in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

பகுதி 11  பகுதி 12

“ஒரு ரோஜாப் பூ இட்லி சாப்பிடப் போகிறது” என்று கிண்டல் செய்தாள் மீனாட்சி.

அதற்கே வெட்கப்பட்டாள் கிருத்திகா, கன்னங்கள் ரோஜாவாகச் சிவந்தன.

“இதப் பார்ரா ! ஒரு வெள்ளை ரோஜா சிவப்பு ரோஜாவாக மாறி விட்டது” என்று மீண்டும் கிண்டலடித்தாள் மீனாட்சி.

“போங்க மேடம் ! உங்களுக்கு எப்போது பார்த்தாலும் கிண்டல் தான். நான் இன்று மாலை ஒரு மணி நேரம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறேன். இன்னும் அந்த ‘பேட்’ திரும்பவில்லை”

“அடி போடி பைத்தியக்காரி. அனுமதியோ, விடுமுறையோ நேராகப் பார்த்துக் கையெழுத்து வாங்கி  வர வேண்டும். இல்லையென்றால் அதைத் தூக்கி எங்கே போடுவார்களோ?” என்றாள். கொஞ்ச நேரத்தில் அவள் கேட்ட அனுமதிப் பேப்பர் கையெழுத்தாகி வந்து விட்டது.

“ஏன் ஒரு மணி நேர அனுமதி? மூவிக்குப் போகிறீர்களா?”

“அட நீங்கள் வேறே மீனாட்சி. சபரீஷ்வர், சாம்புத் தாத்தாவின் துணையோடு ஐயரை கன்ஸல்ட் செய்து அடுத்த புதன்கிழமை, பதிவுத் திருமணத்திற்கு நாள் குறித்திருக்கிறார்கள். அதற்காக இன்று மாலை போய் கொஞ்சம், டிரஸ்ஸும் நகைகளும் வாங்க வேண்டும் என்கிறார் சபரீஷ். பதிவுத் திருமணத்தில் எனக்கு நீங்கள் தான் கையெழுத்துப் போட வேண்டும்”

“அதெற்கென்ன, உனக்காக என்றால் பத்துக் கையெழுத்துக் கூடப் போடலாம். சபரீஷை நினைத்துக் கொண்டு, நாலுமணியானால் அப்படியே ஓடாதே. காலையிலிருந்து இந்தப் பைல்களைப் பார்த்து ஒரே களைப்பாய் தெரிகிறாய், கொஞ்சம் முகத்தை அலம்பிக் கொண்டு லேசாக முகத்திற்கு ஏதாவது அப்ளை செய்து கொண்டு போ” என்றாள் மீனாட்சி.

ஆனால் சாப்பிட்டு முடித்து ஒரு அரைமணிக்கெல்லாம் அவளுடைய மேலதிகாரி ஜாயின்ட் செக்ரட்டரி, கிருத்திகாவிடம், “நம் இலாக்கா டைரக்டர் ஆபீஸில் ஒரு சின்ன மீட்டிங், ஒரு மணி நேரம் தான் ஆகும். சர்ப்ரைஸ் இன்ஸ்பெக்‌ஷன்” என்று அவளையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

“அந்த ஆள் ஒரு சரியான போர். ஒரே விஷயத்தை ரப்பராக இழுத்தடிப்பார். இன்று நீ ஷாப்பிங் பண்ணினாற் போலத்தான்” என்று முணுமுணுத்தாள் மீனாட்சி.

ஜாயின்ட் செக்ரட்டரி ஒரு ‘கன்பெர்ட்’ ஐ.ஏ.எஸ். ஆபீஸர். இன்னும் சில மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெறப் போகிறார், குடும்பஸ்தர். கிருத்திகாவின் முழு விவரமும் தெரிந்தவர்.

“மீனாட்சி என்னைப் பற்றி ஏதாவது கலாட்டா செய்து பேசியிருப்பாள். மீனாட்சி பேசியதையெல்லாம்  நீ பெரியதாக எடுத்துக் கொள்ளாதே  கிருத்திகா. நாம் மூன்று மணிக்கு நம் ஆபீஸில் இருக்கலாம்” என்றார் சிரித்துக் கொண்டே.

“அதனால் பரவாயில்லை சார். நம் வேலையை முடித்து விட்டே நாம் போகலாம்” என்றாள் கிருத்திகா. ஆனால் அவர்கள் திரும்புவதற்கு மணி நான்கை நெருங்கி விட்டது.

“நீ நோட்ஸ் எடுத்த பேப்பர்களையெல்லாம் கூட  என்னிடம் கொடுத்து விட்டு நீ கிளம்பு கிருத்திகா. கன்ஸாலிடேட்டட்  ரிப்போர்ட் நான் தயார் பண்ணிக் கொள்கிறேன். நாளை மீண்டும் ஒருமுறை சரி பார்த்து விட்டு செக்ரட்டரிக்கு சமர்ப்பித்து விடலாம்” என்றார் ஜாயின்ட் செக்ரட்டரி.

அவர் சொன்ன வேலையை முடித்து விட்டு கிருத்திகா வந்து தன் இருக்கையில் அமர்வதற்கும், சபரீஷ்வர் எதிரே அமர்வதற்கும் சரியாக இருந்தது.

“வேலை பிஸியா கிருத்திகா? நீ கீழே வருவாய் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் இப்போது தான் ஸீனியர் ஆபீசருடன் எங்கோ போய் விட்டு வருகிறாய் போல்  இருக்கிறதே!  ரொம்ப களைப்பாக இருக்கிறதா?” என்றான் சபரீஷ்வர்

“களைப்பெல்லாம் ஒன்றும் இல்லை. அங்கிளும் வந்திருக்கிறாரா? நான் முகம் மட்டும் லேசாகக் கழுவிக் கொண்டு வந்து விடுகிறேன்” என்றவள் தன் அறையிலிருந்த அட்டாச்ட்  பாத்ரூமிற்குள் ஓடிவிட்டாள்.

ஐந்து நிமிடத்தில் லேசான பௌடர் பூச்சுடன், புத்தம் புது மலராக அழகாக வந்து நின்றாள். மீனாட்சியிடம் சொல்லி விட்டு இருவரும் கிளம்பினர்.

“ஏன் அங்கிள் வரவில்லை?” எனக் கேட்டாள் கிருத்திகா.

“அவருக்கு ஆஃபீஸில் ஒரு வேலை, அதனால் நான் மட்டும் தான் வந்தேன்” என்றான் சபரீஷ்வர்.

“ஏங்க, ரொம்ப பசிக்கிறது. ஏதாவது சாப்பிட்டு விட்டுப் பிறகு போகலாமா?” எனக் கேட்டாள் கிருத்திகா.

“கட்டாயம் ! உன் சீனியர் ஆஃபீஸருடன் நீ அந்த ஜீப்பில் வந்து இறங்கும் போதே கவனித்தேன். உங்களுடன் வந்த ஆபீஸ் பியூன் வேறு நிறைய பேப்பர்களையும், ஃபைல்களையும் தூக்கி வந்தார். அப்போது பார்ப்பதற்கே நீ மிகவும் களைப்பாக இருந்தாய். அதனால் நீ லஞ்ச் கூட ஒழுங்காக சாப்பிட்டாயோ, இல்லையோ என்று நினைத்தேன்”  என்றான் சபரீஷ்வர்.

“ஜாயின்ட் செக்ரட்டரி ஒரு சர்க்கரை வியாதிக்காரர். அவரே டீயுடன் ‘பன்’னை வைத்து மதிய உணவை முடித்துக் கொண்டார். மூன்று மணிக்குள் வேலைகளை முடிக்க வேண்டும் என்று நினைத்தார், அது முடியவில்லை. மேலும் ‘இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்’ அந்த ஆபீஸில் உள்ள ‘ஸ்டெனோ’விடம் டிக்டேட் செய்து கொண்டிருந்தார். அதை விட்டு மதிய உணவைத் தேடிப் போனால், அந்த வேலையின் ‘டெம்போ’ அந்த கன்ட்டினியூட்டி விட்டு விடும். அதுவுமில்லாமல் அந்த நேரத்தில் பசியும் தெரியவில்லை. வேலையெல்லாம் முடித்த பிறகு தான் பசிக்கிறது” என்றவள் அவனைப் பார்த்து மென்மையாக சிரித்தாள்.

“நீ எப்போதுமே, ஏன் வயலெட்டும், மும்தாஜும் கூட  வேலை முடிக்காமல் சாப்பிட மாட்டீர்கள். ஆனால் இந்த ஒருவேளை சாப்பாட்டிற்காகத் தானே எல்லோரும் இவ்வளவு பாடுபடுகிறோம். அந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு வேலை செய்யலாமில்லையா? ஆனால் உங்களைத் திருத்த அந்த ஆண்டவனே நேரில்  வந்தாலும் முடியாது” என்ற சபரீஷ்வர் ஒரு பெரிய ஹோட்டலின் முன் கொண்டு போய் காரை நிறுத்தினான்.

அவனுக்குப் பிடித்த பாதாம் அல்வாவை சாப்பிட வைத்தான். பிறகு மசாலா தோசையும், ஐஸ்கிரீமும் ஆர்டர் செய்தான். இருவரும் சாப்பிட்ட பிறகு கடைகளைத் தேடிப் போனார்கள்.

திருமணத்திற்காகவென்று விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் பதினைந்து வாங்கினான். சாதாரணமாக வீட்டில் கட்டும் புடவைகள், அது கூட குறைந்தது இரண்டாயிரம் ரூபாயில் பதினைந்து வாங்கினான்.

 “இத்தனை புடவைகள் எதற்கு  சபரீஷ்? நாம் என்ன புடவைக் கடையா  வைக்கப் போகிறோம்?” என்று கிருத்திகா மறுத்தும்  அவன் கேட்கவில்லை.

“நான் புடவைகளும், அதற்குப் பொருத்தமான ப்ளவுஸும் வாங்கி விட்டேன். நீ போய் இன்னர்ஸ் வாங்கி வந்து விடு, மொத்தமாகப் பணம் கட்டி விடலாம். சீக்கிரம் முடி கிருத்திகா, இன்னும் நகைக் கடைக்கு வேறு போக வேண்டும்” என்றான்.

எல்லாவற்றையும் வாங்கிய பிறகு கடைப் பையன் கொண்டு வந்து காரில் வைத்தான். மாலை நேரமானதால் கூட்டம் நெருக்கியது. காரைப் பார்க்கிங்கில் இருந்து எடுத்தால் மறுபடியும் பார்க்கிங் கிடைக்காது என்று எண்ணி அருகில் இருக்கும் நகைக்கடைக்கு நடந்தே சென்றனர்.

நகைக்கடையில் கிருத்திகாவிற்கு நெக்லஸ், செயின், கை வளையல்கள் எல்லாம் தங்கத்தில் ஒரு செட்டும், வைரம் பதித்தது ஒரு செட்டுமாக வாங்கினான். அவன் குல வழக்கப்படி திருமாங்கல்யமும், அதைக் கோர்க்க ஆறு பவுனில் ஒரு தாலிச் சரடும் வாங்கினான். மெட்டியும்  வாங்கினான்.

மாதாகோவிலில், பாதர் ஆசீர்வாதத்துடன் மாற்றிக் கொள்ள இரண்டு  மோதிரங்கள் வாங்கினான்.

“இந்த நகைகளையும், உடைகளையும் கொண்டு போய் உங்கள் வீட்டில் வைத்து விட்டுப் பிறகு தான் ஹாஸ்டலுக்குப் போக வேண்டும்”

“இன்னுமா கிருத்திகா, உங்கள் வீடு என்று பிரித்துப் பேசுவாய்? நம் வீடு என்று சொல். நானே உன்னுடையவன் என்று ஆனபின் உங்கள் வீடு என்று இன்னொரு முறைப் பிரித்துப் பேசினால் எனக்கு ரொம்பக் கோபம் வரும்” என்றான்.

கிருத்திகா சிரித்தாள். “எல்லாவற்றிற்கும் சிரிப்புத்தானா?” என்றான். அதற்கும் சிரித்தாள்.

ஒரு வழியாக எல்லா ஷாப்பிங்கும் முடித்து, இரவு டின்னரும் ஒரு பெரிய ஹோட்டலில் முடித்துக் கொண்டு பத்து மணிக்கு சபரீஷ்வரின் வீட்டிற்குத் திரும்பினர். அங்கே கருத்திருமன் வீட்டிற்குப் போகாமல் காத்திருந்தார்.

சாம்புத் தாத்தா வழக்கம் போல் நிறைய சமைக்காமல், ஒரு வத்தக் குழம்பு, சுட்ட அப்பளம், மோர் என்று சிம்பிளாக வைத்திருந்தார்.

சபரீஷ்வர் கிருத்திகாவோடு வெளியே போனால், கட்டாயம் அவளுக்குப் பிடித்த சாப்பாடு வாங்கிக் கொடுத்து விட்டு, இவனும் அவளுடன் டின்னர் முடித்து விட்டுத்தான் வருவான் என்று அவருக்குத் தெரியும். அதனால் தான் சிம்பிள் சமையல். சாம்புத் தாத்தாவும் கருத்திருமனும் சாப்பிட்டு முடிக்கவே மணி பதினொன்று ஆக விட்டது. 

“இவ்வளவு நேரத்திற்கு மேல், நீ ஹாஸ்டலுக்குப் போக வேண்டாம் கிருத்திகா.  நீ அம்மா, அப்பா ரூமில் படுத்துக் கொள். நாங்கள் மூவரும் என் அறையில் படுத்துக் கொள்கிறோம்” என்றான் சபரீஷ்.

கிருத்திகா கொஞ்சம் தயங்கினாள்.

“ஏன் கிருத்திகா? என்ன தயக்கம்?” என சபரீஷ் கேட்க

“திருமணத்திற்கு முன்னால் இங்கே தங்கினால் நன்றாக இருக்குமா?”  கிருத்திகா தயக்கத்துடன் மெதுவாகக் கேட்டாள்.

“நம் மனம் தெளிவாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும்” என்றான் சபரீஷ்வர் சிரித்துக் கொண்டு.

சபரீஷ்வர் அவளை மாடிக்கு அழைத்துச் சென்றான். அவன் பெற்றொர் அறையை யாரும் உபயோகப்படுத்துவதில்லை யென்றாலும், சுத்தமாகப் பூஜை அறையைப் போல் வைத்திருந்தான்.

அவனுடைய அம்மா, அப்பா இருவரின் படங்களும் பெரிதுபடுத்தி மாட்டப்பட்டிருந்தன. மணமிக்க ஊதுவத்திகள் ஏற்றப்பட்டு  சந்தனமாலை போடப்பட்டருந்தது.

போட்டோவில் அவன் அம்மா மிகவும் அழகாக இருந்தார். புன்னகை தவழும் முகம். அவன் அப்பாவும் மிகவும் கம்பீரமாகவும், களையான முகத்துடனும் இருந்தார். வாழ்க்கையின் சந்தோஷத்தின் உச்சியில்  இருப்பவர் போல் இருந்தது அவர் முகம். அவர்கள் முகத்தில்  தெரிந்த சிரிப்பிலிருந்து நல்ல அருமையான, லட்சியத் தம்பதிகளாக இருந்திருப்பார்கள் போல் இருந்தது.

பாவம் சபரீஷ் ! இவ்வளவு அருமையான பெற்றோரைத் தன் சிறு வயதில் இழந்திருக்கிறான்.

கிருத்திகா  இத்தனை நாள் தன்னுடைய துயரம் தான் ஈடு செய்ய முடியாதது என்று நினைத்துக் கொண்டிருந்தாள். நமக்கு அம்மா, அப்பா பாசம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் சபரீஷ்வர் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவர்கள் அன்பு மழையில் நனைந்து வளர்ந்திருப்பான். ஒளி வீசும் கண்களால் உலகத்தைப் பார்த்தவன் திடீரென்று பார்வையை இழந்தவன் போல் தன் பெற்றோரை இழந்து பாசத்திற்காக ஏங்குகிறான்.  அதனால் தான் அவனுக்குத் தன் மேல் இத்தனை அன்பு போலும் என்று நினைத்துக் கொண்டாள்.

கிருத்திகா தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த சபரீஷ்வர், “ஹலோ என்ன பார்க்கிறாய்?  நான் அம்மாவைப் போல் இருக்கிறேனா, இல்லை அப்பாவைப் போல் இருக்கிறேனா என்று பார்க்கிறாயா?” என்றான் சிரித்தபடி.

அவனையே விழுங்கி விடுபவள் போல் பார்த்த கிருத்திகா, ”நீங்கள் அவர்கள் இருவரையும் போலத்தான் இருக்கிறீரகள். அம்மாவின் மென்மையான அழகும், அப்பாவின் கம்பீரமான அழகும் கலந்த கலவை நீங்கள்” என்றவள் நெருங்கி வந்து அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக்க் கோர்த்துக் கொண்டு முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள்.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 13) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    மெல்லப் பிறந்தது அன்பு (சிறுகதை) – ✍ பீஷ்மா