in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4

பெரிய காரிலிருந்து முதலமைச்சரும், பின்னால் வந்த கார்களிலிருந்து கல்வி அமைச்சரும் அவருடைய அலுவலர்களும் வந்து இறங்கினர்.

சியாமளா, விக்னேஷ், அத்தை எல்லோரும் ஓடி வந்து வணங்கி வரவேற்றனர். அத்தையின் பின்னால் போய் ஒளிந்து கொண்டான் விஷ்ணு. ‘இப்போது எலெக்ஷன் கூட இல்லையே, எதற்காக இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்’ என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தாள் தர்ஷணா.

எல்லோரும் உள்ளே வந்து தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த மரபெஞ்சில்  அமர்ந்து கொண்டனர். யாரோ ஓடிப்போய் தண்ணீர் பாட்டில்களும், பான்டா பாட்டில்களும் வாங்கி வந்தனர். வீட்டில் குடிப்பதற்காகப் பிடித்து வைத்துள்ள பானைத் தண்ணீரில் இருந்து ஒரு டம்ளர் எடுத்து வரும்படி அத்தையிடம் கேட்டார் முதலமைச்சர். புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஒரு எவர்சில்வர் டம்ளரில் தண்ணீர் எடுத்து தட்டில் வைத்து கைகள் லேசாக நடுங்க எதிரேயிருந்த ஸ்டூல் மேல் வைத்தார் அத்தை.

அதைக் குடித்து விட்டு, “தர்ஷணா?” யார் எனக் கேட்டார் முதலமைச்சர்.

“நான் தான் தர்ஷணா” என்று முன்னால் வந்து நின்றாள்.

“உன் பேட்டியை டி.வி.யில் பார்த்தேன். முதலில் மாநிலத்தில் முதலாவதாக வந்ததற்கு வாழ்த்துக்கள்” என்று கூறி பக்கத்தில் நின்ற ஒருவர் கொடுத்த மலர் செண்டினை அவளிடம் கொடுத்தார் முதல்வர்.

பணிவாக அவர் காலில் விழுந்து வணங்கி அதைப் பெற்றுக் கொண்டாள் தர்ஷணா, “நான் பேசியதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள்” என்றாள்.

“நீ பேசியது சரியா தவறா?” என்றார் முதல்வர்.

“என்னைப் பொறுத்தவரை என் மனதில் உள்ள ஆசையைத்தான் நான் வெளியிட்டேன். என் சாதாரண ஆசையை எல்லோரும் பேராசை என்று குறிப்பிட்டால் நான் என்ன செய்வது? குறைந்த மதிப்பெண் வாங்கியவர்கள் பணத்தால் மருத்துவக் கல்லூரி ஸீட்களை விலைக்கு வாங்கி விடுகிறார்கள். எங்களைப் போன்ற ஏழைகள் அதிக மதிப்பெண்கள் வாங்கியும் பணம் இல்லாமல், படிக்க முடியாமல் போனால் என்ன செய்வது? அதிலும் நான் அம்மா அப்பா இல்லாத அனாதை போன்றவள், என் லட்சியம்  நிறைவேற நான் யாரிடம் முறையிடுவது?” என்றாள் நேருக்கு நேர் அவர்  கண்களைப் பார்த்தவாறு.

முதல்வர் சிரித்தபடியே அவளை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டார். “பன்னிரண்டாம் வகுப்பிலும் இதே போல் மாநிலத்தில் முதல் மாணவியாக வா, உனக்கு மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம் கட்டாயம் உண்டு. எந்தக் கட்டணமும் கிடையாது, கடன் பத்திரத்தில் கையெழுத்தும் வேண்டாம்.  ஆனால் முதல் ஐந்து வருடம் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் அரசாங்க சம்பளத்திற்கு பணியாற்ற  வேண்டும். சம்மதமா?” என்றார் சிரித்துக் கொண்டே

“சம்மதம், ஆனால் நிஜமாகவா?”

“இங்கேப் பார்… உன்னையும் என்னையும் சுற்றி எவ்வளவு மீடியா ஆட்கள் இருக்கிறார்கள். நீயும் நானும் மறந்தாலும் கூட இந்த முதலமைச்சர் வாக்குறுதியை அவர்கள் மறக்க மாட்டார்கள். உனக்கு ஸீட் இல்லையென்றால் என்னைத்தான் கேள்விகள்  கேட்பார்கள். உன்னையும் பேட்டி எடுப்பார்கள். நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான், நன்றாகப் படி. உன்னை நீயே வருத்திக் கொள்ளாதே. நான் சொன்னது எல்லாம் அரசாங்க உத்தரவு. விளையாட்டாகவே படி. இந்த அரசாங்கத்திற்கு வேண்டியதெல்லாம் உண்மையான குழந்தைகள், உண்மையான குடிமக்கள்” என்றார் முதல்வர் சிரித்துக் கொண்டே.

தர்ஷணாவும் புன்னகை பூத்த முகத்தோடு மீண்டும் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தாள். முதல்வரும் அவள் தலையில் கை  வைத்து ஆசிர்வதித்தார். “இப்போது சொல், நீ கஷ்டப்பட்டுப் படித்த படிப்பு வேஸ்டா?  இந்த அரசாங்கம் வேஸ்டா?” என்றார் முதல்வர்.

“நான் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் கஷ்டப்பட்டு படித்த படிப்பும், இந்த அரசாங்கமும் விலை மதிக்க முடியாதது” என்றாள் தர்ஷணா. உணர்ச்சிப்  பெருக்கிலும், சந்தோஷத்திலும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாக வழிந்தது.

முதல்வரோ, அவள் கண்களைத் துடைத்து நெற்றியில் முத்தமிட்டு, “நன்றாகப் படி, கடவுள் உனக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்” என்று ஆசீர்வதித்து விட்டுத் தன் வண்டியில் ஏறிச் சென்று விட்டார்.

முதல்வருடைய கட்சி ஆட்களோ, “முதல்வர் நம்மிடம் கூட இவ்வளவு பிரியத்தை காட்டியதில்லை, இந்த பெண்ணிற்கு வந்த அதிர்ஷ்டம் பார்” என்று வியந்து பேசினர்.

சியாமளா, அப்படியே அதிர்ச்சியில் தரையில் உட்கார்ந்து விட்டாள். விக்னேஷ் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

“ஏண்டா, என் ஸ்கெட்ச் சென்னை எடுத்தாய்?” என்று வழக்கம் போல் தர்ஷணா, விஷ்ணுவிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள்.

ஒரு கைப்பிடி உப்பை எடுத்துக் கொண்டு வந்து, “ஏ தர்ஷணா, கிழக்கே பார்த்து நில், ஊர் கண்ணெல்லாம் உன் மேல் தான் இருக்கும்” என்று சொல்லி திருஷ்டி கழித்தாள் அத்தை. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் அவர்கள் வீட்டில் தான் கூடி இருந்தார்கள்.

சியாமளா திக்பிரமை பிடித்தாற் போல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். உணர்ச்சி வசப்பட்டு அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. தர்ஷணா தன் சண்டையை முடித்து விட்டு அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சியாமளாவைப் பார்த்து  சிரித்தாள். சியாமளாவிற்கும் சிரிப்பு வந்து விட்டது. அப்படியே தங்கையை அணைத்துக் கன்னத்திலும், நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டாள்.

“அக்கா, பயந்து விட்டாயா? நாம் என்ன தப்பு செய்தோம் பயப்பட? வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும், முதலில் அதைத் தெரிந்து கொள்” என்று அவளுக்கே சமாதானம் கூறினாள்.

இந்த நிகழ்ச்சிகளும் டி.வி.யில் ஒளிபரப்பு ஆகியது. இப்போது ஆளும் கட்சியினர் முதல்வரின் நல்ல குணத்தை வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தனர்.

தர்ஷணாவின் பள்ளியில் தலைமை ஆசிரியரும், அவள் வாங்கிய மதிப்பெண்களுக்காகவும், தைரியமாக முதல்வருடன் பேசியதற்காகவும், தனித்தனியே ரொக்கப் பரிசுகள் கொடுத்தனர். அதை அப்படியே கொண்டு வந்து அத்தையிடம் கொடுத்தாள். ஒரு மாதம் வரையில், தர்ஷணா தான் அவள் வசிக்கும் ஏரியாவிலும், பள்ளியிலும் கதாநாயகியாகத் திகழ்ந்தாள்.

ஒரு நாள் வத்சலா தன் கைக்குழந்தையுடன் வந்து கதவைத் தட்டினாள்.

“வாருங்கள் வத்சலா” என்றாள் சியாமளா.

“என் பிள்ளை வீட்டில் இல்லாத நேரத்தில் அவளை உள்ளே கூப்பிடாதே சியாமளா” என்றாள் அத்தை.

“ஒரு நிமிடம் அத்தை. நான் போய் வெளியே நின்று பேசினால், தேவையில்லாமல் எதிர்வீடு, பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு வம்பிற்கு இடம் கொடுத்தது போல் இருக்கும். வீடு தேடி வந்தவர்கள் விரோதிகளாக இருந்தாலும் உள்ளே வரச் சொல்வது தானே நம் பழக்கம். தப்பே பண்ணியிருந்தாலும் வத்சலா ஒன்றும் விரோதியில்லையே” என்றாள் சியாமளா.

“வேண்டாம் சியாமளா… எனக்காக நீங்கள் வாதாட வேண்டாம். என் குழந்தை பிறந்ததற்கே இவர்கள் வந்து பார்க்கவில்லை, அவ்வளவு கோபம். நான் வெளியிலே நின்று பேசிவிட்டுப் போய் விடுகிறேன்” என்றாள் வத்சலா.

“குழந்தையை என்னிடம் கொடுங்கள் வத்சலா, இப்போது சொல்லுங்கள்” என்று வாசலிலேயே நிற்க வைத்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

“நம் தர்ஷணாவை இவ்வளவு பெரியவளாக நான் இப்போது தான் பார்க்கிறேன் சியாமளா. நான் அவளை யாரோ என்று தான் நினைத்திருந்தேன். அவள் இந்த வீட்டில் நின்று அம்மாவோடும், விக்னேஷுடனும் நின்று பேசிக் கொண்டிருந்ததை டி.வியில் பார்த்த பிறகு தான் அவளை என் மாமாவின் பெண் என்று தெரிந்து கொண்டேன். ஊரில் யார் யாரோ புகழ்ந்து பேசும்போது எனக்கு அவளைப் பார்க்க வேண்டும் என்றும் வாழ்த்த வேண்டும் என்றும் ஆசையாக இருந்தது, அதனால் தான் வந்தேன்” என்றாள் கண்களில் கண்ணீர் குளம் கட்ட.

அப்போது ஆக்ரோஷத்துடன் கத்திக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் விக்னேஷ்.  “நீ வாழ்த்துவது ஒன்று தான் பாக்கியாக இருந்தது, போடி வெளியே. வெட்கமில்லாமல் வீடு தேடி வந்து விட்டாள்” என்றவன், சியாமளாவின் கையிலிருந்த குழந்தையைப் பிடுங்கி வத்சலாவிடம் கொடுத்து விட்டு “போடி வெளியே” என்று  கதவை அறைந்து சாத்தினான்.

விக்னேஷின் கோபத்தின் உச்சத்தை இத்தனை மாதங்களில் அன்று முழுமையாகப் பார்த்த சியாமளா, பேய் அறைந்தது போல் பயந்து போய் நின்றாள்.

“சியாமளா, நான் உங்களிடம் ஏற்கெனவே வத்சலாவைப் பற்றிக் கூறி எச்சரித்து இருக்கிறேன். இது எங்கள் குடும்ப விஷயம், நீங்கள் இதில் தலையிடக் கூடாது. நான் சொல்வதற்குக் கட்டுப்பட்டு இந்த வீட்டில் இருந்தால் இருங்கள், இல்லையென்றால் வேறு வீடு பார்த்துக் கொண்டு போங்கள். கூடப் பிறந்தவளே எங்களை ஏமாற்றினாள், நீங்கள் எம்மாத்திரம்? உங்களுக்கும் எங்களுக்கும் என்ன  ஒட்டா உறவா? இத்தனை வருடங்களாக எங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, உங்கள் தேவைக்காக வந்து ஒட்டியவர்கள் தானே நீங்களும்” என்றான் விக்னேஷ்  கடுமையான குரலில்.

“விக்னேஷ், என்ன வார்த்தை கூறி விட்டாய்?” என்றாள் அத்தை கலவரத்துடன்.

விக்னேஷ் தன்னை இவ்வளவு துச்சமாகப் பேசுவான் என்று சியாமளா எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் பேசியதில் ஒரு வார்த்தை கூட தவறில்லையே. தான் ஒரு தனி ஆளாக இருந்தால் கூட பரவாயில்லை. மூன்று பேர் ஒரு தனி மனிதனின் உழைப்பில் வந்து  உட்கார்ந்தது  எவ்வளவு பெரிய தவறு. வந்ததும் இல்லாமல் அவர்கள் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கியது எவ்வளவு  தவறான விஷயம். நாம் இத்தனை நாள் இதை உணராமல் எப்படி இருந்தோம்? என்று தன்னுள்ளே யோசித்துக் கொண்டு பாறை போல் இருந்தாள்.

தர்ஷணாவும், விஷணுவும் கூட திகைத்து நின்றனர்.  தர்ஷணா குழந்தை போல் விளையாட்டாக இருந்தாலும்  விக்னேஷ் கூறிய வார்த்தைகளில் இருந்த உண்மை அவளையும் சுட்டது போல் அக்காவிடம் வந்து ஒட்டிக் கொண்டாள். கோபமாகப் பேசிய விஷ்ணு, ஒரு லுங்கியை இழுத்துக் கட்டிக் கொண்டு யாரிடமும் எதுவும் பேசாமல் வெளியே போனான்.

அத்தை தர்ஷணாவையும் விஷ்ணுவையும் அழைத்து சாப்பாடு போட்டாள். பசியில்லைஎன்று சாப்பிட மறுத்து விட்டாள் சியாமளா. விக்னேஷ் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டுப் படுத்தான். அத்தையும் சாதமும் ரசமும் போட்டுக் கரைத்துக் குடித்து விட்டு, அவளுக்கென்றிருந்த சர்க்கரை வியாதிக்கான மாத்திரைகளைப் போட்டுக் கொண்டாள்.

அடுத்த நாள் காலைப் பள்ளிக்குப் போவதற்காக சீக்கிரமே எழுந்து கொண்டாள் சியாமளா. அட்மிஷன் நேரமானதால் சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்று கிளம்பி விட்டாள். சியாமளா தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் வழக்கம் போல் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் சகஜமாக இருந்தாள். அதனால் விக்னேஷ் பேசிய கடுமையான வார்த்தைகளைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் அத்தை.

விக்னேஷும், சியாமளாவிடம் எப்படிப் பேசுவது என்று தயங்கித் தன் அறையில் இருந்து யோசனை செய்துக் கொண்டிருக்கும் போது அவள் பள்ளிக்குக் கிளம்பி விட்டாள்.

சியாமளா அன்று மாலைப் பள்ளியிலிருந்து திரும்பிய பிறகும் பழையபடியே எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தாள். அத்தை, தர்ஷணாவையும், விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள கோயிலுக்குக் கிளம்பி விட்டாள். சியாமளா இரவு உணவைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள்.

சமையலறை வாசலில் வந்து நின்ற விக்னேஷ், “சியாமளா… உங்களிடம் ஒரு நிமிடம் பேச வேண்டும்” என்றான்.

கைகளைத் துடைத்துக் கொண்டு வந்த சியாமளா, “சொல்லுங்கள்” என்றாள்.

அவளிடம் ஏதோ மாற்றம் தெரிகிறதே, என்ன என்று யோசித்த  விக்னேஷ், அவள் கையிலிருந்த ஒரு ஜோடித் தங்க வளையல்கள் காணாமல் போயிருந்ததை அப்போது தான் கவனித்தான். தங்க வளையல்களுக்குப் பதில் பிளாட்பாரத்தில் விற்கும் முத்து வளையல்கள் இருந்தன.

“சியாமளா, உங்கள் கையிலிருந்த தங்க வளையல்கள் எங்கே? பொய் சொல்லாமல் சொல்லுங்கள்” என்றான். அவள் பதில் சொல்லவில்லை, அவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டாள்.

“சியாமளா, என்னை மன்னித்து விடுங்கள்… கோபத்தில் வரம்பு மீறிப் பேசி விட்டேன். உங்கள் மனம் மிகவும் புண்பட்டிருக்கும்” என்றான்.

“பரவாயில்லை மாமா, நான் செய்ததும் தவறு தான். இங்கே அதிக உரிமை எடுத்துக் கொண்டேன். நீங்கள் கோபத்தில் கூறிய வார்த்தைகள் கசப்பாக இருந்தாலும்  உண்மையான வார்த்தைகள் தானே. தவறு என் மேல்தான், நீங்கள் பேசியதில் ஒன்றும் தவறில்லை”

“கையிலிருந்த தங்க வளையல்கள் எங்கே என்று கேட்டேனே, இன்னும் அதற்கு பதில் வரவில்லையே?” என்றான்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குறை (சிறுகதை) – ராஜேஸ்வரி

    சுகுணாக்கா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு