ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
காட்சி-1
“நல்ல மழை பெய்ய போகுது வெளியே வந்து பாரேன்”- காயத்ரியின் அம்மா
காயத்ரி வெளியே வந்து கார் பார்க்கிங்கில் நின்று வானத்தை பார்த்தாள். நல்ல கருமேகம் மழை வந்தால் அடை மழை தான் என்று நினைத்துக் கொண்டு, “அம்மா நான் மாடிக்கு போறேன் நீயும் வா” என்று விரைந்தாள்
காயத்ரி நல்ல வடிவான, அழகான எழிலான, மாடர்னான பி.காம். இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. அவளை விட வடிவு அவளது வீடு. பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் செல்லும் வழியில் அவளது வீடு நல்ல பெரிய வில்லா டைப் வீடு கீழே இரண்டு அறையும் முதல் மாடியில் இரண்டு அறையும் பால்கனியோடு காட்சி தரும்.
காயத்ரி அறையில் உள்ள பால்கனியில் இருந்து பார்த்தால் கடல் தெரியும். காயத்ரிக்கு அங்கு அமர்ந்து டீ குடிப்பது எப்போதும் பிரியம். எந்த மனநிலையில் இங்கு வந்தாலும் ஒரு டீ குடித்தால் ரிலாக்ஸ் ஆகி விடுவாள்.
காயத்ரி மாடி ஏறி வருவதற்கு முன்பே மழை தூறல் ஆரம்பித்து விட்டது. தனது செல்போனை எடுத்துக்கொண்டு பால்கனியில் உள்ள சோபாவில் அமர்ந்தாள்.
நினைத்துப் பாருங்கள்… பால்கனி, இருள், மழை மேகம், மழை தூரல், சிறிது தூரத்தில் கடல், நல்ல காற்று காயத்ரிக்கு செல்போன் எதற்கு வேறு எதற்கு இளையராஜா பாட்டு தான்.
“அம்மா டீ போட சொல்லுமா”- காயத்ரி
“பொன்னி இன்னும் வரலாமா கொஞ்சம் வெயிட் பண்ணு” – காயத்திரியின் அம்மா
“போன் பண்ணுமா ஏன் இன்னைக்கு என்ன லேட்டு”- காயத்ரி.
“பண்றேன் பண்றேன”. தனது போனை எடுத்து பொன்னிக்கு கால் செய்தாள் காயத்ரியின் அம்மா….
காட்சி 2
மழை பெரிதாக வர போகும் சமயம் – பொன்னியின் வீடு.
பொன்னி தனது மகளை கடிந்து கொண்டிருந்தாள்
“ஒரு வேலையாவது செய்ராளா, அப்படியே அப்பன் மாதிரி”
கையிலிருந்து துடைப்பத்தை கீழே போட்டுவிட்டு “ஏமா கத்துற என்ன வேணும்” பொன்னியின் மகள்”
“மழை வந்துருச்சுடி பெரிசா வரும் போல இருக்கு சீக்கிரம் சாமானை எடுத்து வை, அந்த தார் சீட்டை எடு, சீக்கிரம் வா”, என்று அதட்டினாள்.
பொன்னி வீடு சிறிய வீடுதான் பெரும் மழைக்கு தாங்காது. கூரையிலும் ஏகப்பட்ட ஓட்டை அதுதான் பொன்னியின் அவசரத்திற்கு காரணம்.
பொன்னியின் செல்போன் இரண்டாவது முறையாக அடித்தது… பொன்னியால் எடுக்க முடியவில்லை.
படுக்கை, காய்கறி, மளிகை எல்லாம் கட்டில்மேல் இடம் மாற்றிக் கொண்டிருந்தாள் பொன்னி. வெளியே கட்டி வைத்திருந்த நாய்க்குட்டியை உள்ளே இழுத்து வந்தாள் பொன்னியின் மகள்
“அம்மா எனக்கு உயரம் பத்தல, தார்பாய் எடுக்க முடியல. அப்பா எங்க”
“அது எங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்கோ. போன தடவை வந்த காசை மோப்பம் பிடித்து எடுத்துட்டு போய் குடிச்சிட்டான் பாவி”
மழை வேகம் எடுக்க பொன்னிக்கு பயம் வந்தது.
பொன்னியின் வீடு அதே பெசன்ட் நகரில் கடலுக்கு பக்கத்தில் இருக்கிறது. குடிசையும் ஓட்டுவீடும் நிறைந்திருக்கும் தெரு அது.
பொன்னியின் வீடு ஓட்டு வீடு தான் என்றாலும் மழைக்கு ஆங்காங்கே ஒழுகும் போனமுறை மழையில் பொன்னியின் மகளின் சர்டிபிகேட் வரை பாழாய்போனது. அந்த சர்டிபிகேட்காக பொன்னி அலைந்தது தனிக்கதை.
இந்த முறை எதை எதையெல்லாம் காப்பாற்ற வேண்டுமோ அதையெல்லாம் கவனமாக எடுத்து வைத்தால் பொன்னி.
பொன்னியின் செல்போன் மூன்றாவது முறையாக அடித்தது. செல்போனை அட்டென்ட் செய்தாள் பொன்னி.
“என்ன பொன்னி வந்துட்டு இருக்கியா” – காயத்ரியின் அம்மா
“அம்மா மழை பெய்யுதுமா எப்படி வரதுன்னு தெரியல” -பொன்னி
“ஒரு குடைய புடிச்சிகிட்டு வா பொன்னி, இங்க ஒன்னும் பண்ணாம கிடக்கு எனக்கு உடம்புக்கு முடியாதுனு உனக்கு தெரியும் இல்ல” – காயத்திரியின் அம்மா
“வூடு ஒழுவுதுமா, பொண்ணு தனியா இருக்கா மழை விடாது போல இருக்குமா, இன்னைக்கு ஒரு நாளு”ன்னு இழுக்கும்போதே எதிர்ப்புறம்
“அய்யய்யோ பொன்னி அப்படி சொல்லாத ஒரு வேலையும் இல்ல சீக்கிரமா ஒன்ன அனுப்பி விடுறேன் என்ன உடனே வா” என்று போனை கட் செய்தாள் காயத்ரியின் அம்மா
“மதிக்கெட்ட மழைக்கு நேரம் காலம் தெரியவில்லை. வீடு வாசலும் இல்லை” பாரபட்சமின்றி மழை பெய்ய தொடங்கியது.
கால் கட் பண்ணிய பிறகு பொன்னி என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள். நல்ல மழை காற்று அங்கங்கே ஒழுகத் தொடங்கியது வீடு.
பொன்னியின் மகள் ரேடியோ வைத்தாள் “சங்கீத மேகம்” என்று இளையராஜா வெளியே வர
“ரேடியோவை நிப்பாட்டுடீ சீக்கிரமா தார்பாய் எடு கட்டிட்டு வேலைக்கு போகணும்” என்றாள் பொன்னி
ஏனோ ரேடியோ பாடல் தலை வலியைக் கொடுத்தது அவளுக்கு. மழை நன்றாக அடித்தது.
காட்சி 3.
ஒரு பெரிய பிளாஸ்டிக் பையை கொண்டு பாதி உடம்பை மறைத்தவாறு காயத்ரி வீட்டை அடைந்தபோது மணி ஏழு இருக்கும்.
பாதி நனைந்து பொன்னியை பார்த்து, “ஏண்டி ஒரு ஆட்டோல வந்து இருக்கலாம் இல்ல, இப்படியா நனைந்து வருவா” – காயத்ரி அம்மா
பொன்னி ஒரு முறை காயத்ரியின் அம்மாவை பார்த்து ஆட்டோவா என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் அவள் பார்க்கும் பார்வையில் அந்த ஆட்டோ வாடகைக்குள் ஒரு நாள் செலவு அடங்கி விடும் என்பது போல் இருந்தது.
“பரவாலமா வந்துட்டேன்” என்றாள் பொன்னி.
“பாத்திரம் கழுவிட்டு டீ போடு ரொம்ப நேரமா தலை வலிக்குது” காயத்திரியின் அம்மா
அதற்குள் வாசலில் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது காயத்ரி ஓடி வந்து கதவைத் திறந்தாள். zomatoவில் ஆர்டர் செய்த மிளகாய் பஜ்ஜியும் கட்லட்டும் வந்தது. காயத்திரியும் அவளது அம்மாவும் மழையை ரசித்தவாறு பால்கனி சோபாவில் உட்கார்ந்து பஜ்ஜியும் கட்லட்டும் சுவைத்தார்கள். சிறிது நேரத்தில் டீயும் வந்தது.
ஒரு ஹாலோகிராம் லைட் வெளிச்சத்தில் மழையின் சிறு இடைவெளியில் கடல் மிக ரம்மியமாக தெரிந்தது காயத்திரிக்கு.
காற்றும் மழையும் அந்த பால்கனி முழுவதும் குளிரை சேகரித்து வைத்திருந்ததால் காயத்ரிக்கு அந்த குளிரை உணர முடிந்தது. மனம் அமைதியடைவதாய் உணர்ந்தாள். குளிருக்கு இதமாய் டீ அவளை எங்கோ கொண்டு சென்றது.
இளையராஜா பின்னணியில் மழையும் கடலையும் மிக அற்புதமாக மாற்றிக் கொண்டிருந்தார். இதழை குவித்து டீயை ஒருமுறை சுவைத்து விட்டு சோபாவில் கண்மூடி சாய்ந்தாள் காயத்திரி.
காட்சி 4
காயத்ரி விட்டு அடுப்பாங்கரை.
வேக வேகமாக பாத்திரங்களை கழுவினாள் பொன்னி. அடுப்பங்கரையில் பாத்திரங்கழுவும் தொட்டிக்கு மேலே ஒரு பெரிய ஜன்னல் இருக்கும். அங்கு சுத்தி இருக்கிற பெரிய வீடுகளும் மிக அழகாக தெரியும். ஆனால் அன்று இரவு ஆனதால் மழை பெய்ததால் முழுவதும் இருட்டாக இருந்தது.
ஒரு இடி இடித்தது ஜன்னல் வழியாக மழையை பார்த்தாள் பொன்னி. மின்னல் ஒளியில் மழையின் வேகம் மிகத் துல்லியமாக தெரிந்தது. ஒரு முறை அங்கு உள்ள அனைத்து வீடுகளும் தெரிந்து மறைந்தது.
இன்னொரு முறை ஒரு பெரிய இடி இடித்தது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரே இருள், மழை, பொன்னியை கலவரம் அடையச் செய்தது.
காயத்ரி வீட்டில் ஜென்ரேட்ர் இருந்ததால் மின்சாரம் உடனே வந்தது.
சற்று நேரத்தில் பொன்னியின் கைபேசியும் அடித்தது. எதிர்முனையில் பொன்னியின் மகள்.
“அம்மா கரண்ட் இல்லாமா”
“அப்பா இன்னும் வரலையா தனியா தான் இருக்கியா”
“இன்னும் வரல நான் தனியாத்தான் இருக்கேன் பயமா இருக்கு எப்ப வருவ”
“வந்துடுறேன் சீக்கிரமா ரொம்ப ஒழுகுதா வீடு”
“அங்கங்க பாத்திரம் வச்சிருக்கம்மா பரவால்ல நீ சீக்கிரமா வா”
“வரன் வரன்”
“அம்மா”
“இப்ப என்னடி”
“பசிக்குதுமா”
பசி மழையை விட கலவரப்படுத்தியது பொன்னியை.
“வாங்கியரமா” என்று செல் போனை கட் செய்தால் பொன்னி.
மதியம் செய்தது ஏதாவது இருந்தால் எடுத்துச் செல்லலாம் என்று Hot packயை திறந்து பார்க்கிறாள் பொன்னி, ஒன்றும் இல்லை. சரி இரவு உணவில் கொஞ்சம் கேட்கலாம் என்ற நம்பிக்கையுடன் மாடி ஏறி காயத்ரி அம்மாவிடம், “என்னமா சமையல் செய்ய” என்று வினவினாள் பொன்னி
“கொஞ்சம் இரு பொன்னி” என்றாள் காயத்ரியின் அம்மா.
“என்னமா வேணும் இரவு சாப்பாட்டுக்கு பொன்னி நிக்கிறா பாரு”
“அம்மா வெளிய ஆர்டர் பண்ணலாமா” என்றாள் காயத்ரி.
இருவரும் ஒன்றுகூடி ரத்னா கபேயில் இட்லி சாம்பார் ஆர்டர் செய்யலாம் என்று முடிவு செய்தார்கள்
“பொன்னி சமையல் வேண்டாம் பாத்திரம் கழுவிட்டு, வீடு கூட்டிட்டு, நீ வீட்டுக்கு போகலாம்” காயத்ரி அம்மா
மழையை சமாளிப்பதா இல்லை பசியை சமாளிப்பதா என்ற கேள்வியுடன் மாடிப்படி இறங்கி வந்தாள் பொன்னி.
காசு கேட்கலாம் என்று பார்த்தால் இந்த மாதம் பல முறை காயத்ரி அம்மாவிடம் காசு வாங்கியாச்சு, இப்போது கேட்கவும் சங்கடமாக இருந்தது பொன்னிக்கு.
பல குழப்பங்களுடன் பாத்திரங்களை கழுவி முடித்தாள். சிறிது நேரத்தில் ரத்னா கபே வில் இருந்து இட்லி சாம்பார் வந்தது. சாம்பார் வாசனை வீடே மணமணத்தது. காயத்ரி பார்சலை வாங்கி விட்டு மறுபடியும் மாடிக்குச் சென்றாள். ஏனோ அந்த காட்சியை விட்டு அவளால் அகல முடியவில்லை.
எல்லா வேலையும் முடித்து விட்டு தனது பர்சை திறந்து பார்த்தால் பொன்னி இரண்டு பத்து ரூபாய் நோட்டும் ஒரு ஐந்து ரூபாய் சிலரையும் இருந்தது. மகளுக்கு சாப்பாட்டுக்கு இது போதும் என்று பிளாஸ்டிக் பையை எடுத்து தலையில் மாட்டிக் கொள்கிறாள்.
“அம்மா நான் கிளம்புறேன் மா”
“சரி பொன்னி பார்த்து போ”
“சரிமா”
வீட்டு வாசலுக்கு முன் வந்து நின்றாள் பொன்னி. ஒரே இருள் வீதி விளக்கு கூட இல்லை, மழையும் விடுவதாக இல்லை. பசியோடு தனது மகள் அங்கு தனித்து காத்திருக்கிறாள் என்ற மனதுடன் இட்லிக் கடையை தேடி நகர்கிறாள் பொன்னி.
மழை சிலருக்கு குளிரும்… சிலருக்கு சுடும்…
(முற்றும்)
Super story sir