in

அசையும் காற்று (சிறுகதை) – ✍ இரஜகை நிலவன், மும்பை

ஜூலை 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

வர் கட்டிலில் படுத்திருந்தவாறு ஜன்னல் வழியே தெரிந்த அந்த தேக்கு மர இலைகளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். அசைந்து மறு பக்கம் திரும்பிப்படுக்க முயன்றார், முடியவில்லை.

வேலைக்காரி வர இன்னும் வர எவ்வளவு நேரமிருக்கிறது என சுவர்க்கடிகாரத்தை பார்த்தார். நேரம் மாலை 5.12 என்றது. அவள் வர இன்னும் அரை மணி நேரமாகும், அதுவரை எதுவும் முடியாது.

அந்த இலைகள் இன்னும் அசைந்து கொண்டிருந்தன. சில இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறத் தொடங்கியிருந்தன. சில இலைகள் காய்ந்து எப்போது விழலாம் என்று காற்றோடு மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்தன.

மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டார். ’என் நிலைமையும் அந்த காய்ந்த இலைகள் போலத்தான். எப்போது என்று தான் தெரியவிலலை’ வழிந்த கண்ணீரைத் துடைக்க முடியவில்லை. கண்களின் அருகில் வழிந்தது.

’உடம்பின் எல்லா பகுதிகளும் செயலற்றுப்போய் தலையை மட்டும்  அசைத்துக் கொள்ள முடியும் நிலைக்கு வந்து விட்டேன். எத்தனை வேலையாட்கள்.. எத்தனை அலட்டல்கள்…. ஓடிய ஓட்டம் என்ன? ப்ச்…’ முகத்தைச் சுழித்துக் கொண்டார்.

 வேலு சங்கர் என்றால் எத்தனை மரியாதை… எல்லாம்.. எல்லாம் எங்கே போனது? எத்தனை வெளி நாடுகளில் வியாபாரம் விரிவு செய்து… எத்தனை பயணங்கள்.. எத்தனை பணவிரயங்கள்…  நேரமின்றி ஓடி இப்போது நேரம் போக மறுத்து… திரும்ப நேரம் பார்த்தார்.. ப்ச்.. இந்த கடிகாரமும் வேகமாக ஓட மறுக்கிறது.

திடீரென்று சபதம் கேட்க… தலையை அசைத்துப் பார்த்தார். தீபா  வந்து நின்றாள்.. கூட யாரோ ஒரு பெண் வந்து நின்று கொண்டிருந்தாள்.

“எங்க மாமனார், இழுத்துகிட்டு கிடக்கார்” என்றாள்.

இவளை ரவிக்காக பெண் பார்க்கப் போயிருந்த போது ரவியைத் தவிர எல்லோரும் வேண்டாம் என்று சொல்ல, “ரவிக்கு விருப்பம். அவளுக்கும் ரவியைப் பிடித்திருக்கிறது” என்று சொல்லி ரவிக்குத் திருமணம் செய்து வைத்ததிற்கு சரியான பதில் மரியாதை செய்து கொண்டிருக்கிறாள்.

அருகில் வந்தவள் “வேலக்காரி எல்லாம் ஒழுங்கா செய்துகிட்டிருக்காளா? ஏதும் வேணுமா?” என்றாள்.

 பரவாயில்லை உதவி செய்ய விரும்புகிறாள் என்று நினைத்துக் கொண்டு, “கொஞ்சம் டீ தர்றியா? தொண்டையெல்லாம் ஒரு மாதிரி இருக்குது” என்றார் வேலு.

“அது வந்து… இப்ப வேலைக்காரி வந்துடுவாவில்ல… அவள் எல்லாம் செய்து தருவாள்.. எனக்கு கொஞ்சம் அவசர வேல இருக்கு.    வா கீதா கிளம்பலாம்” என்றாள் தீபா.

”உங்க மாமா தானே கேட்கிறார். டீ போட்டுக் கொடுத்து விட்டுப் போகலாமே. நாம் எங்கே மாலுக்குத் தானே போறொம்” என்றாள் கீதா.

 “சும்மா இருடி.. கிழத்துக்கு நம்மளை கண்டவுடன் எதையாவது செய்ய சொல்லணும்… அதான்” திரும்பிப் பார்த்தவள் “அதோ வேலைக்காரி லதாவே வந்தாச்சே” என்றாள் தீபா.

”வந்ததற்கு ஒரு டீ போட்டுக் கொடுத்துருக்கலாம்” என்றாள் நண்பி.

”அப்புறம் நாம் தான் எல்லாம் செய்யணும்ணு எதிர்ப்பார்க்கும்” என்றாள் தீபா.

வேலைக்காரி லதா டீ போட்டு எடுத்து வர “மாமாவுக்கு குடு” என்றவள் “நாங்க வாறோம்” என்று பொதுவாக சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

“ஏம்மா.. உங்களுக்கும் சேர்த்து தான் சாயா போட்டேன். நீங்களும் குடிச்சிட்டுப் போங்க” என்றாள் வேலைக்காரி லதா.

”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ மாமாவிற்கு மொதல்ல குடு…” என்றவள் தன் தோழி கீதாவோடு கிளம்பினாள்.

தேனீரை நன்றாக சூடு ஆற வைத்து மெதுவாக அவருக்கு ஒவ்வொரு கரண்டியாக வாயில் ஊற்றினாள். அவள், அவ்வளவு அருகாமையில் வந்து தலையை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு அவள்  தேனீரைக் கொடுத்துக் கொண்டிருக்க.. வேலு சங்கர் தன்னையறியாமல் சிரித்து விட அவருக்குப் புரையேறிக்கொண்டது. 

அவள் அவர் தலையைத் தட்டியவாறு “ஏய்யா…சிரிக்கிறீங்க” என்று கேட்டாள் வாயைத் துடைத்துக் கொண்டே.

 ”ஒன்றுமில்லை..” என்றார் மனதுக்குள் சிரித்துக் கொண்டே.

 அவரை அறியாமல் அந்த சிரிப்பு அவர் முகத்தில் தெரிய, “எதுக்கோ சிரிக்கிறிய… அந்த ஆண்டவன் தான் உங்களை இப்படிக் கிடத்தி விட்டானே” என்றவாறு திரும்பவும் தேனீரைக் கொடுத்தாள்.

 ’இதோ இந்த லதாவை வேலைக்காரி தானே என்று….’ நினைக்கும் போதே கண்ணீர் முட்டியது. திரும்ப முயற்சி செய்தார். முடியவில்லை.

அவசரமாக வெளியே போவதற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த வேலு சங்கர், கழுத்தில் ’டை’ கட்டிக் கொண்டிருந்த போது கண்ணாடியில் லதா குனிந்து நின்று வீட்டைத் துடைத்துக் கொண்டிருப்பதை பார்த்து உடலெங்கும் சூடேறியது.

டை’யை கீழே விட்டெறிந்து விட்டு மெதுவாக அவளருகில் வந்தார். அவள் நிமிர்ந்து பார்க்குமுன்  அவளை அப்படியே அள்ளி கட்டிலில் போட்டார். அரண்டு போன லதா அலறிக் கொண்டே வெளியே ஓடினாள்.

திரும்பவும் கண்களில் நீர் முட்டிக்கொள்ள, “என்னாச்சு… எப்பவோ நடந்துகிட்டிருந்ததெல்லாம் நெனைச்சிக்கிட்டிருக்கியளோ?” அவளும் பெருமூச்சு விட்டவாறு கேட்டாள்.

தலையை ஆட்டிய வேலு சங்கர், “ஒங்கிட்டே ரொம்ப நாளாக் கேக்கணும்ணு நெனச்சிக்கிட்டிருந்தேன். ஆமா, உனக்கு என்மேலக் கோபமே வரலியா?”

அவர் முகத்தில் இப்போது புன்னகை தவழ்ந்தது. லதா ஒன்றும் சொல்லாமல் தேனீரைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

திரும்பவும் தேனீரைக் அறுந்திக் கொண்டே வேலு சங்கர், “என்னை மன்னிச்சிருவியா லதா?” என்றார்.

“அய்ய.. எங்கிட்டேயில்லாம் மன்னிப்புக் கேட்டுகிட்டு… இது என்ன சின்ன பிள்ள மாதிரி” அவர் வாயைத் துடைத்துக் கொண்டே சொன்னாள் லதா.

“இருக்கட்டுமே… நான் பாவ மன்னிப்பு கேட்கிற மாதிரி இருக்கும்.” என்றார் வேலு சங்கர்.

அவள் சிரித்துக்கொண்டே மெதுவாக அவரைக்கட்டிலில் கிடத்தி விட்டு இறங்கி நடந்தாள்.

அவள் ஏதும் சொல்லாமல் போகிறாளே… தன்னுடைய ஏழ்மை நிலையை நினைத்துக்கொண்டு போகிறாளோ என்று நினைத்துக் கொண்டார்.

தேக்கு மரத்தில் பழுத்திருந்த சில இலைகள் காற்றின் அசைவில் உதிர்ந்து விழுந்தன. அவை விழும்போது காற்றோடு சேர்ந்து சஞ்சரித்துக் கொண்டே மெதுவாக கீழே போய்க் கொண்ட்ருந்தது.

