in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 17) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12    பகுதி 13    பகுதி 14     பகுதி 15     பகுதி 16

“உங்கள் பெண் நித்யாவிற்கு இப்போது என்ன வயதிருக்கும்?” என சியாமளா கேட்க

“பதினைந்து வயது நடக்கிறது. இப்போது என் தங்கைக்கு என் மகளைத் வைத்துக் கொள்ள விருப்பமில்லை. ‘ஓடுகாலிக்குப் பிறந்த பெண். இவள் தினம் பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டிற்கு வரும் வரையில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு அலைய வேண்டியிருக்கிறது. எப்போது எங்கே ஓடி விடுவாளோ என்று பயமாக இருக்கிறது’ என்று பார்ப்பவரிடமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறாளாம். இவள் இந்த வீட்டில் இருக்கும் வரை என் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமையாது என்றெல்லாம் திட்டுகிறாளாம். மிக இழிவாகப் பேசி அடிக்கடி நித்யாவை அழ விடுகிறாளாம்” என்ற நிர்மலாவின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் சியாமளா. அவள் துக்கத்தைப் பார்த்த சியாமளாவின் கண்களிலும் கண்ணீர் .

“நீங்கள் போய் உங்கள் மகளைப் பார்த்தீர்களா நிர்மலா?”

“கோயம்பத்தூர் ஜட்ஜ், மாதவனுடைய நண்பர். என் மகளை அவர் வீட்டிற்கு அழைத்து வரச்சொல்லிப் பார்ப்போம். வருடத்திற்கு இரண்டு மூன்று முறை பார்ப்போம், அப்போதெல்லாம் என்னை ‘ஓடிப் போன அம்மா’ என்று தான் கூப்பிடுவாள் என் மகள். அவளைப் போய்ப் பார்ப்பதை விடப் பார்க்காமலே இருந்து விடலாம் என்று கூட மாதவனிடம் சொல்லி அழுதிருக்கிறேன். ஆனால் மாதவனோ  ‘உன் தங்கை உன்னைப் போல இளகிய மனம் கொண்டவள் இல்லை என்பதை அவள் முகத்திலிருந்தே அறியலாம். நித்யாவை அவள் வெறுக்கிறாள், நாம் அடிக்கடிப் போய்ப் பார்த்தால் தான் நமக்காகவும் சில உறவுகள் காத்திருக்கின்றன என்ற எண்ணம் நித்யாவிற்கும் வரும், உறவுகளை உதறுவதல்ல வாழ்க்கை’  என்பார்”

“என்ன சொன்னீர்கள் நிர்மலா?”

“உறவுகளை உதறுவதல்ல வாழ்க்கை என்று சொல்வார்  மாதவன். ஏன்?”

“அந்த வாக்கியம் என்ன பழமொழியா? என் அத்தையும் அதே தான் சொல்லுவார்” என்றாள் சியாமளா.

“ஆனால் நித்யா மற்றவர்களிடம் ‘என் அம்மா’ என்று தான் என்னைக் குறிப்பிடுகிறாள். நேரில் மட்டும் ‘அம்மா’ என்று கூப்பிடுவதில்லை” என்று சொல்லிக் கசப்பாக சிரித்தாள் நிர்மலா.

“நான் மட்டும் தான் இந்த உலகத்தில் மிகவும் துரதிருஷ்டசாலி என்று நினைப்பேன். ஆனால் உங்கள் துன்பம் எல்லாம் பார்க்கும் போது, நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று தெரிகிறது” என்றாள் சியாமளா.

விக்னேஷ் தன் வேலைகளை முடித்து, சியாமளாவையும் அழைத்துக்  கொண்டு கிளம்பினான். சரவணனோ, முருகேசனோ சவாரியில்லாமல் இருந்தால் அவர்கள் ஆட்டோவை அழைத்துக் கொள்வான். இல்லையென்றால்  வேறு ஏதாவது ஆட்டோ பிடித்துக் கொண்டு போய் விடுவான். நிர்மலாவின் வாழ்க்கையையே நினைத்துக் கொண்டிருந்தாள் சியாமளா.

வீட்டிற்குப் போகும் போது ரோஷிணியும் நேஹாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். இரண்டுமே  பெண் குழந்தைகள் ஆதலால் கூச்சல் மட்டும் பெரியதாக இருக்கும், ஆனால் அடித்துக் கொள்ள மாட்டார்கள். வத்சலாவும் விஷ்ணுவும் சீரியஸாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். தர்ஷணாவோ வழக்கம் போல் பாட்டும் ஆட்டமுமாக  அட்டகாசம் செய்து கொண்டிருந்தாள். ஹௌஸ்சர்ஜன் கோர்ஸும் முடித்து விட்டாள்.

