in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14  பகுதி 15

சென்னை விமானநிலையத்தில் விமானம் இறங்கியது. ஏர்போர்ட்டிற்கு கருத்திருமன், மீனாட்சி, அவள் கணவர் சுந்தரம், சுமனா, மும்தாஜ், வயலட் என்று ஒரு பட்டாளமே வந்திருந்தது.

அவர்கள் எல்லோரையும் பார்த்து மிகுந்த சந்தோஷம் அடைந்த சபரீஷ்வர், அப்படியே எல்லோரையும் தங்கள் பங்களாவிற்கு அழைத்துச் சென்றான்.

வீட்டிற்குப் போய் சாம்புத்தாத்தாவின் கைச்சமயலைச் சாப்பிட்ட பிறகே சபரீஷிற்கும் கிருத்திகாவிற்கும் தெம்பு வந்தது. அவர் செய்த எலுமிச்சை ரசத்தை வாங்கி கப் கப்பாக குடித்தான் சபரீஷ்வர். எல்லோரும் அங்கேயே சாப்பிட்டு விடைபெற்றனர்.

அப்போது மும்தாஜ், “நாளை நான் என் அம்மா, அப்பாவுடன் வந்து திருமண அழைப்பிதழ் தருகிறேன். ஃபோன் செய்து விட்டுத் தான் வருவேன், நீங்கள் எல்லோரும் வர வேண்டும். சாம்புத் தாத்தாவையும் அழைத்துக் கொண்டு வரவேண்டும்” என்றாள்.

“கல்யாணம் எங்கே?” என்றார் சாம்புத் தாத்தா.

“கரைக்காலில். எங்கிருந்தால் என்ன? நீங்கள் கிருத்திகாவோடும், எம்.டி. சாரோடும் காரில் வரப் போகிறீர்கள். நான் வரட்டுமா? இங்கு பத்திரிகை வைத்து விட்டுத் தான் பார்வதி வீட்டிற்கும், வயலட், மீனாட்சி மேடம் வீட்டிற்கும் தரவேண்டும். நான் வருகிறேன்”

அன்று இரவு சபரீஷ்வரின் கைகளில் சிறைப்பட்டிருந்த கிருத்திகா, “சபரீஷ், நான் உங்களை ஒன்று கேட்கட்டுமா?” என்று கொஞ்சினாள்.

“நீ என்ன கேட்கப் போகிறாய் என்று சொல்லட்டுமா?” என்றான், அவன் கிசுகிசுத்த குரலில் அவள் முகத்தில் தொங்கிய சுருண்ட முடியை ஒதுக்கியபடி.

“அது எப்படி முடியும்? உங்களுக்கு ஜோசியம் தெரியுமா?” என்றாள் கிருத்திகா சந்தோஷமாக சிரித்தபடி.

“கண்ணம்மா, எனக்கு ஜோசியம் தெரியாது. ஆனால் என் அன்பான கிருத்திகாவின் மனம் எனக்குத் தெரியும். உனக்குப் பாதரையும், உன் ஹோமில் உள்ளவர்களையும் பார்க்க வேண்டும் சரியா?” என்றான் சபரீஷ்வர்.

அவனைக் காதல் பொங்கப் பார்த்தவள், அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

“உங்களைப் போன்ற ஒரு அன்பான மனிதர் கணவராகக் கிடைக்க நான் நிஜமாகவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். நான் விருப்பப்பட்டதை அப்படியே சொல்லி விட்டீர்களே” என்று ஆச்சர்யப்பட்டாள்.

“இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை கிருத்தி. நீ எப்போதும் பணத்திற்கோ ஆடம்பரப் பொருட்களுக்கோ ஆசைப்பட்டதில்லை. உன் நல்ல மனம் எனக்குத் தெரியும். நாளை மும்தாஜ் வந்து போனவுடன் நாம் ஹோமிற்குப் போய் வரலாம். சாம்புத் தாத்தாவையும் நம்முடன் அழைத்துப் போகலாம், அவரும் ஹோமைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்”

கிருத்திகாவின் மனம் எல்லையற்ற சந்தோஷத்தில் மிதந்தது.

அடுத்த நாள் காலை, மும்தாஜும் அவள் பெற்றோரும் போன் செய்து விட்டு திருமண அழைப்பிதழ் எடுத்து வந்தனர். ஒரு பெரிய எவர்சில்வர் தாம்பாளத் தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, விலையுயர்ந்த டிரஸ், கூட நூற்று ஒரு ரூபாய் வைத்து, அதன் மேல் திருமண அழைப்பிதழும் வைத்து சபரீஷ்வரிடமும், கிருத்திகாவிடமும் தந்தனர்.

“இதெல்லாம் எதற்கு? வெறும் திருமண அழைப்பிதழ் மட்டும் போதுமே” என்றான் சபரீஷ்.

“நீங்கள் மற்ற நண்பர்களைப் போல் என்றால் வெறும் திருமண அழைப்பிதழ் போதும். நீங்கள் மூன்று வருடங்களாக எங்கள் மகளுக்கு ஒரு நல்ல முதலாளி மட்டுமல்ல, ஒரு நல்ல சகோதரராகவும் இருந்தவர். அவள் சந்தோஷமாக மூன்று வருடங்கள் உங்கள் பாதுகாப்பில் இருந்தாள். நாங்களும் =கவலையின்றி இருந்தோம்” என்றார் மும்தாஜின் தந்தை.

சாம்புத் தாத்தா இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வடை பாயசத்துடன்  பிரமாதமான விருந்து  தயாரித்து விட்டிருந்தார்.  சபரீஷும், மும்தாஜும் அவர்களை சாப்பிட வைத்து, மும்தாஜின் திருமணத்திற்கு நிச்சயம் வருவதாக வாக்களித்தனர். அவர்களைத் தகுந்த பரிசுகளுடனும், மரியாதையுடனும் வழியனுப்பி வைத்தனர்.

சபரீஷ்வர் வழக்கம் போல் ‘பென்ஸ்’ காரை எடுக்காமல் அன்று பிற்பகல் வேன் எடுத்துக் கொண்டு கிருத்திகா, கருத்திருமன், சாம்புத் தாத்தா ஆகியோருடன் ஹோமிற்கு சென்றான்.

கிருத்திகாவும், சபரீஷும் பாதரிடம் வெளிநாடுகளுக்குச் சென்று வந்த விவரங்களைக் கூறிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில், நிலத்தில் விளைந்த பத்து அரிசி மூட்டைகள், துவரம் பருப்பு ஒரு மூட்டை, தேங்காய், வாழைக்காய், மாங்காய் எல்லாவற்றையும் ஆட்களின் உதவியோடு வேனிலிருந்து இறக்கினர் சாம்புத் தாத்தாவும் கருத்திருமனும்.

“இதெல்லாம் எப்போது வண்டியில் வைத்தீர்கள்? நான் பார்க்கவில்லையே” என்றாள் கிருத்திகா.

“சபரீஷ் தம்பி காலையிலேயே சொல்லி விட்டாரம்மா. நீங்கள் மும்தாஜோடு பேசிக் கொண்டிருக்கும் போதே நாங்கள் இதெல்லாம் வேனில் ஏற்றி விட்டோம். அதனால் தான் வழக்கம் போல் கார் எடுத்து வராமல் வேன் எடுத்துக் கொண்டு வந்தோம்”.

பாதருக்கு மிகுந்த சந்தோஷம். “உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் இருவரும் நீண்ட நாள் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என்று கிருத்திகாவையும் சபரீஷ்வரையும் வாழ்த்தினார்.

அப்போது மாதா கோயில் மணி அடித்தது. பாதரும், கிருத்திகாவும், ஹோமில் உள்ள மற்றவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன இந்த நேரத்தில் மாதா கோயில் மணி அடிக்கிறது?” என்று கேட்டார்  கருத்திருமன்.

எல்லோரும் ஆவலாக வாசலுக்கு ஓடினார்கள். அங்கே பிறந்து சில மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தை  கையை, காலை உதைத்துக் கொண்டு, திறந்த வெளியில் பறவைகள் பறப்பதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. குழந்தை விலையுயர்ந்த துணியிலான ரெடிமேட் ஷர்ட் போட்டுக் கொண்டிருந்தான். ‘டயபரும்’ அதற்கு மேல் ஒரு ஜட்டியும் போட்டு வைத்திருந்தார்கள்.

வசதியான வீட்டுக் குழந்தை  போலும். பாதர் ஆவலுடன் குழந்தையை எடுத்து பக்கத்தில் இருந்த  ஆயாவிடம் கொடுத்தார். குழ்ந்தையை கொண்டு வந்து தொட்டிலில்  போட்டவர்கள் யாராவது அருகில் இருக்கிறார்களா என்று வெளையே போய் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தெரியவில்லை. பாதர், முறையாகச் செய்ய வேண்டிய ரெகார்டுகளை எல்லாம் பதிப்பித்தார். காவல்துறையிலும் குழந்தையின் வரவைப் பதிவு செய்தார்.

“இந்தக் குழந்தை யார் தெரியுமா? கிருத்திகாவின் தம்பி ! பெற்றோரால் நிராகரிக்கப் பட்டவன், இந்த உலகின் மற்றொரு அநாதை ஜீவன்” என்றாள் கலங்கிய குரலில் கிருத்திகா. அவள் கையைப் பிடித்து ஆதரவாக அழுத்தினான் சபரீஷ்வர்.

“பெற்றவர்கள் செய்த பெரும் பிழைக்கு இந்தக் குழந்தை என்ன செய்யும்? இந்தக் குழந்தையின் வரவை நாம் ‘ஸ்வீட்’டோடு கொண்டாடுவோம்” என்றான் சபரீஷ்வர்.

உடனே கருத்திருமன் வேனை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் ஒரு ஸ்வீட் கடையில் போய் ஜாங்கிரியை மூங்கில் கூடையில் கட்டி வாங்கி வந்தார்.

எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து விட்டு கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் மனதில் கனம் இவற்றோடு திரும்பினாள் கிருத்திகா. காரில் திரும்பும் போது ‘உம்’மென்றே வந்தாள் கிருத்திகா.

“கிருத்திகா அம்மா, இன்னும் ஏன் ‘உம்’மென்று இருக்கிறீர்கள்?” என்றார் சாம்புத்தாத்தா.

“தாத்தா, முதலில் நீங்க போங்க என்று பேசாதீர்கள். இந்தச் சின்னக் குழந்தையைக் கொண்டு வந்து ஆசரமத்தில் போட்ட அந்த தாய் எவ்வளவு மோசமானவளாக இருப்பாள்’ என்றாள் கோபத்தோடு.

“குழந்தையோட அம்மா தான் அதைக் கொண்டு வந்து போட்டாள் என்று யார் பார்த்தது? தாயற்ற குழந்தையை வளர்க்க முடியாமல் அதன் அப்பா கூட கொண்டு வந்து போட்டிருக்கிலாம் இல்லையா?  ஒருவேளை யாராவது  நகைக்கு ஆசைப்பட்டு குழந்தையைத் தூக்கி வந்து நகைகளை எடுத்துக் கொண்டு பிறகு குழந்தையைக் கொண்டு வந்து போட்டிருக்கலாம். அந்த மட்டும் குழந்தைக்கு ஆபத்தில்லாமல், தக்க இடத்தில் கொண்டு வந்து சேர்த்தார்களே, அதை நினைத்து சந்தோஷப்படு அம்மா” என்றார் சாம்புத் தாத்தா.

“நீங்கள் சொல்வதும் சரிதான் தாத்தா” என்றாள் கிருத்திகா.

“ஒவ்வொருத்தர் யோசிப்பது ஒவ்வொரு விதமாக இருக்கிறது” என்றார் கருத்திருமன்.

“என்ன இருந்தாலும் வயது கற்றுக் கொடுக்கும் பாடம் பெரியது. என்னால் இத்தனை நாள் அந்த கோணத்தில் எல்லாம் யோசிக்க முடியவில்லை” என்றாள் கிருத்திகா. திரும்பும் போது இரவு மணி எட்டாகி விட்டது.

“காலையில் செய்த சாம்பார், ரசம் காய் எல்லாம் ஃப்ரிட்ஜில் அப்படியே இருக்கிறது. ஒரு அரைமணியில் சாதம் வைத்து விடுகிறேன், சாப்பிட்டு விடலாம்” என்றார் சாம்புத் தாத்தா.

“நானும் கூட கொஞ்சம் ‘ஹெல்ப்’ செய்கிறேன் தாத்தா” என்றாள் கிருத்திகா .

“நீங்கள் எதற்கு அம்மா இந்த வேலை எல்லாம் செய்ய வேண்டும்? நான் அவருக்கு கூடமாட உதவி செய்கிறேன்” என்றார் கருத்திருமன்.

“நீங்கள் இருவரும் ஓய்வு  எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் சாதம் வைப்பதும், அப்பளம் பொரிப்பதும்  நானே செய்து விடுவேன்” என்றாள் கிருத்திகா. அவள் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை எண்ணி சபரீஷ்வர் பெருமிதம் கொண்டான். கிருத்திகா அவர்கள் இருவரையும் சமையல் அறையில் விடவில்லை.

“நீங்கள் அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்ததே உங்களுக்கு களைப்பாக இருக்கும்” என்றவள், வேகமாக குக்கரில் சாதம் வைத்தாள். அப்பளம் பொரித்தாள். சாம்பார், ரசம், காய் எல்லாம் சூடு செய்தாள். தயிரை மிக்ஸியில் அடித்து மோராக்கி அதில் இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிப் போட்டாள்.

எல்லாவற்றையும் கொண்டு வந்து டேபிள் மேல் அடுக்கினாள். சாம்புத் தாத்தா விற்கு உணர்ச்சியில் கண்கள் கலங்கின.

“என்ன தாத்தா நீங்கள் செய்ததைத் தானே நான் சூடு பண்ணிக் கொண்டு வந்தேன். அதற்குப் போய் உணர்ச்சி வசப்படுகிறீர்களே” என்றாள் கிருத்திகா.

“அந்தப் பெருந்தன்மை கூட யாருக்கு வரும்? ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீசர், இவ்வளவு பெரிய சொத்துக்கு எஜமானி.  உன்னிடம் அந்த கர்வம் துளி கூட இல்லையே. நீ என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என்று வாழ்த்தினார் கருத்திருமன்.

“ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர், இவ்வளவு பெரிய சொத்து  என்பதெல்லாம் இடையில் வந்தது தானே அங்கிள். அடிப்படையில் அன்பிற்காக ஏங்கும் ஒரு பெண். எனக்கு அந்த அன்பை வற்றாமல் வாரி வழங்க நீங்கள் இத்தனை பேர் இருக்கிறீர்கள். என் மேல் உயிரையே வைத்திருக்கும் என் பிரியமான கணவர் இருக்கிறார். இதற்கு முன்பு ஐ.ஏ.எஸ். பதவி, இவ்வளவு பெரிய சொத்து எல்லாம் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை” என்றாள் கிருத்திகா உணர்ச்சிப் பெருக்கில்.

“சபரீஷ் தம்பியின் அம்மா மாலதியம்மா தான் என்னிடம் இத்தனை பிரியமாக என்னை உட்கார வைத்துப் பரிமாறியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறகு உண்மையான மனித நேயம் கொண்ட பெண் நீ தானம்மா. மாலதி அம்மாவையே நேரில் பார்ப்பது போல் இருக்கிறது” என்றார் தொண்டை அடைக்க  சாம்புத் தாத்தா.

“தாத்தா, சந்தோஷமாக நீங்களும், அங்கிளும் சாப்பிட்டு விட்டுத் தூங்கங்கள். ஆளாளுக்கு உணர்ச்சி வசப்பட்டால் எப்படி? கிருத்திகா, நீ ஹோமிற்குப் போய் வந்ததில் இருந்து ரொம்ப எமோஷனலாக இருக்கிறாய். நீயும் சீக்கிரம் வந்து படு, நான் போய் படுக்கிறேன்” என்று எல்லோரிடமும் விடைபெற்று மாடிக்குப் போனான்.

கொஞ்ச நேரம் கழித்து டம்ளர் போலவே இருக்கும்  தெர்மோஸ் பிளாஸ்க்கில் பாலை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள் கிருத்திகா. சபரீஷ் அங்கிருந்த சோபாவில்  உட்கார்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தான். பால் டம்ளரை அவனிடம் நீட்டினாள் கிருத்திகா. நீட்டிய அவள் கையைப் பிடித்து இழுத்து அவளைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு இறுக அணைத்துக் கொண்டான் சபரீஷ்வர்.

“என் கண்ணம்மாவிற்கு இன்று என்ன ஆயிற்று? ஒரே உணர்ச்சி வெள்ளம்” என்றான் சபரீஷ்வர்.

“அந்த சின்னக் குழந்தையை ஆசரமத்தில் கொண்டு வந்து போட்டதைப் பார்க்க மனம் கலங்க விட்டது” என்றாள் அவன் தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு.

“இனிமேல்  நீ அடிக்கடி இப்படி மனம் கலங்கக் கூடாது கண்ணம்மா. நீ வருத்தப்பட்டு ஏதேதோ நினைத்தால்  எனக்கும் மனம் வருந்துமில்லையா? இன்னும் கொஞ்ச நாளில் நாமே  அம்மா, அப்பா ஆக விடுவோம். இப்போது போய் நாம் நம் அம்மா, அப்பா பற்றிப் பேசி வருத்தப்படலாமா?” என்றான் சபரீஷ் அவளை அப்படியே இழுத்து தன் மேல் படுக்க வைத்துக் கொண்டு.

“ச்சீ  போங்க” என்றாள் கிருத்திகா கண்களைத் தன் கைகளால் மூடியபடி. சபரீஷ் அவளைத் தூக்கிப் படுக்கையில் கொண்டு போய் போட்டுத் தானும் விளக்கை அணைத்துப் படுத்தான்.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 16) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    வைராக்கியம் ❤ (பகுதி 17) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை