in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12    பகுதி 13

“அது சரி, நீங்கள் நன்றாக சாப்பிடுகிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரிய வேண்டாமா?  உங்களை கவனிக்காமல் நான் போய் படுத்துக் கொண்டால் வீட்டில் லேடீஸ் வேண்டாமே?” என்றாள்.

“நேற்று முழுவதும் ஆஸ்பத்திரியில் இருந்ததால் இன்று அதை ஈடுகட்டுவது போல் நிறைய சவாரி கிடைத்தது சியாமளா. அதனால் வரும் வருமானத்தை இழக்க மனம் வரவில்லை, அது தான் வீட்டிற்கு வர நேரமாகி விட்டது சியாமளா” என்றான் புன்முறுவலுடன்.

“மாமா, மாதவன் சாரிடம் நீங்களும் சட்டம் படித்தவர் என்று சொன்னீர்களா? அவரிடம் ஜூனியரிடம் சேரலாம் இல்லையா? அப்படிச் சேர்ந்தால் இவ்வளவு உடலுழைப்பு இருக்காதல்லவா?”  என்றாள் சியாமளா.

“நீ நினைப்பது தவறு சியாமளா, நாம் செய்த உதவிக்குப் பிரதி உபகாரம் கேட்பது போலாகிவிடும். அப்புறம் நாம் செய்தது எப்படி உதவியாகும்?” என்றான். அப்போது படுக்கையிலிருந்து அவன் அம்மா எழுந்து வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“அத்தை, நீங்கள் இன்னுமா தூங்கவில்லை?” என சியாமளா கேட்க

“விக்னேஷ் வீட்டிற்கு வந்த பிறகு தான் எனக்குத் தூக்கம் வரும். மேலும் இன்று ஜோஸியர் ஐயா வீட்டிற்கு வந்தார், இந்த மாதக் கடைசியில் ஒரு நல்ல முகூர்த்த நாள் இருக்கிறதென்றும் சொன்னார். நீங்கள் சொன்னால் கோயிலில் திருமணம் நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விடுவதாகக் கூறினார்” என்றாள் அத்தை.

“அம்மா, நான் நாளை ஐயரிடம் பேசி விடுகிறேன். விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகை அவர் எழுதிக் கொடுத்தால் அதை அச்சாபீஸில் கொடுத்து அழைப்பிதழ் அடித்து விடலாம். கோயிலில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் வீட்டுத் தோட்டத்திலேயே நீளமாக பள்ளம் வெட்டி விறகு அடுப்பை தயார் செய்தால் சமையல்காரர் வந்து சமையல் முடித்து விடுவார். அம்மா, நீங்கள் சமையல் வேலையில் இறங்கி உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. உடம்பு ஆரோக்யமாக வைத்துக் கொள்ள வேண்டும். சரவணனும் முருகேசனும் இன்னும் சில நண்பர்களும் வருவார்கள், அவர்களுடைய துணைவியர்  எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்ளுவார்கள். உறவினர் என்று அழைப்பதற்கு வத்சலாவும், அவள் கணவரும் தானே இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் நண்பர்களே. நீங்களும் சியாமளாவும் உடம்பை நன்றாக வைத்துக் கொண்டால் போதும்” என்றான் விக்னேஷ்.

சியாமளா தன்னிடம் இருந்த நெளிந்த வளையல்களையும், அறுந்து போன செயின்களையும் எடுத்துக் கொண்டு சரவணன் மனைவியின் துணையோடு எடை போட்டாள். அது ஒரு பத்து பவுன் தேறியது. அதை பணமாக்கிக் கொண்டு வந்து விக்னேஷிடம் கொடுத்தாள்.

அதில் அவன் ஒரு திருமாங்கல்யமும், அவளுக்கு மூன்று பவுனில் ஒரு சங்கிலியும், இரண்டு வளையல்களும் வாங்கினான்.

“மாமா, இந்தப் பணத்தை நீங்கள் கல்யாணச் செலவிற்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தானே கொடுத்தேன். நீங்கள் ஏன் நகையாக வாங்கினீர்கள் மாமா?” என்றாள் சியாமளா.

“இருக்கட்டும் சியாமளா. நீ உன்னுடைய சேமிப்பிலிருந்து முப்பதாயிரமும், லோனில் பத்தாயிரமும் கொடுத்தாய். அதை எடுத்துக் கொள்கிறேன். இந்த நகைகள் உனக்கு இருக்கட்டும். நியாயப்படிப் பார்த்தால் நகைகளை நான் என் கையிலிருந்த பணத்தில் வாங்கியிருக்க வேண்டும். அதற்கு இப்போது என் நிலமை சரியில்லை, ஆனால் கட்டாயம் நான் உன்னை ராணி மாதிரி வைத்துக் கொள்வேன் கண்ணம்மா” என்றான் தொண்டையடைக்க.

அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகக்  கோர்த்தவள், “நான் இப்போதே உங்கள் அன்பில் ராணி போல் தான் இருக்கிறேன்” என்று அவன் எதிர்பார்க்காத நேரத்தில் தன் இதழ்களை அவன் கன்னத்தில் பதித்தாள். விக்னேஷ் திகைத்து நின்றான் ஒரு நிமிடம்.