வத்சலாவும் இந்தப் பரீட்சையில் தேறி விட்டால் அவளிடம் ஒரு டிகிரி இருக்கும். ஆனால் வெறும் டிகிரியை வைத்துக் கொண்டே என்ன செய்வது?  பி.எட். பயிற்சி எடுக்கலாம். ஆனால் நிர்மலாவின் மருத்துவமனையில் பணிபுரிந்த அனுபவித்தால் நர்ஸாகப் பயிற்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினாள் வத்சலா. நிர்மலாவும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யத் தொடங்கி விட்டாள். இதனிடையில், சியாமளாவும் நிர்மலாவும் கௌசிக்கை ஒருமுறை சிறையில் போய் பார்த்து வரும்படி வத்சலாவை வற்புறுத்தினார்கள்.

“விவாகரத்து கொடுக்க போகும் நான் ஏன் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும்?” என்றாள் வத்சலா வெறுப்போடு.

“சிறை என்பது தண்டனைக்குரிய இடம் மட்டுமல்ல, மனம் திருந்துவதற்குண்டான இடமும் அதுதான். இப்போது அவர் மனம் திருந்தியிருந்தால்?” என்று நிர்மலா கேள்விக்குறி போட்டாள்.

“போய்ப் பாருங்கள் வத்சலா அக்கா. உங்கள் கணவர், அவருடைய செயலுக்கு வருந்தினால் மனம் திருந்தி விடுவார் என்ற நம்பிக்கை இருந்தால் விவாகரத்து கொடுக்காதீர்கள். இன்னமும் பணத்தைப் பற்றிய பேராசையிலேயே இருந்தால், தான் செய்த தவறான செயலுக்கு வருந்தவில்லையென்றால் அவரை மறந்து விடுங்கள். ஆனால் எதையும் சிந்தித்துப் பார்க்க எல்லோருக்கும் கொஞ்சம் கால அவகாசம் தருவது நல்லது” என்றாள் சியாமளா.

“எங்காவது புளியமரம் வாழை மரம் ஆகுமா? அம்மாவிற்குக் கூட கௌசிக்கை ஆரம்ப முதல் பிடிப்பதில்லை, அதனால் நான் விவாகரத்து கொடுப்பதில் அவர்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இருக்காது, இல்லையா அம்மா?” என்றாள் வத்சலா தன் அம்மாவை நோக்கி.

“இந்தக் காலத்துப் பெண்களுக்கு எல்லாவற்றிலுமே அவசரம். திருமணமும் அவசரமாக உங்கள் இஷ்டத்திற்கு நிதானமாக யோசிக்காமல் செய்துக் கொள்கிறீர்கள், அதே வேகத்தில் விவாகரத்தையும் சீக்கிரமே செய்து விடுகிறீர்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் கலாச்சாரத்தில் நம்பிக்கை இருந்தால் இருவரும் இப்படி நடக்க மாட்டீர்கள். எனக்கு விவாகரத்தில் சம்மதமில்லை” என்றாள் அம்மா.

“ஏன் ஜெயிலுக்குப் போய் விட்டு வந்த அவனோடு வாழ்ந்து, நானும் என் மகளும் அவமானப்பட வேண்டுமா?” வத்சலா கோபத்துடன் கேட்டாள்.

“அவன் நல்லவனாக இருந்து நன்றாக சம்பாதித்தால் சந்தோஷப்படுவது  நீ தானே. அதேப் போல் அவன் கெட்டவனாக இருந்தால், அவனைத் திருத்த வேண்டியதும் உன் கடமை தானே. இந்த விவாகரத்து என்பது ஒரு எஸ்கேப்பிசம் தான், அதாவது கடமையிலிருந்து தப்பி ஓடுவது” என்றாள் அம்மா கோபமும் வருத்தமுமாய்.

“என்ன அம்மா சொல்கிறாய்?”

“ஆமாம் வத்சலா, இப்போது சியாமளா எனக்கு மருமகளாக வந்ததால் விக்னேஷைப் பற்றிய கவலை இல்லை. எவ்வளவு முரடனாக இருந்த அவனை சியாமளா எப்படி மாற்றினாள். அதே மனநிம்மதி உன் மாமியாருக்கு வேண்டாமா? தன் பிள்ளையை கவனித்துக் கொள்ள தாயைப் போல ஒரு மனைவி இருக்கிறாள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்க வேண்டும்” என்று முடித்தாள் அம்மா.

இவ்வளவையும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த விக்னேஷ், “உபதேசம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் அம்மா போன நூற்றாண்டிலேயே இருக்கிறார்கள். கண்ட பெண்களுடன் தொடர்பு, கண்டவர்களுடன் நட்பு, கள்ளநோட்டு மாற்றுவது  என்று பல கெட்ட பழக்கங்கள். இன்னும் என்னென்ன தெரியாத கெட்ட பழக்கங்கள் இருக்கின்றனவோ?” என்றான் கோபமாய்.

வத்சலா தன் குழந்தையுடன் கௌசிக்கைப் போய் பார்க்க, சிறையில் அனுமதி பெற்றுத் தந்தான் விக்னேஷ். வத்சலாவும் போய் பார்த்து விட்டு வந்தாள், ஆனால் கௌசிக்கைப் பற்றிய அவளுடைய மனோபாவம் ஒன்றும் மாறவில்லை.

“ஏழு வருட தண்டனை முடியும் போது வேண்டுமானால் அவன் மாறி இருக்கலாம். அவன் திருந்தி வருவானென்று நான் காத்திருக்கிறேன், ஆனால் இனி அவனை ஜெயிலில் போய்ப் பார்க்க மாட்டேன். அவனுக்காக நான் காத்திருக்கிறேன் என்ற நம்பிக்கை அவனுக்கு வேண்டாம், அப்படியாவது திருந்துகிறானா என்று பாப்போம்”  என்றாள் வத்சலா.

தர்ஷணாவிற்கு கோவை மாவட்டத்தில் தென்கரை என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ள சென்னூர் என்ற கிராமத்தில் பொதுநல மருத்துவமனையில் இளநிலை மருத்துவராக வேலை கிடைத்தது. தன் வேலைக்கான உத்தரவை எடுத்துக் கொண்டு, முதலமைச்சரின் பர்ஸனல் அஸிஸ்டண்டை சந்தித்து முதல் அமைச்சரை சந்திக்க விரும்புவதாக வேண்டுகோள் வைத்தாள்.  வீட்டில்  மாதவன், நிர்மலா முதற்கொண்டு  விக்னேஷ், சியாமளா வரை எல்லோரும் தர்ஷணாவை கேலி செய்தனர்.

“முதலமைச்சருக்கு எவ்வளவோ வேலை, இதனிடையில் இவளுடைய தொல்லை வேறு. முதலமைச்சர் என்ன உன் நண்பரா? உட்கார்ந்தால் எழுந்தால் எல்லாவற்றிற்கும் கன்ஸல்ட் செய்து கொண்டு. உன்னால் அந்தப்  பி.ஏ. தான் முதல்வரிடம் நல்ல டோஸ் வாங்கப் போகிறார்” என்றாள் வத்சலா.

தர்ஷணா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. வழக்கம் போல் விஷ்ணுவுடன்  யுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவள் இப்போதெல்லாம் நேஹாவையும் விட்டு வைப்பதில்லை, அவளிடமும் போட்டி போட்டுக் கொண்டிருந்தாள். அத்தை கூட அந்தச் சின்னக் குழந்தையைத் தான் திட்டுவாள். ஆனால் இவளை தர்ஷணாவை ஒன்றும் சொல்ல மாட்டாள்.

அடுத்த இரண்டு நாட்களில் முதலமைச்சரைக் காண அப்பாயின்ட்மென்ட் கிடைத்து விட்டது. விக்னேஷ் தான் அழைத்துச் சென்றான். முதல்வரிடம் தன் வேலைக்கான உத்தரவைக் கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள் தர்ஷணா.

“கிராமத்து மக்கள் மிக நல்லவர்கள், ஏழைகள். அரசாங்கம் கொடுக்கும் சம்பளத்தில் திருப்தியடைந்து அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதுவுமல்லாமல் சென்னனூர் கிராமத்திற்கு அருகில் மத்திப்பாளையம் என்று ஒரு கிராமம் இருக்கிறது, அங்கே உள்ள அனாதை ஆஸ்ரம் மிக நன்றாக  நடந்து வருகிறது. அந்த ஆஸ்ரமத்திற்கு மருத்துவவசதி தேவையாக இருந்தால் போய் உதவி  செய்து விட்டு வா” என்றவர் தர்ஷணாவை ஆசீர்வதித்து அனுப்பினார் .

விக்னேஷும் சியாமளாவும் அவளோடு கோவை கிளம்பினர், மாதவனும் அவர்களோடு சென்றார்.

“கோவைச் சென்றவுடன்  தர்ஷணா என் நண்பர் பிரகாசம் வீட்டிலேயே தங்கட்டும். வீட்டில் ஜட்ஜும் அவர் மனைவியும்  மட்டும் தான், இருவரும் தனியாகத்தான் இருக்கிறார்கள். கொஞ்சம் பழகிய பிறகு, தர்ஷணாவிற்கு தனி வீடு பார்த்து வைத்து விடலாம்” என்றார் மாதவன்.

“ஏன் வக்கீல் சார், அவர்களுக்கு குழந்தைகள் இல்லையா?” என விக்னேஷ் கேட்க

“ஒரே ஒரு மகன் ரிஷிகேஷ் என்று பெயர். அவனும் டாக்டர் தான், ஆனால் சையன்டிஸ்டாக வேலை பாரக்கிறான். அவனுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம் தான் அவர்கள் இருவரையும் கொஞ்சம் படுக்க வைத்து விட்டது” என்றார் மாதவன்.

“நிர்மலாவும் நம்முடன் வந்திருக்கலாம்” என்றாள் சியாமளா பேச்சை மாற்றும் விதமாக .

“சொல்ல முடியாது, கடைசி நேரத்தில் எதையோ அள்ளிப் பைகளில் போட்டுக் கொண்டு கிளம்பினாலும் கிளம்பி விடுவாள். சியாமளா, உங்கள் அத்தையால் நேஹாவையும், ரோஷிணியையும் பார்த்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டார் மாதவன்.

“விஷ்ணுவே எல்லாம் பார்த்துக் கொள்வான், இருந்தாலும் அத்தையின் துணைக்குத் தான் வத்சலா இருக்கிறாளே. நேஹாவைக் கொண்டு போய் ஸ்கூலில் டிராப் செய்வது, பிக்அப் செய்வது எல்லாம் முருகேசன் அண்ணா பார்த்துக் கொள்வார். நாம் கோவையிலிருந்து திரும்பும் வரை சரவணன் அண்ணாவின் மனைவி  பகல் நேரத்தில் அத்தையோடு தான் இருப்பார்கள்” என்றாள் சியாமளா.

எல்லோரும் மாதவன் காரிலேயே பயணமானார்கள். மாதவன் சொன்னது போலவே கடைசி நேரத்தில் நிர்மலா வந்து தானும் கோயமுத்தூர் வருவதாகக் கூறி வண்டியில் ஏறிக் கொண்டாள் .

“நிர்மலாக்கா, வரமாட்டேன் என்றீர்கள். இப்போது கிளம்பி விட்டீர்களே. மாதவன் அங்கிள் இல்லாமல் ரொம்ப போரடிக்கும், அப்படித்தானே” என்றாள் தர்ஷணா கண்களைச் சிமிட்டியபடி.

“உனக்கு எப்போதும் கலாட்டா தான்  தர்ஷணா. நிர்மலாவிற்கு நித்யாவைப் பார்க்க ஆசை இருக்குமல்லவா?” என்றார் மாதவன் .

கோயமுத்தூர் ஜட்ஜ் பிரகாசத்தின் வீட்டிற்குப் போய் சேர்ந்தார்கள். பிரகாசமும் அவர் மனைவி சாந்தாவும் இவர்களை சந்தோஷமாக வரவேற்றார்கள்.

“இத்தனைப் பேராய் வந்திருக்கிறோமே. லஞ்ச்’சிற்கு எங்காவது வெளியே போய் சாப்பிடலாமா, இவர்களுக்கு ஏன் கஷ்டம் தர வேண்டும்?” என்றாள் சியாமளா.

“எங்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை, மாதவனும் நிர்மலாவும் எங்களுக்கு மிகவும் பிரியமானவர்கள். உங்கள் தங்கைக்காக அவர்கள் இருவரும் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு உங்களிடம் மிகவும் பிரியம் இருக்க வேண்டும். அதனால் நீங்களும் எங்களுக்குப் பிரியமானவர்களே. மேலும் சமையலுக்கு நீலா இருக்கிறாள், நாமும் கொஞ்சம் உதவி செய்தால் அவள் சமையலை சீக்கிரம் முடித்து விடுவாள்” என்றார் சாந்தா.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மீட்சி (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

    என் காதல் (சிறுகதை) – ச. சத்தியபானு