in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஜூலை 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ட்டோ ஓட்டிக் கொண்டு போகும் போது விக்னேஷற்கு, வீட்டிற்கு வந்து விருந்தாளிகளின் மேல் தான் நினைவு சென்றது. இவனும் இவன் அம்மாவும் தனியாக இருக்கும் போது, ஆட்டோவின் மூலம் கிடைத்த வருமானம், வீட்டின் செலவிற்கும் போய் சேமிப்பிற்கும் ஆனது.

ஆனால் இத்தனை நாள் இல்லாத உறவைச் சொல்லிப் புதியதாக வந்த விருந்தினர்கள், வந்து மூன்று மாதமாயிற்று. இன்னும் அவர்கள் கிளம்புவதாக இல்லை. வந்தவர்கள், விருந்தினர்களாக இல்லாமல் வீட்டு மனிதர்களாகி விட்டார்கள். இப்போது ஆட்டோவில் கிடைக்கும் வருமானம் மாதம் முழுவதற்கும் போதவில்லை.

வந்தவர்கள் மூவரும் அம்மாவின் தம்பி பெற்ற செல்வங்கள், இரண்டு பெண்கள் ஒரு பையன். அவர்கள் இங்கே வரும் வரை அப்படி ஒன்றும் நெருக்கமான பழக்கமில்லை.

பெரிய பங்களா, கார்கள், பிசினஸ் தான் அவர்கள் வாழ்க்கை என்று சொல்லுவாள் அம்மா. ஆனால், அவர்கள் மட்டும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை  இவர்கள் வீட்டிற்கு வருவார்களே தவிர, அம்மா ஒரு முறை கூட அவர்கள் வீட்டிற்குப் போனதில்லை.

அவர்கள் இங்கே வந்தால் ஹோட்டலில் தான் ‘ரூம்’ எடுத்துத் தங்குவார்கள். இவர்கள் வீட்டில் வந்து தங்கியது கூட இல்லை. விருந்தினர்கள் மாதிரி வந்து போவார்களே தவிர மற்றபடி நெருங்கிப் பழகியதில்லை.

விக்னேஷிற்கு நிறைய நண்பர்கள். மாமாவின் குடும்பத்தினர் வருகிறார்கள் என்றாலே நண்பர்களிடம் ஓடி விடுவான்.

அவர்கள் வீட்டிற்கு வந்தாலே ஒருமணி நேரம் தான் இருப்பார்கள். அதற்குள்ஆயிரம் குறை சொல்வார்கள். ஏ. ஸி. இல்லை, வீட்டில் ‘ப்ரிட்ஜ்’ கூட இல்லை, ‘சில் தண்ணி’ இல்லை என்று அமர்க்களம் செய்வார்கள்.

காலத்தின் நிர்பந்தத்தால், இப்போது அதே மாமாவின் மூன்று பிள்ளைகளும் இவர்கள் வீட்டில் நிரந்தரமாகத் தங்க வேண்டியதாயிற்று. பலதும் யோசித்தவாறு சென்ற விக்னேஷ் தெரு ஓரமாக நின்று  கையாட்டி ஆட்டோவை நிறுத்திய பெண்ணைப் பார்த்து திடுக்கிட்டான்.

அவன் மாமாவின் பெரிய மகள் சியாமளா தான். இந்த மூன்று மாதங்களாகத் தேவையாக இருந்தால் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசுவாள். அம்மாவிடம் மட்டும் பிரியமாகவும், சிரித்தும் பேசுவாள். அவளுடைய பதினாறு வயது தங்கை தர்ஷணாவிடம் மட்டும் ஏதேதோ கேள்விகள் கேட்பாள். பத்து வயது தம்பி விஷ்ணுவிடம் பிரியமாக நடந்து கொள்வாள். ஆனால் இவனைத் தலை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டாள்.            

சியாமளாவின் அருகில் கொண்டு போய் ஆட்டோவை நிறுத்தினான். அவளும் அங்கே விக்னேஷை எதிர்ப்பார்க்கவில்லை. ஆட்டோவில் ஏறவே கொஞ்சம் தயங்கினாள்.

“ஆட்டோவில் ஏறிக் கொள்ளுங்கள், எல்லோரும் பார்க்கிறார்கள். நீங்கள் எங்கே போக வேண்டுமோ அங்கே கொண்டு போய் விடுகிறேன்” என்றான் விக்னேஷ்.

