ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வருண பகவானுக்கு சென்னை மேல் அலாதிப்பிரியம். ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழையை டிசம்பர் முதல் வாரமே முடித்து என் கடமை முடிந்தது என்று மகிழ்ச்சி அடைவார்.
அது மட்டுமல்ல… வெனிஸ் நகரில் மட்டும் தான் தெருவில் படகு ஓடுமா? சென்னையில் ஒடக்கூடாதா என்று ஏங்கும் சென்னை மக்களின் ஏக்கத்தைப் போக்க அரசு அதிகாரிகள் உதவியுடன் சென்னை நகரை வெள்ளத்தில் மிதக்கச் செய்து படகு சவாரிக்கு உதவுவார்.
அப்படி, வருண பகவானின் கருணையில் மிதந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாள்.
“கார்த்திக், எழுந்திரு எழுந்திரு” என்று அம்மா பதட்டத்துடன் அறைக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
வருங்கால மனைவியுடன் இளையராஜாவின் பின்னணி இசையில் கனவில் டூயட் பாடிக் கொண்டிருந்த கார்த்திக் திடுக்கிட்டு எழுந்தான். அலைபேசி மணி காலை 6:15 என்றது. யாருக்கு உடம்பு சரியில்லை என்று மனம் பதற கதவைத் திறந்தான் கார்த்திக்.
“என்ன அம்மா? அப்பாவிற்கு என்ன உடம்பிற்கு?” என்றான் கார்த்திக்.
“தெருவில் மழை வெள்ளம் புகுந்து வெள்ளக்காடாக உள்ளது. கீழ் வீட்டு மாமா அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். உனக்குத் தான் அப்பாவின் குணம் தெரியுமே? நீ கொஞ்சம் அப்பாவுடனே இரு. அவர் தேவையில்லாமல் எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொள்” என்றாள் அம்மா.
கார்த்திக்கின் தந்தை சிவராமன் யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டார், பழக மாட்டார். சற்று முன்கோபி என்று கூடச் சொல்லலாம். வீட்டிற்கு வரும் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மரியாதை நிமித்தமாக ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு அவருடைய அறைக்குள் பதுங்கிக் கொள்வார்.
தேவையில்லாமல் அவருடைய அறைக்கு மற்றவர்கள் வருவதோ அவருடைய புத்தகங்கள் எடுப்பதோ அவருக்குப் பிடிக்காது. எல்லாவற்றிலும் ஒழுங்குமுறை வேண்டும். கார்த்திக், அவனுடைய அம்மா மைதிலியைத் தெரிந்த அளவிற்கு சிவராமனை சுற்றுப்புறத்தில் ஒருவருக்கும் தெரியாது.
மாடிப்படியருகே சென்றான் கார்த்திக்… அப்பாவிடம் கீழ் வீட்டு மாமா சொல்லிக் கொண்டிருந்தார்.
“நேற்று பெய்த மழையில் ஏரி உடைந்து விட்டது. தண்ணீர் நம்முடைய குடியிருப்பில் நுழைந்து விட்டது. வெள்ளத்தின் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய தெருவில் உள்ள பத்து வீடுகளில் இரண்டு தான் மாடி வீடுகள். மீதி எட்டு வீடுகளிலும் எந்நேரத்திலும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் இருக்கிறது. என்ன செய்யலாம்” என்றார் கீழ் வீட்டு மாமா.
“அதிகாரிகளுக்கு போன் பண்ணி தகவலைத் தெரிவித்து விட்டால் அவர்கள் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வார்களே” என்றான் கார்த்திக்.
கீழ் வீட்டில் இருப்பவர்களை நம்முடைய மாடி வீட்டிற்கு கூட்டி வருவது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அப்பா என்ன சொல்வாரோ என்ற கலக்கம்.
அப்பாவின் பதில் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “இல்லை அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி அவர்கள் மீட்புப் பணி செய்வதற்கு நேரம் ஆகலாம். தண்ணீர் வரத்து மேலும் உயர்வதற்கு முன்னால் கீழ் வீட்டில் வசிப்பவர்களை முக்கியமான உடமைகளுடன் நம்முடைய வீட்டிற்குக் கூட்டி வருவோம்” என்றார்.
அதற்குள் தெருவில் தண்ணீர் இடுப்பு வரை உயர்ந்து விட்டது. “இந்த வெள்ளத்தில் எப்படி கூட்டி வரப் போகிறோம்” என்று யோசித்தான் கார்த்திக்.
அப்பா சொன்னார். “கார்த்திக், அம்மாவிடம் சொல்லி இரண்டு மூன்று எட்டு முழ வேஷ்டி, புடவைகள் எடுத்து வா. அவற்றைப் பிணைத்து ஒரு முனையை நம்முடைய வீட்டு வாசற்கதவில் இறுகக் கட்டி விடுவோம். மற்றொரு முனையை எந்த வீட்டிலிருந்து கூட்டி வருகிறோமோ அந்த வீட்டின் கதவில் கட்டுவோம். அந்தத் துணியைப் பற்றிக் கொண்டு அவர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து விடலாம்” என்றார்.
அப்பா சொல்படி மும்முரமாகக் காரியத்தில் இறங்கினான் கார்த்திக். மற்ற வீடுகளில் இருந்த இளைஞர்களும் உதவிக்கு வந்தனர். எட்டு வீடுகளில் இருந்த இருபத்து நான்கு பேர் கார்த்திக் வீட்டில் குடியேறினர்.
பத்து வீடுகள் இருந்த அந்த சிறிய தெருவில் இரு மாடி வீடுகள். மற்றொரு மாடி வீட்டிலிருப்பவர், “என் வீடு எனக்கு மட்டும் தான்” என்ற கொள்கை உடையவர்.
தெருவில் தண்ணீர் புகுந்து விட்டது என்றவுடன் குடும்பத்துடன் மாடியில் சென்று அமர்ந்து விட்டார். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட அவருக்கு மனமுமில்லை, நேரமுமில்லை.
கார்த்திக் வீடு, பெரிய கூடம், சமையலறை, இரண்டு படுக்கை அறை, சிறிய கம்ப்யூட்டர் அறை, பூஜை அறை கொண்டது. மற்றவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்தவுடன் மைதிலி எல்லோருக்கும் சூடான தேனீர் தயாரித்து வைத்திருந்தார்.
நேரம் செல்லச் செல்ல தேங்கிய தண்ணீர் அளவு உயர ஆரம்பித்தது. மழையும் நின்ற பாடில்லை. தெருக்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தொலைக்காட்சி வாயிலாக மழை எப்போது நிற்கும்? வெள்ளம் வடிவது எப்போது? என்று தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. மழை நின்றாலும், தெருவில் தண்ணீர் முழுவதும் வடிய மூன்று நாட்களுக்கு மேலாகலாம் என்று கைபேசி மூலம் செய்தி வந்தது.
வீடு முழுவதும் மக்கள். தனிமை விரும்பியான அப்பா மூன்று நாட்களை எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற கவலையில் ஆழ்ந்தனர் கார்த்திக்கும், மைதிலியும். ஆனால் அப்பாவின் மாற்றம் அவர்களை ஆச்சரியத்தில் தள்ளியது.
மைதிலி ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கி வைக்கும் பழக்கம் உள்ளவர், ஆகவே சாதம் சமைப்பதற்கும், சப்பாத்தி செய்வதற்கும் பிரச்சனை இருக்கவில்லை. காய்கறிகள் அதிகம் இல்லாததால் சுண்டல் போன்றவை செய்து சமாளித்து வந்தாள்.
சமுதாய சமையலறை போல கலந்த சாதம் செய்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உண்பது வாடிக்கை ஆயிற்று. ஆனால் எல்லோரும் உண்டார்களா என்று அறிந்த பின்பு தான் சிவராமன் உணவு எடுத்துக் கொள்வார். முடிந்தவரை எல்லோருடைய தேவைகளையும் கவனித்துச் செய்து வந்தார்.
பெண்கள் எல்லோரும் படுக்கை அறையில் உறங்குவது என்றும், மற்றவர்கள் கூடத்தில் அல்லது எங்கு இடம் உள்ளதோ அங்கு உறங்க வேண்டும் என்றும் முடிவானது.
எதிர்வீட்டிலிருந்து கார்த்திக் வீட்டில் வந்து தங்கிய குடும்பம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். கணவன், மனைவி, பத்து வயதுப் பெண் குழந்தை. கணவன், மனைவி இருவருமே காலையில் எழுந்தவுடன் அவர்கள் பெட்டியைத் திறந்து யேசுநாதர் படத்தைப் பார்த்து, கண்ணை மூடி தியானிப்பார்கள். இது உணவு உண்பதற்கு முன்பும், தூங்குவதற்கு முன்பும் நடக்கும்.
