நல்லா வந்துடலாம்ப்பா” என்றான் கார்த்திக்.
“சரி. உன் மனசுக்கு எது சரின்னு படறதோ அதைப் பண்ணு” என்றான் கார்த்திக்.
இருபது நாளில் கார்த்திக்கிற்கும் மருத்துவமனையில் மூளை ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. கார்த்திக்கின் ஆபரேஷனுக்கு மருத்துவமனைக்கு வந்த நந்தினியின் அண்ணா கணேஷ் ஒரு வாரம் கூடவே இருந்தான்.
“அப்பா, அம்மா ரொம்ப கவலைப்பட்டா நந்தினி. அப்பாவுக்கு வர வர கொஞ்சம் கண்பார்வையும் பெருசா தெரியறதில்லை. தான் என்னோட வரன்னு ரொம்ப பிடிவாதம் பிடிச்சா. நான் தான் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தவுடனே ரெண்டு பேரையும் கூட்டீண்டு போறேன்னு சமாதானப்படுத்தீட்டு வந்தேன்” என்றான் கணேஷ்.
“எந்த உதவியா இருந்தாலும் தயங்காம கேளு நந்தினி. பணத்துக்கு என்ன பண்ற?” என்ற கணேஷிடம்
“ஒண்ணும் பிரச்சினையில்ல. இன்ஸ்யூரன்ஸ் போட்டிருக்குண்ணா. எதாவது வேணும்ன்னா நானே கேக்கறேன்” என்றாள் நந்தினி.
மாமியார் வீட்டிலிருந்து சொந்தங்களும், நந்தினியின் கூடப் பிறந்தவர்களும் ஆபரேஷனுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து கார்த்திக்கைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.
தொடர்ந்து மருந்து மாத்திரைகளைக் கொடுத்து ஒரு குழந்தையைப் போல நந்தினி கார்த்திக்கைப் பார்த்துக் கொண்டாள்.
நந்தினி வீட்டுக்கு குடும்பத்தோடு வந்திருந்த புவனா, நந்தினியைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டாள்.
“நம்ம கூடப் பொறந்தவங்க எல்லாரையும் விட நீதான் தைரியமா இருப்ப. ஆனா உனக்கு தான் இன்னும் எத்தனை கஷ்டமோ?” என்றவளிடம்
“எனக்கென்னடி. நான் நல்லா தான இருக்கேன்” என்றாள் நந்தினி.
“ம்… நல்லா இருக்க. வீட்டுக்காரனை நல்லா பாத்துக்கற. பெரியவனை டிகிரி முடிக்க வச்சுட்ட. சின்னவனை நல்ல பள்ளிக்கூடத்துல சேத்தியிருக்க. ஆனா நீ சந்தோஷமா இருக்கயா? உன்னோட காலம் பூரா அவரோட உடம்பைப் பாத்துக்கறதுலயும், வீட்டை கவனிக்கிறதுலயுமே போயிடுத்து நந்து” என்று சொல்ல, தன்னையும் மீறி கண்களில் வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்
“வாழ்க்கைல எல்லாமே எல்லாருக்கும் கிடைக்காது. ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். எது நமக்கு கிடைச்சுருக்கோ அதை நெனச்சு திருப்தி பட்டுண்டு சந்தோஷமா வாழறது தான் வாழ்க்கை. நடக்காத ஒண்ணை நெனச்சு குறை பட்டுண்டு இருந்தா வீணா எல்லோருக்கும் கஷ்டம். என்னோட எந்த கஷ்டமும் பசங்கள பாதிக்கக் கூடாதுன்னு தான் எப்பவும் நான் சந்தோஷமாவே இருக்கற மாதிரி காமிச்சுக்கறேன்” என்றவள்
“நாம உடைஞ்சு உக்காந்தா வீடும் உடைஞ்சு போயிடும். ஓடற வரைக்கும் ஓடி என்னோட கடமையெல்லாத்தையும் முடிச்சுட்டு இருந்தமாதிரியே படுக்காத கொள்ளாத போயிடணும்’ங்கறது தான் என்னோட ஆசைடி” என்றாள் நந்தினி.
“என்ன நந்தினி இப்படி பேசற. அதெல்லாம் பேரன், பேத்தி எடுத்து நாமெல்லாம் பொறுமையா மேல போலாம். இப்பவே போய் என்ன பண்ணப் போறோம். சின்ன வயசுல தான் குடும்பம் குடும்பம்னு இவங்க பின்னாடியே சுத்தறோம். நம்ம கடமையெல்லாம் முடிச்சுட்டாவது நம்ம படிக்குன்னு கொஞ்ச காலம் நாம வாழணும்” என்றாள் புவனா.
“அதென்ன நமக்கான வாழ்க்கை?” என்றவுடன்
“அது என் கனவு வாழ்க்கை. காலைல எழுந்தோமா, வீட்டுக்காரனோட காலார வாக்கிங் போனோமா, வர வழியிலயே ஒரு கடைல நின்னு இட்லியும், கெட்டி சட்னியும் சாப்பிட்டோமா, மதியம் ஒரு ரசஞ்சாதம், ஒரு காய் அப்பறம் நிம்மதியா ஒரு குட்டித் தூக்கம். சாயங்காலம் ஒரு நடை, பசங்களுக்கு ஒரு ஃபோன் கால், நைட் ஒரு தயிர் சாதம். அவ்வளவுதான்” என்று முடித்தவளிடம்
“அதுதான அன்னைலருந்து இன்னைக்கு வரைக்கும் நீ சாப்பாட்டுராமிதாண்டி” என்ற நந்தினி
“என்னடா அகமதாபாத்துல இருக்கயே, அப்படியே பூரி, போஹா (அவல்),டோக்ளா, கிச்சடின்னு மாறியிருப்பன்னு நெனச்சேன்” என்றாள்.
“உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் நம்ம அயிட்டமெல்லாம், தினமும் சாப்பிடற சாப்பாடு மாதிரி ரெகுலரா இருக்கும். அங்கேத்து உணவு நம்ம தயிர்சாதத்துக்கு தொட்டுக்கற ஊறுகாய் மாதிரி. அவ்வளவுதான்” என்றாள்.
“அதுக்கும் உதாரணம் சாப்பாடு தானா?” என்று நந்தினி சிரிக்க
“சித்தி… அம்மா மனசார இவ்வளவு சந்தோஷமா இருந்து பாக்க எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று கிருஷ்ணா சொல்லவும்
“இங்க மட்டும் என்னவாம்? அப்பா பின்னாடியும், எங்க பின்னாடியுமே அம்மாவுக்கு வேலை சரியா இருக்கும். பெரிப்பாவ பாக்க வந்த சாக்குல பெரிம்மாவ பாத்ததும் அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கா” என்று கிண்டலடித்த புவனாவின் குழந்தைகளும் மனதுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டனர்.
புவனாவின் கணவருக்கு லீவ் கிடைக்காததால் புவனாவும், குழந்தைகளும் விமானத்தில் வந்துவிட்டு மூன்று நாட்கள் தங்கி இருந்துவிட்டுச் சென்றனர். நீண்ட நாள் கழித்து தன் வீட்டிலிருந்து கூடப் பிறந்தவர்கள் வந்து போனது நந்தினிக்கு திருப்தியாக இருந்தது. அதுவும் புவனாவுடன் படுத்துக் கொண்டு இரவு பனிரெண்டு மணி வரை அரட்டை அடித்துக் கொண்டே படுத்துக் கொண்டிருந்தது தன் இளமைக் காலத்திற்கே அவளை அழைத்துச் சென்றது.
“ஏண்டி… ரெண்டு பேரும் படுத்து தூங்குவீங்களா மாட்டீங்களா? அப்படி என்ன தான் பேசுவீங்களோ? ராப்பேய் மாதிரி மணி பன்னிரண்டானாலும் அக்காவும், தங்கையும் தூங்கறதில்ல. படுங்க” என்ற கார்த்திக்கின் அதட்டலில் போர்வையைப் தலையோடு போர்த்திக் கொண்டு போர்வைக்குள் அரட்டையடித்துவிட்டு அப்படியே இருவரும் தூங்கி விடுவார்கள்.
நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து பிறகு கார்த்திக்கை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தனர்.
“ஒரு மூணு நாலு வாரத்துக்கு அடிக்கடி அவருக்குத் தூக்கம் வரும். அதிக நேரம் அவரோட பேச வேண்டாம். அதிகம் கோபப்படற மாதிரி அவர் முன்னாடி பேசாதீங்க” என்று அறிவுரை கூறி அனுப்பிய டாக்டர், “நல்லா ரெண்டு மாசம் ரெஸ்ட் எடுத்துட்டு இன்னொரு ரெவ்யூ பாத்துட்டு ஆஃபீஸ் போறதப் பத்தி பேசிக்கலாம்” என்றார்.
நந்தினிக்கு நாள் முழுக்க வீட்டு வேலையிலும், கார்த்திக்கைப் பார்த்துக் கொள்வதிலுமே நேரம் சரியாக இருந்தது.
ராகுலின் பரிட்சையும் முடிந்ததால், சிறு வயதிலிருந்தே அவன் ஆசைப்பட்ட தபலா வாத்தியத்தைக் கற்றுக் கொள்ள ஒரு நல்ல குருவிடம் சேர்த்துவிட்டாள் நந்தினி. கிருஷ்ணா கல்லூரி முடித்த கையோடு ஒரு ஆடிட்டரிடம் சேர்ந்து கொண்டான்.
“அம்மா, இப்போதைக்கு சம்பளம் அளவாதான் கிடைக்கும். ஆனா மேல படிக்கறதுக்கு, மத்த பரிட்சை எழுதறதுக்கு இதவச்சு கொஞ்சம் சமாளிக்கறேன். எப்படியும் இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல நல்ல ஒரு கம்பெனில சேர்ந்துடுவேம்மா” என்றான் கிருஷ்ணா.
“உன்னை இன்னும் மேல படிக்க வைக்க தான் எங்க ரெண்டுபேருக்கும் ஆசை இருக்கு. ஆனா இப்பேத்து சூழ்நிலைல எங்களால முடியல. பெத்தவா நம்மள மேல படிக்க வைக்கலயேன்னு நெனச்சுக்காதடா. வேலைக்குப் போயிண்டே படி. நீ எது பண்ணினாலும் நன்னா வருவ. மாசாமாசம் உனக்கு கொஞ்சம் பணம் அனுப்பறேன். நீ வாங்கற பணத்தையும், நான் அனுப்பறதையும் வச்சுண்டு கொஞ்சம் சமாளிச்சுக்கோ” என்றாள் நந்தினி.
“சரிம்மா” என்றவன்
“நான் தனியா ரூம் எடுத்துக்கல. என் ஃப்ரண்டு ஆதித்யாவோட தான் தங்கிக்கப் போறேன். அதனால ரூம் வாடகை, மத்த செலவு எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கலாம்னு இருக்கோம்மா” என்று சொல்ல
“அதுவும் சரிதான். தனியா இல்லாத மாதிரியும் இருக்கும். ரெண்டு பேரும் போட்டி போட்டு படிப்பேள். செலவும் குறையும். தப்பில்லடா. வாழ்க்கைல முன்பாதி கஷ்டப்பட்டு உழைச்சா பின்பாதி நன்னா அமையும்னு சொல்லுவா. ஆதியும் ரொம்ப நல்ல பையன். ஆனா என்னால அடிக்கடி அப்பாவ விட்டுட்டு வர முடியாது. அதனால நீ அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போ. ஆனா, எப்போ ஃபோன் பண்ணினாலும் எடுக்கணும். வெளியில இருக்கறப்ப எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கணும்” என்று நந்தினி சொல்ல
“சரிம்மா” என்றவன் பெங்களூரின் கோரமங்கலாவில் நண்பன் ஆதித்யாவோடு ஒரு ரூம் எடுத்துக் கொண்டு தங்கிக் கொண்டான்.
அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்தே இருந்ததால், கிருஷ்ணா இல்லாமல் ராகுலுக்கு வெறுமையாக இருந்தது.
கிருஷ்ணா வெளியே சென்ற பிறகு தான் ராகுலுக்கும் பொறுப்பு வந்தது. அம்மா மூன்று பேரையும் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாகவே சமாளிக்கிறாள் என்ற எண்ணம் வந்தது.
அம்மாவுக்கு உதவியாக கடைக்குச் சென்று வீட்டுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு வருவான் ராகுல். வாரத்தின் நடுவில் ஃபோன் செய்து பேசும் கிருஷ்ணா, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து போனான்.
சொன்னது போல் கிருஷ்ணாவும் அவன் நண்பனும் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஆடிட்டர் ஆஃபீஸில் சேர்ந்து கொண்டனர். வந்த வருமானத்தில் கிருஷ்ணா அவன் படிப்புக்கான செலவை சமாளித்துக் கொண்டான்.
கிருஷ்ணாவின் பிரிவு நந்தினியை மிகவும் பாதித்தது. எப்போதும் கிருஷ்ணாவுடன் வெளியே சென்று வந்த நந்தினி, அவன் தனியே சென்ற பிறகு மிகுந்த தனிமையை உணர்வோம் என நினைத்திருந்தாள். ஆனால் நடந்தது வேறு. அவளைப் புரிந்து கொண்டிருந்த ராகுல் அந்த வெற்றிடத்தை நிரப்பினான்.
கார்த்திக்கும் மூன்று மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். ஆனாலும் தொடர்ந்து வேலை செய்வதில் மிகுந்த களைப்படைந்தான். அடிக்கடி முன்கோபமும் வந்தது.
வீட்டுக்கு வரும்போது நந்தினி யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால், “எப்பப்பாரு என்ன அரட்டை?” என்று கேட்டுக் கொண்டே வருவான்.
பக்கத்துவீட்டு வித்யா, “நந்தினி இருக்காளா?” என்று கேட்டுக்கொண்டே வந்தால்
“நந்தினி இல்ல. வெளியே போயிருக்கா” என்பான் கார்த்திக்.
“ஏங்க… வீட்டுக்குள்ளேயே இருக்கேன். நான் இல்லன்னு சொல்லி அனுப்பறேளே” என்பவளிடம்
“அப்பவாவது எனக்கு அடிக்கடி நம்ம வீட்டுக்கு அவா வரது புடிக்கலன்னு புரிஞ்சுக்கறாளான்னு பார்ப்போம்” என்றான் கார்த்திக்.
“யாருக்கும் வேலை இல்லாம இல்ல. ஆனா அதுக்குன்னு நடுவுல நாமளா கொஞ்ச நேரம் ஒதுக்கீண்டு பேசினா, எத்தனை கவலை இருந்தாலும் பெருசா தெரியாது” என்று நந்தினி சொல்லி முடிக்க
“ஆமாமா. உனக்குன்னு ஏதாவது கவலை இருந்தா தான” என்று சொல்லிக் கொண்டே, “உனக்கென்ன குறை? உன்னை நன்னாதான வச்சுருக்கேனே” என்றான் கார்த்திக்.
சிரித்தவள், “நான் சந்தோஷமா இருக்கேனா இல்லையான்னு நான் தான் சொல்லணும். நீங்களே முடிவு பண்ணினா எப்படி?” என்றாள் நந்தினி.
கிருஷ்ணாவும், ஆதித்யாவும் சேர்ந்து தங்கிக் கொண்டு வேலைக்குச் சென்று கொண்டே அரசு வேலைக்கான பொது தேர்வுக்களை எழுதிக் கொண்டிருந்தனர்.
(தொடரும் – ஞாயிறு தோறும்)
GIPHY App Key not set. Please check settings