ஆதவன் முழுவதுமாக மறைந்து விட முயல, இருள் சூழ முயன்றது. லதா விளக்கைப் போட்டாள்

‘இன்னும் கொஞ்ச நேரத்தில் இவள் கொண்டு வந்த உணவை எனக்கு ஊட்டி விட்டு போய் விடுவாள். அதன் பிறகு அந்தகாரம் தான்’ உள்ளுக்குள்ளே சலித்துக் கொண்டார்.

 தூக்கம் தழுவிக்கொள்ள மறுத்தது. திரும்பவும் கண் விழித்த போது, வீட்டினுள்ளே வெளிச்சம் பரவியிருக்க, தலையை அசைத்த போது, “அப்பா இப்போது எப்படியிருக்கிறீர்கள்”? என்றான் ரவி அருகில் நின்று கொண்டு.

“ஏய்… எப்ப வந்தாய்? இந்த ராத்திரியிலே… சரி சரி… என்னைத் தூக்கி இருத்து.” என்றார் வேலு சங்கர்.

ரவி கைகாட்ட, கூட நின்ற டிரைவர் பின்னாலே தலையணையை எடுத்து சாத்தி வைத்து அவரைத் தூக்கி இருத்தினான்.

“ஏண்டா… பெத்த அப்பனுக்கு இந்த உதவி கூட செய்யக் கூடாதா?அதுக்கும் உதவி ஆள் தானா?” கண்ணீர் வழியக் கேட்டார்.

“ஏம்பா.. எமோசனல் ஆகிறீங்க…. சரி…சரி… நான் நாளைக்கு லண்டன் போகிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கும். நீங்கள் முயற்சித்த டெண்டர் எனக்கு கிடைத்திருக்கிறது… அதான் சொல்லிட்டுப் போலாம்ணு வந்தேன்” ரவி எங்கோ பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.

‘சே… இவனுக்காகவா இத்தனை சொத்துக்கள் ஓடி ஓடித் தேடினேன்’ மனசுக்குள்ளே எங்கோ வலித்தது.

“கொஞ்சம் உட்கார்டா… பேசணும்” வேலு சங்கர் கெஞ்சலாக கேட்டார்.

“என்னா… பழைய பாட்டை பாட ஆரம்பிப்பீங்க. எல்லாம் பிறகு பேசிக்கலாம் கிளம்புகிறேன்” என்றான் ரவி.

“டேய் எனக்கு கலக்கமாக இருக்கிறது. இண்ணைக்கோ நாளைக்கோண்ணு இருக்கேண்டா, எனக்கு கொள்ளி போட்டுட்டு போடா” என்றார் வேலு சங்கர் தன்னிறக்கம் பொங்க.

”அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுப்பா.. வர்றேன்” என்று டிரைவருக்கு கிளம்புவதற்கு சைகை செய்து விட்டு விளக்கை அணைத்து விட்டு நடந்தான்.

அவன் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் தூக்கத் தேவதை தழுவிக்கொள்ள தூங்கிப் போனார்.

திடீரென்று மழை வருவது போல இடி இடிக்க.. மின்னல் மின்னியது. தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்த்தார். தேக்கு மரத்திலிருந்து காய்ந்த இலை ஒன்று கீழே விழுவது அந்த மின்னிய மின்னலின் ஒளியில் சலனமாகத் தெரிந்தது.

மறுநாள் காலையில் கதவைத் திறந்த லதா, வேலு சங்கர் மவுனச் சிரிப்போடு கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து புரிந்து கொண்டு அவரை அள்ளிக் கட்டிலில் போட்டு விட்டு அலைபேசியில் ரவியை அழைத்தாள். 

அவன் போனை எடுத்து “அப்படியா?” என்று பேசிவிட்டு, தன் மனைவி தீபாவிடம், “பெரியவர் போயிட்டார்” என்றான்.

“அப்படியா… நேற்று பார்க்கும் போது கூட நல்லாத் தானே இருந்தார்” என்றவள், ஏதோ நினைவு வந்தவளாக “ஆமாம் உங்க லண்டன் டிரிப்?” என்றாள்.

“நான் கிளம்புகிறேன், நான் போன பிறகு எல்லாரிடமும் சொல்லி, உங்க அண்ணன் மூலமா இறுதிச் சடங்கெல்லாம் அரேஞ் பண்ணிக்கொள்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் ரவி.

 திரும்பவும் லதா போன் பண்ணிய போது ரவி எடுக்காததால் தீபாவை அழைத்தாள். ஒரு பழுத்த இலை அப்போதும் காற்றின் சலனத்தோடு கீழே விரைந்து வந்தது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – இறுதிப்பகுதி) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 2) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை