in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 6) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5

“அடகுக் கடையில் வைத்துப் பணம் வாங்கினேன் மாமா. என் பள்ளிக்கூடத்திற்கு அருகில் ஒரு சிறிய போர்ஷன் காலியாக இருக்கிறது. நானும் இன்னொரு ஆசிரியையும் போய் பார்த்தோம். பள்ளிக் கூடத்திற்கு நான் நடந்தே போய் விடலாம். தர்ஷணா, விஷ்ணு பள்ளிக்கூடமும் மிக அருகில். ஸ்கூல் பஸ்ஸிற்குப் பணம் கட்ட வேண்டாம். உங்களுக்குத்தான் மிகுந்த சிரம்ம் கொடுத்து விட்டேன், மன்னித்து விடுங்கள். இரண்டு மாத வாடகை தான் அட்வான்ஸாக கேட்கிறார்கள். இப்போது  தான் கையில் பணம் இருக்கிறதே, நாளைக் கட்டி விடுவேன்”   என சியாமளா கூற

கண்களில் வலியுடன் “அம்மாவிற்குத் தெரியுமா?” எனக் கேட்டான் விக்னேஷ்.

“இன்னும் சொல்லவில்லை மாமா. நாளைக்கு வீட்டிற்கு அட்வான்ஸ் தொகை கட்டிவிட்டு பிறகு சொல்லலாம் என்று நினைத்தேன்” என்றாள் சியாமளா.

பேசிய வார்த்தைகளுக்கு விக்னேஷ் மிக வருந்தினான் என அவன் முகத்திலிருந்தே தெரிந்தது. அத்தை அழுதாள், ஆனால் சியாமளா எடுத்த முடிவிலிருந்து மாறவில்லை. இருவரையும் சமாதானப்படுத்தி, பால் காய்ச்சி தனிக்குடித்தனம்  போய் விட்டாள்.

தர்ஷணாவிற்கு, அத்தையை விட்டு, விக்னேஷை விட்டு, ஏன் அந்த  வீட்டை விட்டுப் போகவே பிடிக்கவில்லை. விஷ்ணுவும், அம்மா அப்பா இல்லாத குறையே தெரியாமல் அத்தையிடம் கொஞ்சிக் கொண்டும், மாமாவிடம் விளையாடிக் கொண்டும் இருந்தான். ஆனால் இந்த வீட்டில், இப்போது அக்கா சியாமளா பள்ளியிலிருந்து வரும் வரை, தனியே இருப்பது மிகக் கடிளமாக தெரிந்தது.

அவர்கள் தனிக்குடித்தனம் போன பிறகு விக்னேஷற்கு வீடு மிக வெறுமையாக இருந்தது. எங்கு பார்த்தாலும் சியாமளாவின் சிரித்த அமைதியான முகமே கண்ணில் தெரிந்தது. தர்ஷணாவும், விஷ்ணுவும் போடும் சண்டையுமில்லாமல் வீடு வெறிச்சென்று இருந்தது.  சியாமளா எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததில் அம்மாவிற்கு நல்ல ஓய்வு என்று அம்மாவின் ஆரோக்யத்திலிருந்து தெரிந்தது. இப்போது அம்மாவிற்கு மனதிற்கும் கஷ்டம், உடம்பிற்கும் கஷ்டம்.

விக்னேஷ் மனமோ சியாமளாவைப் பற்றி சில நாட்களாக வேறு விதமாக நினைத்தது. எல்லா விஷயங்களையும் சியாமளாவோடு பகிர்ந்து கொள்வான். ஆட்டோவில் ஏறிய பயணிகள் அடிக்கும் கூத்தும், மாலை நேரக் கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களையும், அப்படியே இமிடேட் செய்வான். அவளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நேரமும், அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வரும் போது செலவிடும் நேரமும் அவனுக்கு மிக இனிமையான நேரமாக இருந்தது. எப்படி எல்லாவற்றையும் ஒரே ஒரு வார்த்தைக்காக உதறி விட்டுப் போனாள் என்பது  நம்ப முடியாததாக இருந்தது.

“எப்படி எல்லாவற்றையும் ஒரே ஒரு வார்த்தைக்காக ஒரு நொடியில் மறந்து விட்டு சியாமளாவால் இப்படிச்  செய்ய முடிந்தது?” என்றான் ஒரு நாள் விக்னேஷ் தன் அம்மாவிடம்.

விக்னேஷ் வாயிலிருந்து வரும் கடுமையான வார்த்தைகள் கூரிய அம்புகள் போன்றது.

“இந்த வீடு நமக்கு உரிமையான வீடு என்று சியாமளா நினைத்திருந்தாள். ஆனால் நீயோ ‘என் சொல்படி கேட்காவிட்டால் வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கடுமையாகவும், அலட்சியமாகவும் கூறி விட்டாய். ஏற்கெனவே எல்லாவற்றையும் இழந்து ஒரு அகதியைப் போல இந்த வீட்டிற்கு வந்தாள். இந்த வீடும் நமக்கு சொந்தமானது அல்ல என்ற எண்ணம் வரும்படி நீ பேசிய வார்த்தைகள் அவள் மனதைக் கிழித்து விட்டது. உறவுகளை  உதறுவதல்ல வாழ்க்கை. நான் என்ன சொல்வது? நீயே போகப் போகப் புரிந்து கொள்வாய்” என்று முடித்தாள் அம்மா.

இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. சியாமளாவிற்கு வீட்டு வேலைகள், பள்ளிக்கூட வேலைகள் என்று வேலைகள் அதிகமாகி விட்டன. அவளால் அத்தையின் வீட்டிற்கு வந்து பார்க்க முடியவில்லை, ஆனால் அத்தையோ  ஒருநாள் விக்னேஷின் ஆட்டோவில் ஏறி சியாமளாவின் வீட்டிற்கு வந்தாள். மாலை மணி நான்கு இருக்கும். தர்ஷணா ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள், விஷ்ணு ஒரு சிறிய ரப்பர் பந்தை வைத்து அந்த சிறிய வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்தவுடன் இருவரும் எழுந்து வந்து அவர்களைக் கட்டிக் கொண்டனர்.

“அக்கா இன்னும் வரவில்லையா தர்ஷணா?” என்றான் விக்னேஷ்.

“வரும் நேரம் தான் மாமா, நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் வருவாள். உட்காருங்கள், டீ கொண்டு வரட்டுமா?”

“இப்போது தர்ஷணாவிற்கு டீ எல்லாம் போடத் தெரியுமா?”

“வேறே வழி? எல்லாவற்றையும் கற்றுத் தான் ஆகவேண்டும். அக்கா வர லேட்டானால் அதுவரை பசியோடு இருக்க முடியாது. அங்கே இருக்கும் போது அத்தை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம் அக்கா எதெற்கெடுத்தாலும் திட்டுகிறாள் மாமா, எரிந்து எரிந்து விழுகிறாள். அது கூடப் பரவாயில்லை, நான் திருப்பித் திட்டி விடுவேன். ஆனால் தனியாகப் போய் அழுகிறாள் மாமா, அப்போது தான் கஷ்டமாக இருக்கிறது” என்று மூச்சு விடாமல் சொன்னாள் தர்ஷணா.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பள்ளியிலிருந்து வந்தாள் சியாமளா. இருவரையும் பார்த்தவுடன் அவளுக்கு மிகுந்த சந்தோஷம்.

“ஒரே நிமிடம் இருங்கள், கொஞ்சம் உப்புமா செய்து டீ போட்டு விடுகிறேன்” என்று அவசரமாக உள்ளே போகத் திரும்பினாள். அத்தையும், விக்னேஷும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்ன அத்தை, என்ன மாமா அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றாள் சியாமளா சிரித்துக் கொண்டே.

“முதலில் இங்கே வந்து உட்கார். பாதாம் அல்வா, மசாலா தோசை, தயிர்வடை எல்லாம் வாங்கி வந்திருக்கிறான் விக்னேஷ். சாப்பிட்டு விட்டுப் பிறகு மெதுவாக டீ குடிக்கலாம்” என்றாள் அத்தை.

“சியாமளா… ஏன் இப்படி இளைத்து கருத்துப் போயிருக்கிறீர்கள்? எல்லாம் துடுக்கான என் பேச்சினால் தான். நான் சரியான முட்டாள்” என்றான் விக்னேஷ் வருத்தத்துடன்.

“அது தான் தெரிந்த விஷயமாயிற்றே மாமா, அதை நீங்கள் வேறு ஏன்  திருப்பித் திருப்பிச் சொல்லி கன்பர்ம் பண்ணுகிறீர்கள்?” என்றாள் தர்ஷணா சிரித்துக் கொண்டே.

“அடிப் போக்கிரிக் கழுதை” என்றான் விக்னேஷ் சிரித்துக் கொண்டே. சியாமளாவும் அத்தையும் விழுந்து விழுந்து சிரித்தனர். சியாமளா சிரிப்பதையே ஆவலுடன் விழுங்கி விடுபவன் போல் பார்த்துக் கொண்டிருந்தான் விக்னேஷ்.

விக்னேஷின் மடியில் உட்கார்ந்து கொண்டு  அவன் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. விஷ்ணுவின் கண்களில் கண்ணீர்.

“அக்கா, இதைப் பாரேன். பதினோரு வயதுப் பாப்பா… மாமா மடியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது” என்று கமென்ட் அடித்தாள் தர்ணா .

சியாமளா சமையல் அறையில் இருந்த சிங்க்’கிலேயே லேசாக முகம் கழுவித் துடைத்து,  ஸ்டிக்கர் பொட்டையும் ஒட்டிக் கொண்டாள்.

“இப்போதெல்லாம் வேலை நிறைய மாமா. அதனால் தான் களைப்பாகத் தெரிகின்றேன், வேறு ஒன்றுமில்லை” என்றாள் சிரித்துக் கொண்டே.

“எப்படி மன்னிப்பு கேட்கச் சொன்னாலும் கேட்கிறேன். எல்லோரும் நம் வீட்டிலேயே முன்பு போல் ஒன்றாக இருக்கலாம், எங்களுடனே கிளம்புங்கள்” என்றான் விக்னேஷ்.

“வேண்டாம் மாமா, இதுவும் ஒரு புதுஅனுபவம். வெயிலுக்குப் போனால் தான் நிழலின் அருமை தெரியும். இப்போது நீங்கள் எங்களைப் பார்க்க வந்தது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது பாருங்கள்” என்றாள்.

தர்ஷணா  உள்ளே போய் எல்லோருக்கும் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து வைத்தாள். அப்போது தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த மெல்லிய காகிதத்தில் சுற்றிய ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்து சியாமளாவிடம் கொடுத்தான் விக்னேஷ். சியாமளா பிரித்துப் பார்த்தாள். வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக ‘சேட்’டிடம் அடகு வைத்த அவள் வளையல்கள்.

“வட்டியோடு சேர்த்து பத்தாயிரம் ரூபாய் ஆகியிருக்குமே, மேலும் நகையை அடகு வைத்த ரசீது என்னிடம் இருக்கும் போது எப்படி சேட் உங்களிடம் வளையல்களைக் கொடுத்தார்?”

“சேட்டிற்கும்  எங்களுக்கும் ரொம்ப நாள் பழக்கம் சியாமளா. அவர் எங்களுக்குக் கஷ்டத்தில் கை கொடுக்கும் தெய்வம். நம் வீட்டு விலாசம் தானே அதில் கொடுத்திருக்கிறாய். ரசீதை என்னிடம் கொடு, அதில் ‘கேன்ஸல்’ என்ற சீலுடன் சேட்டின் கையெழுத்தும் வாங்கி விடுகிறேன்” என்றான்.

“உங்களுக்கு ஏன் மாமா இந்த வேண்டாத கஷ்டங்கள், நானே கட்டி விடுவேனே”

 “நீ முதலில் ரசீதைக் கொடு“ என்றான். ரசீதைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள் சியாமளா.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் பிறகு தான் தர்ஷணா சமையல் அறைக்குச் சென்று டீ போடப் போனாள். வாங்கி வந்த டிபனை எல்லோருக்கும் பிரித்து வைத்தான் விக்னேஷ்.

“குழந்தைகள் இருவருக்கும் முகத்தில் தான் சந்தோஷம் இல்லையே தவிர மற்றபடி ஆரோக்யமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நீ தான் ரொம்ப மெலிந்து போய் இருக்கிறாய் சியாமளா” என்றாள் அத்தை .

“அடிக்கடித் தனியாகப் போய் அழுகிறாள், அது ஏன் என்று  கேளுங்கள் அத்தை“ என்றாள் தர்ஷணா.

அதை கவனிக்காதவள் போல் உள்ளே போய் விட்டு வந்தாள் சியாமளா. அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்னேஷ்.

“மாமா, அத்தை… இன்று இரவிற்கு இங்கேயே டின்னர் தயாரித்து விடுகிறேன், நீங்கள் சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம்” என்றவள் சாப்பாடு தயாரிக்கச் சென்றாள்.

அத்தை களைப்பாக இருக்கிறதென்று ஒரு தலையணையை எடுத்துப் போட்டுப் படுத்துக் கொண்டாள். தர்ஷணாவும் விஷ்ணுவும் படிக்கத் தொடங்க, விக்னேஷ் எழுந்து சியாமளாவிடம் சென்றான்.

“தர்ஷணா சொல்வது உண்மையா சியாமளா?” என்றான் அவள் பின்னால் வந்து நின்று.

“தர்ஷணா என்ன சொன்னாள்?”

“நீ அடிக்கடித் தனியாகப் போய் அழுகிறாய் என்றாள். நிஜமாகவா? அப்படியென்றால் அது ஏன்?“

அவனை நிமிர்ந்து பார்த்த அவள் கண்கள் அப்போதும் கண்ணீரில் மிதந்தன. அவள் கண்ணீரைத் துடைக்க அவன் கைகள் துடித்தன, ஆனால் என்ன உரிமையில் அவளைத் தொடுவது? அவள் படிப்பு, அவள் வளரப்பு எல்லாம் அவனை விலக்கி வைத்தன. நிமிர்ந்து, மூச்சை உள்ளடக்கி, ஏதும் செய்ய இயலாமல் கண்களை மூடி நின்று, பிறகு பெருமூச்சு விட்டான். அவன் கண்களின் ஓரத்தில் கண்ணீர்.

“மாமா, நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” சியாமளா பதறினாள்

“நீ இல்லாமல் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை சியாமளா, எங்கு திரும்பினாலும் நீ இருப்பது போலவே இருக்கிறது. அதுவுமல்லாமல் உன் துயரத்திற்குக்  காரணம் நான் தான் என்ற மனவுளைச்சல் வேறு. அது போகட்டும், நான் கேட்டதற்கு இன்னும் பதில் சொல்லவில்லையே?”

“என்ன பதில் சொல்வது மாமா? முதலில் நாங்கள் பிறந்த வீட்டிலிருந்து விரட்டப்பட்டோம். அத்தையின் அன்பும் உங்கள் பிரியமும் சாஸ்வதம் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். அதுவும் நிரந்தரமானதல்ல என்று உங்களிடமிருந்தும் விரட்டப்பட்டோம். அது தான் ஒவ்வொரு சமயம் நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று நிறுத்தினாள்.

“எல்லாம் என்னால் தான்”

“எங்கள் அதிர்ஷ்டமும் நேரமும் தான், வேறென்ன சொல்வது?” என்றாள் சியாமளா.

“என்னை மன்னித்து விடுங்கள் சியாமளா. நிஜமாகவே நான் ஒரு முட்டாள். உன் மனம் எப்படி புண்பட்டிருக்கிறது, இந்த காயத்திற்கு நான் தான் மருந்து போட வேண்டும்” என்றவன், டக்கென்று அவள் கைகளைப் பிடித்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பினான்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கல்லும் கடவுளும் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 3) – ராஜேஸ்வரி