“எஸ்.பி.ஏ. ஸ்கூலிற்குப் போக வேண்டும். அங்கே ஓர் இன்டர்வியூ, பார்ட் டைம் அறிவியல் ஆசிரியை வேலைக்குக் கேட்டிருந்தார்கள். அத்தை வேலைக்கெல்லாம்  போக வேண்டாம் என்றார்கள். நான் என் தோழி  வீட்டிற்குப் போவதாகப் பொய் சொல்லி விட்டு வந்திருக்கிறேன், அதனால் நீங்கள் அத்தையிடம் சொல்லாதீர்கள் ப்ளீஸ்” என்றாள் மெதுவாக.

விக்னேஷ் அமைதியாக இருந்தான். “நான் பொய் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என்றாள் சியாமளா.

“ஆம்  பிடிக்கவில்லை. பெண்கள் சுதந்திரமாக வேலைக்குப் போவது நல்ல விஷயம் தான், ஆனால் அம்மா அவ்வளவாகப் படிக்காதவர்கள். அவர்கள் உங்கள் பாதுகாப்பிற்காகப் பயப்படுகிறார்கள். நீங்கள் புரியும்படி விளக்கிச் சொல்லியிருந்தால் புரிந்து கொண்டிருப்பார்கள். அதற்காக நீங்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றான்.

“வேலை கிடைப்பது ஒன்றும் சுலபமில்லை. ஒரு காலி இடத்திற்காக சுமார்  ஐம்பது பேர்  போட்டி இடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வேலை கிடைத்தால் அத்தையிடம் சமாதானம் செய்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.  இது உங்கள் மனதையும் பாதிப்பதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள் வருத்தமான குரலில்.

“நீங்கள் தான் என்னிடம் உண்மையைச் சொல்லி விட்டீர்களே, அதனால் நான் வருத்தப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் இமேஜ் அதனால் பாதிக்கப் படக்கூடாதில்லையா? அதற்காகத்தான் சொன்னேன். நான் சொன்னது உங்கள் மனதைப்  புண்படுத்துவதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என்றான் விக்னேஷ் அவளைத் திரும்பிப் பார்த்து. அதற்குள் சியாமளா இறங்க வேண்டிய பள்ளிக்கூடமே வந்து விட்டது.

“என் செல் நம்பரைக் குறித்துக் கொள்ளுங்கள்.  இன்டர்வியூ முடிந்தவுடன் கூப்பிடுங்கள். நானே வந்து அழைத்துச் செல்லட்டுமா?” என்றான் விக்னேஷ்.

“நீங்கள் அந்த நேரத்தில் பிசியாக இருந்தால் வேறு பயணிகளை அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்காதா?”

“முடிந்தால் வந்து விடுகிறேன்” என்று கூறித் தன் செல்நம்பரை வாட்ஸ்அப்பில் அனுப்பி விட்டுக் கிளம்பினான்.

இத்தனை நாளும் அவளைப் பற்றிக் ‘கொஞ்சம் திமிர்  பிடித்தவளோ’ என்று நினைத்திருந்தான்.

அரைமணி நேரம் அவளோடு ஆட்டோவில் பேசிக் கொண்டு வந்த பிறகு ‘நல்லவளாகத்தான் இருப்பாள் போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டான்.

அதற்குள் இரண்டு மணி நேரம் ஆகி விட்டது. இரண்டு சவாரிகளைக் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான். அப்போது தான் சியாமளாவின் செல் போனில் இருந்து வாடஸ்அப்பில் “இன்டர்வியூ முடிந்து விட்டது, வரமுடியமா?” என்று கேட்டிருந்தாள்.

“வருகிறேன்” என்று அவளுக்கு பதில் அளித்து விட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் அவளிடம் சென்று விட்டான்.

சியாமளா, பள்ளிக்கூடத்திற்கு வெளியே கேட்டிற்குப் பக்கத்தில் காத்திருந்தாள். சுட்டெரிக்கும் வெயில், மிகவும் களைத்திருந்தாள். காலையில் விக்னேஷ் அவளைச் சரியாகப் பார்க்கவில்லைப் போலிருக்கிறது .

இப்போது பார்த்தால் கொஞ்சம் ‘திக்’கென்று இருந்தது . அவள் உள்ளத்தில் உள்ள சோகம் முகத்திற்குத் திரை போட்டிருந்தது. நல்ல பௌர்ணமி நிலவை மெல்லிய மேகம் திரையிட்டு மறைத்தது போல் இருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு வரும் போது நல்ல உயரமும், அதற்கேற்ற பருமனும் போஷாக்குமாகத்தான் இருந்தாள். இந்த மூன்று மாத்த்தில் நன்றாக இளைத்து விட்டிருக்கிறாள், ஆனால் அந்த இளைப்பே அவளுக்கு ஓர் அழகைக் கொடுத்திருப்பதாக அவன் மனதில்  நினைத்தான்.

“நாம் ஏன் சம்பந்தமில்லாமல் அவளைப் பற்றி நினைக்க  வேண்டும்?” என்று மனதில் தன்னைப் பற்றித் திட்டிக் கொண்டே ஆட்டோவைக் கொண்டு போய் அவள் அருகில் நிறுத்தினான்.

சியாமளாவும் லேசாகச் சிரித்தவாறு “தேங்க்ஸ்” என்று சொல்லி ஆட்டோவில் ஏறிக் கொண்டாள். ஒரு ஜூஸ் கடைக்கு எதிரே நிறுத்தி “இரண்டு சாத்துக்கடி ஜூஸ்” என்று ஆர்டர் கொடுத்தான்.

“இப்போது ஜூஸ் எதற்கு? சாப்பாட்டிற்கு வீட்டிற்குப் போய் விடலாமே, அத்தை வேறு காத்திருப்பார்கள்” என்றாள் சியாமளா.

“உங்களைப் பார்த்தால் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள், எனக்கும் ஒரே தாகமாக இருக்கிறது” என்று கூறிக் அவளிடம் ஒரு ஜூஸ் டம்ளரை கொடுத்துத் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

“இன்டர்வியூ என்ன ஆயிற்று ? சக்ஸஸ் தானே, நான் தெரிந்து கொள்ளலாமா?”

“ஷ்யூர்… உங்களிடம் சொல்லாமல் யாரிடம் சொல்லப் போகிறேன்” என்றவள் ஒரு கவரை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

அதில் சியாமளாவை அந்தப் பள்ளியில் பகுதி நேர அறிவியல் ஆசிரியையாக வேலையில் அமர்த்தியிருப்பதாகவும், சம்பள விவரங்களும் குறிக்கப்பட்டிருந்தன.

“என் வாழ்த்துக்கள். என் ஆட்டோ பாருங்கள், நல்ல ராசியான ஆட்டோ” என்றான் விக்னேஷ் சிரித்துக் கொண்டே.

“ஆட்டோவிற்கு சொந்தக்காரர் தான் நல்ல ராசியானவர் என்று நான் நினைக்கின்றேன் “ என்றாள் அவளும் சிரித்துக் கொண்டே.

வீடு அருகில் நெருங்கும் போது “அத்தை தான் கோபித்துக் கொள்வார்களோ என்று பயமாக இருக்கிறது. பொய் வேறு சொல்லி விட்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். என்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ” என்றாள் கொஞ்சம் பயந்து கொண்டே.

“நான் வேண்டுமானால் அம்மாவிடம் பேசட்டுமா?” விக்னேஷ்.

“வேண்டாம், நானே விளக்கிச் சொல்கிறேன். பொய் சொன்னது நான் தானே, அதற்கு மன்னிப்பும்  நான் தான் கேட்க வேண்டும். ஏன் பொய் சொன்னேன் என்று அதன் விளக்கமும் நான் தானே தரமுடியும்”  என்றாள்.

வீட்டிற்குள் நுழையும் போதே, “ஏன் இவ்வளவு லேட்? இருவரும் எப்படி ஒன்றாக வந்தீர்கள்?” என்று கேள்விகள்  கேட்டாள் அம்மா.

அத்தையின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டாள் சியாமளா.

“அத்தை, என்னை மன்னித்து விடுங்கள். நான் பொய் சொல்லி விட்டேன். நான் சிநேகிதி வீட்டிற்கெல்லாம் போகவில்லை, ஒரு வேலைக்கு இன்டர்வியூவிற்குப் போய் விட்டு வந்தேன். நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம் என்று உறுதியாக சொன்னதாலும், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாத்தாலும், இன்டர்வியூவியூவிற்குப் போய் விட்டு வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று கெஞ்சினாள்.

“எனக்குப் பொய் சொன்னால் பிடிக்காது, ஏமாற்றினால் சுத்தமாகப் பிடிக்காது. இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்” என்றாள் அவள் பிரியமான அத்தை கறாராக.

“இந்த முறை மட்டும் மன்னித்து விடுங்கள். நாங்கள் மூன்று பேரும் மாமா ஒருத்தரின் சம்பாத்தியத்தில் சாப்பிடுவது  மனதிற்குக் கஷ்டமாக இருந்தது, அதனால் தான்…” என்று மெதுவாக ராகம் இழுத்தாள்.

“அப்படியென்ன அவ்வளவு அவசரம்?”

“ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் அத்தை. மாமா ஒருத்தரே எல்லாக் குடும்பப் பொறுப்பும் தாங்குவதென்பது மிகவும் கஷ்டம் என்று நினைத்தேன். அதுவும் இல்லாமல் அவர் மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து சட்டம்  படிக்கிறார் என்றும் தெரியும். கடந்த மூன்று மாதங்களாய், நாங்கள் இங்கே வந்தது முதல் குடும்பச் செலவை சமாளிக்க முடியாமல் மாலை நேரக் கல்லூரிக்குப் போவதற்கு பதில் ஆட்டோ எடுத்துக் கொண்டு வேலைக்குப் போவதும் தெரியும். எல்லாம் தெரிந்தும் சுயநலமாய் எங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போவதற்கு மனசாட்சி  அனுமதிக்கவில்லை, அதனால் தான் இந்த வேலைத் தேடல்” என்றாள் சியாமளா தலை குனிந்து கொண்டு மிகவும் பவ்யமான குரலில்.

“காரணம் என்னவாக இருந்தாலும், இப்படிப் பொய் சொன்னால் என்னால் மன்னிக்க முடியாது. நான் உன்னை ஒன்றும் சொல்லமாட்டேன். நான் என்னுடைய ஒரு வேளை உணவை கட் பண்ணி விடுவேன், அவ்வளவு தான்” என்று கூறி விட்டு உள்ளே போய் விட்டாள்.

எங்கிருந்தோ சிரித்துக் கொண்டு எதிரே வந்து நின்றான் விக்னேஷ்.

“அத்தை அவ்வளவு கோபமாக. போகிறார்கள், நீங்கள் சிரிக்கிறீர்களே மாமா?” என்றாள் தர்ஷணா.

ஆனால் அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அம்மாவை சமாதானப்படுத்துவதற்காகத் தான் உள்ளே போனான் போலிருக்கிறது. கையோடு அத்தையை அழைத்துக் கொண்டு வந்தான்.

“அம்மா , ரொம்பப் பசிக்கிறது. இந்த நேரத்தில் போயா கோபித்துக் கொண்டு போவாய், சாப்பாடு போடம்மா” என்றான் விக்னேஷ்.

“அத்தை, நீங்கள் எல்லோரும் உட்காருங்கள். நான் பரிமாறுகிறேன்” என்றாள் சியாமளா.

“ஒன்றும் வேண்டாம். எல்லோரும் உட்காருங்கள், நானே போடுகிறேன்” என்றாள் அத்தை.

“அம்மா, நான் கூட சியாமளாவிடம் அம்மாவிடம் பொய் சொல்லலாமா என்று கேட்டேன். ஆனால் சியாமளா திருவள்ளுவரே அனுமதி கொடுத்திருக்கிறார் அதனால் பரவாயில்லை என்றாள் அம்மா”

“இல்லை அத்தை, மாமா வேண்டுமென்றே கலாட்டா செய்கிறார். அவர் என்னோடு இன்று தான் பேசினார். அதுவும் சில வார்த்தைகள் தான்” என்றாள் சியாமளா தலையை குனிந்து  கொண்டு.

“எனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும் அம்மா. நானும் உன்னிடம் அப்படிக் கடுமையாகப் பேசியிருக்கக் கூடாது, எல்லாம் என் பெண் வத்ஸலாவால் தான். பொய் பேசினால் அவ்வளவு கோபம் வருகிறது. பொய் பேசிப் பேசியே அவள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டாளே” என்றவர் தன் புடவை முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“வத்ஸலாவிற்குத்தான் திருமணம் செய்து கொடுத்தீர்களே? எங்கள் அப்பாவும், அம்மாவும் கல்யாணத்திற்கு வந்திருந்தார்களே. அப்பாவும் அம்மாவும் கூட மாப்பிள்ளை ரொம்ப அழகு என்று பேசிக் கொண்டிருந்தார்களே” என்று தர்ஷணா கேட்டாள்.

(தொடரும் – வெள்ளி தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கற்கை நன்றே (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

    ஒரு ஊரில் ஒரு நிலவரசி (சிறுவர் நாவல் – பகுதி 1) – ✍ சியாமளா கோபு