in

வைராக்கியம் ❤ (பகுதி 16) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10 

பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14  பகுதி 15

“நந்தினி என்னைக் கூட்டீண்டு போயிடு. உங்களையெல்லாம் விட்டுட்டு என்னால இருக்க முடியல. கிருஷ்ணா, நீ அம்மாகிட்ட சொல்லுடா” என்று கெஞ்சவும்

“என்ன ஆனாலும் சரிம்மா, நாம அப்பாவ வீட்டுக்கு கூட்டீண்டு போய் வீட்டுலயே வச்சு நன்னா பாத்துக்கலாம். எங்கயும் அனுப்ப வேண்டாம்” என்று சொல்ல

“அதுவே சரி” என்று நந்தினிக்கும் தோன்ற, “நாளைக்கு டாக்டர்- கிட்ட பேசி ஒரு முடிவெடத்துடலாம்” என்றாள்.

அன்று இருவருக்கும் தூக்கமே வரவில்லை. “ஏம்மா, இங்கிருந்து ஊருக்கு போனதுக்கப்பறம் பெங்களூர் எலஹங்காவில் என் ஃப்ரெண்ட்டோட அப்பாவ ஒருநாள் போய் பார்க்கலாம். அவர் ஒரு பெரிய மனோதத்துவ நிபுணரா இருக்கார். அவர்கிட்ட அப்பாவ ஒரு தடவை கூட்டீண்டு போய் கவுன்சிலிங் குடுத்தா என்ன ஏதுன்னு கொஞ்சம் பிடிபடும். அதைத் தவிர யார் என்ன சொன்னாலும் என்னைக் கேக்காம, நீ இது விஷயமா எந்த முடிவெடுக்காத” என்று கிருஷ்ணா சொல்லவும்

மகன் கிருஷ்ணா கைக்கு வந்துவிட்டான் என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டவள் “சரிடா” என்று சொல்லி விட்டு அசதியில் உறங்கிப் போனாள்.

சிறிது நேரம் நண்பன் ஆதியுடன், தான் ஊருக்கு வந்த விவரத்தைக் தெரிவித்து விட்டு சிறிது நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த கார்த்திக், பிறகு உறங்கிப் போனான்.

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்தவர்கள் குளித்து முடித்து தங்கள் உடைமைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே காலை டிபனையும் சாப்பிட்டு விட்டு மருத்துவமனையை அடைந்தனர்.

டாக்டர் வரும்வரை இருவரும் காத்திருக்கும் அறையில் உட்கார்ந்திருக்க, அருகில் ஒரு வயதான பாட்டி வந்து உட்கார்ந்தார்.

இவர்கள் வந்த விவரத்தை விசாரித்தும், “இது சரியாக சிகிச்சை தர இடம் தான். ஆனா கொஞ்சம் நாள்பட ஆனாத்தான் சரியாகும். பொறுமை வேணும்” என்று மலையாளம் கலந்த தமிழில் தெரிவித்தவள் தான் அங்கு வந்த காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தன் பேரன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்று விட்டு திரும்பி வரும் வழியில் எதிரே வந்த கார் மோதிய விபத்தில் தலையில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டு ஆபரேஷன் செய்ததாகக் கூறியவர், அதன் பின்னரும் பெருமளவு முன்னேற்றம் இல்லாததால் மருத்துவமனை கைவிட்டதாகத் தெரிவித்தார்.

பிறகு இந்த ஆயுர்வேத மருத்துவமனையைப் பற்றி கேள்விப்பட்டு இங்கே சிகிச்சைக்காக கூட்டி வந்திருப்பதாக மேலும் தெரிவித்தாள்.

“இந்த சின்ன வயசுல வயசுல உங்க பேரனுக்கு இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டிருக்க வேண்டாம் பாட்டி. கவலைப்படாதீங்க” என்று தன் கஷ்டத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவர்களைத் தேற்றிக் கொண்டிருந்தாள் நந்தினி.

“பரவாயில்லைம்மா. பழகீடுச்சு. இந்த மாதிரியான விஷயங்களில் அடிபடுபவர்களைக் காட்டிலும் அவர்களின் குடும்பங்கள் படும் பாடு, வேதனைதான் ரொம்ப பெருசா இருக்கும்” என்ற பாட்டி தான் மட்டும் இங்கே தங்கியிருந்து பார்த்துக் கொள்வதாகவும் பெற்றவர்கள் பத்து பதினைந்து நாளுக்கு ஒருமுறை வீட்டிலிருந்து வந்து பார்த்து விட்டுச் செல்வதாகவும் சொன்னார்.

“அவங்களுக்கு பையன் கூட இல்லாதது கஷ்டமாத் தெரியலையா பாட்டி?” என்று நந்தினி கேட்க

“இது ஒரு நாள் ரெண்டு நாள்ல சரியாகப் போற விஷயமில்லையேம்மா. மாசக் கணக்குகாகும். ஏன் வருஷக் கணக்கா கூட ஆகும். என் பையன் கோவில் பூஜை பண்ணறவன். பேத்தி ஸ்கூல் போறா. மாட்டுப்பொண்ணு வீட்டைச் பாத்துப்பா. சம்பாத்தியம்னு ஒண்ணு இருந்தா தான கொஞ்சமாச்சும் எல்லாத்தையும் சமாளிக்க முடியும். வயசு பசங்களுக்கு இதெல்லாம் எங்க புரியுது. விபத்துல இவன் மேல தப்பா, இல்ல கார்காரன் மேல தப்பான்னு தெரியல. ஆனா ஒரு நிமிஷத்துல நடந்த ஒரு விஷயம் குடும்பம் மொத்தத்தையும் தான பாதிக்குது” என்று சொல்லவும் நந்தினிக்குத் தன் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கத் தோன்றியது.

“என் பையன் மருமக வரும் போது எனக்கு வேணுங்கற புளிக்காய்ச்சல், தக்காளி தொக்கு, கொஞ்சம் பொடினு கொண்டு வந்து குடுத்துட்டுப் போவாங்க. என் காலம் முடியற வரைக்கும் என் பையன் பேரனுக்குப் பண்ணாமல் யாருக்குப் பண்ணப் போறேன். ஏதோ கூட இருந்து என்னாலானத பாத்துக்கறேன்” என்று பாட்டி சொல்லி முடித்தும் அவர்களின் மீது நந்தினிக்கு ஒரு தனி மரியாதையே வந்தது.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கஷ்டம் வரத்தான் செய்கிறது. ஆனால் மனம் தளராமல் தன்னால் முடிந்தவரை பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி அதைக் கடந்து வருவதே சிறந்தது என்பதற்கு உதாரணமாக அந்தப் பாட்டியைப் பார்த்தாள் நந்தினி.

காத்திருப்பு அறைக்கு வந்த ரிசப்ஷனிஸ்ட், “கார்த்திக் பேஷண்ட்டுக்காக வந்த அட்டண்டர் யாரு?” என்று கேட்க நந்தினியும், கார்த்திக்கும் எழுந்தார்கள்.

“டாக்டர் வந்தாச்சு. நீங்க டாக்டரைப் போய்ப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு ரிசப்ஷனிஸ்ட் செல்ல

டாக்டரின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து நந்தினியும், கிருஷ்ணாவும் ஊரிலிருந்து தாங்கள் வந்த விவரத்தைச் சொன்னார்கள்.

“நீங்களா தான இந்த மருத்துவமனைக்கு கூட்டீட்டு வந்து அட்மிட் பண்ணீட்டு போனீங்க. இப்ப ஒரு வாரத்துல என்னாச்சு?” என்று டாக்டர் கேட்க

“குடும்ப சூழ்நிலை காரணமா தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்க முடியாத நிலைமைல இருக்கோம் டாக்டர். அதனால வீட்டுலயே வச்சு பாத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்” என்றாள் நந்தினி.

ஒரு நிமிடம் யோசித்த டாக்டர், “சரி. இது உங்களோட சொந்த முடிவு. நீங்களா தான் சிகிச்சை முடியறதுக்கு முன்னாடியே கூட்டிக்கிட்டுப் போகணும்னு சொல்றீங்க. சரி… அதையே ஒரு கடிதமா எழுதி ரிசப்ஷன்ல குடுத்திடுங்க. அப்பறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். அதப் பத்தின எல்லா விவரங்களையும் ரிசப்ஷன் கவுண்ட்டர்ல சொல்லுவாங்க. போய்ப் பாருங்க” என்று நிதானமாகச் சொன்னார் டாக்டர்.

“ரொம்ப நன்றி டாக்டர்” என்று இருவரும் டாக்டருக்கு நன்றி தெரிவிக்க

“வீட்டில் அவர் செய்ய வேண்டிய சில உடற்பயிற்சிகளை நர்ஸ் சொல்வாங்க. தொடர்ந்து அந்த பயிற்சிகளை அவர செய்யச் சொல்லுங்க. நல்ல முன்னேற்றம் தெரியும். ஓ.பி (அவுட் பேஷண்ட்) பாத்துட்டு, அட்மிட் பேஷண்ட்ட வந்து பார்க்க வரும் போது அவர நான் பார்க்கறேன்” என்றவர் தலையசைத்துவிட்டு தன் அழைப்பு மணியை அடிக்க

அவரிடமிருந்து விடைபெற்றவர்கள், ரிசப்ஷனில் கடிதத்தைக் கொடுத்துவிட்டு டிஸ்சார்ஜ் பற்றி விசாரிக்கவும், “எப்படியும் இன்னும் ரெண்டு மணி நேரமாகும். நீங்க ரூம்ல இருங்க. நாங்களே பில் ரெடியானதும் ரூமிற்கு வந்து சொல்லுவோம்” என்றார்கள்.

பின்பு கார்த்திக் அறைக்கு வந்தவர்கள் ஊருக்குக் கிளம்புவதற்காக எல்லா சாமான்களையும் கட்டி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

தூக்கத்திலிருந்து விழித்த கார்த்திக்கிடம் விஷயத்தைச் சொல்ல கண்களின் ஓரம் கண்ணீர் வந்தது. தன் கைகளை நீட்டி கிருஷ்ணாவை அழைத்தவர், அருகில் சென்றதும் கிருஷ்ணாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார்.

ஒருவழியாக இரண்டு மணிநேரம் கழித்து மருத்துவமனையின் பில் வர, பணத்தைக் கட்டிவிட்டு ஒரு காரை புக் செய்து மூவருமாக காரில் பெங்களூர் நோக்கி பயணப்பட்டனர்.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் வாழ்க்கை உன் கையில் (நாவல் – நிறைவுப் பகுதி) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை