in

நெஞ்சம் எழுதும் பாட்டு (சிறுகதை) – ✍ பீஷ்மா

ஜூலை 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மாதவன் மனம் கொள்ளா மகிழ்ச்சியில் விமானத்தில் வந்து கொண்டிருந்தார். கொரோனாவினால் தடை செய்யப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து தடை விலக்கப்பட்டு அவரவர் அவரவர் ஊருக்குத் திரும்பச் செல்லும் மகிழ்ச்சி அனைத்துப் பயணிகளிடமும்.

மாதவன் தன் மனைவியின் ஒரு தகவலால் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தார். அவர் இல்லாமலேயே அவரது இரண்டு பெண்களுக்கும் அவள் திருமணம் முடித்தது மல்லாமல் திருமண நிகழ்வுகளை அவர் கேட்ட வீடியோ காலில் கூட காண்பிக்காதது அவர் மனதை ரொம்பவே உறுத்திக் கொண்டிருந்தது.

அவரது மனைவி அவருக்கு இரண்டாம் தாரம் தான், ஆனால் இரண்டாம் தாரம் என்று சொல்லுமளவுக்கு அவள் அவரது மூத்த பெண் மீது எந்த வெறுப்போ, குரோதமோ இல்லாது தன் மகளை எப்படி பார்த்துக் கொண்டாளோ அதே போல் மூத்த தாரத்துப் பெண்ணையும் அன்புடன் கவனித்து வளர்த்தாள்.

வேலை விஷயமாய் சிட்னி செல்ல வேண்டிய கட்டாயத்தில் விருப்பமே இல்லாமல் சென்ற மாதவனுக்கு எதிர்பாராமல் வந்த லாக் டவுன் அவரை அங்கேயே சிறைப் பிடிக்க, அத்தனை விமானப் போக்கு வரத்துகளும் ரத்தானதால் சிட்னியிலேயே தங்கும்படியானதால் போன் காண்டாக்ட்டில் மட்டுமே தன் குடும்பத்துடன்.

லாக் டவுன் எக்ஸ்டெண்ட் ஆகிக் கொண்டேயிருக்க, திடீரென அவரது மனைவி அவருக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்தாள். முதலில் இன்ப அதிர்ச்சியாக இருந்தது போகப் போக அவருக்கு மிகப் பெரிய சந்தேகம் கொடுத்தது.

மகள்களின் திருமணம் பற்றிய எந்தத் தகவல்களும் அவரது மனைவியால் அவருக்கு சரியாகத் தெரிவிக்கப் படவில்லை.

இப்போது அவளுக்குத் தான் வரும் தகவல் கூடத் தெரிவிக்காமல் தான் வருகிறார். சொல்லாமல் சென்றால் என்ன தில்லுமுல்லு செய்திருந்தாலும் கண்டு பிடிக்க சுலபமாக இருக்கும் என்ற எண்ணத்தில்.

வீட்டு வாசலில் திருமணம் நடந்த அறிகுறியாக காவி பட்டை தீட்டப்பட்டு மங்களகரமாயிருந்தது. திடீரென்ற அவரது வருகையை எதிர்பார்க்காத அவரது மனைவி மிகுந்த மகிழ்ச்சியுடன்.

“என்னங்க, இப்படி இன்ப அதிர்ச்சி கொடுக்கறீங்க. வாங்க, வாங்க” என்று முக மலர்ந்து வரவேற்றாள்.

“ஏம்மா, கல்யாணத்தை எனக்கு வீடியோ காலில் காமிக்கல?” எடுத்த எடுப்பில் விஷயத்துக்கு வந்த கணவனை சிரித்த முகத்துடன் பார்த்தவள்.

“நேர்ல பார்த்துக்கலாம்னு தான்” என்று விட்டேத்தியாகப் பதில் கூற, பயங்கர கோபம் வந்தது மாதவனுக்கு.

“ஏய், என்ன சிலுமிஷம் பண்ணி வச்சுருக்கே குழந்தைங்க கல்யாணத்ல? வா, இப்பவே போய் ரெண்டு குழந்தைங்களையும் எனக்கு காட்டு”

“இருங்க, என்ன அவசரம்! குளிச்சிட்டு ரெடியாகுங்க, அதுக்குள்ள நான் சாப்பாடு ரெடி பண்ணிடறேன். அவங்களுக்கும் தகவல் சொல்லிடறேன்”

சாவதானமாய்ச் சொன்ன அவளிடம் மேலும் கோபம் காண்பிக்க மனசு வரவில்லை.

இருப்புக் கொள்ளாமல் குளித்து முடித்து அவள் செய்த உணவை அவசர அவசரமாய் சாப்பிட்டுக் கிளம்பி, “சரி சரி வா, அட்ரஸ் சொல்லு கேப் புக் பண்றேன்”

அவள் அவரது அவசரத்தை அலட்சியம் செய்து, “அதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிடறேன்தையா, தக்கானு குதிக்காம கொஞ்சம் அமைதியா கேளுங்க”

அவள் சொன்ன விதம் அவர் வயிற்றைப் பிசைந்து என்னமோ செய்தது. சோபாவில் அமர்ந்து அவளை உற்றுப் பார்த்தார்.

“நம் இரண்டு பெண்களும் வாழ்க்கைப் பட்டது ஒரே குடும்பத்தில், அதாவது அண்ணனை நம் மூத்த பொண்ணு ராஜியும், தம்பியை நம்ம பொண்ணு விஜியும் கல்யாணம் பண்ணிக்கிட்டுருக்காங்க” என்று சொல்லி நிறுத்தினாள்.

“நல்லது தானே, அதுல என்ன பிரச்னை? ஏன் என்னை பயமுறுத்தறே?”

“இல்லே… வந்து.. வந்து.. அண்ணனுக்கு…” என்று இழுத்தாள்.

அவர் பொறுமையிழந்து சோபாவிலிருந்து வேகமாய் எழுந்து “என்னன்னு சொல்லித் தொலையேன்”

“உட்காருங்க நீங்க, ராஜியோட புருஷன் ஏற்கனவே கல்யாணம் ஆகி மனைவியை இழந்தவர். ஒரு மூணு வயசுக் குழந்தையும் இருக்கு, நம்ம ராஜி தான் இப்ப அந்த வீட்டுக்கு எல்லாமே”

சொல்லி முடிக்கு முன் விட்டார் ஓர் அறை, பொறி கலங்கித் தடுமாறிக் கண்களில் கண்ணீரோடு விழுந்தாள் அவர் மனைவி.

“என்னடி நினைச்சு என் குழந்தையை ரெண்டாம் தாரமா நான் இல்லாமயே கல்யாணம் பண்ணி வச்சுருப்பே? கிராதகி, உன் பொண்ணுக்கு மாத்ரம் சின்ன வயசுல மாப்பிள்ளை, என் பொண்ணு ஒரு குழந்தையோட இருக்கறவனுக்கு ரெண்டாம் தாரம். ஐயோ… இப்படி என் தலையில இடியைத் தூக்கிப் போட்டுட்டியே?”

அரற்றிக் கொண்டே அவளை மீண்டும் அடிக்கக் கை ஓங்கினார்.

“நான் உங்களுக்கு எத்தனாவது தாரம்ங்க?”.

கண்களில் பெருகிய கண்ணீரோடு கேட்ட அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தார்.

“நான் உங்களுக்கு எத்தனாவது தாரம்ங்க?”

பதில் சொல்ல இயலாமல் மலைத்து நின்ற அவரிடம், “நான் உங்களுக்கு ரெண்டாவது தாரம்னு என்னிக்காவது என்னை நினைச்சுப் பார்த்திருப்பீங்களா? இன்னிக்கு என் குழந்தை, உன் குழந்தைன்னு பிரிச்சுப் பேசிட்டீங்களே, என்னிக்காவது நான் அந்த மாதிரி பிரிச்சுப் பார்த்து நீங்க பார்த்திருக்கீங்களா? உங்க நினைப்பு இப்படித் தான் போகும்னு எனக்குத் தெரியுங்க, அதனாலத் தான் ஊர் விட்டு ஊர்ல இருக்கற உங்களுக்கு இந்த விஷயம் தெரியாம பார்த்துக்கிட்டேன்”

அவள் சொல்லி முடிக்கு முன், “நீ ரெண்டாந்தாரம்ங்கறதால நம்ம மூத்த பொண்ணை ரெண்டாம் தாரமாக் கட்டிக் கொடுத்திட்டியாம்மா?”

அவரை வெறித்துப் பார்த்தவள், “இப்ப வாங்க என்னோட, அவகிட்டயே அவளுக்கு அமைஞ்ச வாழ்க்கையைப் பத்திக் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. அதுக்கு அப்புறம் என்னை அடிக்கணும், ஏன் கொலை கூட பண்ணனும்னாலும் செஞ்சுக்குங்க. எப்போ என் குழந்தை, உங்க குழந்தைன்னு பிரிச்சிட்டீங்களோ அப்பவே நான் செத்துட்டேன்”

மனமுடைந்தவளாய் தளர்ந்து போன நடையுடன் வெளியில் சென்ற அவளைப் பின் தொடர்ந்து போன மாதவன் அப்போதும் ஏதும் புரியாமல்… ஆனால் தான் பேசியது மட்டும் தவறென்று உணர்ந்து அவளைப் பின் தொடர்ந்தார்.

அரண்மனை போன்றதொரு மாளிகையின் வாசலில் கார் நின்றது. மாதவனின் இரு மகள்களும், மலர்ந்த முகத்துடன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். மிகப் பெரிய ஹாலில் மாப்பிள்ளைகளும், சம்பந்தியும் அவர்களை வரவேற்கும் விதமாய் எழுந்து கை கூப்பினர்.

“வாங்க சம்பந்தி. சாரி, தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க இல்லாம இந்தக் கல்யாணம் நடத்தினதுக்கு. ஒரு சின்ன ஜாதகப் ப்ரெஷர், அப்புறம் கொரோனா கட்டுப்பாடு. இங்க ரொம்ப அதிகமா இருந்ததுனால ரொம்பக் கொஞ்சம் பேரோட கல்யாணத்தை நடத்தி வச்சுட்டோம். கொரோனா முடிஞ்சவுடனே பெருசா ரிஸப்ஷன் வெச்சு ஜமாய்ச்சுடலாம். இது தான் என்னோட மூத்த பிள்ளை., உங்க மூத்த மாப்பிள்ளை. இது என்னோட ரெண்டாவது பிள்ளை, உங்க இளைய மாப்பிள்ளை”

இரண்டு மாப்பிள்ளைகளும் அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்தனர் அவரவர் மனைவிகளுடன். மாப்பிள்ளைகள் இருவரும் கொள்ளை அழகாயிருந்தனர். அதிலும் மூத்த மாப்பிள்ளை வெகு அழகாயிருந்தான்.

“அப்பா… நீங்க சிட்னிலேர்ந்து வர்றதுக்குள்ள எனக்கு கல்யாணம் மாத்திரம் இல்லை, இதோ பாருங்க ஒரு குழந்தையும், உங்க பேத்திப்பா. ஹை இங்க பாரு, தாத்தா பாரு, பாட்டியும் பாரு”

மிக மகிழ்ச்சியுடன் ராஜி அந்தக் குடும்பத்தில் இயல்பாய்க் கலந்து தன்னை ஒரு தாயாகவே மாற்றிக் கொண்டு வளைய வருவதை வியப்புடன் பார்த்து நின்றார்.

“சம்பந்தி, என்னோட மூத்த மருமகள் பிரசவத்தில இந்தக் குழந்தையை எங்ககிட்ட கொடுத்துட்டு போய்ச் சேந்துட்டா. மூத்த பையன் இடிஞ்சு போய் உட்காந்துட்டான். இப்பத் தான் கொஞ்சம் கொஞ்சமாத் தெளிஞ்சு உங்க பொண்ணு எங்க ராஜியைக் கல்யாணம் பண்ணி பழைய பையனா எஙகளுக்குக் கிடைச்சிட்டான்.

ரெண்டு பேருக்கும் உங்க ரெண்டு பொண்ணுங்களையும் கொடுக்கறதுக்கு உங்க சம்சாரம் லேசுல சம்மதிக்கல. அவங்க சந்தேகத்தையெல்லாம் பூரணமாத் தெளிவாக்கின அப்புறம் தான் அதுவும் உங்க பொண்ணுங்களக் கலந்து பேசி, எங்க பசங்ககிட்ட உறுதிமொழியெல்லாம் வாங்கிட்டுத் தான் இந்தக் கல்யாணமே நடக்க விட்டாங்க.

வெளியூர்ல இருக்கற உங்களுக்கு இந்த சந்தேகம்லாம் போன்ல க்ளியர் பண்ண முடியாது என்ன பண்ணலாம்னு ரொம்ப யோசிச்சாங்க. உங்க மூத்த பொண்ணு தான், ‘அம்மா, அப்பாகிட்ட நான் பேசிக்கறேன்… விஜியும் பேசுவா. தேவைப்பட்டா உங்க மாப்பிள்ளைங்களும் பேசுவாங்க. கவலைப்படாதேன்னு சொல்லி கல்யாணம் நடந்து இப்ப உங்க முன்னாடி”

மிகப் பெரும் குற்ற உணர்ச்சியுடன் தலை குனிந்து நின்ற மாதவன், தன் மனைவியை ஏறெடுத்துப் பார்க்க கூசினார்.

“என்னப்பா, எங்க மேல உங்களுக்குக் கோபமா? சாரிப்பா,  அவரோட ஜாதகத்தில அந்த மாச முகூர்த்தம் தவறினால் அதுக்கப்புறம் அஞ்சு வருஷத்துக்கு கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்கப்பா. இந்த மாப்பிள்ளைங்களை மிஸ் பண்ணக் கூடாதுன்னு தான் அம்மாவை நானும், விஜியும் கன்வின்ஸ் பண்ணி நீங்க இல்லாமயே கல்யாணம் நடக்க ஒத்துக்க வச்சோம்”

தன் மனைவியின் கரங்களை ஆதுரத்துடன் பற்றிய மாதவன், தன் கைகள் மூலமும், கண்களாலும் மன்னிப்புக் கோரினார். மாதவனுக்கு மன்னிப்பு கிடைக்குமா?

குறள் 482:

“பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு”

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிடிக்கும் கயிறாக அமையும்.

குறள் 58:

“பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்

தேளிர் வாழும் உலகு”

நற்பண்பு உள்ளவனைக் கணவனாக அடையும் பெண்களுக்கு, இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு ஊரில் ஒரு நிலவரசி (சிறுவர் நாவல் – பகுதி 2) – ✍ சியாமளா கோபு

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை