in

வைராக்கியம் ❤ (பகுதி 17) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10 

பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14  பகுதி 15  பகுதி 16

லுவலகத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை போட்டுவிட்டு மகன் கிருஷ்ணா வீட்டிலிருந்தது கார்த்திக்கிற்கு மனதிற்கு நிறைவாக இருந்தது.

ஒரு நாள் கார்த்திக்கிற்கு மதிய உணவளித்து விட்டு மகன்களுடன் சாப்பிட்ட நந்தினி, கார்த்திக்கிற்கு தேவையான மாத்திரைகளை எப்போதும் போல ஒரு சிறிய கிண்ணத்தில் தயாராக எடுத்து வைத்தாள்.

“குடும்மா. நான் போய் அப்பாவுக்கு குடுக்கறேன்” என்று வாங்கிக் கொண்ட கிருஷ்ணா, அப்பாவின் அருகில் அமர்ந்து மாத்திரைகளைக் கொடுக்க, மாத்திரைகளைப் போட்டுக்கொண்ட கார்த்திக் அமைதியாக சிரித்தார்.

பின் ஏதோ யோசனை செய்த கிருஷ்ணா, “அப்பா, நீ எதைப் பத்தியும் கவலைப்படாத. நானும் ராகுலும் பெரிய பசங்களாயாச்சு. இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல எனக்கொரு நல்ல வேலை கிடைச்சுடும். நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். நீ வீட்டைப் பத்தி கவலப்படாம நிம்மதியா இருப்பா” என்றான்.

கிருஷ்ணாவின் தோளைத் தட்டியவர், “வீட்டுல நடக்கிற பிரச்சினைல உங்களோட படிப்பு, வேலை கெடாம பாத்துக்கோங்கடா” என்றார்.

“சரிப்பா” என்றவன், வீட்டின் பால்கனியில் ராகுல் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கவும், எப்போதும் போல, “என்னடா பண்ற?” என்று தம்பியின் தலையைத் தட்டினான்.

“நீ மாறவே மாறமாட்டயாடா?” என்று கோபித்த ராகுலிடம்

“இதெல்லாம் மாத்திக்கவே முடியாது” என்று சிரித்துக் கொண்டே, “உனக்கு எப்படி போயிண்டு இருக்கு? ஸ்கூல்ல என்னடா விசேஷம்?” என்றான் கார்த்திக்.

“என்ன விசேஷம்? எப்பவும் போல போறது. அப்பறம் வீட்டுல நீ இல்லாம நான் தனியா நிம்மதியா இருக்கேன். வேறென்ன?” என்று எதிர்மறையாகப் கூறியதிலிருந்து அவன் தன்னைப் பிரிந்திருப்பதிலுள்ள வருத்தத்தைப் புரிந்து கொண்டான்.

“அதான… சிங்கம் சிங்கிளா இருக்குன்னு சொல்லு” என்றவன், “வாயேண்டா… அப்படியே எம். ஜி. ரோடு வரைக்கும் போய்ட்டு வரலாம்” என்றான்.

அந்த நேரத்தையே எதிர்பார்த்தவன் போல, “ம்… போலாம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போயும் நாளாச்சு. இன்னைக்கு நல்லா ஊர் சுத்தீட்டு வரலாம்” என்று ஐந்து நிமிடத்தில் ராகுலும் தயாராக, இருவருமாக பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே கிளம்பிப் போனார்கள்.

காஃபி ஷாப்பில் காஃபியைக் குடித்துக் கொண்டே கண்ணாடி வழியே சாலையில் நடந்து செல்லும் சத்தமில்லா மக்கள் வெள்ளத்தைப் பார்த்தபடி இருவருமாய் மனதார அரட்டை அடித்துக் கொண்டிருக்க, “சீனியர் நித்யாக்கா எப்படி இருக்காங்க?” என்றான் ராகுல்.

“ம்… எல்லாரும் நல்லா இருக்காங்க. எல்லாரும் வேற வேற காலேஜ், வேலைக்குன்னு போயாச்சு. மத்தபடி நீ நெனக்கற மாதிரியெல்லாம் எந்த விஷயமும் இல்லடா” என்றான் கார்த்திக்.

“அடப்பாவி. அவங்க உன் மேல பெரிய அபிப்ராயம் வச்சுருந்தாங்களேடா. ரெண்டு பேரும் ஒரே வகுப்புல தான படிச்சீங்க. உனக்கு கூட அவங்கள ரொம்ப புடிக்குமே” என்று சொல்ல

“எடுத்தோம் கவிழ்த்தோம்னு எல்லாத்தையும் முடிவு பண்ண முடியாது ராகுல். படிக்கும் போது ஏதோ ஒரு சூழ்நிலைல நம்ம மனசுக்குப் புடிச்சவங்க மேல ஒரு ஈர்ப்பும், தடுமாற்றமும் வரது சகஜம் தான். ஆனா அந்த சூழ்நிலைய நிதானமா யோசிச்சு அந்த சுழல்ல மாட்டிக்காம நம்மள நாம நிலைப்படுத்திக்கணும். நம்ம குடும்பம், அதையும் தாண்டி நம்ம அம்மா அப்பா நம்ம மேல வச்சிருக்கிற நம்பிக்கையை காப்பாத்தணும்னு தோணுச்சு. அதனால இன்னும் படிப்பு மேல அதிகமா கவனமா இருந்துட்டேன். இதுக்கு நடுவுல எதுவும் பெருசா தெரியல” என்றவனை ராகுல் பார்க்க

“நீயும் அந்த வயசுல தான் இருக்க. அதனாலதான் உங்கிட்ட மனசை விட்டு பேசறேன். நல்லா படி. அதைத் தவிர எந்த விஷயத்தையும் யோசிக்காத. உனக்கு ஸ்கூல், ட்யூஷன், எனக்கு வேலை, படிப்புனு நம்ம நாலு பேரும் சேர்ந்து இருக்கற நேரமே குறைவா இருக்கு. அதனால சேர்ந்து இருக்கும் போது எதைப் பத்தியும் யோசிக்காமல் சந்தோஷமா இருப்போம்” என்றான் கிருஷ்ணா.

“என்னடா… புதுசா அட்வைஸெல்லாம் பண்ற” என்றவனிடம்

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லடா. நானும் அம்மாவும் நிறைய பேசுவோம். இப்பல்லாம் அம்மாவுக்கு அப்பாவ பார்க்கவே சரியா இருக்கு. நானும் வீட்டுல இல்லாம இப்போ உனக்கு கஷ்டமா இருக்கோன்னு தோன்றதுடா” என்றான் கிருஷ்ணா.

“உண்மைதான். அம்மா அதனாலதான் ஸ்கூல் நேரம் போக தபலா சேர்த்துவிட்டா” என்று சொல்ல

“எப்படியோ அம்மா நம்ம மூணு பேரையும் சமாளிச்சுடறா” என்ற கிருஷ்ணா பணத்தை செலுத்த, இருவருமாக வெளியே வந்தனர்.

ஒரு கடையில் ராகுலுக்கு பிடித்தமான காஃபி நிற லெதர் பெல்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்த கிருஷ்ணா, பீட்ஸாவையும் ஆர்டர் செய்ய இருவருமாக சாப்பிட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தனர்.

அன்றைய நாள் அழகிய பொழுதாய் கழிந்தது. பெற்றோர் தரும் அறிவுரையை விட ஒரு நண்பனாக விளையாட்டாய் கிருஷ்ணா சொன்ன விஷயங்கள் அந்த வயதில் ராகுலுக்கும் தேவையாக இருந்தது. விடுமுறை முடிந்து கிருஷ்ணாவும் வேலைக்குப் கிளம்பிச் சென்றான்.

நாட்கள் உருண்டோடியதில் கிருஷ்ணாவிற்கு இந்திய தூதரகத்தில் வேலை கிடைக்க, டெல்லியில் குடியேறினான். தன் முதல் மாத சம்பளத்தை எடுத்துக் கொண்டு வந்தவன், கவரைப் பிரிக்காமல் அப்படியே தன் தந்தையிடம் கொடுக்க, கண்களில் நீர்வழிய ஆனந்தத்துடன் வாங்கிக் கொண்டவர், மனைவி நந்தினியை தன்னருகில் நிற்கச் சொல்லி கிருஷ்ணாவிற்கு ஆசீர்வாதம் செய்தார்.

கண் கலங்கிய கணவனைப் பார்த்து, “ஏன்னா அழறேள்? நீங்க இன்னும் எத்தனை மடங்கு உங்க பையனை விட அதிகமா சம்பளம் வாங்கறேள். அப்படி இருக்கறச்ச, பையனோட முதல் மாச சம்பளத்தை கையில கொடுத்ததும் இப்படி அழறேளே?” என்று கேட்க

“உனக்கு சொன்னா புரியாது நந்தினி. என் பையன் கைக்கு வந்துட்டான். எப்படியும் குடும்பத்தைக் காப்பாத்திடுவான். இனி நான் நிம்மதியா இருப்பேன்” என்றார் கார்த்திக்.

அம்மாக்கள் மகன்களிடம் அதிகம் பேசுவார்கள். ஆனால் உண்மையில் அப்பாக்கள் மகன்களைப் பற்றி நிறைய கனவு காணுவார்கள். தான் பட்ட கஷ்டம் தன் மகன் படக்கூடாது என்று நினைப்பார்கள்.

வேலைக்குப் போனால் மாதாமாதம் பெற்றவர்களுக்கு பணம் தரவேண்டும் என்று அம்மா சொல்லி புரிய வைக்கும் போது, கேட்காமலேயே வீட்டின் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது அப்பாவின் மனம்.

கடைசி வரை தங்கள் செலவைக் குறைத்துக் கொண்டு பெற்ற குழந்தைகளுக்காகவே சேமித்து வைக்கும் மனம் பெற்ற மனம்.

இதற்கு நடுவில் பிறந்த வீட்டிலிருந்து அப்பா மிகவும் முடியாமல் இருப்பதாகத் தகவல் வர, பிள்ளைகளிடம் கணவனைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு அடித்துப் பிடித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்றாள் நந்தினி.

அப்பா வயது எண்பதைத் தாண்டியிருந்தது. அந்த வயதிலும் அம்மா அப்பாவுக்கு தேவையானவற்றை தானே பார்த்து பார்த்து கவனித்தாள்.

அப்பாவிற்கு பேச்சு குறைந்து போயிருந்தது. அருகில் நந்தினி உட்கார்ந்து கொள்ளவும், தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தார்.

“இத்தனை வயசுலயும் உங்க அப்பாவுக்கு பொண்ணு மேல உள்ள பாசத்தைப் பாத்தயா? ஒரு துளி கூட குறையல. உன்னோட அக்கா, தங்கைங்கன்னு எல்லாரும் வந்து உங்க அப்பாவப் பாத்துட்டு போனா. அப்பவே நீ வந்திருந்தா எல்லாரையும் பாத்திருக்கலாம். ஆனா உன்னோட சூழ்நிலைக்கு, நீ உன் வீட்டை விட்டு எங்க நகர முடிஞ்சுது? ஏதோ, இப்பவாவது வந்தயே. உங்க அப்பாவுக்கு மனசு பூரா உன்னைப் பத்திதான் கவலை. எங்கொழந்தைக்கு ரொம்ப கஷ்டம். விளையாட்டா இருந்த பொண்ணுக்கு பொறுப்புக்கு மேல பொறுப்பு. இத்தனை கஷ்டத்தையும் தைரியத்தோட கடவுள் மேல பாரத்தப் போட்டூட்டு எல்லாத்தையும் சகிச்சுண்டு அவ வீட்டை நன்னா பாத்துக்கறான்னு ஒரே புளாங்கிதப்படுவார் உங்க அப்பா” என்றாள் அம்மா.

“அப்பவும் நீ என்னை பாராட்டமாட்டன்னு சொல்லு” என்றவளிடம்

“நான் பெத்ததது அத்தனையும் வைரம் தான். ஆனா அதை நான் சொல்லக் கூடாது. ஊர் மெச்ச நான் கேட்டா போறும்” என்றவள், அந்த வயதிலும் மகளின் கையில் காஃபியைக் கொடுத்தாள்.

அவளுக்கிணை யாருமில்லை. அன்றிரவு வரை நன்றாகவே போய் கொண்டிருந்தது.

திடீரென அப்பாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே கொஞ்சம் கொஞ்சமாக நாடி அடங்கி விட்டது. நந்தினிக்காகவே தன் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்த அந்த ஆத்மா, நிம்மதியாக அன்று உறங்கிப் போனது.

ராகுலும், கிருஷ்ணாவும் கார்த்திக்குடன் காரில் ஊருக்கு வந்துவிட்டு மூன்று நாட்கள் முடிந்தவுடன் கிளம்பிச் சென்றார்கள். தனக்குத் தெரிந்ததை சமைத்துக் கொண்டும், சில நேரம் வெளியே வாங்கிக் கொண்டும் அப்பாவைப் பார்த்துக் கொண்டான் ராகுல்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு பெற்றோர் வீட்டில் பதிமூன்று நாட்களும் கூடப் பிறந்தவர்களுடன் இருந்து காரியத்தை நல்லபடியாக முடித்து வந்து வீட்டிற்கு வந்தாள் நந்தினி.

அலுவலகத்தின் தொடர்ந்த பணி அழுத்தத்தாலும், தனக்கு உடல் ஒத்துழைக்காததாலும், கார்த்திக் தானாக முன் வந்து பணி ஓய்வு பெற்றார். பி.டெக் கெமிக்கல் இஞ்சினியரிங் முடித்து ராகுல் துபாயில் வேலைக்குச் சேர்ந்தான்.

தான் உயிரோடிருக்கும் போதே தன் குழந்தைகளுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கார்த்திக் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

கிருஷ்ணாவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுக்க, சொந்த பந்தங்களிலேயே நிறைய பேர் பெண் கொடுக்கத் தயாராக இருந்தனர். ஆனால், வெளியிலிருந்தே பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று கணவனும் மனைவியும் ஒன்றாக முடிவெடுத்திருந்தனர்.

சொந்தத்தில் கசந்து மோந்து கொள்ளாது என்பதில் இருவரும் கவனமாக இருந்தனர். அப்போதும், சொந்தக்களில் சில புகைச்சல்கள் இருக்கத் தான் செய்தது. ஆனாலும் கார்த்திக்கும், நந்தினியும் தங்கள் முடிவில் மாறாமல் இருந்தார்கள்.

ஆறு மாதத்தில், கோவையைப் பூர்வீகமாகக் கொண்டு டெல்லியில் வாழ்ந்து வரும் குடும்பத்திலிருந்து அனு என்ற ஒரு நல்ல வரன் அமைய, கிருஷ்ணாவின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடித்தனர்.

திருமணத்திற்கு இரு பக்க ரத்த பந்தங்கள், சொந்த பந்தங்கள், கிருஷ்ணாவுடன் வேலை செய்பவர்கள், நண்பர்கள் என அனைவரும் வந்தனர்.

வீட்டிற்கு தனக்குப் பின் ஒரு மாட்டுப் பெண்ணைக் கொண்டு வந்ததில், எல்லோரையும் விட நந்தினி மிகவும் திருப்தியடைந்தாள்.

“நம்ம பையன் கல்யாணத்தை நடத்திப் பாக்கற அளவுக்கு என் உயிரைக் கையில் பிடிச்சு கொண்டு வந்துட்ட நந்தினி” என்று நெகிழ்ந்து போனார் கார்த்திக்.

ஆனால் உண்மையில் உடலாலும், மனதாலும் நந்தினி மிகவும் சோர்ந்து தான் போயிருந்தாள். வயதுக்கு மீறிய அனுபவங்கள், வலிகள் அவளை மிகவும் தளர்வடையச் செய்திருந்தது.

“அம்மா… இப்பவே முடியலன்னு உட்கார்ந்தா எப்படி? எனக்கும் கல்யாணம் காட்சினு பண்ணனும்னு ஆசையில்லயா? நான் மட்டும் கட்டை பிரம்மச்சாரியா அலையணுமா?” என்று கிண்டலடித்த ராகுலிடம்

“அடப்போடா… வீட்டுக்கு இன்னொரு நந்தினியைக் கொண்டு வந்துட்டேன். அவ இனி இந்த வீட்டைப் பாத்துப்பாடா. எனக்கு இனி கவலையில்லை” என்றாள் நந்தினி.

“என்ன மன்னி… மொத்த பொறுப்பையும் உங்க தலைல அம்மா சுமத்தீட்டா போல இருக்கே?” என்று ராகுல் அனுவிடம் சொல்ல

“அண்ணா, தம்பி உங்க ரெண்டு பேர் ரகளைய ஒருத்தரா எவ்வளவு நாள் தான் பாத்துண்டு இருப்பா. அதான் நானும் கொஞ்சம் பாத்துக்கலாம்னு இருக்கேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அனு.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 17) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை