in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஜூலை 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2

அவளை அந்த மாதம் முதல் நிரந்தரப் பணியில் அமர்த்தியிருந்தார்கள். முன்பு போல் தொகுப்பூதியம் என்றில்லாமல், அவள் சம்பளப் பட்டியல்  பே-ஸ்கேலில் இருந்தது. அதனால் அலவன்ஸுகள் எல்லாம் சேர்ந்து சில ஆயிரங்கள் அதிகம் வரும் போல இருந்தது. அதைப் படித்த விக்னேஷ் மிகுந்த சந்தோஷம் அடைந்தான்.

“வாழ்த்துக்கள்” என்றான் விக்னேஷ்.

“தேங்க்ஸ்,  உங்களுக்கும் உங்கள் ஆட்டோவிற்கும்” என்றாள் சியாமளா.

“என் ஆட்டோவிற்கா?”

“ஆம் ; அன்று ஒரு நாள் உங்கள் ஆட்டோவில் அழைத்துப் போனீர்கள், எனக்கு வேலை கிடைத்தது. இன்றும் என்னை அழைத்துப் போனீர்கள், என் பணி நிரந்தரமாகியது . அதனால் தான்”  என்றாள் குழந்தை போல் குதூகலத்துடன்.

“அதனால் தான் ஸ்வீட்டா? இந்தப் பெரிய மனிதர்கள் இருவருக்கும் இன்னும் ஸ்வீட் கொடுக்கவில்லையா?” என்றான் தர்ஷணாவையும் விஷ்ணுவையும் பார்த்து.

“அவர்கள் சண்டையெல்லாம் முடிந்த பிறகு தான் சாப்பிடத் தேடி வருவார்கள். அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ காலேஜிற்குக் கிளம்பு” என்றாள் அத்தை.

சனிக்கிழமைகளில் விக்னேஷிற்கு காலையிலேயே வகுப்பு தொடங்கி விடும், பிற்பகல் இரண்டு மணிக்குத் தான் வீட்டிற்கு வந்து சேருவான். அதனால் அன்று ஆட்டோவிற்கு மொத்தமாக விடுமுறை தான். அன்று மதியம் அத்தையும், விக்னேஷும் தூங்கி எழுந்தனர்.

அதற்குள் ரவா உப்புமா, டீ தயாரித்து வைத்திருந்தாள் சியாமளா. உப்பமாவில் முந்திரிக்குப் பதில் ஏழைகளின் முந்திரிப் பருப்பான வேர்க்கடலையை தோலெடுத்துப் போட்டிருந்தாள்.

விக்னேஷிற்கும், அத்தைக்கும் கொடுத்து விட்டு தர்ஷணாவிற்கும், விஷ்ணுவிற்கும் கொஞ்சம் சர்க்கரை வைத்துக் கொடுத்தாள்.

“சியாமளா, நீங்கள் சாப்பிட்டீர்களா ?” என்றான் விக்னேஷ்.

“இன்னும் கொஞ்சம் நேரம் ஆன பிறகு சாப்பிடுகிறேன்” என்றாள் சியாமளா.

“நமக்கெல்லாம் போதவில்லையென்றால் என்ன செய்வது? அதனால் சியாமளா நாம் சாப்பிட்டு முடித்துத் தட்டை அழுக்கில் போட்டால் தான் சாப்பிடுவாள்” என்றாள் அத்தை.

“இது ரொம்ப அநியாயம்” என்ற விக்னேஷ் எழுந்து போய் கையைக் கழுவிக் கொண்டு, ஒரு தட்டில் உப்புமாவை வைத்து சியாமளாவிடம் கொடுத்தான்.

“உங்களுக்கு ஏன் இந்த வேலை?” என்று மெதுவாகக் கூறியவள் தட்டை வாங்கிக் கொண்டாள்.

“இன்று மாலை பீச்சிற்குப் போய் விட்டு இரவு டின்னர் வெளியே நல்ல ஹோட்டலில் சாப்பிடலாமா?” என்றான் விக்னேஷ்.

“ஹை” என்று குதித்தனர் தர்ஷணாவும், விஷ்ணுவும். அத்தை சியாமளாவின் முகத்தைப் பார்த்தாள்.

“குக்கரில் டின்னருக்கு சாதம் வைத்து விட்டேன். மத்தியானம் செய்த சுண்டைக்காய் வத்தக் குழம்பும், சௌசௌ கூட்டும் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் அப்பளம் மட்டும் பொரித்துக் கொண்டால் ஹோட்டல் சாப்பாட்டை விட ஜோராக இருக்கும். மாமா மத்தியானம் கிளாஸ் இரண்டு மணிக்கு முடிந்ததால் வெளியில் தான் சாப்பிட்டார். இரவு ஒரு வேளையாவது வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட்டுமே” என்றாள் சியாமளா.

அத்தையின் கண்கள் கலங்கின. யாரும் அறியாமல் அதைத் துடைத்து விட நினைத்தாலும் முடியவில்லை.

“அத்தை… கண்கள் ஏன் கலங்குகின்றன?” என்றாள் சியாமளா மெதுவான குரலில்.

“ஒன்றுமில்லையம்மா, ஏதோ பழைய நினைவுகள் என்றாள் அத்தை தன் கண்களைப் புடவைத்தலைப்பால் ஒற்றியபடி.

“மாமா , அத்தை ஏன் அழுகிறார்கள் என்று தெரியுமா?” என்றாள் தர்ஷணா.

விக்னேஷ் ‘ஏன்’ என்பது போல் அவளைப் பார்த்தான்.

“மத்தியானமே இவள் சாப்பாட்டை சாப்பிட முடியாமல் சாப்பிட்டோமே, இப்போது நம் மகன் வாங்கிக் கொடுக்கும் சாப்பாட்டையும் கெடுக்கிறாளே. ஆண்டவனே காப்பாற்று என்று கண்ணீர் விட்டு அழுகிறார்கள்” என்றாள் தர்ஷணா கண்களில் குறும்பு கூத்தாட.

“ஒண்ணா நம்பர் வாலாக இருக்கிறாளே இந்த தர்ஷணா. என் மருமகள் காட்டும் அக்கறையை நினைத்தேன்” என்ற அத்தை தற்செயலாக தன் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

எல்லோரும் விக்னேஷின் ஆட்டோவிலேயே பீச்சிற்குக் கிளம்பினார்கள். தர்ஷணாவும் விஷ்ணுவும் தண்ணீரில் நன்றாக ஆட்டம் போட்டனர். விக்னேஷும் பேண்டை மடக்கி விட்டுக் கொண்டு அவர்களோடு சரிக்கு சரியாக விளைய்யாடிக் கொண்டிருந்தான்.

அப்போது எங்கிருந்தோ ஒரு சிறிய பெண் குழந்தை “அம்மா, அம்மா” என்று அழுது கொண்டே தண்ணீரை நோக்கி ஓடியது.  அதைப் பார்த்துவிட்டு ஓடிப் போய் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள் சியாமளா, அத்தையும் பயந்து விட்டாள்.

குழந்தை “அம்மா அம்மா” என்று அழுவதை  நிறுத்தவேயில்லை. நாலா பக்கமும் பார்த்தாள் சியாமளா,  ஆனால் யாரும் குழந்தையைத் தேடி வரவில்லை.

விக்னேஷும் தண்ணீரை விட்டு இவர்கள் அருகில் வந்து விட்டான் . அவனும் சியாமளாவிடமிருந்து குழந்தையை வாங்கி விளையாட்டுக் காட்ட முயற்சித்து தோற்று விட்டான் .

’பீச்சில் இருக்கும் செக்யூரிட்டி கார்டிடம் ஒப்பித்து விடலாம் என்று விக்னேஷ் சொல்லி விட்டு  குழந்தையை சியாமளாவிடம் கொடுத்தான்.

அப்போது எதிர் திசையிலிருந்து ஒரு பெண் வேகமாக மூச்சு வாங்க ஓடி வந்தாள். அவளைப் பார்த்த விக்னேஷும், அத்தையும்  அதிர்ச்சி அடைந்தனர். வத்ஸலா, விக்னேஷின் அக்கா தான் அந்த பெண். ஆனால் அவளோ யாரையும் கவனிக்கவில்லை.

சியாமளாவிடமிருந்து குழந்தையைப் பிடுங்கிய அவள், அந்தக் குழந்தையை இறுக அணைத்து அதன் கன்னத்திலும், நெற்றியிலும் மாறி மாறி முத்தம் கொடுத்து, அழும் குழந்தையைச் சமாதானப்படுத்திய பிறகு தான் சியாமளாவையே பார்த்தாள்.

“ரொம்ப நன்றிங்க, நான் தெரிந்தவர்களிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே கையை விட்டு ஓடி விட்டிருக்கிறாள். என் உயிரையே எனக்குத் திருப்பித் தந்தீர்கள்” என்று சியாமளாவிடம் நன்றி தெரிவித்தவள், பிறகு தான் அவளுடன் வந்தவர்களைப் பார்த்தாள்.

அவர்களைப் பார்த்து திடுக்கிட்டவள்  “அம்மா , விக்னேஷ்” என்று ஆச்சர்யத்தில் கூவினாள். அந்தப் பெண் சியாமளாவின் கையைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் .

“சியாமளா, கிளம்புங்கள் போகலாம். அம்மா, தர்ஷணா, விஷ்ணு எல்லோரும் போய் ஆட்டோவில் ஏறுங்கள்” என்ற விக்னேஷ், சியாமளாவைப் பிடித்திருந்த அந்த கைகளை உதற விட்டு, சியாமளாவை இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றினான்.

அவன் கோபத்தில் அழுத்திப்  பிடித்தது, வேகமாக இழுத்துச் சென்று ஆட்டோவில் பலவந்தமாக ஏற்றியது எல்லாம் சியாமளாவிற்கு கை மிகவும் வலித்தது.

‘என்ன அப்படி ஒரு கோபம் இவனுக்கு? யாரந்தப் பெண்? ஒரு வேளை அந்தப் பெண் இவன் அக்கா வத்ஸலாவோ?’ என்ற ஐயம் எழுந்தது அவளுக்கு. ஆனால் அந்தப் பெண் அத்தையைப் போலவே ரொம்ப மென்மையான அழகு.  விக்னேஷும் அழகு தான், ஆனால் அவன் நிறம் மாநிறத்திற்கும் குறைவு. நல்ல உயரம், முரட்டுத்தனமான அழகு.

அன்று இரவு யாரும் ஒழுங்காக சாப்பிடவில்லை. அடுத்த நாள் காலை குளிக்கும் போது தான் அவள் கையைப் பார்த்தாள் சியாமளா. அவன் அழுத்திப் பிடித்த இடம் நீல நிறமாக மாறியிருந்தது. அதைப் பார்த்து அவளே பயந்து விட்டாள்.

வெள்ளை வெளேரென்றிருந்த அவள் கையில் நீல நிறம் தனியாக அழுத்தமாகத் தெரிந்தது.  கை லேசாக எரிச்சலாகவும் வலியாகவும் இருந்தது. அவ்வளவு வலியிலும் சிறு பிள்ளைத்தனமான அவன் கோபத்தை நினைத்து  சிரிப்புத்தான் வந்தது.

சியாமளா பள்ளிக்குக் கிளம்பும் போது அவன் தவறு செய்து விட்ட சிறு குழந்தை போல் எதிரே வந்து தலை குனிந்து நின்றான். அத்தை எங்கோ கடைக்குப் போயிருந்தாள் .

“என்ன?”  என்றாள் சியாமளா.

“சாரி… வெரி வெரி ஸாரிங்க. உங்களை நான் பலவந்தமாகக் கைகளைப்  பிடித்து இழுத்து வந்து ஆட்டோவில் ஏற்றி விட்டேன். நான் ரொம்ப முரட்டுத்தனமாக நடந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்றான்.

சியாமளாவின் இடது கை அவளை அறியாமலேயே அவளது வலது கையில் கன்றிப் போயிருந்த இடத்தைத் தடவிக் கொடுத்தது. அதைப் பார்த்த அவன், அவள் வலது கையில் கன்றிப் போய் நல்ல நீல நிறமாக இரத்தம் கட்டிப் போயிருந்த இடத்தைப் பார்த்த இடத்தைப் பார்த்து ஆடிப் போய்விட்டான்.

“ஐயோ ! என்ன இப்படி நீலநிறமாக கன்றிப் போய் இருக்கிறதே. கை ரொம்ப வலிக்குமே, எழுதுகின்ற கை ஆயிற்றே. வாருங்கள் சியாமளா, டாக்டரிடம் இப்போதே போகலாம்” என்றான்.

“சரிதான்… இதெற்கெல்லாம் கூட யாராவது டாக்டரிடம் போவார்களா என்ன? இரண்டு மூன்று நாட்கள் வெந்நீர் விட்டு குளித்தால் சரியாய் விடும். எனக்குப் பள்ளிக்கு நேரமாகிறது, நான் வரட்டுமா?”

“ஒரே நிமிடம், நானே கொண்டு போய் விடுகிறேன்”  என்றவன் போய் ஆட்டோவில் அம்ர்ந்தான். சியாமளா உட்காருவதற்கு சீட்டைத்  தட்டி விட்டான்.

சியாமளா ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும், விக்னேஷ் ஓட்டிக் கொண்டே “அவள் தான் என் அக்கா வத்ஸலா” என்றான்.

“அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்” சியாமளா .

“திடீரென்று யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடி விட்டாள். அப்பா இறந்த பிறகு, கொஞ்சம் இருந்த வயல் வாய்க்கால் போன்ற சொத்துக்களையும், என் சித்தப்பா அம்மாவிடம் கையெழுத்து வாங்கி எடுத்துக் கொண்டாராம். அப்பா இறக்கும் போது அக்காவிற்கு பத்து வயது, எனக்கு ஐந்து வயது. அம்மாதான் சமையல் வேலை செய்து அக்காவையும், என்னையும் படிக்க வைத்தார்கள். வசதி இல்லையென்றாலும் , சாப்பாட்டுக்குக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தார்கள் .

எங்களைப் போன்ற ஏழைகளுக்கு மானம் ஒன்று தான் சொத்து. அதனால் தான் தலை நிமிர்ந்து நடக்கின்றோம். அதுவும் இல்லையென்றால் தெருவில் போகும் போகும் நாய் கூட மதிக்காது. எல்லாம் தெரிந்தும் அந்த ஆளோடு அக்கா, சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது மகா அசிங்கமாகி விட்டது. அம்மா தற்கொலைக்குக் கூட முயற்சித்தார்கள். பிறகு நான் தனியாக நின்றால் என்ன செய்வது  என்று மனம் மாறினார்கள் .

எங்கெங்கோ வட்டிக்குக் கடன் வாங்கி, கொஞ்சம் நகைகளும் போட்டுக் கல்யாணம் ஊரறிய செய்து அதோடு உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று அம்மாவே சொல்லிவிட்டார்கள்” என்று முடித்தான்.

“ஆனாலும் பாவம் தான்”  என்றாள் சியாமளா.

“அவளா பாவம்? எங்களை எவ்வளவு பெரிய அவமானத்திற்கும், கடன் தொல்லைக்கும் ஆளாக்கினாள் அவள்.  அவளுக்குப் பாவம் பார்த்தால் நமக்குத்தான் பாவம்” என்றான் கோபமாக.

அதற்குள் சியாமளா வேலை செய்யும் பள்ளியே வந்து விட்டது.

“ரொம்பக் கோபப்படாதீர்கள், டென்ஷன் வேண்டாம். நான் வரட்டுமா, பை” என்று சொல்லி விடைபெற்றாள்.

அன்று மாலை அவள் வீட்டிற்குத் திரும்பிய போது , வீட்டில் இருந்த டேபிள் மேல் டாக்டர் பிரஸ்கிரிப்ஷனோடு ஒரு ஆயின்மென்ட் இருந்தது.

சியாமளா வந்தவுடன் காபியைக் கொடுத்த அத்தை, “விக்னேஷ்  இதை உன்னிடம் கொடுக்கச் சொன்னான் அம்மா” என்றார். அப்போது தான் அவளும் சியாமளாவின் கையைப் பார்த்தாள்.

“ஒரு சின்ன இடம் கன்றிப் போனதற்கு எதற்கு அத்தை இத்தனை அமர்க்களம்?” என்றாள் சியாமளா.

“மனதில் எவ்வளவு கோபம் இருந்தால் இப்படி அழுத்திப் பிடிப்பான் ! ஆனால் வத்ஸலா  செய்த தவறு  எப்படிப்பட்டது ? வீட்டை விட்டு ஓடிப் போவது  என்பது எவ்வளவு மானக்கேடான விஷயம்” என்று பெருமூச்சு விட்டாள்.

“நீங்கள் எல்லோரும் இப்படி முரட்டுத் தனமாக கோபப்பட்டால் வத்ஸலா எப்படித் தன் விருப்பத்தைக் கூறமுடியும்? அவர்களோ உங்களைப் போல் ரொம்ப மென்மையாக இருக்கிறார்கள், தன் விருப்பத்தை எப்படிக் கூறுவது என்று பயந்து இருக்கலாமில்லையா?  ஒரு குழந்தை சேற்றில் விழுந்து விட்டால் அப்படியேவா விட்டு விட்டுப் போகிறோம்? அதை எடுத்து சுத்தப் படுத்தி காயத்திற்கு மருந்து போடுவதில்லையா?”

“நீ என்ன சொல்ல நினைக்கிறாய்?”

“பாவம் அத்தை வத்சலா. அம்மா  விக்னேஷ் என்று பீச்சில் பரிதாபமாக அவர் உங்களை அழைத்ததை என்னால் மறக்க முடியவில்லை. என் அப்பாவும், அம்மாவும் உங்களுக்கோ இல்லை உங்கள் குடும்பத்திற்கோ துளியும் உதவி செய்யவில்லை. என் அம்மா, அவருடைய தங்கைகளுக்கும் அண்ணாக்களுக்கும் அள்ளி அள்ளி அப்பாவிற்கும் தெரிந்தும் தெரியாமலும் கொடுத்தார்கள்.

அம்மா, அப்பா இருவரும் ஒரே நேரத்தில் இறந்த பிறகு, சூழ்ந்து வந்த கடன் தொல்லையைப் பார்த்த பிறகு எல்லோரும் அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடி விட்டனர். எங்கள் மூவரைக் பற்றியும் யாரும் கவலைப்படவில்லை. நானாகத்தான் தங்கையையும் தம்பியையும் அழைத்துக்கொண்டு உங்கள் ஆதரவைத் தேடி வந்தேன். சம்பந்தமேயில்லாத எங்களை ஆதரித்தீர்கள், அன்பு காட்டினீர்கள்” என்றாள் கண்களில் கசிந்த நீரைத் துடைத்துக் கொண்டு.

“இது வேறு அது வேறு சியாமளா, இரண்டையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்” என்றவாறு உள்ளேயிருந்து வெளியே வந்தான் விக்னேஷ்.

அவனைப் பார்த்துத் திடுக்கிட்ட சியாமளா,  “ஸாரி! நீங்கள் உள்ளேயிருந்ததை கவனிக்காமல் மனதில் தோன்றியதை உளறிவிட்டேன்” என்றாள் சியாமளா.

“உங்கள் பெற்றோர் எங்களைப் புறக்கணித்ததால்  எங்கள் தன்மானத்திற்கோ, கௌரவத்திற்கோ எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் எங்களை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு இவள் ஓடிப் போனது எங்கள் தன்மானத்திற்கு ஒரு சவுக்கடி. போதும் இந்தப் பேச்சு. இனிமேல் அவளைப் பற்றி யாரும் பேச வேண்டாம்” என்றவன் கோபத்துடன் வெளியே சென்றான்.

(தொடரும் – வெள்ளி தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நெஞ்சம் எழுதும் பாட்டு (சிறுகதை) – ✍ பீஷ்மா

    ஒரு ஊரில் ஒரு நிலவரசி (சிறுவர் நாவல் – பகுதி 3) – ✍ சியாமளா கோபு