ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இதுவரை:
பெரிய தொழிலதிபர் பரந்தாமனின் கார் டிரைவர்கள் ரவி, துரை மற்றும் கனகு ஒவ்வொருவரும் மர்மமான முறையில் உயிரை விடுகிறார்கள். தன் ஆருயிர்க் காதலியான தாமரையைக் காணாமல் சூர்யா தவித்துக் கொண்டிருக்கும் போது, அவளுடன் தங்கியிருக்கும் கல்பனா மூலம் தகவல் கிடைக்கிறது. விஜய் தன் மனைவி ரம்யா எப்போது நினைவு திரும்பி, நடந்த விஷயங்களைச் சொல்வாள் என காத்துக் கிடக்கிறான்.
இனி:
பூங்காவில் சூர்யாவைச் சந்தித்து, தாமரையின் புத்தகத்துக்கு நடுவில் கிடைத்த காகிதத்தை, சூர்யாவின் கையில் கொடுத்து விட்டு, கல்பனா அங்கிருந்து வேகமாக வெளியேறினாள். கல்பனா பேசிய விதமும், அவளின் பயமும் சூர்யாவிற்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது.
பரபரப்புடன் கையில் இருந்த அந்தக் காகிதத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தான். தாமரையின் அழகான கையெழுத்து. ஆனால் அவசரகதியில் என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்று தெரியாமல் சுருக்கமாக தகவலை எழுதி இருந்தாள் தாமரை.
“ஆருயிர் சூர்யாவிற்கு,
உங்களிடம் நிறைய விஷயங்களை நான் இதுவரை சொல்லவில்லை. குறிப்பாக என் குடும்பச் சிக்கல்களை சொன்னதில்லை.
அதை ஃபோனில் சொல்ல இயலாத நிலையில் நான் இருக்கிறேன். கூடிய விரைவில் உங்களை நேரில் சந்திக்கும் போது, எல்லா பிரச்சனைகளையும் உங்களிடம் சொல்லி, அதிலிருந்து விடுபட ஆலோசனை கேட்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது.
ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. கண்டிப்பாக நம் காதல் விவகாரத்தால் எங்கள் வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இது வேறு விதமானது.
ஏன் இவ்வளவு நாள் ஃபோனில் பேசும் போதோ, வாட்ஸ்ஆப்பில் சாட் செய்யும் போதோ அதைப் பற்றி சொல்லவில்லை என்று நீங்கள் நினைக்கலாம்.
நான் கண்காணிக்கப்படுகிறேன். என்னுடைய அலைபேசி உரையாடல்கள், சாட்கள், மின்னஞ்சல் பரிமாற்றங்கள் என எல்லாமே கண்காணிக்கப்படுகின்றன. கண்காணிக்கப் படுவதாக எனக்குத் தோன்றுகிறது. அது 99% உண்மையும் கூட. அதற்குக் காரணம் குடும்ப விஷயத்தை நான் வெளியில் யாரிடமும் சொல்லி விடக் கூடாது என்பதற்காகத் தான்.
அதுவும் சமீப நாட்களாக சிக்கல் அதிகமாகிக் கொண்டே போகிறது. கூடிய விரைவில் உங்களைச் சந்தித்து எல்லாவற்றையும் கொட்டி விட வேண்டும் என்ற துடிப்பில் இருக்கிறேன்.
இதைத் தபாலில் அனுப்பக் கூட எனக்கு பயமாக இருக்கிறது. எங்கள் வீட்டு விஷயத்தைத் தெரிந்து கொண்டதற்காக உங்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடக் கூடாதே…. அதற்காகத் தான் இவ்வளவு பயம்.
இந்தக் கஷ்டங்கள் என்னோடு போகட்டும். என்றாவது நீங்கள் என்னைத் தேடி வரும் போது, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் கடிதம் உங்கள் கைக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவசரகதியில் இதை எழுதுகிறேன்.
உங்களுக்காகக் காத்திருக்கும்
தாமரை”
படித்த முடித்த சூர்யாவிற்கு வயிற்றில் பயம் சுரந்து தொண்டையை அடைத்தது. தாமரை இதை எப்போ எழுதினான்னு தெரியலையே. அவளுக்கு என்ன ஆபத்து வந்திருக்கும்?
இப்ப எங்கே இருக்கா, எப்படி இருக்கா? இதெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கறது? இதுல டேட் எதுவும் போடவே இல்ல. இதை எழுதினதுக்கு அதுக்கப்புறம் தான் நான் ஃபோன் பண்ணப்போ, தாமரை ஃபோன் எடுக்கலையோ?
அப்போ ஏதோ சிக்கல்ல மாட்டியிருக்கான்னு தானே அர்த்தம். எங்கே எப்படிப் போய் தாமரையைக் கண்டுபிடிக்கறது?
துக்கம் நெஞ்சை அடைப்பது போல ஒரு சொல்ல முடியாத அவஸ்தை சூர்யாவிற்கு. சட்டென்று விஜய் ஞாபகம் தான் வந்தது. விஜய்க்கு ஃபோன் செய்து பார்த்தான்… எடுக்கவில்லை. வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பினான்.
“ஹாய் விஜய், ஒரு பிரச்சனை…. ரொம்ப அவசரம். உன்னை உடனே பார்த்துப் பேசணும்.”
விஜயிடம் இருந்து உடனே பதில் வந்தது.
“சரி, கே.ஜி ஹாஸ்பிடல் கிளம்பி வா. ரூம் நம்பர் 244ல நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”
இதைப் பார்த்ததும் சூர்யாவிற்கு இன்னும் கவலையும், அதிர்ச்சியும் அதிகமானது.
‘எதுக்கு ஆஸ்பத்திரியில் இருக்கான்? அவனுக்கு ஏதாவது உடம்பு முடியலையா? அதனாலத் தான் நான் ஃபோன் பண்ணப்போ எடுக்கவே இல்லையா? எனக்கு ரிப்ளை பண்ணாம இருந்தானா? அவன் ஏதோ சிக்கல்ல இருக்கும் போது, என் பிரச்சனையை எப்படி அவன்கிட்ட சொல்லி, தீர்வு கேட்கறது? சரி, நேர்ல போய்ப் பார்ப்போம்’
பதட்டத்தோடு கே.ஜி ஹாஸ்பிடலுக்கு விரைந்தான் சூர்யா. பரபரப்பான அந்த வேளையில், கோவையின் மையப் பகுதியில் இருந்த கே.ஜி ஹாஸ்பிடல் கம்பீரமாக எழுந்து நின்றிருந்தது. ரிசப்ஷனில் விசாரித்துக் கொண்டு அறை எண் 244ஐ நோக்கி விரைந்தான் சூர்யா.
அறையின் வாசலில் விஜயைப் பார்த்ததும் கொஞ்சம் தைரியம் வந்தது.
‘பரவாயில்ல… இவனுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல போல. இவன் ஏன் இங்க இருக்கான்?’
குழப்பத்துடன் வேகமாக அவனை நோக்கி நடந்தான்.
“என்னாச்சு விஜய்? ஏன் இங்க இருக்கே? உள்ளே யாரு…?”
மௌனமாக அவனை உள்ளே அழைத்துப் போனான் விஜய். ரம்யாவைப் பார்த்ததும் ஆடிப் போய் விட்டான் சூர்யா.
“விஜய், ரம்யாவுக்கு என்ன ஆச்சு? இதனாலத் தான் ஃபோன் எடுக்கலையா? என்னடா இப்படிப் பேச்சு மூச்சு இல்லாம கிடக்கறாங்க? என்னடா… என்கிட்ட கூட இதெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு என்னை ஒதுக்கி வச்சுட்டியா?”
“ரிலாக்ஸ் சூர்யா. பொறுமையா பேசலாம். இப்படி உட்காரு”
நடந்த விஷயங்களை சுருக்கமாகச் சொல்லி முடித்தான் விஜய்.
“இது தான் பிரச்சனை சூர்யா. நீ இதைக் கேட்டா ரொம்ப வருத்தப்படுவேன்னு எனக்குத் தெரியும். ரம்யாவை உன் கூடப் பிறக்காத தங்கை மாதிரி நீ நினச்சுட்டிருக்கே. அவ இப்படி நினைவே இல்லாம இருக்கறதைப் பார்த்தா உன்னால தாங்கிக்க முடியாதுன்னு தெரியும். எப்படியாவது ஒரு ரெண்டு நாள்ள அவ கண்ணு முழிச்சுடுவா. அதுக்கப்புறம் உனக்குத் தகவல் சொல்லலாம்னு தான் ஃபோன் எடுக்காம இருந்தேன்.
உன்கிட்ட ஃபோன்ல பேசினா எனக்குப் பொய் சொல்ல முடியாது. என்னை அறியாம உளறிடுவேன். அதனாலத் தான் எந்த சாட்க்கும் பதில் பண்ணாம மௌனமா இருந்தேன். சாரிடா சூர்யா. அது இருக்கட்டும், உனக்கு ஏதோ பிரச்சனைனு சொன்னியே… என்ன விஷயம்?”
சூர்யா சட்டென்று மிகவும் சோகமானான். தன் சட்டைப்பையில் வைத்திருந்த தாமரையின் கடிதத்தை விஜயிடம் எடுத்துக் காட்டினான். அவசர அவசரமாக அதைப் படித்து முடித்தான் விஜய்.
“டேய்… இது….. தாமரை…. நீ சொல்லி இருக்கியே… அந்தப் பொண்ணா?”
தலையை மட்டும் அசைத்தான் சூர்யா.
“என்னடா இது… என்ன பிரச்சனை?”
“தெரியல விஜய். தாமரை இப்ப எங்கே இருப்பான்னு தெரியல. என்ன ஆச்சுன்னும் தெரியல”
“உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?”
“தெரியலடா. அவங்க வீட்ல ஏதோ பிரச்சனைனு போட்டிருக்கா. அவங்க அப்பாவா, அம்மாவா, இல்ல வேற யாருமா…. அதைப் பத்தி எதுவுமே என்கிட்ட இதுவரை பேசினது இல்ல. என்ன பண்றதுன்னு தெரியல விஜய். அதனாலத் தான் உடனே உன்னைப் பாக்கணும்னு நினைச்சேன்.”
“சரி, கவலைப்படாதே. நான் சென்னைல எங்க டிபார்ட்மெண்ட்ல தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி, தாமரையோட அப்பா பத்தி ஏதாவது தகவல் கிடைக்குதான்னு விசாரிக்கப் பார்க்கறேன். நீ கவலைப்படாம இரு. சீக்கிரம் தாமரை பத்தின தகவலைக் கேட்டு உனக்குச் சொல்றேன்.”
சொல்லி விட்டு, மீண்டும் கடிதத்தை ஒருமுறை படித்தான். படித்து முடித்த போது, விஜய்க்கு ஏதோ ஒரு சந்தேகம் தோன்றவே, கவரில் இருந்து அந்தச் சின்ன துணியை எடுத்தான்.
“சூர்யா, இதைப் பாரு…. இந்தக் கையெழுத்து பழக்கமானதா?”
அதைப் பார்த்த சூர்யா அதிர்ந்து போனான்.
“விஜ….ய்….. இது தாமரையோட கையெழுத்து மாதிரி இருக்கே. இது எப்படி, எங்கே கிடைச்சுது? எப்போ கிடைச்சது?”
“சூர்யா, நல்லாத் தெரியுமா… இது தாமரையோட கையெழுத்து தானா? தாமரையோட லெட்டரைப் படிச்சதும் எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. இது ரம்யா மயங்கிக் கிடந்த இடத்துல, அந்தப் புதர்ல சிக்கியிருந்தது.”
“நல்லாத் தெரியும் விஜய். இது தாமரையோட கையெழுத்து தான். அப்படின்னா தாமரைக்கு ஏதோ பெரிய ஆபத்து. எதேச்சையா அதைப் பார்த்த ரம்யாவுக்கு இந்த நிலைமை. ரம்யாவுக்கு நினைவு திரும்பினா, தாமரையைப் பத்தி ஏதாவது தகவல் கிடைக்கும் இல்லையா. இப்ப என்ன பண்றது விஜய்?”
“டோன்ட் வர்ரி சூர்யா. இப்ப ரெண்டு பிரச்சனையும் ஒரே கேசாயிருச்சு. இனி சுலபமா சிக்கலைத் தீர்க்கலாம்னு தோணுது. தைரியமா இரு.”
விஜயின் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு இதமளித்தாலும், தாமரைக்கு என்ன ஆனதோ என்ற கலக்கத்துடன் அங்கிருந்து கிளம்பினான் சூர்யா.
எப்படியாவது தாமரையைப் பார்க்க வேண்டும் என்ற பரிதவிப்புடன் சூர்யா இருக்க, விதி வேறு விதமாக விளையாடியது.
(தொடரும் – சனி தோறும்)