in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1   பகுதி 2   பகுதி 3

எல்லாம் அமைதியாகவே ஓடியது. இப்போதெல்லாம் சியாமளா பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் விக்னேஷ் எங்கிருந்தாலும் வீட்டிற்கு வந்து அவன் ஆட்டோவில் அழைத்துச் செல்வது வழக்கமாகிவிட்டது.

ஒரு நாள் விஷ்ணு “ஏன் மாமா, அக்காவை மட்டும் தினம் ஆட்டோவில் அழைத்துச் செல்கிறீர்கள்? எங்களை ஏன் அழைத்துச் செல்வதில்லை?” என்று கேட்டான்.

“டேய் வாலு, உங்களுக்குத் தான் ஸ்கூல் பஸ் இருக்கிறதே! அக்கா நிறைய நாள் பஸ்ஸை தவறவிட்டு ஆட்டோ பிடிக்கிறாள். பாவம் இல்லையா! டீச்சர் ‘லேட்’டாகப் போகக் கூடாதில்லையா?” என்று அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

சியாமளாவிற்கு பணி நிரந்தரமான பிறகு வேலை நிறைய ஆகிவிட்டது போலும்.

காலையில் சீக்கிரம் கிளம்பி, மாலையில் கொஞ்சம் லேட்டாக வந்தாள். விக்னேஷ் ஒரு நாள் அவளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, “இப்போதெல்லாம் வேலை அதிகமா?” என்று கேட்டான்.

“ஆம், பணி நிரந்தரமான பிறகு பன்னிரண்டாம் வகுப்பிற்கு நிரந்தர அறிவியல் ஆசிரியராக நியமித்திருக்கிறார்கள. ‘உங்கள் கடின உழைப்பு எனக்குத் தெரியும்’ என்று பொதுவாகக் கூறி விட்டுப் பணிக்கான உத்தரவு கொடுத்தார்கள். அவர்களுடைய அந்த எதிர்ப்பார்ப்பை நான் பூர்த்தி செய்ய வேண்டும். போன வருடம் அறிவியல் பாடத்தில் ஐந்து சதவீதம் மாணவர்கள் மட்டுமே நூறு சதவீதம் மதிப்பெண் வாங்கியிருக்கிறார்கள். இந்த வருடம் இன்னும் கொஞ்சம் அதிக மாணவர்கள் சென்டம் வாங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

மேலும் கணக்கு ஆசிரியருக்கு திடீரென ஆக்ஸிடன்ட் ஆகி விட்டது. அதனால் புதிய ஆசிரியரை நியமிக்கும் வரை அதையும் அடிஷனல் பாடமாக எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் கொஞ்சம் வேலை அதிகம்” என்றாள்.

சியாமளாவைக் கொண்டு போய் பள்ளியில் இறக்கி விட்டு  ஆட்டோவை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.

‘எவ்வளவு நல்லவனாக இருக்கிறான், ஆனால் தன் உடன் பிறந்த அக்காவிடம் மட்டும் ஏன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்?’

சமயத்தில் விக்னேஷ் காட்டும் அக்கறையும், பரிவும் சியாமளாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் கையை அழுத்திப் பிடித்திருக்கும் போது கூட அந்த நேரத்தில் வலி தெரியவில்லை. அவன் ஆண்மையும், தைரியமும் தான் தெரிந்தது. ‘அவன் துணையுடன் தன் வாழ்க்கைக் கடந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்… தைரியமாக இருக்கும்’ என்று நினைக்கத் தொடங்கி விட்டாள்.

விக்னேஷும் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு சியாமளாவைப் பற்றித் தான் நினைத்துக்கொண்டு போனான்.

‘நல்ல உயரம் ,நல்ல அழகு, பார்க்கும் போதே யாரோ பெரிய வீட்டுப் பெண் போன்ற தோற்றம். யாரிடமும் ‘டக்’கென்று பேசிவிட்டாத ரிசர்வ்ட் தன்மை. நான் கூட அவளைக் கர்வம் பிடித்தவள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் இனிமையான, இரக்க சுபாவம் கொண்டவளாக இருக்கிறாள். அம்மாவிடம் பாசமாக இருக்கிறாள். இவள் மட்டும் நம் வாழ்க்கைத் துணைவியாக வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று மனதிற்குள் ஏங்கினான்.

பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு கணக்கும், அறிவியலும் பாடமாக எடுத்தது போலவே, வீட்டில் பத்தாவது பரீட்சை எழுதப் போகும் தர்ஷணாவையும் பிடிபிடியென்று பிடித்தாள்.

“மதிப்பெண்களுக்காகப் படிக்காதே. அறிவியலும், கணக்கும் நன்றாகப் புரிந்து கொண்டு அதன் ஸ்டெப் மாறாமல் செய்தால், தேவையான இடங்களில் ‘டயக்ரம்’ போட்டு விளக்கினால் மதிப்பெண்கள் உன்னைத் தேடி வரும்” என்பாள் சியாமளா.

தர்ஷணா, மற்ற நேரங்களில் விளையாட்டாக இருந்தாலும் படிப்பென்று உட்கார்ந்து விட்டால் சீரியஸாகி விடுவாள்.

ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் கூட, பள்ளியில்  குறைவான மதிப்பெண் வாங்கியவர்களுக்கும், பாடத்தில் சந்தேகம் உள்ளவர்களுக்கும் தினம் இரண்டு மணி நேரம் பள்ளி முடிந்த பிறகு வகுப்பு எடுத்தாள் சியாமளா.

பிளஸ்டூ ப்ப்ளிக் பரீட்சையும் நடந்து முடிந்து விட்டது. சில நாட்களில எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வும் நடந்து முடிந்து விட்டது. விஷ்ணுவிற்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை, அவனே எல்லாவற்றிலும் சரியாக இருப்பான்.

‘மே’ மாத இறுதியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவும் வந்தது.  சியாமளா பணிபுரியும் எஸ்.பி.ஏ. பள்ளி தான் மாநிலத்திலேயே முதலாவதாகவும், இரண்டாவதாகவும் வந்தது.

அறிவியலிலும் கணக்கிலும் ஐம்பது பேர் கொண்ட சியாமளாவின் வகுப்பில்  முப்பது மாணவ மாணவிகள் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தனர். மீதி உள்ள இருபது பேருக்கும் எண்பது மதிப்பெண்கள் கிடைத்திருக்கிறது.

பள்ளி நிர்வாகத்தினருக்கும், தலைமை ஆசிரியருக்கும் மிகவும் சந்தோஷம். காலையில் பிரேயர் முடிந்ததும், பள்ளி ஆசிரியர்களை மாணவர்களிடையே பாராட்டிப் பேசினர். முக்கியமாக சியாமளாவை எல்லோரும் மிகவும் புகழ்ந்து பேசினர்.

கணக்கிலும் அறிவியலிலும் நூறு மதிப்பெண்கள் வாங்கிய மிக ஏழை மாணவருக்கு, தன் கையிலிருந்து ரூபாய் இரண்டாயிரம் கொடுத்தாள் சியாமளா. பள்ளி நிர்வாகமும் ரூபாய் ஐந்தாயிரம் கொடுத்தது.

விக்னேஷ் அவளை வீட்டில் விடும் போது, “பாடுபட்டதற்கு பலன் கை மேல் கிடைத்து விட்டது இல்லையா சியாமளா?”  என்றான். சியாமளா தன் கையிலிருந்து தலா இரண்டாயிரம் ரூபாய் இரண்டு மாணவர்களுக்குக் கொடுத்ததையும் கூறினாள்.

“சியாமளா, நீங்கள் எங்கள் கல்லூரியில் வந்து பாடம் எடுத்தால் நாங்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்குவோமில்லையா? அப்போது எங்களுக்கும் பணம் கொடுப்பீர்கள் இல்லையா?” என்றான் விக்னேஷ்.

“நீங்கள் கூட என்னைக் கிண்டல் செய்யலாமா. விக்னேஷ்… ஸாரி… மாமா?”

“நீங்கள் விக்னேஷ் என்று கூப்பிடுவதே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றான் விக்னேஷ், அவளை உறுத்தும் பார்த்து. அவன் பார்வையில் இப்போதெல்லாம் அவள் முகம் சிவந்து விடுகிறது, மனம் துள்ளுகிறது.

சியாமளா ஏற்கெனவே நல்ல அழகு. இந்த சந்தோஷத்தால் அவள் முகம் மிகவும் பிரகாசமாக ஜொலித்தது போல் இருந்தது.

“பள்ளியில் கண்டிப்பாக இருக்கிறோம், அதனால் எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் தர்ணா என்ன செய்யப் போகிறாள் என்று பயமாக இருக்கிறது மாமா. சில நேரங்களில் ரொம்ப விளையாட்டாக இருக்கிறாள். டென்த் ரிசல்ட் வந்தால் தான் தெரியும்” என்று பெருமூச்சு விட்டாள் சியாமளா.

“தர்ஷணாவைப் பற்றிப் போய்க் கவலைப்படலாமா? நல்ல ஞாபக சக்தி. விளையாடிக் கொண்டே படித்து விடுவாள். இன்னும் ஒரு வாரத்தில் தான் ரிசல்ட் வரப் போகிறதே, மேற்கொண்டு என்ன ‘குரூப்’ எடுப்பது என்று முடிவு செய்து விட்டாளா?”

“அவளுக்கென்ன! முடவன் கொம்புத் தேனிக்கு ஆசைப்பட்டாற் போல் டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்கிறாள். அதெல்லாம் நம்மால் முடியுமா? அந்த ஆசையெல்லாம் வைத்துக் கொள்ளாதே, வாழ்க்கையில் எது கிடைக்கிறதோ அதை சந்தோஷமாக எடுத்துக் கொள் என்று சொல்கிறேன். அவளோ கிடைப்பதையெல்லாம் எடுத்துப் படிக்க முடியாது. நான் விரும்புவது தான் என்னால் படிக்க முடியும் என்கிறாள், பார்ப்போம்” என்று பெருமூச்சு விட்டாள்.

“இப்போது தானே டென்த் பரீட்சை எழுதியிருக்கிறாள். பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கவே இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறதே. நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்” என்றான் விக்னேஷ்.

ஒரு வாரத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வு முடிவுகள்  வெளியாகியது. தர்ஷணா தான் மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேறியிருக்கிறாள் என்று அறிவித்து  அவள் பள்ளியிலிருந்து அழைத்திருந்தார்கள்.

தன்னுடன் சியாமளாவும், விக்னேஷும் வர வேண்டுமென்று தர்ஷணா விரும்பினாள்.

விக்னேஷ் அவர்கள் இருவரையும் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் சென்றான். சியாமளா, அவனிடம் அத்தையையும் அழைத்துக் கொண்டு கொஞ்சம் சாக்லெட்டும் வாங்கிக் கொண்டு அவர் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பள்ளியில் பிரேயர் ஹாலில் அத்தையும், சியாமளாவும் ஓர் ஓரமாக நின்றனர்.

பள்ளித் தலமையாசிரியர் வாழ்த்துக்கள் கூறி தர்ஷணா தான் மாநிலத்திலேயே முதல் மாணவி என்று பெருமையுடனும், சந்தோஷத்துடனும் அறிவித்தார்.  இரண்டாவது மாணவியும், தர்ஷணாவின் வகுப்பைச் சேர்ந்தவள் என்றும், மூன்று மதிப்பெண்கள் மட்டுமே குறைவு என்றும் அறிவித்தார்.

அதற்குள் மீடியாக்கள் எல்லாம் ஆளுக்கொரு கேமிராவும், செல்போனுமாக வந்து குவிந்து விட்டார்கள்.

“பிரஸ்காரர்கள் கேள்விகள் கேட்டால் பயப்படக்கூடாது” என்றார் தலைமை ஆசிரியர்.  “கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் தர வேண்டும்” என்றார் வகுப்பாசிரியர்.

‘சரி’யென்று தலையாட்டினர் இரண்டு மாணவிகளும். “பயப்படக்கூடாது” என்று தலைமை ஆசிரியர் தர்ஷணாவைப் பார்த்துக் கூறியதற்கு, வகுப்பாசிரியர் சிரித்து விட்டார்.

மீடியா ஆட்களும் முதலில் தர்ஷணாவிடம் தான் கேள்விகள் கேட்டனர்.

“மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“இதில் நினைப்பதற்கு ஒன்றும் இல்லை. எங்கள் கடமையை நாங்கள் சரியாக செய்தோம். ஆசிரியர்களும், வீட்டிலும் நல்ல சப்போர்ட், அரசாங்கம் தான் எங்களைப் போன்ற மாணவர்களின் கடின உழைப்பிற்கு ‘சப்போர்ட்’ செய்ய வேண்டும்” என்றாள் தர்ஷணா.

சியாமளா, அவள் பேச்சில் தன் புருவத்தை உயர்த்தி விக்னேஷைப் பார்த்தாள். அவனோ லேசாகச் சிரித்தப்படி அவளை அமைதியாக இருந்து மேலே கவனிக்கும்படி சைகை காட்டினாள்.

“அரசாங்கம் எப்படி சப்போர்ட் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்?” மீடியா.

“எனக்கு மருத்துவம் படிக்க ஆசை, ஆனால் படித்து முடிக்க ஐம்பது லட்சம் ரூபாய் ஆகும் என்கிறார்கள். எனக்கு பெற்றோர் இல்லை, உறவினர் ஆதரவில் தான் படிக்க வேண்டும். எட்டாத்தற்கு ஆசைப் படாதே என்கிறாள் அக்கா. ஏன் ஆசைப்படக் கூடாது? இதேப் போல்  பிளஸ்டூ’வில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்தால் அரசாங்கம் என்னைப் படிக்க வைக்கலாமில்லையா? பெற்றோர் இல்லாத ஏறக்குறைய அநாதைகளாக நிற்கும் என்னைப் போன்ற மாணவர்களுக்கு அரசாங்கம் தானே கார்டியன். அப்படியும் அரசாங்கத்தால் பணம் செலவிட முடியாதென்றால் எங்களிடம் ஐந்து வருட கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி எங்களுக்கு உதவி செய்யலாமில்லையா? எங்களைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு, மாநில அளவில் ‘ரேங்க்’ எடுத்தவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு ‘ப்ரீ’ஸீட் கொடுத்தால், நாங்கள் மருத்துவத்துறைக்கு உயிரைக் கொடுத்து உழைப்போம்.  அப்படியும் எந்த உதவியும் அரசாங்கத்தால் செய்ய முடியாதென்றால் அரசாங்கமும் வேஸ்ட், நாங்கள் கஷ்டப்பட்டுப் படிப்பதும் வேஸ்ட்” என்றாள் ஆக்ரோஷமாக.

எல்லா மீடியாக்களும் அப்படியே ரெகார்ட் செய்து விட்டன. ‘இவ்வளவு துடுக்காகப் பேசினால் எப்படி?’ என்று தலைமை ஆசிரியர் தலையில் கை வைத்துக் கொண்டார். வகுப்பாசிரியை மட்டும் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

சியாமளா எத்தனையோ முறை பேச்சை நிறுத்தச் சொல்லி சைகைகள் காட்டியும் தர்ஷணா பேச நினைத்ததைப் பேசி முடித்து விட்டே நிறுத்தினாள். விக்னேஷ் அவள் பேச்சில் மலைத்து நின்று விட்டான். அத்தையும் கண்களைத்தான் துடைத்துக் கொண்டாள்.

அன்று மதியம் முதற்கொண்டு தர்ஷணாவின் பேட்டி தான் எல்லா டி.வி.க்களிலும், ரேடியோக்களிலும், செய்தித் தாள்களிலும். இவள் பேசியதை வைத்துக் கொண்டு எதிர்கட்சியினர் டிவி’யில் பலவிதமாக விவாதித்துக்  கொண்டிருந்தனர்.

சியாமளா, ‘இது எங்கள் போய் முடியப் போகிறதோ’ என்று பயப்பட்டாள். அவர்கள் வசிக்கும் ஏரியாவில்  பேனர்கள்  எல்லாம் வைத்து அமர்க்களம் செய்தனர். தர்ஷணாவோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. வழக்கம் போல் குச்சி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டு, விஷ்ணுவிடம் சண்டை பிடித்துக் கொண்டு இருந்தாள்.

இரண்டு நாள் கழித்துப் போலீஸ் பாதுகாப்போடு ஒரு பெரிய கார் அவர்கள் வீட்டு எதிரில் வந்து நின்றது. என்ன, ஏது என்று யூகிப்பதற்குள் மீடியா ஆட்களும் வந்து விட்டனர்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பணமா பாசமா…? (சிறுகதை – முற்பகுதி) – பவானி உமாசங்கர்

    பணமா பாசமா…? (சிறுகதை – பிற்பகுதி) – பவானி உமாசங்கர்