“நான் எப்போதுமே கடன் வைத்துக் கொள்வதில்லை, இருக்கட்டும்  நம் திருமணத்திற்குப் பிறகு வட்டியோடு திருப்பிக் கொடுத்து விடுகின்றேன். இதற்கு மேல் இங்கேயிருந்தால் என் மேலேயே எனக்கு நம்பிக்கையில்லை” என்றவன், அவள் காதை லேசாகத் திருகி விட்டு வெளியேறினான்.

திருமணப் பத்திரிகை வந்து விட்டது. மிக எளிமையாகக் குறைந்த விலையில் போட்டிருந்தார்கள். சியாமளா எம்.எஸ்.ஸி; பி.எட் என்ற மணமகளுக்கும், விக்னேஷ் பி.ஏ.பி.எல். என்ற மணமகனுக்கும் என்ற வரிகளைத் தனிமையில் மீண்டும் மீண்டும் படித்து முத்தம் கொடுத்தாள் சியாமளா. அதை விஷ்ணு பார்த்து விட்டு தர்ஷணாவை அழைத்து வந்து காட்டினாள், தர்ஷணா விக்னேஷை அழைத்து வந்து விட்டாள்.

“அக்கா, மாமாவே இங்கிருக்கிறார்… நீ ஏன் கல்யாணப் பத்திரிகையில் முத்தம் கொடுத்து வேஸ்ட் ஆக்குகிறாய்?” என்று கலாட்டா செய்தாள் தர்ஷணா.

முதல் பத்திரிகையை கோயிலில் வைத்து பூஜை செய்தனர். ஏற்கெனவே, யார் யாருக்கு பத்திரிகை தரவேண்டும் என்று ஒரு லிஸ்ட் எழுதி வைத்திருந்தார்கள். எல்லாத் திருமண அழைப்பிதழ்களிலும் ஓரத்தில் மஞ்சள் வைத்துவிட்டுப் பேர் எழுதினர். மாதவன், சரவணன், முருகேசன் மற்ற நண்பர்கள், பிறகு வத்சலாவின் கணவரும், அவர் குடும்பம் என்று எல்லோர் பெயரும் எழுதினார்கள்.

மாதவன் டிஸ்சார்ஜ் ஆக கோர்ட்டிற்கும் போகத் தொடங்கி விட்டார். செல்போனில் அவருக்கு வரும் நேரம் தெரிவித்து விட்டு கொஞ்சம்  பழம், பூ, ஸ்வீட் பாக்ஸுடனும், திருமண அழைப்பிதழும் எடுத்துக் கொண்டு சென்றனர் விக்னேஷும், சியாமளாவும்.

திருமண அழைப்பிதழைப் பார்த்து விட்டு, “ஏம்பா  விக்னேஷ், நீ ‘லா’ படித்திருக்கிறேன் என்று சொல்லவில்லையே? பெயருக்குக் கீழே ஏன் ஆட்டோ ஓட்டுநர் என்று போட்டிருக்கிறாய்?” என்று கேட்டார் மாதவன்.

“இன்னும்  பிராக்டீஸ் பண்ணவில்லை சார். என்னை யார் ஜூனியராக சேர்த்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை, அதனால் தான் என் தொழிலான ஆட்டோ டிரைவர் என்று போட்டிருக்கிறேன்” என்றான்.

“சியாமளா கூட எம்.எஸ்.ஸி; பி.எட்; படித்திருக்கிறாள். அது கூட நமக்குத் தெரியாது, ஆனாலும் இவ்வளவு தன்னடக்கமா?” என்றாள் நிர்மலா .

“திருமணம் முடிந்ததும் உன் டிகிரி சர்ட்டிபிகேட் எடுத்துக் கொண்டு என்னிடம் ஜூனியராக சேர்ந்து விடு  விக்னேஷ்“ என்றார் மாதவன். விக்னேஷும், சியாமளாவும்  சந்தோஷமாக வீட்டிற்குத் திரும்பினார்கள். வத்சலா வீட்டிற்குப் போகும் போது, திருமணத்திற்காக வத்சலாவின் குடும்பத்திற்கு வாங்கிய புதிய உடைகளை எடுத்துக் கொண்டு விக்னேஷ் மட்டும் போனான். சியாமளாவை அழைத்துச் செல்லவில்லை.

கொண்டு போன சீர் வரிசைகளை கொடுத்து விட்டு திருமணத்திற்குக் கட்டாயம் வர வேண்டும்  என்று அழைத்து விட்டு வந்தான். சரவணன், முருகேசன் வீட்டிற்கு மட்டும் சியாமளாவை அழைத்துச் சென்றான். சியாமளா  தன் பள்ளியில் தன்னுடன் வேலை செய்யும் சக ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்தாள். மாணவர்களுக்கு எப்படியோ விஷயம்  தெரிந்து, இவளைக் குறுகுறுவென்று பார்ப்பதும், தங்களுக்குள் பேசிக் கொள்வதும், சிரித்துக் கொள்வதாகவும் இருந்தனர்.

சியாமளாவின் மாணவி கமலா வழக்கம் போல் பள்ளிக்கு வரத் தொடங்கி விட்டாள். அவளுடைய மூன்று தோழிகளும் அவர்களாகப் பேசினால் தவிர இவள் பேசுவதில்லை. பாடத்தில் அதிக கவனம் செலுத்தி சென்டம் வாங்க வேண்டும் என்று படித்தாள். சியாமளா  அவளிடம் மட்டும் தன் திருமணத்தைப் பற்றிக் கூறி, தானே விக்னேஷுடன் நேரில் வீட்டிற்கு வந்து அம்மாவுடன் பேசுவதாகக் கூறினாள்.

“சியாமளா, எத்தனை நாள் திருமணத்திற்காக லீவ் எடுக்கப் போகிறாய்?” என்றாள் அத்தை.

“ஒரு வாரம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன் அத்தை”

“ஒரு வாரம் போதுமா?”

“ஒரு வாரம் போதும் அம்மா. சியாமளா அநாவசியமாக லீவ் எடுத்தால் அவளிடம் படிக்கும் மாணவிகளுக்குத்தான் கஷ்டம். மேலும் சியாமளாவிற்கு என்ன வேலை இருக்கிறது? சரவணனும் , முருகேசனும் அவர்களின் மனைவிகளும் தான் இருக்கிறார்களே “ என்றான் விக்னேஷ்.

அவன் பேச்சைக் கேட்டுப் புன்னகைத்துக் கொண்டாள் சியாமளா. சியாமளாவும், விக்னேஷும் கையில் இருக்கும் பணத்தை வைத்து பட்ஜெட் போட்டனர். கோயிலுக்கு, சாப்பாட்டிற்கு, அலங்காரத்திற்கென்று தனித்தனியே ஒதுக்கினர். திட்டமிட்டபடி எல்லாம் அந்தந்த தொகைக்குள் முடிக்க வேண்டும். எக்ஸ்ட்ரா செலவிற்கென்று ஒரு இருபதாயிரம் ரூபாய் ஒதுக்கினார். அதைத் தவிர பத்தாயிரம் ரூபாய் தனியே எடுத்துக் கொண்டான்.

“இந்தப் பத்தாயிரம் எதற்கு?” என்றாள் சியாமளா, பதில் சொல்லாமல் சிரித்தான் விக்னேஷ். ஏதாவது முக்கியச் செலவாக இருக்கும் என்று சியாமளாவும் அத்தோடு மறந்து விட்டாள்.  அன்று மாலை அவளைத் தனியே அழைத்து அவளிடம் ஒரு நகைப் பெட்டியைக் கொடுத்தான்.

“இது என்ன மாமா?” என்ற சியாமளா, பிரித்துப் பார்க்க, அதில் ஓர் அழகான சிறிய நவரத்தின மோதிரம் .

‘இது யாருக்கு?’ என்பது போல் அவனைப் பார்த்தாள் சியாமளா.

“என் குட்டி மச்சான் விஷ்ணுவிற்கு மோதிரம், அவனுக்குக் கட்டாயம் போட வேண்டும். என்னுடைய ஒரே செல்ல மச்சான் அவன். நம் திருமணத்தன்று என்னிடம் கொடு, அதுவரை பத்திரமாக பீரோவில் வை” என்று உத்தரவிட்டான்  விக்னேஷ். அவன் விஷ்ணுவிற்கு மட்டும் எதையும் மறக்க மாட்டான் என்று சியாமளாவிற்குத் தெரியும்.

“ஸ்வீட்டெல்லாம் கடையில் வாங்கினால் கட்டுபடியாகாது விக்னேஷ், வீட்டிலேயே லட்டு பிடித்து விடலாம். வீட்டில் செய்தால் பொருளும் சுத்தமாக இருக்கும், பணமும் பாதிக்குப் பாதி தான் செலவாகும்” என்றான் முருகேசன்.

“முருகேசா, கல்யாணத்திற்கு லட்டு பிடிப்பதென்றால் சுலபமான வேலையா? அம்மாடி, எவ்வளவு லட்டு பிடிக்க வேண்டும்” என்று வாயைப் பிளந்தான் விக்னேஷ்.

“அது ஒன்றும் கஷ்டமில்லை. சியாமளா ஸ்கூலுக்குப் போனவுடனே லட்டு பிடிக்கத் தொடங்கினால், திரும்பு முன்பு லட்டு பிடித்து முடித்து விடலாம்” என்றான் முருகேசன்.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், சொன்னது போலவே சரவணன் மனைவியும், முருகேசன் மனைவியும், இன்னும் இரண்டு பெண்களும், வேறு சில ஆட்டோ டிரைவர்களின் மனைவிகளும் உதவிக்கு வந்து சேர்ந்து விட்டனர்.  அப்போதே வீடு கல்யாண களை கட்டி விட்டது.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகா மார்பிள்ஸ் (நிறைவுப் பகுதி) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    எப்போ வரப் போறே? (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை