in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 2) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஜூலை 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

சியாமளா அத்தையைப்  பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அவன் அழகில் மயங்கித்தான்  காலேஜிற்குப் போகிறேன் என்று பொய் சொல்லி எங்களை ஏமாற்றி, அவனோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தாள். ஒரு நாள்  யாருக்கும் தெரியாமல் அவனோடு போய் பதிவுத்  திருமணம் செய்துக் கொண்டு வந்து விட்டாள். அசிங்கமாகி விட்டால் என்ன செய்வது என்று நாங்கள் ஊரைக் கூட்டித் திருமணம் செய்து  தந்தோம். அவனோ தன் அழகில்  தானே மயங்கி சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று திரிந்து கொண்டிருக்கிறான். பொய் சொல்லி எங்களை ஏமாற்றியதோடு அவளே அவள் வாழ்க்கையை அழித்துக் கொண்டாள். எங்களை நம்பி வந்த நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் அப்படிக் கோபித்துக் கொண்டேன்” என்றாள் அத்தை.

“அத்தை, இனிமேல் பொய் சொல்கிறவர்கள் ஒரு ஹாலில் நின்று பத்துத் தோப்புக்கரணம் போட வேண்டும் என்று சொல்லுங்கள். அதை விட்டு நீங்கள் ஏன் பட்டினி கிடக்க வேண்டும்?” என்றான் விஷ்ணு.

“நீ தாண்டா கண்ணா சரியான ஆள்” என்றான் விக்னேஷ்.

இரண்டு நாட்கள் கழித்து ஒன்றாம் தேதி முதல் சியாமளா வேலைக்கு போகத் தொடங்கி விட்டாள்.

ஒன்பது மணி பள்ளிக் கூடத்திற்கு எட்டு மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பினால் தான் சரியாக இருக்கும். அத்தையின் அன்பும் பாசமும் புரிந்தபிறகு அவளை எந்த வேலையும் செய்ய அனுமதிப்பதில்லை  சியாமளா.

விக்னேஷும்  முன்பெல்லாம் அம்மாவிற்கு அதிகக் கஷ்டம் கொடுக்கக் கூடாதென்று வீட்டிலிருந்து எந்த சாப்பாடும் எடுத்துச் செல்ல மாட்டான்.

முதல் மாதச் சம்பளம் வாங்கி வந்து விட்டாள் சியாமளா. அதை அத்தையிடம் கொடுத்து காலில் விழப் போகும் போது, அவள் அதைத் தடுத்து பூஜை அறையில் சியாமளாவின் பெற்றோர் படத்தின் அருகில் அழைத்துச் சென்றாள்.

“அம்மா அப்பாவிற்கு முதலில் நமஸ்காரம் செய் சியாமளா” என்றாள் அத்தை.

“அநாதையாக வந்த எங்களை அன்புடன் ஆதரித்த நீங்கள், என் அம்மா அப்பாவை விட உயர்ந்தவர்கள், ஆதலால் நீங்கள் அவர்கள் படத்திற்கு பக்கத்தில் நில்லுங்கள்” என்ற சியாமளா, மொத்தமாக ஒரு நமஸ்காரம் செய்து விட்டு சம்பளக் கவரை அத்தையிடம் நீட்டினாள்.

கவரைப் பெற்றுக் கொண்ட அத்தை, “வீட்டு நிர்வாகம் முழுவதும் விக்னேஷ் தான் பார்க்கிறான். ஆதலால் அவனிடம் கொடுக்கின்றேன்” என்று விக்னேஷிடம்  கொடுத்து விட்டாள்.

விக்னேஷ் சம்பளக் கவரை வாங்கி அதைப் பிரித்து எண்ணினான். மொத்தம் இருபதாயிரம் ரூபாய் இருந்தது. சியாமளாவிடம் அவளுடைய சொந்த செலவிற்கென்று  இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தான். எட்டாயிரம் ரூபாயை எண்ணி அவன் அம்மாவிடம் கொடுத்தான்.

“இந்தப் பணத்தை வீட்டு செலவிற்காக வைத்துக் கொள்ளுங்கள் அம்மா” என்று கூறிவிட்டுப் போய் விட்டான்.

அடுத்த நாள் காலை, “சியாமளா, இன்று கொஞ்சம் சீக்கிரம் கிளம்புங்கள். உங்கள் ஐ.டி.யை எடுத்துக் கொள்ளுங்கள். ஆதார்காரட் இருந்தால் அதுவும், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு  வெளியே கிளம்பி விட்டான்.

“எதற்காக அக்கா இதெல்லாம்?”  என்ற தர்ஷணாவிடம், ‘தெரியாது’ என்று உதட்டைப் பிதுக்கி, தோளைக் குலுக்கினாள் சியாமளா. சியாமளாவும் அவன் சொன்னது போலவே தயாராகி விட்டாள்.

விக்னேஷ், அவளுடன் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் எதிரில் ஆட்டோவை நிறுத்தி அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

சியாமளாவின் பேரில் ஒரு சேமிப்புக் கணக்குத் தொடங்கி, அதில் அவள் சம்பளப் பணத்தில் மீதமிருந்த பத்தாயிரம் ரூபாயை டெபாஸிட் செய்து விட்டு பாஸ் புக்கை அவளிடம் கொடுத்தான்.

அதைப் பார்த்த அவள் முகம் கோபத்தில் சிவந்தது, ஆனால் ஒன்றும் பேசவில்லை.

ஆட்டோவில்  பள்ளிக்குப் போகும் வழியில், “ஏன் சியாமளா ஒன்றும் பேசவில்லை ?” என்றான் விக்னேஷ் .

“நான் என்ன பேசுவது மாமா? இன்னும் எங்கள் மூவரையும் உங்கள் குடும்ப அங்கத்தினர்களாக ஒத்துக் கொள்ளவில்லை. அதுதானே?”

“சியாமளா, ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்?”

“வேறு எப்படிப் பேசுவது? எதற்காக இப்போது தனிக்கணக்கு வைத்தீர்கள்?” என்றாள் கோபமாக.

“என் கையில் மொத்தமாக இருந்தால் செலவாகிவிடும் சியாமளா. தர்ஷணாவிற்கும், விஷ்ணுவிற்கும் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் ஏதாவது எதிர்பாராத  செலவு வந்தால் என்ன செய்வீர்கள்? உங்களை வேற்று மனிதர்களாக நினைத்திருந்தால் உங்கள் சம்பளக் கவரையே வாங்கியிருக்க மாட்டேன் இல்லையா?” என்றான் விக்னேஷ் அவளைச் சமாதானப் படுத்தும் விதமாக.

“சாரி மாமா” என்றாள் சியாமளா.

“பரவாயில்லை சியாமளா. ‘யானைக்கும் அடி சறுக்கும்’ இல்லையா? அது போலத்தான் உங்கள் தப்புக் கணக்கும்” என்று சொல்லிச் சிரித்தான் அவளைப் பார்த்து.

சிரிக்கும்போது பளீரென்று தெரிந்த அவன் வரிசைப் பற்கள்,  அவளை மெய்மறக்க வைத்தன. வாரினாலும் படியாத அவன் சுருண்ட தலை முடியும், பரந்த நெற்றியும், அழகான கண்களும் அவளைச் சிலிர்க்க வைத்தன.

“என்ன சியாமளா அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றான் விக்னேஷ் வியப்புடன்.

“ஒன்றுமில்லை” என்று தலையாட்டிய சியாமளா, லேசாக முகம் சிவந்தாள்.

சியாமளா ஒரு நாள் தன் கையில் உள்ள பணத்தில் சிறிய டிபன் கேரியர் போல் ஒரு ஹாட் பேக் வாங்கி வந்தாள். அவளுக்காகவே வாங்கி வந்திருக்கிறாள் என்று நினைத்தாள் அத்தை.

ஆனால் அதில் பிசிபேளாபாத், தயிர் சாதம், ஒரு காய் என்று வைத்து விக்னேஷிடம்  கொண்டு வந்து கொடுத்தாள்.

“இது எதற்கு?” என்றான் விக்னேஷ்.

“இனிமேல் பிளாட்பாரம் கையேந்தி பவன் கடைகளில் சாப்பிட வேண்டாம். எங்களுக்கெல்லாம் சாப்பாடு கட்டும் போது  உங்களுக்கும் கட்டி விடுகிறேன்” என்றாள் சியாமளா.

“உங்களுக்கு எதற்கு கஷ்டம் ?” என்றான் விக்னேஷ்.

“எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை. எல்லோருக்குமாக சேர்த்துத் தானே செய்கிறோம். நீங்கள் சாப்பிடும் அந்த கடைகளில் உணவு ருசியாக இருந்தாலும் சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது”

அவ்வளவு அவள் சொல்லியும் அவன் தயங்கினான்.

“மாமா, அக்கா உங்கள் அடிப்படை உரிமையிலேயே கை வைக்கிறாள். கேர் ஃபுல்” என்று கிண்டல் செய்தாள் தர்ஷணா.

“இவள் வேறே ஒருத்தி, குட்டையைக் குழப்புகிறாள்” என்றாள் சியாமளா.

“சியாமளா தான் அவ்வளவு தூரம் சொல்கிறாளே! ஒரு நாள் சாப்பாடு எடுத்துக் கொண்டு தான் போய்ப் பாரேன்” என்றாள் அத்தை. அத்தைக்கு வாயெல்லாம் ஒரே சிரிப்பு. அவள் சந்தோஷம் அவள் முகத்தில் தெரிந்தது .

“மாமா, அக்காவின்  சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு சந்தோஷப்படு அத்தை. அது சந்தோஷமா இல்லை தண்டனையா என்று இன்று மாலை மாமா சொல்லட்டும், இல்லையா மாமா?” என்றாள் தர்ஷணா கிண்டலாக சிரித்தபடி.

“போடி வாயாடி” என்றவன், ஆட்டோ டிரைவர்கள் போடும் உடையைப் போட்டுக் கொண்டு, ஹாட் பேக்கை கையில் எடுத்துக் கொண்டு, சியாமளாவிற்கு ஒரு “தேங்க்ஸ” சொல்லி விட்டு கிளம்பினான்.

சியாமளா வேலைக்குப் போய் சம்பளம் வாங்கிய பிறகு குடும்பச் செலவை சமாளிப்பது, விக்னேஷிற்குக்  கொஞ்சம் சுலபமாகி விட்டது. அவனும் மாலை நேர சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கி விட்டான்.

இப்போதெல்லாம் தினம் விக்னேஷ் சாப்பாடு எடுத்துச் செல்வது வழக்கமாகி விட்டது. ஒரு நாள் சியாமளா மெதுவாகத் தயங்கித் தயங்கி அவன் அருகில் வந்து நின்றாள்.

“என்ன சியாமளா, சொல்லுங்கள்” என்றான் விக்னேஷ் அவளை ஏறிட்டுப் பார்த்து.

“என் சமையல் பிடிக்கிறதா, இல்லை நான் சொன்னதற்காக சாப்பாடு எடுத்துச் செல்கிறீர்களா?” என்றாள் மெதுவாக.

“பிடிக்காவிட்டால் எடுத்துச் செல்வேனா சியாமளா?” என்றான் விக்னேஷ் அவளைப் பிரியமுடன் பார்த்துக் கொண்ட லேசான சிரிப்புடன்.

அவனைப் பார்த்தாலே அவள் முகம் இப்போதெல்லாம் சிவந்து விடுகின்றது.  ‘இது என்ன கெமிஸ்ட்ரியோ’ என்று நினைத்துக் கொண்டான்.

“ரொம்ப நன்றாக இருக்கிறது, அளவும் சரியாக இருப்பதால் களைப்பும் தெரிவதில்லை” என்றான் விக்னேஷ்.

“நீங்கள் மதியம் வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதால் மாலையில் ஏதாவது டிபன் சாப்பிட்டு விட்டுப் போனால் படிப்பதற்கு நன்றாக இருக்கும்”

“தேங்க்ஸ்” என்றான் அவளை ஆதுரத்துடன் பார்த்துக் கொண்டே. அவன் பார்வையை எதிர் நோக்க சக்தியில்லாமல் உள்ளே போய் விட்டாள் சியாமளா.

அன்று காலை மணி எட்டரை ஆகி விட்டது. ‘இன்று ஸ்கூலுக்கு லேட் தான்’ என்று நினைத்துக் கொண்டாள் சியாமளா.

அப்போது எங்கோ ஒரு சவாரி போய்விட்டு வீட்டிற்கு வந்த விக்னேஷ், “சியாமளா, இன்று உங்களுக்கு பள்ளிக் கூடத்திற்கு நேரமாகி விட்டதே. ஆட்டோவில் ஏறுங்கள், நான் கொண்டு போய் விடுகின்றேன்” என்றான் .

“நான் ஷேர் ஆட்டோ எதையாவதுப் பிடித்துப் போய் விடுவேன்”

“ஏன் சியாமளா, ஆட்டோவில் போனால் அவமானமாக இருக்கிறதா? நீங்கள் பிறந்ததிலிருந்தே செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள், காரிலேயே சென்றவர்கள்” என்றான் ஒரு பெருமூச்சோடு.

“தேவையில்லாத கற்பனை. உங்கள் ஆட்டோவில் போய்த்தானே நான் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டரே வாங்கினேன்” என்றாள் சிரித்துக் கொண்டே.

“அத்தை வருகிறேன்” என்று சொல்லிக்  கொண்டே போனவள், விக்னேஷ் ஏறுமுன் ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.

விக்னேஷ் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே ஆட்டோவில் நேரத்தோடு அவளைப் பள்ளியில் சேர்த்தான்.

அன்று மாலை ஆறு மணி போல் வீடு திரும்பினான் விக்னேஷ். வழக்கத்திற்கு மாறாக சமையல் அறையிலிருந்து நெய் மணமும், ஏலக்காய் மணமும் கலந்து வந்தன. சியாமளாவும் அம்மாவும் அடுக்களையில் இருந்தார்கள் போல் இருக்கிறது.

வழக்கம் போல் தர்ஷணாவும் விஷ்ணுவும் வாய்ச் சண்டையில் பலமாக ஈடுபட்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில்  கைச் சண்டையாகவும் மாறலாம் போல் இருந்தது.

அவர்கள் இங்கே வந்த புதிதில் விக்னேஷைப் பார்த்தவுடனே பயந்து ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துப் படிப்பது போல் பாவனை செய்வார்கள். ஆனால் இப்போதோ இவனையே மத்தியஸ்திற்கு அழைத்தார்கள்.

விக்னேஷ் சிரத்துக் கொண்டே, “ஏய் சின்னக் குட்டிகளா ! உங்களுக்குள் என்ன சண்டை?  அத்தை எங்கே? உள்ளே என்ன வாசனை பலமாக வருகிறது?” என்றான்.

“மாமா, முதலில் குட்டி கிட்டி என்பதை நிறுத்துங்கள். எனக்குப் பதினேழு வயதாகிறது, இந்த எருமைக்குப் பன்னிரண்டு வயதாகிறது. எங்கள் பெயர் மறந்து விட்டீர்களா மாமா?” என்றாள் தர்ஷணா.

“அடேயப்பா, கோபம் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறதே. நீங்கள் போடும் சண்டையைப் பார்த்தால் குட்டிப் பாப்பாக்கள்  போலத்தான் இருக்கிறது. ஆமாம் சமையல் அறையில் இருந்து என்ன வாசனை ?” என்றான்.

“அதுவா? இரண்டு விஞ்ஞானிகளும் லேபில் ஏதோ ஆராய்ச்சி செய்கிறார்கள். ஹைட்ரோ குளோரிக் ஆஸிட்டும்  , சல்பியூரிக் ஆஸிட்டும் ஒன்றாக்க் கலந்தால் என்ன கிடைக்கும் என்று சோதனை செய்து பார்க்கிறார்கள். நீங்கள் தான் வெள்ளை எலி கிடைத்திருக்கிறீர்களே, உங்களை வைத்துத் தான் பரிசோதனை செய்வார்கள் என்று நினைக்கிறேன்” என்றாள் தர்ஷணா முறைத்துக் கொண்டே.

விக்னேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் ‘கலகல’வென்று சிரித்தான். அவன் சிரிப்பு சப்தம் கேட்டு அவன் அம்மாவும் சியாமளாவும் வெளியே வந்தார்கள்.

“விக்னேஷ், காலேஜிற்குக் கிளம்பவில்லையா ?” என்றாள் அம்மா.

“கிளம்புகிறேன் அம்மா. ஆட்டோவைக் கொண்டு வந்து வீட்டில் நிறுத்தி விட்டேன், இன்றைய கலெக்ஷன் பணம் இந்தாருங்கள் அம்மா. இன்று கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சவாரி அடித்தேன், அதனால் இன்று எக்ஸ்ட்ரா பணம் ஐநூறு ரூபாய் கிடைத்திருக்கிறது. எனக்கு ஒரு காபி கொடுத்தால் குடித்து விட்டு காலேஜிற்குக் கிளம்பி விடுவேன்” என்றான் அவன் அம்மாவையும் சியாமளாவையும் பார்த்து.

சியாமளா உள்ளே ஓடி ஒரு தட்டில் நெய் மணக்க ரவா கேசரி கொண்டு வந்தாள். அதன் நிறமும் மணமும் , அதன்மேல் விரவிக் கிடந்த திராட்சையும், பொன் நிற முந்திரியும் மனதைக் கொள்ளையடித்தன. கடையில் வாங்கிய மிக்ஸரை கொஞ்சம் வைத்தாள் அம்மா.

அப்போது ஒரு கவரை அவனிடம் நீட்டினாள் சியாமளா. ‘என்ன?’ என்பது போல் அவளைப் பார்த்தான். பிரித்திருந்த அந்தக் கவரிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துப் படித்தான்.

(தொடரும் – வெள்ளி தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அசையும் காற்று (சிறுகதை) – ✍ இரஜகை நிலவன், மும்பை

    ஒரு ஊரில் ஒரு நிலவரசி (சிறுவர் நாவல் – பகுதி 2) – ✍ சியாமளா கோபு