in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9

“வீடு தெரியும் டீச்சர். அவளுடைய ஒவ்வொரு பிறந்த நாளும் மிக ஆடம்பரமாகக் கொண்டாடுவார்கள். ஆனால் இப்போது அவர்கள் வீட்டிற்கு போகவில்லை” என்றனர் மற்ற மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு.

“அது தான் ஏன்? நீங்கள் போய் பார்த்து ஆறுதல் சொல்லி அவளை பள்ளிக்கு வரச் சொல்ல வேண்டாமா?”

“எங்கள் வீட்டில் அவர்கள் வீட்டிற்குப் போகக் கூடாதென்று சொல்லி விட்டார்கள்” என்றனர் கமலாவின் மூன்று தோழிகளும்.

பள்ளியிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பும் போது, இந்த நிகழ்ச்சியை விக்னேஷிடம் கூறினாள் சியாமளா.

“இது தான் சியாமளா உலகம். பணம் இருந்தால் தான் எல்லா உறவினர்களும், சொந்தங்களும். நாளை சனிக்கிழமை தானே, நீ வேண்டுமானால் அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசு. தைரியம் சொல். பள்ளிக்கு வந்து படிப்பைத் தொடர்ந்து படிக்கச் சொல். அதிக நாள் ஆப்ஸன்ட் ஆனால் நிறையப் பாடம் போய்விடும் இல்லையா?” என்றான் விக்னேஷ்.

“நாளைக் காலையில் போய்ப் பார்த்து விட்டு வரலாமா மாமா?”

“கட்டாயம்” என்றான் விக்னேஷ், அவளைத் திரும்பிப் பரிவுடன் பார்த்தவாறு. அவன் பார்வையில் முகம் சிவந்தாள். விக்னேஷ் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அடுத்த நாள் கமலா வீட்டிற்குப் போனார்கள் சியாமளாவும் விக்னேஷும். மிகப் பெரிய வீடு. வீடென்று சொல்ல முடியாது, மாளிகை போன்ற பங்களா. காம்பௌண்டிற்குள்  சுமார் எட்டுக் கார்கள் நிறுத்தலாம். அதை கடந்து போனால் ஐந்து கிரேனைட் படிக்கட்டுகள். அதில் ஏறிப் போனால் ஒரு சின்ன வெராண்டா. அங்கே  பிரம்பாலான சோபா செட் போடப்பட்டிருந்தது.

வெளிக்கதவு தாழிட்டிருந்தது. பர்மா தேக்கிலான கதவு. கிளிகளும், பறவைகளும், மலர்களும், கொடிகளும் மிக அழகாகச் செதுக்காகப்பட்டிருந்தது, அந்தக் கதவே  லட்சக்கணக்கில் விலை இருக்கும். வீட்டைப் பார்த்து பிரமித்தான் விக்னேஷ்.

“சியாமளா… இது என்ன வீடா இல்லை அரண்மனையா? உழைத்து சம்பாதித்த பணமா இல்லை கொள்ளையடித்த பணமா?” என்றான். சியாமளா சிரித்தாள். “உனக்கு ஆச்சரியமாக இல்லையா சியாமளா?” என்றான்.

அதற்குள் காலிங்பெல் ஓசை கேட்டு ஒரு பெண் கதவைத் திறந்தாள். கமலாவின் அக்கா போலும், கொஞ்சம் அவள் ஜாடை இருந்தது.

“கமலாவின் வீடு தானே?” என்றாள் சியாமளா.

“ஆம், நான் அவள் அக்கா கௌரி” என்றாள் அந்தப் பெண். தொண்டையெல்லாம் கட்டியிருந்தது, அழுது அழுது குரலே மாறியிருந்தது.

“கமலா இருக்கிறாளா? நான் அவள் அறிவியல் ஆசிரியை” என்றாள் சியாமளா.

“இருக்கிறாள், உள்ளே வாருங்கள்” என்று உள்ளே அழைத்துச் சென்றாள். மாடியிலிருந்து இறங்கி வந்தாள் கமலா.

“டீச்சர் நீங்களா?” என்றவள், விக்னேஷை யார் என்பது போல் பார்த்தாள்.

“இவர் என் மாமா. உன் தோழிகள் விஷயம் சொன்னார்கள். பெரிய இழப்புத் தான், என்ன செய்வது?” என்றாள் சியாமளா வருத்தத்துடன்.

“டீச்சர் உட்காருங்கள், அண்ணா நீங்களும் உட்காருங்களேன்” என்றவள், தன் அக்காவிடம் ஏதோ சொல்லி விட்டு வந்தாள்.

“இந்த நிலையில் உன்னைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை கமலா, நாங்கள் கிளம்புகிறோம். அம்மா பேசும் நிலையில்  இருக்கிறார்களா?”                 

“அந்த அறையில் தான் இருக்கிறார்கள் டீச்சர். யாராவது வந்து ஆறுதல் சொன்னால் நன்றாகத் தான் இருக்கும், வாருங்கள்” என்று உள்ளே அழைத்துப் போனாள். விக்னேஷ் ஹாலில் உட்கார்ந்து கொண்டான்.

அவள் அம்மா அழுது, கண் வீங்கி, தலை கலைந்து, பார்க்கவே உள்ளமெல்லாம் பிசைந்தது. பக்கத்தில் உள்ள ஸ்டூலில் உணவு தொடாமல் அப்படியே கிடந்தது. படுத்திருந்தவள்  இவர்களைப் பார்த்தவுடன் எழுந்து உட்கார்ந்தாள்.

“நான் கமலாவின் பள்ளிக் கூடத்திலிருந்து வருகிறேன்” என்றாள் சியாமளா, மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் .

“உட்காருங்கள் டீச்சர், கமல் உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறாள்”

“ஒன்றுமே சாப்பிடவில்லை போல் இருக்கிறதே, தட்டில் வைத்த உணவு அப்படியே இருக்கிறதே” 

அதற்குள் கமலாவின் அக்கா கௌரி, விக்னேஷிடம் ஒரு டம்ளர் ஓவல்டின் கொடுத்து விட்டு, சியாமளாவிடமும் ஒரு டம்ளர் கொடுத்தாள்.

அதை வாங்கிக் கொண்ட சியாமளா, “அம்மா, நீங்கள் இதைக் குடியுங்கள். சாப்பிடாமல் அழுது கொண்டேயிருந்தால் உங்களையே நம்பியிருக்கும் இந்தக் குழந்தைகள் என்ன செய்வார்கள்? பெரிய துக்கம் தான், யாரும் ஆறுதல் சொல்லி மாறாத துக்கம். அந்த துக்கத்தைத் தாங்குகின்ற மனோபலம் ஆண்டவன் தான் கொடுக்க வேண்டும்” என்று, பலவாறாக ஆறுதல் வார்த்தைகள் கூறி அவளைக் குடிக்க வைத்தாள்.

“அவரும் போய், வியாபாரமும் போய், எல்லா சொத்துக்களும் கடனுக்குப் போன பிறகு,  சொந்தங்கள் எல்லாம் காணாமல் போய் விட்டன. சொத்துக்கள் போனதைக் கூட பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை, சொந்தங்கள் காணாமல் போனது தான் மிகப் பெரிய வேதனையாக இருக்கிறது” என்று அந்த அம்மா அழுதாள்.

கொஞ்ச நேரம் அவளுடன் பேசி அவளைச் சமாதானப்படுத்தி, “ நீங்கள் துக்கத்தை மறந்தால் தானே உங்கள் பெண்கள் அவரவர் வேலையை செய்ய முடியும். எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு, அடுத்த வாரம் முதல் கமலாவைப் பள்ளிக்கூடம் அனுப்புங்கள்.         இது பன்னிரண்டாம் வகுப்பு, பாடம் நிறையப் போய்விட்டால் புரிந்து கொள்வது கஷ்டம்” என்றாள்.

“டீச்சர் உங்களைப் பார்த்தால் எனக்கென்னவோ என் பெரிய மகள் கௌரியைப் போலவே தான் உணர்கின்றேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் வீட்டிற்கு வாங்களேன்” என்றாள்.

“கட்டாயம் வருகிறேன்” என்றவள் விடைபெற்றுச் சென்றாள்.

ஆட்டோவில் வீட்டிற்குத் திரும்பும் போது சியாமளா முகம் துக்கத்தில் அடிபட்டாற் போல் இருந்தது .

‘என்ன இந்தப் பெண். அவர்கள் வீட்டில் துக்கம் விசாரிக்கப் போய்… இவள் இத்தனை வாட்டமாக இருக்கிறாளே’ என்று நினைத்துக் கொண்ட விக்னேஷ், வழக்கமாக ஜூஸ் வாங்கும் கடையின் முன்னே நிறுத்தி ஆளுக்கொரு  மாதுளம் பழம் ஜூஸ் ஆர்டர் செய்தான். சியாமளா  மனதால் மிகவும் களைத்து விட்டிருந்தாள் போலும், ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் குடித்து விட்டாள்.

“சியாமளா, நான் அவர்கள் வீட்டில் வெளியே நின்றுக் கொண்டிருக்கும் போது, உழைத்து சம்பாதித்த பணமா , இல்லை கொள்ளையடித்த பணமா என்றேனே, அப்போது நீ ஏன் சிரித்தாய்?” என்று கேட்டான்.

சியாமளா அவனை உற்றுப் பார்த்து ஒரு பெருமூச்செறிந்தாள். “எங்கள் வீடு ஏலத்திற்கு வரும் போதும்  எல்லோரும் அப்படியே தான் கேட்டார்கள், அது தான் சிரிப்பு வந்து விட்டது” என்றாள்.

“சாரி , வெரி சாரி” என்றான்.

“பரவாயில்லை மாமா” என்றாள் சியாமளா.

சியாமளாவை இறக்கி விட்டு மீண்டும் ஆட்டோவை எடுத்துக் கொண்டு வெளியே போனான். ஆட்டோ ஸ்டேண்டில் அவனுக்கு நிறைய நண்பர்கள். இப்போதெல்லாம் ஆட்டோ டிரைவர்களில் நிறைய பேர் நன்றாகப் படித்தவர்கள், சில பட்டதாரிகளும் இருந்தனர்.

அவர்களில் சரவணனும், முருகேசனும் இவனது நெருங்கிய நண்பர்கள், இருவரும் பட்டதாரிகளே. படிப்பிற்கேற்ற வேலை தான் செய்ய வேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்பதிலும், தொழிலில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதிலும் நம்பிக்கை உள்ளவர்கள் . விக்னேஷ் அவர்களிடம், சியாமளாவின் மாணவி கமலாவின் வீட்டிற்குப் போய் வந்ததும், சியாமளாவின் முகம் வாட்டம் அடைந்ததும் கூறினான் .

அப்போது, “பழைய துன்ப நிகழ்வுகள் மனதை விட்டு அகல, நீ அவர்களை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.  இங்கு வந்து வாழும் வாழ்க்கையும் நிரந்தரமானதா நிலையில்லாததா என்ற தயக்கம் மனதில் ஏற்படக்கூடாது. கணவனின் அன்பும், குழந்தையின் மழலையும் எவ்வளவு பெரிய துன்பத்தையும் போக்கி விடும் விக்னேஷ்” என்றான் சரவணன்.

முருகேசனோ, “ஆமாம், இன்னும் என்ன தயக்கம்? தர்ஷணா மெடிக்கல் காலேஜில் சேர்ந்து விட்டாள், நீயும் ‘லா’ முடித்து விட்டாய். சீக்கிரம் அம்மாவிடம் பேசி திருமண ஏற்பாடுகளைச் செய். காசிருந்தால் ஏதாவது திருமண மண்டபத்தில் கல்யாணம் இல்லையென்றால் கோயிலில் கல்யாணம்” என்றான்.

“மண்டபம் எல்லாம் நமக்குக் கட்டுப்படியாகாது, கோயில் தான்”  என்றவன் இரவு எட்டு மணிக்குத் தான் வீடு திரும்பினான்.

விஷ்ணு இவனிடம் ரொம்ப நாளாக நைக்கி ஷூ வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தான். அதையும் கொஞ்சம் ஸ்வீட்டும், மல்லிகைப் பூவும் வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போனான்.  அம்மா சாப்பிடும் முன்பு இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறிக்க பிளட் டெஸ்ட் செய்துக் கொண்டிருந்தாள் சியாமளா.

“எல்லாமே நார்மலாகத்தான் இருக்கிறது அத்தை” என்றவள், விக்னேஷைப் பார்த்து சிரித்தாள்.

படித்துக் கொண்டிருந்த விஷணு எழுந்து வந்து, “ஹை  நைக்கீ  ஷூ, தேங்க்ஸ் மாமா” என்று கத்திக் கொண்டு வாங்கிக் கொண்டான்.

“எந்த ஷூவாக இருந்தால் என்ன? மூவாயிரம் கொடுத்து இதை வாங்க வேண்டுமா?  பிராண்டட் இல்லாமல் சாதாரண ஷூ வாங்கியிருக்கலாம் இல்லையா?” என்றாள் சியாமளா .

“விடு சியாமளா, குழந்தை  ஏதோ ஆசைப்பட்டுக் கேட்டான். அவன் இதுவரை ஆசைப்பட்டு எதுவுமே கேட்டதில்லை, இதற்குக் கூட தடை விதித்தால் எப்படி?” என்றாள் அத்தை.

எல்லோரும் சாப்பிட்ட பிறகு மறுபடியும் படிக்க உட்கார்ந்தாள் தர்ஷணா. விஷ்ணுவும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். சமையலறையை ஒழித்துப் பாத்திரங்களை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சியாமளா. அப்போது அம்மாவின் அருகில்  வந்து உட்கார்ந்தான் விக்னேஷ்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சாபத்தில் ஜனித்த ஒரு வரம் (சிறுகதை) – பிரேமா ராகவ்

    அத்தை மகனே போய் வரவா (சிறுகதை) – சுஶ்ரீ