இதைக் கவனித்த சிவராமன் அவர்களிடம் சொன்னார் “நீங்கள் ஒவ்வொரு முறையும் பெட்டியில் இருந்து சுவாமிப்படத்தை எடுத்து வணங்குவது சற்றே சிரம்மாக இல்லையா? என்னுடைய பூஜை அறையில் யேசுநாதர் படத்தை வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால். உங்களுக்கு தேவைப்படும் போது வணங்குவதற்கு வசதியாக இருக்கும் அல்லவா”
“உங்கள் கடவுள் படங்கள் வைத்திருக்கும் இடத்தில் யேசுநாதர் படம் வைப்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?” என்று ஆச்சரியமாகக் கேட்டார் அவர்.
சிவராமன் சொன்னார். “சார், என்னைப் பொருத்தவரை மதம், தாய்மொழி இரண்டுமே தாய்க்குச் சமானம். நான் என் தாயின் மீது அன்பு வைத்திருக்கிறேன். அதைப் போல என்னுடைய நண்பர்களின் தாய் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
இந்துக் கடவுள்களை வணங்கும் எனக்கு, மற்ற மதத்தின் வழிபாட்டிற்குரிய தெய்வங்களின் மீது மிகுந்த மரியாதை உண்டு. எல்லா மதமும் மக்களின் நல் வாழ்விற்கான வழியைப் போதிக்கின்றன. இதை உணர்ந்தால் தேவையற்ற சச்சரவுகளுக்கு இடமிருக்காது.
அதைப் போலவே எனக்கு என் தாய் மொழி தமிழ் மீது அதிக பற்றுண்டு. அதே போல மற்ற மொழிகளின் மீது ஆர்வம் உண்டு. மற்றவர்களின் உணர்வை மதிக்கக் கற்றுக் கொண்டால் தேவையற்ற மதச்சண்டை, மொழிச் சண்டை ஆகியவற்றை தவிர்க்கலாம் என்பது என்னுடைய நம்பிக்கை.”
வீடுகளில் புகுந்த தண்ணீர் முழுவதுமாக வடிந்து, அவரவர்கள் தத்தம் வீட்டிற்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகியது. அந்த மூன்று நாட்களில் மற்றவர்களுடன் பழகியதை ஒரு புது அனுபவமாக உணர்ந்தான் கார்த்திக்.
தினமும் மாலையில் ஆன்மீகம், வாழ்க்கை முறை, சரித்திரம், உலக நடப்பு என்று பலவற்றைப் பற்றிப் பேசுவார் சிவராமன். தனிமை விரும்பி என்று மற்றவர்கள் நினைத்த அப்பாவின் மாற்றத்தின் காரணம் அறிய விரும்பினான் கார்த்திக். அப்பாவிடம் கேட்டான்.
“கார்த்திக், தாய் தந்தையர்க்கு ஒரே குழந்தை என்பதால் தனிமையில் வளர்ந்தேன். நான் ஒதுங்க மற்றவர்களும் ஒதுங்கினார்கள். நான் மற்றவர்களுடன் பழகாததன் காரணம், அதிகம் படித்திருக்கிறோம் என்ற கர்வம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நம்முடைய வீட்டில் வந்து தங்கியவர்கள் வசதியாக வாழ்பவர்கள். வீடிருந்தும் மற்றவர் வீட்டில் அடைக்கலம் புக நேர்ந்தது என்ற வருத்தம் அவர்களுக்கு இருக்கும். அவர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று உணர்ந்தேன்.
மைதிலி அவர்களின் உணவுத் தேவைகளை செவ்வனே பார்த்துக் கொண்டாள். அவர்களுடன் நன்கு பழகி அவர்களின் மனவாட்டத்தைப் போக்க வேண்டியது என்னுடைய கடமை என்று தோன்றியது. அதைத் தான் நான் செய்தேன். எனக்கும் இதனால் ஒரு நன்மை. மற்றவர்களுடன் பழகுவதனால் மனம் விசாலமடைகிறது என்பதை புரிந்து கொண்டேன். நம் முன்னோர்கள் சொன்னது உண்மை தான்.
“தனி மரம் தோப்பாகாது”
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings