2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20
வீட்டில் அவாய்ட் பண்ணிவிட்டு வந்தால், இங்கு ஏன் இவன் வந்தான் என்று எண்ணியவளாய், “ரிஷி சார், இங்கு ஏன் வந்தீர்கள்?” என்றாள் தர்ஷணா.
“உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் தர்ஷணா. உணவு இடைவேளை நேரத்தில் கொஞ்சம் வெளியே போய் விட்டு வரலாமா? ஒரு மணி நேரத்தில் உன்னைக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்து விடுகிறேன்” என்றான் ரிஷி.
‘சரி’ என்று அரைமனதுடன் கிளம்பினாள். தன்னுடன் பணிபுரியும் மிருதுளாவை கொஞ்சம் இவள் சீட்டையும் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு சீப்-டாக்டரிடமும் அனுமதி பெற்று ரிஷியுடன் கிளம்பினாள்.
“நல்ல ஹோட்டலாகப் பார்த்து லஞ்ச் சாப்பிட்டு வரலாம்” என்றவன், அவளுக்கு காரின் முன் கதவைத் திறந்து விட்டான். தர்ஷணாவும் ஏறி அவன் அருகில் அமர்ந்து கொண்டான்.
“சொல்லுங்கள்” என்றாள் தர்ஷணா தலை குனிந்தவாறு.
“நீ ஏன் தர்ஷணா இப்படி மாறி விட்டாய்? நிமிர்ந்து நின்று எல்லோரையும் நேருக்கு நேராகப் பார்த்துப் பேசும் நீ என்னை மட்டும் ஏன் அவாய்ட் பண்ணுகிறாய்?”
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்குக் கொஞ்சம் வேலை அதிகம் இருப்பதால் வீட்டிலிருந்து சீக்கிரம் கிளம்பி விடுகின்றேன், அவ்வளவு தான்” என்றாள் மெதுவான குரலில்.
“உனக்குக் கூட என்னைப் பிடிக்கவில்லையா தர்ஷணா? நான் அமெரிக்காவில் இருந்து போனில் பேசும் போது நீ என்ன கேட்டாய்? அந்தப் பெண்ணிடம் அவள் விருப்பத்தைக் கேட்டாயா என்று தானே?” என்றவன் அவள் முகத்தை உறுத்துப் பார்த்தான்.
“ஆம் கேட்டேன்” என்றாள் தர்ஷணா .
“நான் உன்னை காதலிக்கிறேன் தர்ஷணா, உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா? உன் விருப்பத்தைக் கேட்கிறேன், என் மேல் ஆணையாக உண்மையைச் சொல்” என்றான் உணர்ச்சிமிக்கக் குரலில். அவனை நிமிர்ந்து வெறித்துப் பார்த்தாள் தர்ஷணா.
“சொல் தர்ஷணா, எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல்” என்றான்.
“நீங்கள் ‘ரொம்பப் பிடிச்சிருக்கு‘ என்று சொல்லிய போதே உங்கள் மனம் எனக்குப் புரிந்தது. உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, ஆனால் எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. அக்கா மட்டும் தான் ஆதரவு. பணம் கிடையாது, அம்மா அப்பா யாரும் கிடையாது. படித்த படிப்பு ஒன்று தான் சொத்து. எந்தத் தகுதியை வைத்து நான் உங்களை விரும்ப முடியும்? எங்கே என்னை மீறி உங்கள் எதிரில் உடைந்து விடுவேனோ என்று தான் இந்த எஸ்கேப்” என்று கூறியவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
காரை ஓரமாக நிறுத்தி விட்டு தர்ஷணாவைத் தன்னருகில் இழுத்துக் கொண்ட ரிஷி, அவள் கண்களைத் தன் இதழ்களால் மூடினான்.
“முட்டாள் பெண்ணே, மூன்று நாட்களாக என்னை எப்படித் தவிக்க விட்டாய். உயிரே போவது போல் இருந்தது. நீ என்னுடைய தர்ஷணா, இதைத் தவிர வேறென்ன தகுதி வேண்டும்? ஆனால் என் தர்ஷணாவிற்கு என்ன குறை?” என்று அவள் முகம் முழுவதும் தன் இதழ்களால் ஒற்றி எடுத்தான். இறுகியிருந்த அவன் பிடியை லேசாக விலக்கினாள்.
“டாக்டர் ரிஷி சார், இது அமெரிக்கா இல்லை . கோயமுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமம். இங்கே இப்படியெல்லாம் செய்தால் எப்படி?” என்றாள் முகம் சிவந்து.
“நீ இப்படி வெட்கப்படுவதற்காகவே, உன் முகம் இப்படி ரோஜாவாக சிவந்து போவதற்காகவே மறுபடியும் உன்னை அணைத்து முத்த மாறிப் பொழிய வேண்டும் போல் இருக்கிறது” என்றவன் அவளை மறுபடியும் தன் அருகில் இழுத்துக் கொண்டான்.
“இருக்கும் இருக்கும், ஆனால் மூன்று நாட்களாக உங்கள் நினைவால் பசியேயில்லாமல் சாப்பாட்டை ஒதுக்கிய எனக்கு, உங்களிடம் மனம் திறந்து பேசிய பிறகு பயங்கரமாகப் பசிக்கிறதே” என்றாள் சிரிப்புடன்.
ஹோட்டலை அடைந்ததும் அவனுக்குப் பிடித்த பாதாம் அல்வாவும், அவளுக்குப் பிடித்த நெய் மசாலா தோசையும், ஐஸ்கிரீமும் ஆர்டர் செய்தான். சாப்பாட்டிற்குப் பிறகு ஒவ்வொரு கிலோ ஸ்வீட்டாக, இரண்டு ஸ்வீட் பாக்ஸகள் தனித்தனியே வாங்கிக் கொண்டான்.
“எதற்கு இரண்டு ஸ்வீட் பாக்ஸ்?” என தர்ஷணா கேட்க
“ஒன்று ஆஸ்பத்திரியில் டாக்டர் மிருதுளாவிற்கும் மற்றவர்களுக்கும் கொடு, இன்னொன்று நம் காதலை அம்மா அப்பாவிடம் ஸ்வீட்டோடு சொல்லப் போகிறேன்” என்றான் ரிஷி.
“ஐயோ, சாயந்திரம் வீட்டிற்கு வந்து ஆன்ட்டி அங்கிள் முகத்தில் எப்படி விழிப்பேன்?”
“நீ ஒன்றும் கவலைப்படாதே. இரவு சாப்பாட்டிற்குப் பின், உன் எதிரில் தான் அம்மா அப்பாவுடன் பேசுவேன்” என்றவன், ஓட்டல் என்று கூட பாராமல் அவள் இதழ்களை லேசாக விரலால் தட்டினான்.
ஒரு ஸ்வீட் பாக்ஸோடு அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். தர்ஷணா ஸ்வீட் பாக்ஸோடு சீப் டாக்டரை சந்தித்தாள், அவரிடம் ரிஷியை அறிமுகப்படுத்திவிட்டுத் தன் இருக்கைக்குத் திரும்பினாள். ஸ்வீட் எடுத்துக் கொண்ட டாக்டர் மிருதுளா “கங்கிராட்ஸ், எனக்குப் புரிந்து விட்டது” என்றாள். ரிஷி அங்கிருந்து விடைபெற்றுச் சென்றான்.
மாலை தர்ஷணா வீடு திரும்பினாள். இவளைப் பார்த்த ரிஷி புருவங்களை உயர்த்தி லேசாக விசிலடிக்க, உள்ளே ஓடிவிட்டாள் தர்ஷணா. சமையலறையில் நீலாவிடம் சென்று ஸ்பெஷலாக டின்னர் தயாரிக்கச் சொன்னான் ரிஷி. ஜட்ஜ் பிரகாசமும் சாந்தாவும் ஒன்றாக ஹாலில் உட்கார்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ரிஷி அவர்களிடம் ஸ்வீட் பாக்ஸை நீட்டினான்.
சாந்தாவிற்கு ஏதோ புரிந்தாற் போல் இருந்தது. தர்ஷணாவைப் பார்த்தாள், ஆனால் அவளோ புத்தகத்தால் முகத்தை மொத்தமாக மறைத்துக் கொண்டாள்.
“ரிஷி, ஸ்வீட் ரொம்ப நன்றாக இருக்கிறதே ,என்னப்பா விஷயம்?” என்றார் ஜட்ஜ் பிரகாசம்.
ரிஷி எழுந்து போய் தர்ஷணாவின் பக்கத்தில் இடித்துக் கொண்டு உட்கார்ந்தான். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத தர்ஷணா சட்டென்று எழுந்தாள். ரிஷியோ, அவள் கையைப் பிடித்துத் தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.
“அம்மா அப்பா உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப் போகிறேன். நானும் தர்ஷணாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். நீங்கள் தான் எங்கள் திருமணத்தைப் பற்றி சீக்கிரம் தர்ஷணாவின் குடும்பத்தாரிடம் பேசி முடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
“ஏன் டாக்டர் சார்… இந்த தர்ஷணா இவ்வளவு கருப்பாக தெற்றுப்பல்லாக இருக்கிறார்களே, உங்களுக்கு இவர்களைப் பிடிக்கிறதா?” என்றாள் நீலா சிரித்தபடியே சமயலறையிலிருந்து வெளியே வந்து.
“ஆமாம் நீலா, ரொம்பக் கருப்பாகத்தான் இருக்கிறாள் இல்லையா? என்ன செய்வது?” என்றான் ரிஷி, தர்ஷணாவை இறுக அணைத்தவாறு.
“ரிஷி, அம்மா அப்பா எதிரில் இப்படியா?” என்று முகம் சிவந்தாள். “நீலா, நீ என்னிடம் உதை போடப் போகிறாய்” என்றவாறு அவன் கையிலிருந்து விடுபட முயற்சித்தாள், ஆனால் முடியவில்லை. ஜட்ஜ் பிரகாசமும் அவர் மனைவியும் சிரித்தனர்.
“இந்த நீலாதான் முதன்முதலில் நீங்களிருவரும் போனில் பேசியதை என்னிடம் தெரிவித்தாள். எனக்கும் அங்கிளுக்கும் ஆளுக்கு ஒரு ஸ்வீட் கொடுத்துவிட்டு பாக்ஸை அப்படியே நீலாவிடம் கொடுத்துவிடு தர்ஷணா. இப்போதே சியாமளாவிடமும், விக்னேஷிடமும் பேசிவிடலாம்” என்ற சாந்தா, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றார் கணவரிடம் திரும்பி மிக உற்சாகமாக.
“எப்போதுமே நீ தானே சுப்ரீம்கோர்ட். உன் ஜட்ஜ்மென்ட் தான் என்னுடையதும். அதுவுமில்லாமல் ரிஷி இன்னும் பதினைந்து நாட்கள் லீவ் எக்ஸ்டென்ட் செய்தால், கல்யாணம் முடித்து தர்ஷணாவையும் அழைத்துச் சென்று விடலாம்” என்றார் பிரகாசம்.
அப்போது சொல்லி வைத்தாற் போல் டெலிபோன் மணி அடித்தது. மாதவன் தான் அழைத்தார், நிர்மலா மாதவன் இருவரும் பேசினார்கள்.
நித்யாவின் பதினெட்டாவது பிறந்த நாளை கிராண்டாக பெரிய ஹோட்டலில் வைத்து செலிபரேட் செய்யப் போவதாகவும், அதற்கு இவர்கள் எல்லோரும் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
“தர்ஷணாக்கா கட்டாயம் வர வேண்டும் என்று கலாட்டா செய்கிறாள் நித்யா” என்ற மாதவன், “போனை நித்யாவிடம் கொடுக்கிறேன், அவள் பேச வேண்டும் என்கிறாள்” என்றார்.
“ஜட்ஜ் அங்கிள், நீங்களும் ஆன்டியும் தர்ஷணா அக்காவை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டில் இரண்டு நாள் தங்குவது போல் அவர் வேண்டும்” என்ற நித்யா. “நான் தர்ஷணாவிடம் பேச வேண்டும்” என்றாள்.
பிரகாசம் போனை தர்ஷணாவிடம் கொடுத்தார். தர்ஷணா அவள் நலம் விசாரித்தாள். “மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டாள்.
(தொடரும் – வெள்ளி தோறும்)
GIPHY App Key not set. Please check settings