in

கற்கை நன்றே (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

ஜூலை 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தவைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தாள் கோமதிப் பாட்டி.  ஒரு காலத்தில் எல்லோருக்கும் கோமதியாக இருந்தவள், வயதின் காரணமாக‌, அக்கம் பக்கத்தவரால் கோமதிப்பாட்டி என்று பெயரிடப்பட்டு விட்டாள்.

வீட்டைப் பூட்டிக்கொண்டு போகுமளவிற்கு வீட்டில் விலையுயர்ந்த பொருள் எதுவும் இல்லை என்றாலும்,  தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கயிற்றுக் கட்டில், மண்ணெண்ணைய் அடுப்பு ஒன்று, சமையல் செய்வதற்கான சில பாத்திரங்கள் மற்றும் மளிகை சாமான்கள் போன்ற அவளின் உடைமைகளை நாய்கள் போன்ற நாலுகால் பிராணிகளிடமிருந்து காத்துக் கொள்ள, கதவும் பூட்டும் தேவைப்பட்டது. 

நல்லவேளையாக, அவள் வீட்டிலிருந்து இருபது அடி தூரத்தில் பஞ்சாயத்தில் ஒரு பொதுக் கழிவறை கட்டிக் கொடுத்திருந்தார்கள்.  ஆனால் அதைப் பங்கு போட வேறு யாரும் போட்டிக்கு வராததால், கோமதிப் பாட்டியே அதை சுத்தமாக வைத்து உபயோகித்து வந்தாள். அது இல்லாமலிருந்தால் மூட்டு வலியோடு காலை இழுத்துக் கொண்டு காலைக்கடன் கழிக்க‌ எங்கெல்லாம் அலைய வேண்டுமோ?

வெளியே இறங்கி நடக்கையில் எதிர்வீட்டிலிருந்து கெளரி வெளிப்பட்டாள்.

“என்ன பாட்டி… வெளியே கிளம்பியாச்சா? இந்த வெயிலில் இப்படி அலையணுமா? யாருக்கு சொத்துச் சேர்க்கறீங்க?” என்றாள்.

“என்னம்மா பண்றது? அடுத்தவங்ககிட்ட கையேந்தாம காலத்தை ஓட்டணுமே?” என்ற பாட்டியின் குரல் நைந்து ஒலித்தது. அந்தக் குரலில் அவள் வாழ்ந்து முடித்த கடினமான நாட்களின் வேதனை எதிரொலித்தது. காலம் அவளைத் தனிமையில் தள்ளிய வெறுப்பும், கோபமும் அதில் பிரதிபலித்தது.  

 அதற்கு மேல் பாட்டியின் வேதனையைக் கிளறி விட விருப்பமில்லாத கெளரி பேச்சை மாற்றினாள்.

“குலதெய்வம் கோவிலுக்குப் போகணும் பாட்டி, பெளர்ணமி என்னைக்கு வருது?”

“வர்ற வியாழக்கிழமை பெளர்ணமி. பெளர்ணமி அன்னைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போனா நல்லது. குழந்தைகளையும் கூட்டிக்கிட்டுப் போய்ட்டு வாங்க, நா வரட்டா? வெயிலுக்கு முன்பு போனா நல்லது” விடைபெற்று மெதுவாக நடக்கத் தொடங்கினாள் கோமதிப்பாட்டி. 

பாட்டி ஒரு நடமாடும் பஞ்சாங்கம் என்று அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரியும். பெளர்ணமி, அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களும், எந்த நாட்களில் எந்தக் கோவிலுக்குக் கூட்டம் வரும் என்பதும் பாட்டிக்கு அத்துப்படி.

மெதுவாக நடந்து, மூட்டுவலியை சகித்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தாள் கோமதிப் பாட்டி.  நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பழனிச்சாமி அவளைப் பார்த்ததும் கேட்டான்.

“பாட்டி, பையனுக்கு பழனில மொட்டை போடணும்.  எப்ப போனா நல்லது?”

அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும்,  பாட்டியிடம் அபிப்ராயம் கேட்டு, தங்கள் வீட்டுக் காரியங்களை நடத்துவ‌தில் ஒரு திருப்தி.

“செவ்வாயும், வெள்ளியும் முருகனுக்கு உகந்த நாள்.  மற்றபடி முடி காணிக்கை கொடுக்க நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை”

“சரிங்க பாட்டி” என்றான் பழனிச்சாமி பாட்டியின் பதிலில் திருப்தியடைந்து.  

அடுத்து வந்த பேருந்தில் ஏறி  நகரத்துக்குச் சென்றாள் கோமதிப் பாட்டி. முன்பெல்லாம் பேருந்துக்கென்று ஒரு தொகை செலவாகும்.  புதிதாக வந்த அரசு பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் என்று அறிவித்ததில் பாட்டியால் காசு கொஞ்சம் மிச்சப்படுத்த முடிகிறது. 

அன்று சனிக்கிழமை. பெருமாள் கோவிலில் நல்ல கூட்டம்.  பெருமாள் கோவிலின் எதிரில் இடது புறமாக இருந்த பூக்கடையில் நுழைந்தார் பாட்டி.  கடையின் முன்புறம் மாலைகள் பல நிறங்களிலும், பல அளவுகளிலும் சாரி சாரியாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. 

பார்ப்பதற்கு சிறிய கடை போல் தோன்றினாலும், பின்புறம் செவ்வக வடிவில் மேசைகள் போடப்பட்டு இருபுறமும் பத்துப் பேர் உட்கார்ந்து இயந்திர கதியில் மாலைகள் தொடுத்துக் கொண்டிருந்தனர்.  கோமதிப் பாட்டியைப் பார்த்ததும் அந்தக் கடையின் உரிமையாளர் முருகையன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“அப்பாடா… பாட்டி வந்துட்டாங்க.. இன்னும் ஒரு மணி நேரத்தில் மூன்று மாலைகள் தயாராகிவிடும். சொன்ன நேரத்தில் மாலை ஆர்டரைக் கொடுத்து விடலாம்”

முருகையன் கூறியது சரிதான். பாட்டியின் அப்பாவும் பூக்கடைதான் வைத்திருந்தார்.  ஐந்து வயதில் மாலை கட்டப் பழகிய கோமதிப் பாட்டியின் விரல்கள், மாலை தொடுக்கும்போது நர்த்தனம் ஆடத் தொடங்கிவிடும்.  மற்றவர்கள் இரண்டு மாலைகள் கட்டுவதற்குள் கோமதிப் பாட்டி நான்கு மாலைகள் கட்டி முடித்து விடுவாள்.

எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும்போதுதான் கவனித்தாள்.  கோவில் முன்பு பிச்சைக்காரர்கள் வரிசையின் நடுவில் உட்கார்ந்திருந்த ஒரு பெண், இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.  பசியினால் இரண்டு குழந்தைகளின் முகங்களும் வாடிக்கிடந்தன.

சட்டென்று பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்ற கோமதிப்பாட்டி இரண்டு பாக்கெட் பிஸ்கட்டுகளும், ஒரு தண்ணீர் பாட்டிலும் வாங்கினார்.  முன்பெல்லாம் தண்ணீர் பாட்டில் கொடுக்க மாட்டார்.  ஆனால் சாப்பிட்டுவிட்டு சிலபேர் தண்ணீருக்கு தவிப்பதைப் பார்த்ததிலிருந்து, எந்தப் பொருள் கொடுத்தாலும் தண்ணீர் தராமல் இருக்க மாட்டார்.

குழந்தைகளுக்குக் கொடுத்தபோது அக்குழந்தைகளின் தாயும், வரிசையில் இருந்தவர்களும் பாட்டியை சிறு ஆச்சரியத்துடன் பார்த்தனர்.  பார்வையின் பொருள் புரிந்தது பாட்டிக்கு.

ஏழ்மை நிலையில், வயதான பாட்டி, தனக்கென்று சேமித்து வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கொடுப்பது கண்டு அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். திரும்பி பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கையில் களைப்பாக இருந்தது.  உடல் வலியும், வாங்கும் மூச்சும், தலை பாரமும் தனது முடிவை நோக்கியதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்பியது கோமதிப்பாட்டிக்கு.

தாகத்திற்கு ஏதாவது குடிக்கலாம் என்று ஒரு பெட்டிக்கடையில் ஒதுங்கினார் பாட்டி. கால்கள் கெஞ்சியதால் அங்கிருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்தார்.

கடைக்காரரிடம் சோடா கேட்கலாம் என்று நினைத்தபோது, அங்கு நின்று சோடா குடித்துக் கொண்டிருந்த ஒரு முப்பது வயதிருக்கும் மனிதர், “பாட்டி ஒரு சோடா குடிங்க” என்று அவளின் பதிலை எதிர்பார்க்காமல், சோடாவை உடைத்துக் கையில் கொடுத்து விட்டார். 

தாகத்தில் எதுவும் பேசத் தோணமல், கடகடவென்று குடித்துவிட்டு காசை எடுக்க முனையும்போது சண்டைக்கு வந்து விட்டார் அந்த மனிதன். 

“போங்க பாட்டி, காசு நான் கொடுக்கிறேன்” என்று காசை கடைக்காரரிடம் கொடுத்து விட்டார், பாட்டியின் ஆட்சேபணைகளை லட்சியம் செய்யாமல்.  ஈர மனதுக்காரங்க இன்னும் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார் பாட்டி.

அவர் முகத்தைப் பார்த்தார் கோமதிப் பாட்டி.  பொறுப்பில்லாத பாட்டியின் மகன் வீட்டை விட்டு ஓடாமல் இருந்திருந்தால் இந்த மனிதனின் வயதுதான் இருந்திருக்கும். சிறுவயதில் இருந்தே தாய் தந்தை பேச்சைக் கேட்பதில்லை என்ற பிடிவாதத்தோடு வளர்ந்தவன்,  இருபது வயதை அடைந்தபோது வீட்டை விட்டுப் பறந்தவன் தான்,  இருக்கிறானா இல்லையா என்பதே இன்று வரை தெரியாது. 

ஆனால் கணவரைப் பொறுத்தவரை கொடுத்து வைத்தவளாக இருந்தாள் கோமதிப்பாட்டி.  நல்ல மனிதர்.  சூது வாது தெரியாதவர். எப்போதும் யாருக்காவது உதவி செய்து கொண்டே இருப்பது அவருக்குப் பிடிக்கும். அவர் தொழிலான ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருப்பார், இல்லாவிட்டால் சங்கத்து வேலையில் ஒன்றியிருப்பார் அதுவும் இல்லாவிட்டால் யாருக்காவது ஓடி ஆடி உதவிக்கொண்டிருப்பார். 

ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் நடக்கும் கூட்டத்திற்கு கோமதியைக் கூட்டிச் சென்று பல தலைவர்களின் பேச்சுக்களைக் கேட்க வைத்து அவளின் பொது அறிவை வளர்த்து விட்டதுடன், அவளுக்குள் இருந்த சேவை மனப்பான்மையை தூண்டிவிட்டு, சக மனிதர்களை நேசிக்கும் உணர்வை வளர்த்தினார். ஆனால் அதிக காலம் இல்லாமல், ஒரு விஷ ஜுரத்தில் இருபது நாள் படுத்திருந்துவிட்டு கோமதியை அனாதையாக்கி விட்டுச் சென்றுவிட்டார்.

படுக்கையில் கிடந்தபோதுதான் தன் மனைவிக்கு எதுவும் கொடுக்காமல் அனாதையாய் விட்டுப் போகிறோம் என்று வருந்தினார்.  நன்றாக வாழும்போது சேமித்து வைப்பது எவ்வளவு அத்தியாவசியம் என்பதை உணர்ந்தார். ஆனால் அது கண் கெட்ட பிறகு செய்த சூரிய நமஸ்காரம் போலானது.

பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டே பேருந்து ஏறி தனது வீட்டு நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார் பாட்டி. எதிரே லட்சுமி வேலைக்குப் போய்விட்டு இடுப்பில் கூடையுடன் வந்து கொண்டிருந்தாள்.

மூன்று வருடங்களுக்கு முன்பு, குடித்துக் குடித்து குடல் வெந்து அவள் கணவன் இறந்து போனபோது தன் இரண்டு குழந்தைகளுடன் நிலைகுலைந்து நின்றிருந்தாள். அவள் கணவன் இறந்து ஒரு வாரம் கழித்து ஒருவரும் இல்லாத போது பாட்டி அவள் வீட்டிற்குச் சென்றாள். 

“பிழைப்புக்கு என்ன செய்யப் போகிறாய்?” என்றாள் பாட்டி நேரடியாக.

“மூன்று பேரும் வேலைக்குப் போக வேண்டும்.  வேற என்ன செய்ய பாட்டி?” என்றாள் லட்சுமி.

“மூன்று பேரா? பையனுக்கு பதிமூணு வயசு. பொண்ணுக்கு பத்து வயசு.  படிக்க வேண்டிய வயசில வேலைக்கா?” என்றாள் பாட்டி கோபத்துடன்.

 :வேற நான் என்ன பண்ணட்டும் பாட்டி?  நா மாத்திரம் வேலைக்குப் போனா மூணு பேருக்கும் சாப்பாட்டுக்கு சம்பாதிக்கலாம்.  ஆனா படிக்க வைக்க ஆகும் செலவுக்கு எங்க போவேன்?” என்றாள் பரிதாபமாக.

“சரி.. இரண்டு பேரையும் நான் படிக்க வைக்கிறேன். புத்தகம் வாங்க, சீருடை தைக்க போன்ற அரசு பள்ளிக்கு ஆகும் செலவை இந்த இரண்டு குழந்தைகளுக்கும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.  ஆனா நான் செய்யும் இந்த உதவி என்னையும் உன்னையும் தவிர யாருக்கும் தெரியக் கூடாது.  சரியா?”.

குழந்தைகளைப் படிக்க வைக்க உறுதி கொடுத்துவிட்டு அதே சிந்தனையுடன் வீட்டை நோக்கி நடந்த கோமதிப் பாட்டிக்கு பண்டிதர் பரமசிவத்தின் பையன் திண்ணையில் உட்கார்ந்து சப்தம் போட்டு படித்தது காதில் விழுந்தது.

  ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப‌ எண்ணியார்

   திண்ணியர் ஆகப் பெறின்’.

இதன் பொருள் ‘எண்ணியதைச் செயல்படுதுவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்’. மறைந்த தன் கணவரே பண்டிதரின் பையன் ரூபத்தில் வந்து வழி காட்டியதாய்க் கருதி ஒரு தீர்மானத்துடன் வீடு நோக்கி நடந்தாள் பாட்டி.

இப்போதெல்லாம் வயதின் காரணமாகவும்,  உடல் உபாதையின் காரணமாகவும் ஞாயிறன்று தனது தொழிலுக்குப் போவதில்லை பாட்டி.    ஒவ்வொரு ஞாயிறன்றும் வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்வார்.  சமைக்கவும் மாட்டார்.  அன்றைக்கான மதிய உணவை எதிர் வீட்டு கெளரியோ அல்லது லட்சுமியோ கொண்டு வந்து கொடுத்துவிடுவார்கள். 

பாட்டி எவ்வளவோ மறுப்புத் தெரிவித்தும் அவர்கள் விடுவதாக இல்லை. அன்பிற்குக் கட்டுப்பட்டு அதை மட்டும் ஏற்றுக் கொள்வார் பாட்டி. அந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு கொடுப்பதற்காக கெளரி பாட்டியைக் கூப்பிட்ட போது பாட்டியிடம் இருந்து பதில் இல்லை.  அசந்து தூங்கி இருப்பார் என்று நினைத்து கெளரி கதவைத் தள்ளி உள்ளே நுழைந்து பார்த்தபோது பாட்டியின் உடலில் உயிர் இல்லை.  மூக்கில் லேசாக ரத்தம் வெளிவந்து உலர்ந்திருந்தது.

பாட்டியின் வீட்டின் முன், அந்த ஊர்த்தலைவரின் தலைமையில் ஒரு கூட்டம் கூடியிருந்தது. அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே தன் இரு குழந்தைகளையும் இழுத்துக் கொண்டு அலறலுடன் வந்தாள் லட்சுமி.

“ஐயோ பாட்டி, உன் குழந்தைகளை நான் படிக்க வைக்கறேன்னு தைரியம் சொல்லி படிக்க வெச்சியே… இப்ப  எங்களை முழு அனாதையாக்கிவிட்டுப் போயிட்டயே?”.

ஊர்த்தலைவர் அவளின் அலறல் கேட்டு திடுக்கிட்டார்.

“என்னம்மா சொல்றே?  கோமதிப்பாட்டி உன் பிள்ளைகளைப் படிக்க வெச்சாங்களா?” என்றார் ஆச்சரியத்துடன்.

“ஆமாங்க ஐயா, நான் உயிரோடு இருக்கும்வரை எப்படியாவது படிக்க வைக்கறேன்னு சொல்லி படிக்க வெச்சாங்க. ஆனா யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னும் சொல்லிட்டாங்க” என்றாள்.

அதிர்ச்சியுற்று நின்ற கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார் ஊர்த்தலைவர், “அப்படின்னா, நானும் ஒண்ணு சொல்லனும்.  கோமதிப்பாட்டி, தான் இறந்த பிறகு யாருக்கும் சிரமம் ஏற்படக்கூடாது என்று, தன் இறுதிச் செலவிற்காக என்னிடம் சிறுகச் சிறுகப் பணம் கொடுத்து வைத்திருக்காங்க.  அது கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்து ஒரு கணிசமான தொகை ஆயிருச்சு.  இந்த விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்னு எங்கிட்டயும் கேட்டுக்கிட்டாங்க”

கோமதிப் பாட்டியின் ஒவ்வொரு செயலும் கூட்டத்தினருக்கு அவர் மேல் இருந்த மதிப்பை  உயர்த்திக் கொண்டே இருந்தது.

ஊர்த்தலைவர் ஆரம்பித்தார், “எங்கிருந்தோ வந்த பாட்டி நம்ம ஊர் மக்கள் மேல் வைத்திருந்த அன்பும், அக்கறையும் நாம் அவருக்குத் திருப்பி தர வேண்டிய கடனாகும். நீங்கள் அனுமதித்தால் நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். அதாவது அவர் தன் இறுதிச் செலவுக்கென்று என்னிடம் சேர்த்து வைத்திருக்கும் தொகையை லட்சுமியின் குழந்தைகள் படிப்புச் செலவுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.  அதனால் பாட்டி  லட்சுமிக்குக் கொடுத்திருந்த‌ வாக்கும் நிறைவேறும். பாட்டியின் இறுதிச் செலவை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.  என்ன சொல்றீங்க?” என்றவுடன் கூட்டம் தங்களின் முழுச் சம்மதத்தை உற்சாகக் குரல் மூலம் அங்கீகரித்தது. 

ஊர்த்தலைவர் தன் தோளில் இருந்த துண்டை உதறி தரையில் விரித்தார். தன் சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாயை அதில் போட்டார்.  அடுத்த ஒரு பத்து நிமிடத்தில் அந்தத் துண்டு ஏழைகளின் வியர்வைப் பணத்தால் நிரம்பி வழிந்தது.

“ஐயா, என் மகன் பாட்டிக்கு கொள்ளி போட அனுமதிக்கனும்” என்றாள் லட்சுமி. பாட்டியின் உறவுக்காரர்களைப் பற்றி, பாட்டி உயிரோடு இருக்கும்போது கேட்ட‌போதெல்லாம் பாட்டி சொன்ன பதில் ஊர்த்தலைவருக்கு ஞாபகம் வந்தது.

“எனக்கு வேர்கள் கிடையாது.  கால்கள் மட்டுமே உண்டு”

இது ‘சேகுவேரா’ கூறியது என்று அவருக்கும் தெரியும்.    

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 6) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை