in

வைராக்கியம் ❤ (பகுதி 13) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10 

பகுதி 11  பகுதி 12

ரண்டு நாட்கள் கழித்து மருத்துவர் கார்த்திக் ரிசல்ட்டை வாங்க வர சொல்லியிருந்ததால், மனது முழுக்க நந்தினிக்கு கணவன் கார்த்திக் பற்றிய எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.

கார்த்திக்கிற்கு ஃபோன் செய்தவள், “நான் சங்கரமடம் வரைக்கும் போய்ட்டு அப்படியே தொட்ட கணபதி கோவிலுக்கும் போய்ட்டு வந்துடறேன். நீங்க ஆஃபீஸ்’லருந்து வர எப்படியும் லேட்டாகும். இருந்தாலும் சொல்லீட்டு போலாம்னு தான் ஃபோன் பண்ணினேன்” என்று நந்தினி சொல்லவும்

“சரிம்மா. போய்ட்டு வா. ராகுல் ஸ்கூல் விட்டு வரதுக்குள்ள வந்துடுவல்ல?” என்று கார்த்திக் கேட்க

“வந்துடுவேன். அதுதான் காலைல சீக்கிரமாவே கிளம்பறேன்” என்று சொல்லி விட்டு ஆட்டோவில் கிளம்பிச் சென்று வந்தாள் நந்தினி.

கோவிலுக்கும், மடத்துக்கும் போய் வந்த பின்பே மனதுக்கு சிறிது நிம்மதியாக இருந்தது. எதேச்சையாக நாத்தனார் இந்து நந்தினிக்கு ஃபோன் பண்ண, டாக்டரிடம் போய் வந்ததைப் பற்றிச் சொன்னாள் நந்தினி.

“நீயும் எல்லா கஷ்டத்தையும் தாண்டி வந்துண்டே இருக்க. ஆனாலும் உன்னோட தைரியமும், எதையும் பாஸிட்டிவ்வா எடுத்துக்கற குணமும் தான் குடும்பத்தை எல்லா‌ கஷ்டத்திலிருந்தும் மீட்டுண்டு வரது” என்ற இந்து, தான் நடுவில் ஒருமுறை சிதம்பரம் போய்விட்டு வந்ததாகவும், எல்லோரும் சௌக்யம் என்றும் தெரிவித்தாள்.

இந்துவிற்கு ஒரே மகள். ஸ்வேதா. நன்றாக படிப்பாள். நந்தினியும், இந்துவும் சிறிது நேரம் குழந்தைகள் படிப்பு, மேலே என்ன படிக்கப் போகிறார்கள், குடும்ப விஷயம் என்று வாயார கொஞ்ச நேரம் அரட்டை அடித்துவிட்டு ஃபோனை வைத்தனர்.

மாலை குழந்தைகள் இருவரும் வந்தவுடன் அவர்களுக்கு சாப்பிடக் கொடுத்த நந்தினி, “உங்க ரெண்டு பேர்கிட்டயும் கொஞ்சம் பேசணும்” என்றாள்.

“சொல்லும்மா. என்ன விஷயம்?” என்று கிருஷ்ணா கேட்க, ராகுல் டி.வி. பார்த்துக் கொண்டே இருந்தான்.

 “நான் உங்க ரெண்டு பேர்கிட்டயும் கொஞ்சம் பேசணும்னு சொன்னேன்” ராகுல் என்று சொல்ல

“விடும்மா. அவங்கிட்ட ஏன் ஓரியாடற. அவன் பாட்டுக்கு டி.வி. தான பாத்துண்டு இருக்கான். விடேன்” என்ற கிருஷ்ணாவிடம்

“அப்படியே விட்டுட்டா கொஞ்சம் கூட பொறுப்பா இருக்காம சின்ன பையனாட்டமே வளருவான் கிருஷ்ணா. அவனும் வீட்டுல என்ன நடக்கறதுன்னு தெரிஞ்சுக்கணும்” என்றவள், இரண்டு நாட்கள் முன்பே டாக்டரிடம் போய் வந்ததையும், கார்த்திக்கிற்கு அடிக்கடி கோபம் வருவதைப் பற்றியும் சொன்னவள் மூளையில் வேண்டிய ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகள் ஹாஸ்பிடலில் எடுத்தாக இருவரிடமும் சொன்னாள்.

“நாளைக்கு டெஸ்ட் ரிப்போர்ட் வந்துடும். ரிப்போர்ட் வாங்கப் போகும் போது நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்க” என்று நந்தினி சொல்ல

“ஸ்கூலுக்கு லீவ் போடணுமாம்மா? என்று கேட்ட ராகுலிடம்

“ஒரு நாள் லீவு போட்டா ஒன்னும் குறைஞ்சு போகாது. முக்கியமா வரதுக்கு வந்து தான் ஆகணும். ரெண்டு பேரும் பெரிய பசங்க ஆயிட்டேள். எனக்கும் வயசாயிண்டு வரது. நீங்களும் இனி பொறுப்பா இருக்கணும்” என்றவள், “நாளைக்கு டேக்ஸி வச்சுண்டு போயிடலாம்” என்றாள்.

அடுத்த நாள் நான்கு பேரும், டேக்ஸியில் மருந்துவமனைக்குச் சென்றனர். மருத்துவரின் அழைப்புக்காக காத்திருந்த நேரத்திலும் அலுவலகத்திலிருந்து ஃபோன் வந்துகொண்டே இருந்தது.

“லீவ் போடற அன்னைக்கு கூட தொல்லை பண்ணாம இருக்க மாட்டாங்களா? என்ன ஆஃபீஸோ?” என்றவளிடம்

“அப்படியெல்லாம் விட்டேத்தியா இருக்க முடியாது. இல்ல க்ளார்க்காவே இருந்திருக்கணும். காலைல பத்து மணிக்கு போனா சாயந்திரம் ஆறு மணிக்கு சீட்டை விட்டு எந்திரிச்சு போயிண்டே இருக்கலாம். ஆனா, ஒரு பொறுப்புல இருந்தா எல்லாத்தையும் பாத்துதான் ஆகணும்” என்றவன், இருந்தபடியே ஆஃபீஸில் அன்றே செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லிவிட்டு கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கங்களையும் ஆஃபீஸருக்கு சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான் கார்த்திக்.

இரண்டு மணிநேர காத்திருப்பிற்குப் பிறகு, டாக்டர் செந்தில் நரம்பியல் மருத்துவரின் அறைக்கு அழைப்பு வர, மருத்துவருக்கு எதிரே நந்தினியும், இரு மகன்களும் உட்கார்ந்து கொண்டனர்.

பக்கவாட்டு நாற்காலியில் கார்த்திக் உட்கார்ந்து கொண்டான்.

“எப்படி இருக்கீங்க?” என்ற டாக்டரிடம்

“அப்பப்ப தலைவலி, டென்ஷன். மத்தபடி ஒன்னும் இல்லை டாக்டர்” என்றான் கார்த்திக்.

“பை‌ த பை… உங்க டெஸ்ட் ரிசல்ட் வந்ததாச்சு. உங்க மூளைக்குள்ள இருக்கற திரவத்தோட அளவு, அளவுக்கு அதிகமா இருக்குன்னு ரிப்போர்ட்ல வந்திருக்கு. பொதுவா மூளை ஒரு திரவத்திக்குள்ள மிதந்த மாதிரியான நிலைலயே தான் இருக்கும். அந்த திரவத்தோட அளவு சீராக இருக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை.

திரவத்தோட அளவு குறைந்தாலோ, கூடினாலோ பிரச்சினை தான். திரவத்தோட அளவு அதிகமாகும் போது மூளைக்கான அழுத்தம் அதிகரிச்சு மூளைக்கு பாதிப்பு ஏற்படும். அதனால தலைல ஸ்கல்லை (மண்டை ஓடு) திறந்து தான் ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கும். அதிமாக இருக்கும் தண்ணீரை வெளியே எடுப்போம். அப்பறம் செயற்கையா ஒரு வால்வைப் பொருத்திவிடுவோம். அது மூளையில் அழுத்தம் அதிகரிக்காம பார்த்துக்கும்” என்றார் டாக்டர்.

“எதனால இந்த பிரச்சினை வரும் டாக்டர்?” என்று கார்த்திக் கேட்க

“பொதுவா இதுதான் காரணம்னு சொல்ல முடியாதுன்னாலும் வொர்க் டென்ஷனும் ஒரு காரணம் தான்” என்று டாக்டர் சொல்ல

“எந்த வேலைல தான் இன்னைக்கு டென்ஷன் இல்ல டாக்டர். எல்லா வேலைலயும் ஏதோ ஒரு விதத்துல டென்ஷன் இருந்துகிட்டே தான் இருக்கு. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனா ஏற்கனவே ஏற்பட்ட விபத்தால என்னோட ரெண்டு காலையும் இழந்துட்டேன். இப்ப கொஞ்ச வருஷமா தான் அதுல இருந்து மீண்டு குழந்தைங்க பெருசாயிட்டு வராங்கன்னு நிம்மதியா இருந்தேன். அதுக்குள்ள இப்படி” என்று வருத்தத்துடன் கார்த்திக் சொல்ல

“நிறைய பேரோட கேள்வி தான் இது. ஒவ்வொருத்தரோட உடம்பும் வித்தியாசமானது. சுகர், ப்ரஷர் மாதிரி சில விஷயங்கள் பரம்பரை மூலமா வரதுக்கான வாய்ப்புகள் அதிகம். மத்தபடி நோய் வராம இருக்க உடம்பை ஆரோக்யமா வச்சுக்கோங்கன்னு தான் டாக்டர்கள் நாங்க சொல்லுவோம்.  ஆனா நோய் வந்ததுக்கப்பறம், அதுலருந்து நோயாளியை எப்படி காப்பாத்தலாம்னு தான் யோசிப்போமே தவிர, அது ஏன் வந்ததுன்னு யோசிச்சுகிட்டே இருந்தா அதுக்குத் தீர்வே கிடையாது” என்று மனதிலிருந்து யதார்த்தத்தைப் பேசினார் டாக்டர்.

“இந்த ஆபரேஷன் பண்ண எவ்ளோ செலவாகும் ஆகும் டாக்டர்? எத்தனை நாள் ஹாஸ்பிடல்ல தங்க வேண்டியிருக்கும்?” என்று நந்தினி கேட்க

“ஆபரேஷனைப் பொறுத்தவரை எவ்வளவு சீக்கிரம் பண்ணறமோ அவ்வளவு நல்லது. ஆபரேஷன் பண்ணி குறைஞ்சது ஒரு வாரத்துலருந்து பத்து நாள் வரை ஹாஸ்பிடல்ல இருக்க வேண்டி வரும். மூணுலருந்து நாலு வாரத்துக்குள்ள நார்மலாயிடுவார். ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும்’ங்கறத ரிசப்ஷன்ல சொல்லுவாங்க. டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப் போய் பதினஞ்சு நாள் கழிச்சு திரும்ப ரெவ்யூவுக்கு வர வேண்டியிருக்கும்” என்றவர்,

“வேற எதாவது கேக்கணும்னாலும் நீங்க கவுன்சிலிங் டிபார்ட்மெண்ட்ல கேட்டுக்கலாம்” என்று மேலும் சொல்ல

“சரி டாக்டர்… நாங்க கவுன்சிலிங் டிபார்ட்மெண்ட்ல போய் பார்த்துட்டு கிளம்பறோம்” என்று சொல்லிவிட்டு எல்லோருமாகக் கிளம்பினார்கள்.

வெளியில் வந்த கார்த்திக், “மார்ச்ல லீவ் போட முடியாது. அதனால பசங்களுக்கும் பரிட்சை முடிஞ்சவுடனே ஆபரேஷன் வச்சுக்கலாம்” என்று சொல்ல நந்தினிக்கும் கார்த்திக் சொல்வது சரியாகப் பட்டது.

“ஆனா டாக்டர் எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணுங்கன்னு சொன்னாரே” என்று கேட்க

“ரெண்டு வாரத்துல ஒண்ணும் ஆகாது, பாத்துக்கலாம்” என்ற கார்த்திக் கவுன்சிலிங் மற்றும் இன்ஸ்யூரன்ஸ் டெக்ஸ்க்கிலும் விசாரித்துவிட்டு ஆபரேஷன் தேதியையும் முடிவு செய்து மருத்துவமனையில் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர்.

“நல்லவேளையா இன்ஸ்யூரன்ஸ் போட்டுருக்கறதால ஓரளவு பணம் புரட்டினாப் போதும் நந்தினி. இல்லண்ணா வீட்டையும் கட்டினதுக்கு பணத்துக்கு திண்டாடியிருப்போம்” என்றான் கார்த்திக்.

வீடு கட்டும் போது லோன் போட்டது போக நந்தினி சொன்னதால் அவளின் சில தங்க நகைகளையும் வங்கியில் அடகு வைத்து பணத்தை ஏற்பாடு செய்து அண்ணா பாலுவிடம் கொடுத்திருந்தான் கார்த்திக்.

அது போக மீதமிருந்த சில நகைகளை அடகு வைத்து அதில் வந்த பணத்தையும், வங்கியில் போட்டிருந்த டெபாசிட் பணத்தையும் வங்கியில் ஆபரேஷன் செலவுக்காகத் தனியாகப் போட்டு வைத்தாள் நந்தினி.

“அடகு வைக்கும் போது நகைகளை பிரித்து பிரித்து வக்கலாம். அப்போதான் கொஞ்ச கொஞ்சமா திருப்ப முடியும்” என்று நந்தினி கார்த்திக்கிடம் சொல்ல

“இப்போல்லாம் என்னை விட நீ வீட்டை நல்லா நிர்வாகம் பண்ற. நீதான் பாவம் நந்தினி. நீயும் மாசாமாசம் பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சேத்தி டெபாசிட் போட்டு வக்கற. ஆனா அத்தனையும் சேத்து வச்சு என்னோட ஹாஸ்பிடல் செலவுக்கு தான் குடுக்கறோம்” என்று கார்த்திக் வேதனையுடன் சொல்ல

“சம்பாதிக்கற மனுஷன். உங்களுக்கு இல்லாம இந்த காச வெச்சுண்டு நான் மட்டும் என்ன பண்ணப் போறேன். எத்தனை காசு இருந்தா என்ன? எல்லாரும் ஒண்ணா இருக்கணும். மூணு நேரம் வயிறார சாப்பிட்டு, கௌரவமா பொழக்கணும். வேற என்ன வேணும் சொல்லுங்க? போதாதுன்னா எவ்வளவு பணமிருந்தாலும் போதாதுதான்” என்றவள்

“ரெண்டு காலையும் எடுத்து இத்தனை வருஷமா குடும்பத்துக்காக உழைச்சுருக்கீங்க. இதைவிட நீங்க என்ன பண்ணணும். பசங்கள நம்மால முடிஞ்ச வரை படிக்க வச்சுடலாம். அப்பறம் அவங்கவங்க வேலைக்குப் போய் சொத்து பத்தெல்லாம் சேத்திகட்டும். நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க” என்றாள் நந்தினி.

பள்ளியிலிருந்து வந்த ராகுல், “அம்மா நான் விளையாடப் போய்ட்டு வரேன்” என்று சொல்லி விட்டு பக்கத்து வீட்டு அபிஷேக்குடன் அபார்ட்மென்ட் பார்க்கிற்கு விளையாடச் சென்றான்.

“சரிடா” என்றவள் “ஆறு மணியோ வந்துடு. படிக்கணும்” என்றாள். சிறு வயதிலிருந்தே குழந்தைகளைச் சுற்றி எப்போதும் நல்ல நண்பர்கள் இருப்பது போல பார்த்துக் கொண்டாள் நந்தினி.

சேர்வார் சேர்க்கை சரியாக இருந்தால் தான் குழந்தை நன்றாக வளர்வார்கள் என்று நம்பினாள் நந்தினி.

பள்ளியில் குழந்தைகள் மூலமாக கூட படிக்கும் நண்பர்களின் பெற்றோர்களும் அறிமுகமாகியிருந்தனர். அதனால் எவருக்காவது ஏதாவது உதவி வேண்டுமானாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள்.

பெரும்பாலும் தேர்வு நேரங்களில் தன் நண்பர்களுக்கு தனக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுப்பான் கிருஷ்ணா. அதனால் எப்போதும் தேர்வு நேரங்களில் நண்பர்கள் ஐந்தாறு பேர் வீட்டில் எப்போதுமே சேர்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள்.

“ஏண்டா, நீ எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்துண்டே இருக்கயே. நீ எப்போ படிப்ப? படிக்க நேரம் வேண்டாமா?” என்று நந்தினி கேட்கும் போது

“அம்மா, அவங்களுக்கு சொல்லித் தரும்போது பாதி படிச்சமாதிரி ஆயிடும். அப்பறம் திருப்பி பாத்தா மட்டும் போதும். நமக்கு தெரிஞ்சத சொல்லிக் குடுக்கறது நல்லதுதானம்மா” என்பான் கிருஷ்ணா.

கார்த்திக்கின் விபத்து நந்தினியின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டாலும் கிருஷ்ணாவினால் எந்தத் தொந்தரவும் நந்தினிக்கு இல்லாமல் இருந்தது. சிறு வயதிலிருந்தே அவன் படிப்பு விஷயத்தை அவனே பார்த்துக் கொள்வான்.

வந்தவுடன் வெளியே விளையாடப் போய்விட்டு வந்தாலும் வீட்டுப்பாடத்தை தானாக எடுத்து எழுதி முடித்துவிட்டு, படிக்கும் நேரத்தில் படித்தும் விடுவான்.

சிறியவன் ராகுல் கொஞ்சம் துருதுருவென விளையாட்டுத்தனமாக இருப்பான். இருவரும் படித்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் சண்டை வந்து அடித்துக் கொள்வார்கள்.

“ரெண்டு பேரும் பொண் குழந்தைங்களா இருந்தா கூட இத்தனை சண்டை வராது. இதுக்குன்னு காரணமில்லாம உப்பு சப்பு பெறாத காரணத்துக்கு தான் சண்டையே வருது. என்ன பண்றதுன்னே தெரியல” என்று தன் பக்கத்து வீட்டு வித்யாவிடம் சொல்ல

“இந்த வயசு அந்த மாதிரி. பேசாம ரெண்டு பேரையும் ட்யூஷன் சேத்தி விட்டுடு. அங்கேயே வீட்டுப்பாடமும் எழுதி முடிச்சுட்டு, படிச்சுட்டும் வந்திடுவாங்க. உனக்கு அவரைப் பாத்துக்கவும் கஷ்டமா இருக்காது. இன்னும் கொஞ்ச வருஷம் தான். அப்பறம் எல்லாமும் சரியாயிடும்” என்றாள் வித்யா.

வித்யா சொல்வதும் நியாயமாக இருந்ததாலும், தினமும் ராகுலைப் படிக்க வைக்க உட்கார தனக்கு நேரமில்லாததாலும், நந்தினி இருவரையும் ட்யூஷன் சேர்த்தினாள்.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் வாழ்க்கை உன் கையில் (நாவல் – பகுதி 7) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை